அறிமுகம்


          No photo description available.

நான்

ஆத்மார்த்தி,

இயற்பெயர் P.ரவிசங்கர் பிறந்தது ஜனவரி 23 1977. மதுரையில் பத்மனாபனுக்கும் மீனாட்சிக்கும்
மகனாகப் பிறந்தேன். ஒரே ஒரு  சகோதரி உமா லண்டனில் வசிக்கிறார். பள்ளி வாழ்க்கை மதுரை ஹார்வி
மெட்ரிகுலேசன் ஸ்கூல்-ஆர்சி ஸ்கூல்,கே.புதூர்-தூய மரியன்னை மேல் நிலைப்பள்ளி- மு.மு. மேல்நிலைப்
பள்ளி,திருநகர் ஆகிய தலங்களில் நிகழ்ந்தது,

கல்லூரி வாழ்க்கை மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்
கழகக் கல்லூரி இரண்டிலும் கிட்டியது. செல்பேசித் துறையில் பணி
பிற்பாடு அதையே தொழிலாகச்
சில வருடங்கள் மேற்கொண்டேன். 2004 ஆம் வருடம் Dr.வனிதாவுடன்
காதல் திருமணம்.
இரண்டு குழந்தைகள், ஷ்ரேயா மற்றும் சஞ்சய் நிதின்.

எழுதத் தொடங்கியது 2010 இல். இதுவரை 30 நூல்கள் வெளியாகி உள்ளன. மதுரையில் வதனம் இலக்கிய
அமைப்பைத் தொடங்கி இலக்கியம் சார்ந்த கூட்டங்களை நடத்தி வருகிறேன் வதனம் பதிப்பகம் மற்றும்
நூல் விற்பனை ஆகியவற்றிலும் கால் பதித்து இருக்கிறது. வெ இறையன்பு I.A.S. , எஸ் ராமகிருஷ்ணன்,
மனுஷ்ய புத்திரன்  போன்ற எழுத்தாளர்கள் சார்ந்த விழாக்களை வதனம் முன்னெடுத்தது.
நூல் விமர்சன அறிமுக கூட்டங்களும் நடத்தியது.

சினிமா மீது மிகுந்த ஆர்வம்.தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கல்வி நிலையங்கள் இலக்கிய அரங்குகளில்
உரைகள் நிகழ்த்துவதில் ஈடுபாடு உண்டு. இது வரை 80 சிறுகதைகள் வெளியாகி உள்ளன. சிற்றிலக்கிய
மற்றும் வெகுஜன பத்திரிகைகளில் எழுதி வருகிறேன். முதலில் வந்தது ஆனந்த விகடனில் நட்பாட்டம் கவிதைத்
தொடர்.புதிய தலைமுறை இதழில் மனக்குகைச் சித்திரங்கள்,ஞாபக நதி மற்றும் நிஜம் நிழலாகிறது கட்டுரைத்
தொடர்கள்,பாக்யாவில் வரலாற்றில் வினோதங்கள் புதிய தரிசனத்தில் வாழ்தல் இனிது பாவையர் மலர் இதழில்
சொல்லாடல் மற்றும் கதைகளின் கதை ஆகியவை குறிப்பிடத் தக்க தொடர்கள்.

கல்கியில் கடைசிப்பக்கம் பகுதி எழுதுகிற வாய்ப்பு கிட்டியது.கணையாழி இதழில் அப்பாவின் பாஸ்வேர்ட் சிறந்த
சிறுகதையாக தேர்வு செய்யப்பட்டது. அந்திமழை இணைய இதழில் 100 அத்தியாயங்கள் புலன் மயக்கம் திரை இசை
பற்றிய தொடர்பத்தி மின்னம்பலத்தில் வனமெல்லாம் செண்பகப்பூ , தமிழினியில் மின்னும் வண்ணப் பூக்களெல்லாம்
போன்றவை வெளியாகின.

முதல் நாவல் ஏந்திழை. இரண்டாவது நாவல் மிட்டாய் பசி 2020 ஆமாண்டு தமிழினி பதிப்பக
வெளியீடாக வந்தது.  இந்த நாவல் 2020ம் ஆண்டுக்கான செளமா  அறக்கட்டளையின் சிறந்த நாவலுக்கான
விருதை பெற்றுள்ளது. ஸ்ரீ பாலகுமாரன் அறக்கட்டளை வழங்கும் 2021 ஆம் வருடத்திற்கான
பாலகுமாரன் விருது” எனக்கு வழங்கப்பட்டது.

முழு நேர எழுத்தாளனான எனது வாழ்கால வாசகம் வாழ்தல் இனிது