ஜப்பான் தியேட்டர்

ஜப்பான் தியேட்டர்

மதியானத்துக்கென்று லேசாக ஒரு இருள் வந்துவிடுகிறது.சுடுவெயில் ஓய்கின்ற வழி அந்த இருளைக் கொண்டதாயிருக்கும் போலும்.கதிர் லேசாகச் செருமினான்.அவன் முன்பாக வந்து நின்ற செல்வத்தின் வணக்கத்தைச் சிரிப்போடு ஆமோதித்தவாறு டெம்ரவரி டெண்டை உற்று நோக்கினான்.பத்து நாட்களுக்கு இது தான் தங்கவும் தூங்கவும்.அப்பால் கண்டெய்னர் வந்துவிடும்.ஜப்பான்தியேட்டரில் இன்று முதல் வேதாளம் என்று பக்கவாட்டுச் சுவரில் பழைய போஸ்டரின் கிழிபடாத மிச்சம் இடறிற்று.யவனா கன்ஸ்ட்ரக்சன்ஸின் சைட் இஞ்சினியராக இது பன்னிரெண்டாவது வருடம்.பெரிய கட்டிடங்களை இடித்து விலைமதிப்பற்ற புதிய கட்டிடங்களை உருவாக்குவதில் நல்ல பேர் அவர்களுக்கு.இது வரை தியேட்டர் எதையும் இடித்ததில்லை.இதான் முதல் தடவை.தியேட்டரை இடித்தபிறகு முன்புறம் கல்யாண மண்டபமும் பின்னால் எண்பது வீடுகள் கொண்ட ஜப்பான்வில்லாவும் அவர்களது புது ப்ராஜக்ட்.இதோ பிரம்மாண்டமாய் வீற்றிருக்கிற இந்த ஜப்பான் தியேட்டர் இன்னும் சிலமணி நேரங்களில் முழுவதுமாக வீழ்த்தப்பட்டுவிடும்.
கதிர் அண்ணாந்து வான் பார்த்தான்.மழை வருமோ.இப்போது வரக் கூடாது.கட்டிடத்தை முழுவதுமாக இடித்து முடிப்பதற்கு ஐந்து மணி நேரங்கள் ஆகும்.அதன் பின் பெருங்கற்களை அகற்ற ஒரு இரண்டு மணி நேரம்.இடம் முழுவதும் வசமாகி விடும்.அதற்குப் பின் எப்போது வேண்டுமானாலும் மழை பொழியலாம்.சவுகரியம் தான்.

ராமகிருஷ்ணன் ஸாரிடமிருந்து ஃபோன்.
“என்ன கதிர் ஸ்டார்டட்..?”
இன்னும் அஞ்சு நிமிஷத்ல ஸார்..
“சரி.லெட் மீ நோ ஒன்ஸ் எவ்ரிதிங் ஓகே..”..வைத்துவிட்டார்.இது ஒரு சம்பிரதாயம்.கம்பெனி உன் பின்னால் நின்றுகொண்டே இருக்கிறது என ஒருவனுக்குத் தோன்றச் செய்வதற்கான உத்தி.

இரண்டு நாட்களாக தியேட்டரின் சகல பாகங்களிலிருந்தும் ஜன்னல்கள் நிலைக்கதவு உட்கார்கிற ஸீட்கள் லைட்டு ஃபேன் ஏஸி குழாய்கள் பிற கதவு இத்யாதிகள் என உபயோகமாகிற எல்லாமும் அகற்றப்பட்டன.மயங்கிக் கிடக்கிற மூதாட்டி ஒருத்தியின் உடம்பிலிருந்து ஒவ்வொரு நகையாய்க் களைவதைப் போலத் தோன்றியது கதிருக்கு.அப்படி நினைக்காதே என்று அவனது இன்னொரு மனசு அதட்டினாலும் இரண்டு மனசும் விதவிதமான நினைப்புகளும் எப்போதும் ததும்பும்.
சூசை புல்டோஸர் ஆபரேட்டர்.கன்ட்ரோல் லீவரைப் பற்றியபடி கதிரின் வார்த்தைக்காகக் காத்திருந்தான்..மணி மூன்று ஐந்து.அவன் மௌனமாக சூசையிடம் தலை அசைத்தபடி “ஆரம்பிக்கலாம் சூசை” என்றான்.தியேட்டரின் தலைவாசலில் நூற்றைம்பது பேருக்கு மேல் கூடி இருந்தார்கள்.தியேட்டர் முதலாளி வீட்டில் இருந்து அவரது மூத்த மகன் சீனி தன் காரை விட்டு இறங்காமல் அதிலிருந்தவாறே பார்த்துக் கொண்டிருந்தான்.

கதிருக்கு இந்த ஒரு நிமிடம் நரக அவஸ்தை..என்னதான் வேலை என்றாலும் காலம் காலமாய் வீற்றிருந்த பெரிய கட்டிடம் ஒன்றை தன் ஒரு சொல்லால் உடைத்தெறிவது மனசை உளையும்.,”என்னடா இது வாழ்க்கை..” என்று தவிப்பான்.அதுவும் அத்தனை பெரிய கட்டிடத்தின் கடைசி வினாடிகளில் அந்தக் கட்டிடம் மொத்தமும் தன்னை நோக்கி சொல்லமுடியாத வார்த்தைகள் அத்தனையையும் சொல்லி முறையிடுகிறாற் போல இருக்கும்.கூடி இருந்தவர்களில் ஒருவன் “த்ஸோ த்ஸோ என்னா ஒரு அளகான தியேட்டர்..” என்றான்.திரும்பாமல் கண்கள் துடிக்கப் பார்த்துக் கொண்டிருந்தான் கதிர்.

மெல்ல முன்னேறியது புல்டோஸர்.சூசை சமர்த்தன்.புல்டோஸரை முன்னே பின்னே எடுத்து எடுத்து இடிபாடுகளுக்குள் நுழைவது ஒரு உத்தி. எட்டு வருட சர்வீஸ்  தேர்ச்சியை காண்பிக்க வேண்டாமா..?சூசை இடிப்பதற்கான தனி சூத்திரத்தை உருவாக்கி இருந்தான்.எடுத்த எடுப்பிலேயே நெட்டுக்குத்தாக வண்டியை செலுத்தாமல் கோணலாக இடமிருந்து வலம் நோக்கிச் செலுத்த ஆரம்பிப்பான்.அப்படி கொஞ்ச தூரம் சென்றதும் திருப்பி பின்னே எடுக்கத் தேவை இல்லாமல் மறுபடி வலமிருந்து இடம் நோக்கித் திருப்புவான்.முதல் செவ்வகம் தன் வசம் வரும் வரை இப்படியே மெல்ல முனைந்து கொண்டிருப்பான்.ஆரம்பத்தில் சற்று நேரம் எடுத்தாலும் பிறகு சரசரவென்று புல்டோஸரின் ராட்சஸ நாக்கு மொத்தக் கட்டிடத்தையும் தகர்த்தெறிவதற்கான நேரம் சற்று மிச்சமாகும்.

கதிரின் கண்கள் துளிர்த்தன.ஒரு தடவை திரும்பிப் பார்த்தான் காரின் உள்ளே அமர்ந்திருந்த சீனி தற்போது செல்லில் யாரிடமோ பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.சில்லிடும் ஏஸி குளிர் அந்த நேரத்தின் புறவெய்யிலுக்குப் பொருத்தமில்லாமல் கண்ணாடியின் உட்புறம் நீர்த்துளிகள் துளிர்த்தன.கதிர் பார்ப்பதை உணர்ந்த சீனி பேசிக் கொண்டே தன் வலது கட்டை விரலை உயர்த்தி கதிரிடம் காட்டினான்.அப்படிச் செய்தது செயற்கையாக வரவழைத்துக் கொண்ட உற்சாகம் போலத் தோன்றியது. புல்டோஸரின் பணி கிட்டத் தட்ட முடிந்திருந்தது.புல்டோஸர் மெல்லப் பின் வாங்கி ரிவர்ஸிலேயே வெளிப்பட்டு தெரு முனை வரைக்கும் சென்று திரும்பிக் காணாமற் போயிற்று.

பிரதேசமே மண்ணும் தூசியுமாய்க் கிளம்பியவண்ணம் இருந்தது. சுற்றுப்பட்டு எல்லா கட்டிடங்களிலும் மனிதர்கள் கிடைத்த இடங்களிலெல்லாம் வெவ்வேறு உயரங்களில் நின்றபடி ஜப்பான் தியேட்டர் இடிக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.கதிர் முகத்தின் பெரும்பகுதியைத் துண்டால் மூடியபடி இருந்தான்.அவன் பின் வாங்கி நடப்பதைப் பார்த்ததும் தன் கார்க்கதவைத் திறந்து வெளியே வந்த சீனி
“அடுத்து என்ன ஸார்..?” என்றான்.
அந்த ஸார் என்பது வேறு வழியின்றி உச்சரிக்கப் பட்ட வார்த்தை என்பது போலிருந்தது.
“புல்டோஸரோட ஒர்க் முடிஞ்சது ஸார்.இனி ஹைட்ராலிக் எக்ஸ்கவேடர் வச்சி அள்ளணும்.”
“எவ்ளோ நேரம் ஆவும்..?” என்ற சீனியிடம்
“எப்படியும் அதொரு மூணு மணி நேரம் ஆவும்.முழுசா க்ளீன் பண்றதுக்குள்ற விடிஞ்சுரும்”.என்றான்.
“அதெங்கே காணம்..?” என்றான்.

“எக்ஸ்கவேட்டர் புல்டோஸரை விடக் கொஞ்சம் பெரிசு ஸார்.மெயின் ரோடு தாண்டி நிக்கிது.இந்த புல்டோஸர் பாஸ் ஆனதும் அதக் கொண்டு வருவம் அதான் வழக்கம்..” என்றவன் திரும்பிப் பார்க்கும் போதே அருணாச்சலம் எக்ஸ்கவேட்டரை சீரான மிதவேகத்தில் ஓட்டிக்கொண்டு வந்து சேர்ந்தான்.
செரி நா கெளம்புறேன் என்று தலை அசைத்தபடியே மறுபடி காருக்குள் புதைந்து கொண்ட சீனி சர்ரென்று ரிவர்ஸ் எடுத்துக் கிளம்பிக் காணாமற் போனான்.
கூடி இருந்த கூட்டத்தில் இரண்டொருவர் தம் செல்போனில் தியேட்டர் இடிபடுவது மொத்தத்தையும் வீடியோ எடுத்ததை ஒழுங்காக வந்திருக்கிறதா என்று சரி பார்த்தபடி கலைந்தனர்.இன்னும் பாதிப்பேர் அப்படியே நின்றுகொண்டிருந்தனர். கதிர் மேஸ்திரியை அழைத்து  “வேலையைப் பார்க்க ஆரம்பிக்கலாம் மேஸ்திரி” என்றான்.வாசல் பக்கவாட்டில் கம்பெனி பேர் எழுதிய பெரிய டிப்பர் லாரி நின்றது. கட்டிட இடிபாட்டுக் குவியல்களைத் தன் அகன்ற வாயால் கவர்ந்த எக்ஸ்கவேட்டர் இரும்புத் தும்பிக்கையை சுழற்றி டிப்பரின் முதுகில் கொட்டியது.முதல்தடவை இதனைப் பார்த்த சிறுபிள்ளைகள் ஹே எனப் பெருங்குரலில் கத்தியபடி கைதட்டினார்கள்.

எப்போதுமே கட்டிடம் இடித்த மனையை அப்படியே இரண்டு நாட்கள் போட்டுவிடவேண்டும் என்பது ஓனரின் கட்டளை.முழு வளாகத்தையும் தட்டி முடித்தபோது அதிகாலை நாலாயிற்று.கண்கள் எரிந்தன.டெம்பரவரி டெண்டினுள் நுழைந்து தன் பை இத்யாதிகளை எடுத்துக் கொண்டான்.வாசல் கேட்டுக்கு அருகே பீடி குடித்துக் கொண்டிருந்த வாட்ச்மேனிடம் “ரெண்டு நாள் கழிச்சி தான் வேலையை ஆரம்பிக்கணும்.நா ஊருக்குப் போயிட்டு வந்துர்றேன்..” என்று அரை இங்கிதத்துடனான குரலில் சொல்லி விட்டு பஸ் ஸ்டாண்டு வந்தான்.டூவீலர் ஸ்டாண்டில் வண்டியை போட்டு விட்டு வெளியே வரவும் பஸ்ஸ்டாண்டிலிருந்து “பீவீபீ” என்றெழுதிய வால்வோ பஸ் “மதுரை” என்ற பதாகையோடு வளைந்து வெளியே வந்தது.கை காட்டியதும் நின்றது.கதிரைக் கவர்ந்து கொண்டு விரைந்தது.
இரண்டு நாட்கள் கழித்துத் திரும்பி டெண்டுக்குள் நுழைந்தபோது உள்ளே அசேன் பாய் அமர்ந்திருந்தார்.”வாங்க இஞ்சினியரே..” என்றவர் எதிரே அமர்ந்திருந்த தியேட்டர் மேனேஜர் செல்வத்திடம் “ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஞாபகம்டே..” என்றார்.கதிர் தன் பையை வைத்து விட்டு வெளியே வந்தவன் சைகையால் செல்வத்தை அழைத்தான்.”நானும் இஞ்சினியரும் கடைத்தெருப் பக்கம் போயிட்டு வாரோம்..” என்ற செல்வத்திடம் “அ செரி..” என்றார் பாய்.
“விசுவநாதன் ஸாரோட க்ளாஸ்மேட்டு..க்ளோஸ் ப்ரெண்டு அசேன் பாய்..முதலாளியை விட இவரு சொல்லுக்கு மதிப்பதிகம்..” என்றவாறே டூவீலரை கதிர் ஏறுவதற்கு வாகான இடத்தில் நிறுத்தினான்.மிதமான வேகத்தில் வண்டியை செலுத்தினான்.

“ஊரு பூரா தியேட்டரை தட்டினது தான் ஸார் பேச்சு”
“.இருக்காதா..?முப்பது வருசமா எல்லாரும் வந்து போன இடம்.அதைத் தட்டுறம்னா வருந்துவாங்களா இல்லியா”
“.இதுக்கு மின்னாடி தியேட்டர் எதையும் தட்டிருக்கீங்களா ஸார்..” என்றவனிடம்
“செல்வம் எங்களுக்கு இடிக்கிறது தொழில் இல்ல…புதுசா கட்டுறது தான் மெயினு.தேவை ஏற்படுறப்ப மாத்திரம் இடிப்பம்”
.சற்று நேரத்துக்கு எதுவுமே பேசவில்லை இருவரும்.
“யூட்யூப்ல பார்த்தேன்.ஃபாரின்ல நூறு மாடிக் கட்டிடத்தை அஞ்சு நிமிசத்ல வெடி வச்சி தகர்த்துடுறாங்கல்ல..?”
“செல்வம்….அதுக்கு பேரு இம்ப்ளோஷன்.தகர்க்க பத்து நிமிசங்கூட ஆகாது.மின்னப் பின்ன வேலை இழுத்துறும்.முன் ஏற்பாடுகள் வாரக்கணக்குல செய்யவேண்டி இருக்கும்.தெரியும்லா…?”.
“என்னவோ…” அங்கலாய்த்துக் கொண்ட செல்வம்.பஜாரில் கணேசவிலாஸ் என்றெழுதிய ஓட்டல் வாசலில் நிறுத்தினான்.கல்லா இவனைப் பார்த்ததும் சிரித்தது.அலட்சியனாய் கடந்தான்.எதிரே இருந்த வசந்தம் ஸ்டோர்ஸில் கதிர் தனக்குத் தேவையானதெல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு நெருங்கியதும் “பையை குடுங்க” என்று உரிமையாய் வாங்கிக் கொண்டான்.
“செல்வம் ஒரு டீ சாப்டுட்டு போவமா..?”
சரிங்க ஸார்…என பைக்கின் சைட் க்ளாம்பில் பையை மாட்டியவன் கணேசவிலாஸூக்குள் நுழைந்தான்.
சர்வரின் அங்கீகாரப் புன்னகையை பெற்றுக் கொண்டு
“ஒரு டீ ஒரு காஃபி ”
கொண்டு வந்த சர்வர் “செல்வண்ணே அழகுபெத்த தியேட்டரை இப்பிடி இடிச்சிட்டீங்களேணே?” என்றான்.ஒரு மைக்ரோ கணத்தில் தனக்குள் உருவான ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு “எல்லாப் பேரும் சீடில படம் பாத்துர்றீங்க..தியேட்டருக்கு ஆள் வராட்டி எப்பிடிய்யா ஓட்ட முடியும்..?மொதலாளியும் பொழைக்கணும்லா என்றான்.அவன் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

திரும்பும் போது செல்வத்தின் முதுகைத் தொட்ட கதிர் கேட்டான்.”தியேட்டர்ல நீங்க என்னவா இருந்தீங்க..?” என்று.
நாந்தான் ஸார் மேனேஜர்.படம் பேசுறது வரைக்கும் எல்லாம் நாந்தான் பார்த்தேன்.
இந்த ஊர்ல நூறு நாள் ஓடிருக்கா எந்தப் படமாச்சும் என்றவனிடம் நம்ம தியேட்டர்ல எட்டுப் படம் ஓடிருக்கு ஸார்.புதுசா ஆரம்பிச்ச கல்யாணி தியேட்டர்ல 3 படம் ஓடிருக்கு.எந்திரன் ரெண்டு தியேட்டர்லயும் போட்டு எழுபத்தஞ்சு நாள் போச்சி என்றான்.
“யாரப் பாத்தாலும் துக்கம் விசாரிக்கிறாங்க ஸார்..அதான் தாங்க முடியலை..மொதலாளிமார்களை கேக்க வேண்டிய கேள்வியை எல்லாம் நம்ம கிட்ட கேட்டா எப்பிடி பதில் சொல்றது..?ஓடுற வரைக்கும் ஓட்டுனாக..இப்ப ஓட்டமில்ல.தொழிலை மாத்துறாக..இது குத்தமா..?அவனவன் ஏன் இடிச்சிட்டீங்கன்னு கேக்குறப்ப எரிச்சலாவுது..” என்ற செல்வத்திடம்
“வண்டியை நிறுத்து செல்வம் தம் அடிக்கணும்” என்றதும் எதிர்ப்பட்ட மரத்தடியில் வண்டியை நிப்பாட்டினான்.
செல்வம்…நானும் கவனிச்சேன்..உனக்கு ஆத்திரமா வருது.அடக்கிக்குறே..ஆனா நீ புரிஞ்சுக்க வேண்டியது வேற..
அவங்கவங்களுக்கு ஆயிரம் ஞாபகம் இருக்கும்ல..அந்த ஞாபகங்களோட சாட்சியா ஜப்பான் தியேட்டரைப் பார்த்தவங்களுக்கு இனிமே அந்த இடம் இல்லைன்னதும் வர்ற அங்கலாய்ப்பு தான் அது.படங்கள் மாறிட்டே இருந்தாலும் அந்த இடத்தை தங்களுக்கு சொந்தமான ஒண்ணாத் தான் நினைப்பான் ரசிகன்..ஞாபகத்துல அவனவன் தனக்குன்னு ஒரு ஸீட்டை சொந்தமா நினைச்சிக்கிறான்.கண்ணுக்குத் தெரியாத பந்தம் அது செல்வம்..கோபப்படாமத் தான் அணுகனும்.”

செல்வம் எதுவுமே பேசவில்லை.ஏனோ அமைதியானான்.திரும்பி ஷெட்டுக்கு வந்த போது சம்பளத்துக்காக வேலையாட்கள் காத்திருந்தார்கள்.ரெண்டு பேருமே அவரவர் வேலைகளில் ஆழ்ந்தார்கள்.இரவு பதினோரு மணிக்கு டெண்ட்டுக்கு வெளிப்புறம் நைலான் கட்டிலில் படுத்துக் கொண்டு ஹெட் ஸெட்டில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தான் கதிர்.ஒரு கையால் இன்னொன்றில் சொடக்கிட்ட வாறே வந்து எதிரே சேரில் அமர்ந்த செல்வம் ஸ்னேகமாய் சிரித்தான்.
“நாளைக்கு விடியக்காலைல மூணரை மணிக்கு கடைக்கால் வேலை ஆரம்பிச்சுருவம் செல்வம்..”
செல்வம் .எதுவும் பேசவில்லை.அவன் கண்கள் லேசாய்க் கலங்கி இருந்தது தெரிந்தது.

எட்டு மாசமா ஓடாத தியேட்டரைப் பாக்குறப்ப வயித்தப் பிடுங்கிச்சி ஸார்.என்னோட பன்னெண்டு வயசுல இங்க வேலைக்கு சேர்ந்தேன்.இருபத்தஞ்சு வருசமா இந்தத் தேட்டர் தான் என் உலகமே.எனக்குள்ள எத்தனை ஞாபகம் இருக்கும்..?எத்தனை முகங்களை தினமும் பார்த்திருக்கிறேன்.திரையில ஓடுறபடங்களோட சேர்த்து இந்த தியேட்டர் எனக்குள்ள நிரப்புன கதைகள் எக்கச்சக்கம் ஸார்..தியேட்டரப் பூட்டுனப்பவே என் மனசை தயாரிச்சுக்கிட்டேன்.”தியேட்டருக்கும் எனக்குமான ஒறவு யானைக்கும் அதோட பாகனுக்கும் இடையில இருக்கிறாப்ல ஸார்..இந்த தியேட்டர் தான் ஸார் எனக்கு அடையாளம்..இது இல்லாத நான் என்ன பண்ணப் போறேன்னு புரிபடலை ஸார்..”.பெருங்குரலெடுத்து அழுதான்.அவனைத் தேற்ற எந்தச் சொல்லைப் பயன்படுத்தினாலும் அது சம்பிரதாயமாக இருக்கும் என்று பட்டது கதிருக்கு.மழை சில நேரங்களில் கணிக்க முடியாததாய்ப் பொழியுமல்லவா..?.கணிதங்களுக்கு அப்பாற்படுவது தான் வாழ்வின் ஸ்வாரசியமே.மனிதனுக்கு அவ்வப்போது பொய்த்தலும் தப்புதலும் தேவையாயிருக்கின்றன

செல்வம் தன் கைலியால் கண்களைத் துடைத்தான்.
உங்க கூடப் பேசுனா கொஞ்சம் ஆறுதலா இருக்கும்னு தோணிச்சி..இப்ப குடிக்கிறதில்ல இல்லாட்டி இன்னைக்கு நாளைக்கெல்லாம் மட்டையாவுற அளவுக்குக் குடிச்சிருப்பேன்.என்று சிரித்தான்.குழந்தையின் சமாதான கணப் புன்னகை அது.
அவ்வளவு தான் இனி சகஜமாகி விடுவான் என்று தோன்றியது கதிருக்கு.ஓங்கி நிற்கிற மரத்தை வெட்டுவதைப் போலத் தான் கட்டிடங்களைத் தகர்ப்பதும்.செல்வம் போலச் சில பறவைகளின் இழத்தல் கண்களறியாமல் நேர்ந்துவிடுகின்றன.

மதியம் நீங்க ஒண்ணு சொன்னீங்க..ஒவ்வொருத்தன் ஞாபகத்லயும் தனக்குன்னு ஒரு ஸீட்டை சொந்தமா நெனச்சிக்கிடுவான்னு….அதக் கேட்டதுலேருந்து ஒரு விசயத்தை உங்க கிட்ட சொல்லணும்னு தோணிச்சி ஸார்…மறக்கவே முடியாத சம்பவம் ஒண்ணு நாலஞ்சு வர்சத்துக்கு மின்னாடி நடந்துச்சி ஸார்…அதை எப்பிடி சொல்றது..?பொதுவா தீவாளிக்கு முந்தின வாரம் தியேட்டர்ல சுத்தமா கூட்டம் இருக்காது.ஊரே துணியெடுக்க பண்டம் வாங்கன்னு திரிஞ்சுட்டிருக்கும்லா..?ஒண்ணு பழைய படம் இல்லைன்னா இங்கிலீசுப் படம் எதுனா போடுவம்.தீவாளிக்கு ரிலீஸ் ஆவுற படத்தோட ட்ரெய்லரை பாக்குறதுக்காக சில சமயம் ரசிகருங்க வந்தா உண்டு.இல்லைன்னா மினிமம் டிக்கட் கூடத் தேறாது.தீபாளிக்கு மூணு நா மின்னாடி கிங்காங் படம் ஓடுது.காலைக் காட்சி.மொத்தம் பதினெட்டு ஆடியன்ஸ் தான்.ஒரே வரிசையா நாலு ஃபேன் மாத்திரம் ஓடுது.அங்கங்க உக்காந்து படம் பார்க்குறாங்க..படம் முடிஞ்சு கூட்டித் தள்றதுக்காக பொன்னம்பலமும் சேகரும் ஆளுக்கொரு வெளக்கமாறோட லைட்டெல்லாம் போட்டுட்டு வேலைய ஆரம்பிக்கறப்ப டீ14ல ஒரு ஆள் உக்காந்திருக்கிறது தெரிஞ்சுது.பக்கத்ல போயிப் பார்த்த பொன்னம்பலம் பதறிட்டு ஓடியாரான் என் ரூமுக்கு என்னடான்னு பார்த்தா படம் பாக்க வந்த அந்தாளு உக்காந்த மேனிக்கே இறந்து போயிட்டாப்ளன்னு தெரிஞ்சுது.

முப்பத்து ரெண்டு வருசத்ல வரிசைல நிக்கிறப்ப மூச்சித் தெணறி செத்தவன் கட் அவுட்ல ஏறி தவறி விழுந்து செத்தவன் ஏன் கத்தியால குத்திக்கினு செத்தவன்னு நாலஞ்சு சம்பவம் நடந்திருந்தாலும் இது கொஞ்சம் வித்யாசம்.போலீஸூம் டாக்டரும் வந்து ஃபார்மாலிட்டீஸ் முடிச்சி பாடியை எடுத்திட்டு போறப்ப மணி நாலு.மதிய ஷோ கட்டு.சாயந்திர ஷோ பேருக்கு ஓடிச்சி.மூணு நாள்ல தீவாளிக்கு புதுப்படம் வந்து கூட்டம் அள்ளிடுச்சி..ஆனா…
சிகரட் ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்ட செல்வம் புகையை எதிர்த்திசை நோக்கி ஊதினான்.அது கட்டுப்பட மறுத்து இவர்களைத் தழுவியபடி கடந்தது.
ஒரு நாள் முதலாளி வந்துருக்காரு.நான் எதிர் ஸீட்ல ஒக்காந்திட்டிருக்கேன்.ஒரு சின்னப் பையன் காலேஜ் படிக்கிற ஒரு பொண்ணு.இவங்களோட அம்மா அப்பறம் அந்த அம்மாவோட அண்ணனோ தம்பியோ அதே ஜாடைல ஒருத்தரு நாலு பேரும் வந்து நிக்கிறாங்க.நா என்னான்னு கேக்குறேன்.
அன்னிக்கு டீ14 ல உக்காந்த மேனிக்கு செத்தார்ல..?பேரு அந்தோணிசாமி,.அவரோட குடும்பம் தான் அவுங்க..பதிமூணாம் நாள் காரியம் முடிச்சிட்டு வந்திருக்காக ..அப்பா உசுரை விட்ட எடத்ல ஒரு அஞ்சு நிமிஷம் ப்ரே பண்ணனும்னு கேட்டாங்க..ஒரு நிமிசம் யோசிச்ச மொதலாளி ம்ம் அப்டின்னாரு.
தாங்கொண்டு வந்த மெழுகுவர்த்தியை ஏத்தி கையில ஏந்திக்கிச்சி அந்தப் பொண்ணு.குட்டிப்பய்யன் கைல இருந்த ரோஜாப் பூக்களை டீ14 சீட்டு மேல தூவுறான்.நாலு பேருமே மண்டி இட்டு ஏதோ முணுமுணுத்தாங்க..அந்தம்மா கிட்டத் தட்ட மயங்கிவிழுந்திடிச்சி..கன்னத்ல தட்டி அந்தப் பொண்ணு எழுப்பிச்சி.அவ்வளவு தான்.மெழுகுவர்த்தியை அணைச்சிட்டு ரொம்ப நளினமா கையிலிருந்த கேரி பைல ரோஜா பூக்களை மறுபடி சேகரிச்சிட்டு என்னை பார்த்து கைகூப்பி நன்றி செலுத்திட்டு கெளம்பிட்டாங்க..
என்னால அந்தப் பொண்ணோட கண்ணை மறக்கவே முடியலைங்க..ஆள் வச்சி வரைஞ்சாப்ல அப்பிடி ஒரு கண்ணப் பார்த்ததே இல்லைங்க. தியேட்டரை இடிக்கறதா முடிவானப்ப எனக்கு ஏனோ அந்தப் பொண்ணு கிட்ட சொல்லிரணும்னு தோணிச்சி.விசாரிச்சி அவங்க வீடு தேடிப் போனேன்.பாளையம் நடுத்தெருவில ஓரளவுக்குப் பெரிய வீடு.என்னை பார்த்ததும் அந்தப் பொண்ணுக்கு அடையாளம் தெரிஞ்சிடிச்சி.ஹால்ல ஸோபால ஒக்கார சொல்லி டீ குடுத்திச்சி..
நான் தியேட்டர் இடிக்கப் போறதை சொல்ல ஆரம்பிக்கும் போதே சைகைல என் குரலை குறைச்சிது.மெல்லிசான குரல்ல எங்கிட்ட பேசுச்சி…
“ஸார்…எங்கப்பா தான் எங்கம்மாவுக்கு உலகமே..அவரு போனப்புறம் மன அழுத்தத்லயே இருந்தாங்க.போன வருசம் அக்டோபர்ல அவங்க கால் விழுந்திட்டுது.நடக்க முடியலை.வீட்டுலயே தான் இருக்காங்க..எங்கம்மாவுக்காகத் தான் தியேட்டருக்கு வந்து அப்பா உசிர் பிரிஞ்ச இடத்துல ப்ரேயர் பண்ணோம்.அந்தத் தியேட்டரை இடிக்கப் போறாங்கன்னு சொன்னா இன்னும் மனசு நொந்துக்குவாங்க..இதை சொல்ல வேணாம்னு பாக்குறேன்.அப்பா உசுரை விட்ட அந்த தியேட்டரும் டீ14ன்ற ஸீட்டும் எப்பவும்போல அப்பிடியே இருக்கிறதாவே நினைச்சிட்டிருக்கட்டும்.ப்ளீஸ்” .
எனக்கு என்ன பேசுறதுன்னு சத்தியமா தெரில ஸார்.மனசுக்குள்ள மொதல்முறையா அந்தம்மா கால் விழுந்தது ஆறுதலா உணர்ந்தேன். அந்தோணி சாமி நம்ம தியேட்டர்ல வந்து உசுரவிட்டதுக்கும் அவர் வீட்டார் டீ14 சேர் மின்னாடி விழுந்து சேவிச்சி அஞ்சலி செலுத்துனதுக்கும் எங்க மொதலாளியால தொடர்ந்து தியேட்டரை நடத்தமுடியாமப் போனதுக்கும் அந்தம்மா கால் விழுந்ததுக்கும் தியேட்டரை தட்டிவிட்டு வீடு கட்டுறதுக்கும் இடையில எல்லாம் எந்த சம்மந்தமுமே இல்லைன்னு தெரியுது.இருந்தாலும் எல்லாமே ஏதோ தொடர்ச்சியா நடந்திட்டே போறாப்லயும் இருக்கு.வரேன் ஸார்..”
கையை அசைத்து காட்டியபடியே கிளம்பினான் செல்வம்

கடைக்கால் வேலைகள் நடந்துகொண்டிருக்கும் போது கதிருக்கு அம்மாவிடமிருந்து ஃபோன் வந்தது.”தங்கச்சி வீட்டுக்கு ஒரு நடை போய்ப் பார்த்துட்டு வாப்பா”…என்றாள்.மறுக்க முடியாமல் சின்னப்பனூர் கிளம்பினான்.பாளையம் பஸ் ஸ்டாண்டுக்குப் போகிற வழியில் மூணு ரோட்டுக்கு முன்னால் ரயில்வே கேட் போட்டதில் இரண்டு புறமும் வண்டிகள் தேங்கலாயின.ஆட்டோவுக்கு அடுத்து வந்து நின்ற ட்ரை சைக்கிளை ஓட்டியவன் அலட்சியமாய் காதில் இருந்து பீடி எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டான்.ட்ரை சைக்கிளில் ஒரு மேசையும் சேர் ஒன்றும் இருந்தன.இதை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று யோசித்தான்.”அட ஜப்பான் தியேட்டரின் ஆயிரம் ஸீட்களில் ஒன்றல்லவா இது..?நுட்பமாக கவனித்ததில் அதன் சைடு கால் பகுதியில் டி14 என நம்பர் இருந்தது.
எங்கேப்பா போவுது..?” கதிர் கேட்டான் .ட்ரை சைக்கிள் ஓட்டியிடம்.

“ஜப்பான் தியேட்டர் மேனேஜர் செல்வம் இருக்காருல்லா அவரு வீட்டுல எறக்கி வக்கச் சொன்னாப்ல”
தூரத்தில் எங்கோ உற்பத்தியான இரயில் தன் ராட்சஸக் குரலோடு இடவலமாகக் கடந்து சென்றது.
எதிரே பூக்கடையில் ஒரு அம்மாள் வேகவேகமாய் ரோஜாப் பூக்களைப் பின்னிப் பின்னி மாலையாக்கிக் கொண்டிருந்தாள்.கதிர் தனக்குத் தானே புன்னகைத்துக் கொண்டான்.ரயில்வே கேட் திறப்பதற்காகக் காத்திருந்தான்.

 

Tags: