ஏந்திழை 2

ஏந்திழை 28 பிக் ஸ்டிக்கிங்

 

அந்த கிளப் ஆங்கிலேயர்கள் தங்களுக்காக உருவாக்கிக் கொண்டது.ஆள வந்த ராசாக்களுக்கு சூடு தாங்கவே இல்லை.இந்தியப் பெருங்கண்டத்தில் எங்கெல்லாம் மனிதர்களை எளிதாக ஆங்கிலேயர்களால் அடக்கியும் ஆண்டும் தங்கள் பிரஸ்தாபித்தலை நிகழ்த்த முடிந்ததோ அங்கெல்லாம் அவர்களை அச்சுறுத்த இருந்த அரக்கனின் பெயர் வெய்யில்.உண்மையாகவே உடல் பொத்துப் போகிற அளவுக்கு வாழ்ந்து வந்த வாழ்வுக்கு ஒவ்வாத பெருஞ்சூட்டை நாளும் எப்படி எதிர்கொள்வதெனத் தெரியாமல் எங்கெல்லாம் குளிருமோ குறைந்த பட்சம் தண்மை பொங்கக் கூடிய இடமாவது வாய்த்தால் அங்கெல்லாம் இருப்பா சற்றுப் பொறு.கிளம்பலாம் என்ன அவசரம் என்று அண்டி ஒண்டி தங்களைக் கிடத்திக் கொண்டார்கள்.

எல்லா ஊர்களிலும் சின்னஞ்சிறிய குன்றாவது அகப்பட்டால் அதற்கு மேல் ஒரு கூரை வீடேனும் வாய்த்தால் நலம் என்று கவலைப் பட்டார்கள்.எஸ்டேட்டுக்களை வாங்கியவர்கள் குளுகுளுவென வாழ்வதைப் பிற ஊர்களை நிர்வகிக்கப் பணிக்கப் பட்டவர்கள் எரிச்சலோடு கண்ணுற்றார்கள்.

மேகமலையை ஷெனாய் துரை வாங்கியதே கர்நாடகப் பிராந்தியம் வேண்டாம் என்று முடிவு செய்து தமிழ் மண்ணை நோக்கி நகர்ந்து வருகையில் எதாவது ஒரு உயரஸ்தலம் என்பதைத் தன் மனதினுள் அழுந்தப் பற்றிக் கொண்டே வந்தான்.வந்தது நல்லதாய்ப் போயிற்று.அய்யரின் சகவாசம் பின்னே சொக்கர்நம்பியின் பொறுப்பான நிர்வாகம் எல்லாவற்றையும் விட ஏந்திழையைத் தான் தரிசிக்க ஒரு நல் வாய்ப்புக் கிடைத்ததே நல்ல சகுனம் என்று நினைத்துக் கொண்டான்.

பலமுறை அந்தப் பன்றி சம்பவத்துக்குப் பிற்பாடு அவன் மனம் பிறழ்வதை உணர்ந்தான்.எதிலும் பிடிப்பற்று கிடைத்ததைத் தின்று சதா குடித்து என்னவோ ஆகிக் கொண்டிருக்கிறோம் என சலித்துக் கொண்டவனுக்குத் தான் அவளைப் பார்த்ததும் காதல் சுரந்தது.முன்னம் சென்னப் பட்டினத்தில் நாலைந்து வேசிகளை வரவழைத்து எதுவும் செய்வதற்கு மனசு ஒப்பாமல் திரும்ப அனுப்பினான்.அப்படி அனுப்பிய தினங்களில் அதிகம் குடித்தான்.

தன்னால் ஒருத்தியை இனிப் புணர முடியாதோ என்று அவனுக்குள்ளே ஏக்கமாய் உருவெடுத்தது.மனிதன் ஒரு விசித்திர மிருகம்.தான் நம்புவதை நிஜமென்றாக்கும்.தான் நிஜமென்றாக்கியதைப் பிற்பாடு தானே சந்தேகமும் கொள்ளும்.கடைசியில் தன் பித்துக்குத் தானே இரையுமாகிச் சீரழியும்.
ஷெனாய் துரைக்கு வாழ்வில் ஆகச்சிறந்த லட்சியங்கள் இருந்தன.அதில் ஒன்று உலகத்தின் அத்தனை அழகான இடங்களையும் சென்று பார்த்துவிட வேண்டும் என்பது.ஏந்திழையை இம்ப்ரஸ் செய்வதற்கு அவனிடம் அனேக விஷயங்கள் இருந்தன.அவன் அழகாய் வரையக் கூடியவன்.தன் மனதிலிருந்து ஏந்திழையின் ஓவியத்தை வரைந்து கொண்டிருக்கிறான்.இன்னும் இருபது தினங்களுக்குள் அந்த ஓவியத்தை பூர்த்தி செய்துவிடுவான்.

எங்கே நேரம் கிடைக்கிறது.?புதிதாக தறி இயந்திரங்களை நிர்மாணம் செய்வதில் பிரிட்டிஷ் அரசுக்கும் இந்திய முதலாளிகளுக்கும் பொதுஜனத்திற்கும் என மும்முனையாய் ஒரு விரிசல் ஏற்பட்டு இருக்கிறது.ஹார்பருக்கு வந்து சேர்ந்த இயந்திரங்களை அங்கே இருந்து நகர்த்தாமல் அப்படியே மூணு மாசங்களாய் போட்டு வைத்திருக்கிறது.

இந்த விசயத்தைப் பற்றிப் பேசி முடிப்பதற்காக மில் கௌன்ஸில் கூட்டத்தை மதராஸ் கவர்னரின் நேர்முக செயலாளர் ஒருங்கிணைக்கிறார்.அதனை வெற்றிகரமாக நடத்துவதற்குத் தேவையான உபகாரங்களைச் செய்து தருமாறு கேரிஸன் மற்றும் சார்லஸ் ஆகிய சகோதரர்கள் தங்கள் நண்பர்களை வேண்டிக் கொண்டிருக்கிறார்கள்.அந்த மீட்டிங் நன்முறையில் முடிந்தால் தான் அவர்களுடைய முடங்கிக் கிடக்கிற பல்லாயிரம் ரூபாய்கள் வெளியேற முடியும் என்று அழாக்குறையாக தெரியப்படுத்தினான் சார்லஸ்.அவன் ஷெனாயின் ஆப்த நண்பன்.

ஷெனாய் துரை இதற்காகவே வியாழக்கிழமை காலை மதராஸூக்கு சாலைவழியாகக் கிளம்பிச் சென்றான்.அடுத்த பத்து தினங்கள் அவன் மதராஸில் இருப்பதாய்த் திட்டம்.அவன் அறிவுறுத்தியபடியே மாறன் தன் சகா சடகோபனைக் கூட்டிக் கொண்டு வெள்ளிக்கிழமை காலை சென்னையை அடைந்தான்.அடையாற்றின் அருகே ஒரு விடுதியில் இறங்கியவர்கள் நல்லதொரு குளியலை முடித்து விட்டு ரிக்சாவில் ஏறி முதலில் பட்டணத்தின் அதியற்புதமான காஃபி கிளப்பை அடைந்து காலை உணவை முடித்துக் கொண்டார்கள்.

சடகோபனுக்கு சற்றைய காலம் முன்பு வரைக்கும் சாதாரணமாகத் தன்னோடு ஒருவனாக இருந்த மாறன் கையில் தற்போதைய பெரும்பணப் புழக்கம் வியப்பைத் தந்தாலும் தன்னை அவன் விடாமற் பற்றிக் கொண்டிருப்பதற்காகப் பெருமாளுக்கு வந்தனங்களைச் சொன்னபடியே வாழ்வில் முதல் தடவை பட்டணத்தைக் கண்டு அதிசயித்தபடி இருந்தான்.
இப்டி ஒரு ருசியை எங்கயுமே பார்த்ததில்லைடா என்று வாய்விட்டே சொன்னான்.

அதை என்னவோ தனக்கான சொல்மொழியாகவே எடுத்துக் கொண்டு இதுக்கே சொல்றே இங்கே இன்னம் இருக்காம் தெரியும்ல என்றான் மாறன்.அவன் அப்போது ஒரு இடைப்பட்ட மனோநிலையில் இருந்தான்.உண்மையில் அவனுக்கே வாழ்க்கை தன்னை நகர்த்தி வந்திருக்கிற இந்த இடத்தை எப்படி அணுகவேண்டும் என்று தெரியவில்லை.

நிரம்பவும் பகட்டாக எடுத்த எடுப்பிலேயே தன் குணங்களை மாற்றிக் கொள்ளவும் அவனுக்குத் தயக்கமாக இருந்தது.அதே வேளையில் வந்திருக்கிற பகட்டைக் கொண்டாடாமலும் இருக்க முடியவில்லை.மெல்ல நிறம் மாறுகிற நீரில் கலந்து விஷம் போல அவனை அந்த செல்வந்தம் அவனறியாமலே மாற்றிக் கொண்டிருந்தது.
டிஃபனுக்கான சில்லறையை கல்லாவில் தந்து விட்டு தான் செல்ல வேண்டிய ஜிம்கானா கிளப்பை நோக்கி செல்லுமாறி கைரிக்சாக் வண்டியை இழுப்பவனிடம் சொன்னான்.அவன் உடனே சரிங்க எசமான் என்றவாறே தன் நெற்றியை துண்டால் ஒற்றிக் கொண்டு இவர்கள் ஏறி அமர்ந்ததும் வேகவேகமாய் வீதியில் இழுத்துக் கொண்டு ஓடினான்.

மாறனிடம் எதாவது கேட்க வேண்டுமே என்பதற்கான நீ பல்லக்குல போயிருக்கியா என்று கேட்டான் சடகோபன்.சின்ன வயசில போயிருக்கேன் என்று அதற்கு பதில் சொன்னான் மாறன்.எதாவது சொல்ல வேண்டுமே என்பதற்காகத் தான் அவனும் அப்படிச் சொன்னான்.கைவண்டியை இழுத்துக் கொண்டிருந்தவன் ஆஹா வந்து இருப்பது பெரிய ஜமீன் போலத் தெரிகிறதே..பல்லக்கில் செல்பவர் நம் வண்டியில் வருகிறாரா..?இன்றைக்கு பெரிய தொகை எதாவது பெற்று விட வேண்டியது தான் என நினைத்துக் கொண்டான்.

முக்கால் மணி நேரத்தில் தன் உடலெல்லாம் வியர்த்துக் குளிக்க ஜிம்கானா கிளப் வாசலில் கொண்டு போய் இறக்கி விட்டான்.இரண்டு பேரும் என்னவோ களத்தில் நெல்லடித்த களைப்பை உடலை முறுக்கி சொடக்கிட்டுக் கொண்டார்கள்.எவ்வளவுப்பா என அந்த வண்டிக்காரன் கேட்ட தொகையை எதுவும் பேசாமல் கொடுத்துவிட்டு கிளப்பின் வாசலைக் கடக்க முற்பட்ட போது அங்கே வாசலில் சீருடையுடன் இருந்த மீசைக்காரன் தடுத்தான்.
தன் காற்சட்டையில் மடித்து வைத்திருந்த ஷெனாயின் கடிதத்தை எடுத்து நீட்ட பெற்றுக் கொண்டவன் கதவை ஆனமட்டும் திறந்து அவர்களை வழியனுப்பினான்.

கம்பீரமும் கர்வமும் பொங்க நடந்தான் மாறன்.என்னை யாரென நினைத்தாய் என மனதினுள் சொல்லிக் கொண்டான்.சடகோபன் ஜிம்கானா கிளப்பின் சொர்க்கவாசலில் பிளந்த வாய் மூடாமல் நடந்தான்.

மேனேஜர் அறை முன்பாக இவர்களது நிழலைக் கண்டதுமே கிளார்க்கு ஓட்டமாய் வந்து நீங்கள் தானே ஷெனாய் ஸார்வாளோட கெஸ்டு வாங்கோ வாங்கோ என்று கும்பிட்டுக் கொண்டே மேனேஜர் அறைக்குள் அவர்களை அழைத்துச் சென்றார்.அவரும் அதே பாவனையுடன் வரணும் வரணும் என அவர்கள் இரண்டு பேரையும் அமர்வித்து பெல் அடித்து பாய் கொஞ்சம் ஜூஸ் எடுத்துண்டு வா என்றார்.

தகவல் சொல்லியாய்டுத்து பின்னால பில்லியர்ட்ஸ் ஆடிண்டிருக்கார் துரை.அவரே வராரா இல்லை வரச்சொல்றாரான்னு இப்பத் தெரியும் என்று சொன்னபடியே என்னவோ அதை ஒரு பெரிய நகைச்சுவை என முன்வைக்கிறாற் போல் பெரிதாய்ச் சிரித்த மேனேஜர் அடியேன் தாஸன் சீனுவாசராகவன் ப்ராப்பர் கும்மோணம்.இங்கே மேனஜரா உத்யோகம் எல்லாம் துரைவாள் மாதிரி மகாப்ரபுக்களோட உபகாரம்.”என்று ஒருதடவை கும்பிட்டார்.
மாறனுக்கு கூச்சமாக இருந்தது.என்னவோ பல நாள் பழகினாற் போலல்லவா இந்த மனிதர் ரொம்பக் குழைகிறார்

க்ரேப் கிரஷ் இரண்டு பேருக்கும் நல்ல சிலீர் பதத்துடன் ஆள்காரன் கொணர்ந்து தந்தான்.
ருஜியெல்லாம் சரியா இருக்கோன்னோ என்றவரிடம் தலையை ஆட்டியபடியே ஆமோதித்தான் மாறன்.தற்போது சடகோபனிடம் தன் பெரிய புன்னகையை விசிறியவர் ஆடியேன் தங்களை தெரிஞ்சுக்கலாமோ நீங்க தவறா எண்ணப்படாது என்றார்.தன் தகப்பன் வயசு இருக்கிற மனுஷர் எதற்காக இப்படிக் குழைகிறார் என்று அறியாத சடகோபன் நான் இவரோட கிளாஸ்மேட் என சொல்ல நினைத்தவன் நான் இவரோட அனுசரணைக்கு கூடவே இருக்கேன் என்றான்.அவன் சொன்ன பதில் மாறனுக்கு ஒரு பக்கம் நல்லதாகவும் இன்னொரு பக்கம் என்ன இருந்தாலும் இவன் நண்பனல்லவா எனவும் இருந்தது.

மேனேஜர் இவன் என் ஆப்த நண்பன் பேர் சடகோபன்.எங்க ஊர்ல புன்னைவனநாதர் கோவிலை இவனோட அப்பா தான் கவனிச்சுக்கிறார் என்றான்.

கேள்விப்பட்டிருக்கேன்.மஹா விசேஷம் என்று அந்த இடத்திலேயே கண்களை மூடி கன்னத்தில் இரண்டு தடவைகள் போட்டுக் கொண்டார்.

ஐ திங் ஹீ இஸ் கமிங் என்றான் மாறன்.அவனுக்கும் அவன் அழைத்து வந்தவனுக்கும் ஆங்கிலம் தெரியும் எனக் காட்டிக் கொள்ள விரும்பினான்.சீனுவாசருக்கு ஆங்கிலம் தானே பிழைப்பு.அதனால் தானே ஜீவிதம் ஓடுகிறது என்றபோதும் அவர் எதுவுமே புரியாதது போல அதே மலங்க மலங்க புன்னகைத்த முகத்தோடு இருந்தார்.தன்னோடு இன்னும் இரண்டு வெள்ளையர்களோடு ஷெனாய் உள்ளே நுழைந்தவன் ஹெல்லோ மை ஃப்ரெண்ட் எப்ப வந்தே என்று கட்டிக் கொண்டான்.மாறன் உள்ளமெல்லாம் குளிர்ந்தது.

தனக்கு நெருக்கமான உறவினனாக மாறப் போகிறவன் என்ற அடிப்படையில் ஐயமற்ற பேரன்பு ஒன்றை மாறன் மீது கொள்ளமுடிந்தது ஷெனாய் துரையால்.அவனைச் சுற்றி இருந்த நெருக்கமான உலகத்துக்கு அவனே அரசன்.அதில் அங்கம் வகிக்கிற அனைவருக்குமே ஏந்திழை என்ற ஒரு இந்தியப் பெண் தான் ஷெனாய் துரையின் மனைவியாகப் போகிறாள் என்பது தெரிந்திருந்தது.அவனைத் தாண்டிய பேருலகம் ஒன்று உண்டு.சென்னையிலும் கர்நாடகத்தின் சில பகுதிகளிலும் கல்கத்தாவிலும் அவனுக்கு நண்பர்கள் இருந்தார்கள்.

அவனுக்கு வேண்டியவர்கள் ஒரு பெரிய குழுவாக உதவிகளையும் உபகாரங்களையும் எப்போதும் பகிர்ந்து செய்வதைத் தங்கள் பிஸினஸ் வளர்ச்சிக்கான ஒரு உபகரணமாகப் பயன்படுத்தினார்கள்.நீ உப்பு விற்கிறாயா..?விற்றுக் கொள்.நான் தோல் ஏற்றுமதி செய்கிறேன்.இன்னொருவன் நூலாடைகளை வியாபாரம் செய்வான்.நம் மூவருக்கும் பொதுவாக என்னவெல்லாம் வருகிறது..?பணம்.கொடுப்பதற்கும் பெறுவதற்கும் தடையேதும் இல்லாமல் ஆங்காங்கே லோக்கல் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ளலாம்.நான் சொன்னால் நம்புவார்கள்.நான் உன்னை நம்புகிறேன்.

நீ எங்களை இல்லை இல்லை நம்மை நம்பு இது தான் வெள்ளையர்களின் விஸ்வாச சித்தாந்தம்.ஒருவனுக்கு எப்போது தலைவலிக்குமோ அந்த நேரத்தில் மிகச்சரியாக அவனுக்கு மருந்து தருவதன் மூலம் வாழ்நாள் முழுவதும் அவன் மனதில் ஒரு நல்லெண்ணமாகத் தங்களை விதைத்துக் கொள்வது.

மழை நேரத்தில் குடை பகிர்வது இன்னொரு சமயத்தில் ஒயினாகத் திரும்பி வரும்.அல்லது உயர் ரக சாக்லெட்டுக்களாக திரும்பும் தானே..?என்ன ஒன்று இதனை ஜீவ காருண்ய சித்தாந்தமாகப் புரிந்து கொள்ள முடியாது.எல்லாமே பிஸினஸ் பாத்திரம் அறிந்து தான் எதையும் செய்வார்கள்.அப்படித் தான் கற்றுத் தரப் பட்டான் ஷெனாய் துரையும்.
ஆதாயம் இல்லாமல் குசு விடுவது கூட நஷ்டக் கணக்கில் எழுதப்படும் என்பார் வில்கின்ஸ்.அவர் தான் ஷெனாய் துரையை வடிவமைத்தவர்.

எப்போது எப்படிப் பேசவேண்டும் என்பதில் இருந்து தன் ஆறாக் கோபத்தை எப்படிப் புதைத்துக் கொண்டு புன்னகையோடு திரிய வேண்டுமென்பது வரைக்கும் ஷெனாய் அவருடைய ப்ராடக்ட்.அவர் அவனது மகாகுரு.இப்போது இல்லை.சென்ற ஆண்டு விடுமுறையின் போது மாடிப்படிகளில் தவறிவிழுந்தவர் அதே இடத்தில் பிராணநீக்கம் அடைந்து இயேசுபதம் அடைந்ததாகச் செய்தி வந்தது.அன்றைய இரவெல்லாம் குடித்து முடித்து எழும் போது வேறொருவனாக எழுந்தான் ஷெனாய்.

இந்த உலகத்தில் இரண்டாவது தினத்துக்கு மேலெழுதக் கூடிய துக்கம் என்று ஒன்று இல்லவே இல்லை.இதுவும் வில்கின்ஸ் தத்துவார்த்தங்களில் ஒன்று தான்.

தன் பேருலகத்தில் ஒவ்வொரு முக்கியஸ்தர்களுக்கும் தான் ஏந்திழையைக் கல்யாணம் செய்துகொள்வது பற்றி வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தகவலாய்ப் பகிர்ந்து கொண்டே வந்தான்.சில கேலி கிண்டல்களை அனாயாசமாகத் தவிர்த்து வேறு திசைக்கு மாற்றினான்.ஏந்திழை பேரழகி என்றாலும் இந்தியப் பெண் ஒருத்தியை ஏன் திருமணபந்தத்தினுள் அழைத்துவர வேண்டும் என்பதற்கான சரியான விளக்கத்தை அவனால் முழுவதுமாக பிரகடனம் செய்துவிட முடியவில்லை.

இந்த விஷயத்தின் ஆரம்பத்தில் இருந்தே இந்தியர்கள் என்றதும் தன் சகாக்கள் முகம் நொடி நேரத்தில் மாறுவதையும் செயற்கையாக வரவழைத்துக் கொண்ட மலர்ச்சியோடு மறுபடி அவர்கள் தன்னை கங்க்ராஜுலேட் செய்வதையும் அவன் கவனிக்காமல் இல்லை.ஏந்திழை என்ற பேரழகியைப் பார்த்தால் தன் தேர்வு எத்தனை சரி என்பதை எல்லோருமே உணர்ந்து கொள்வார்கள் என்று அவன் நம்பினான்.

மாறனைத் தன் மைத்துனன் என்றே தன் சகாக்களுக்கு அறிமுகம் செய்வித்தான் ஷெனாய்.அன்றைய தினம் ஷெனாய்க்கு மாத்திரம் அல்ல மாறன் சடகோபன் எனப் பலருக்கும் அதிர்ஷ்டமான நாளாக இருந்தது.சில வெள்ளையர்களுக்கு அன்றைய அதிர்ஷ்டம் தலைகீழாய் இருந்ததும் கூறத்தக்கது.எல்லாவற்றுக்கும் மேலாக மேலும் சில கானகப் பன்றிகளுக்கு அவற்றின் ஜாதகத்தின் மாபெரும் துரதிருஷ்ட தினமாகவும் இருந்தது.

மதிய உணவுக்கு அப்பால் சற்று ஓய்வெடுத்த பிற்பாடு ஷெனாயிடம் அவனது ஆப்த நண்பனும் தில்லி கல்கத்தா எனப் பல பிரதேசங்களில் தொழில் நிறுவனங்களை நடத்தி வருபவனுமாகிய டெரியன் ஃப்ளேக் ஷல் வீ கோ ஃபர் பிக் ஸ்டிக்கிங் எனக் கேட்டான்.வழக்கமாகத் தன் ஒவ்வாமையை பெரிதாக விளக்காமல் ஓரிரு வார்த்தைகளில் நா வர்லைப்பா என்று மாத்திரம் சொல்லி விட்டு கழன்று கொள்கிற ஷெனாய் அன்றைக்கு என்ன நினைத்தானோ மாறன் முகத்தை ஒரு தடவை பார்த்து விட்டு சரி வா போகலாம் என்று அழைத்தான்.

ஜிம்கானா கிளப்பின் ஓரத்தில் வெளிப்பட்டு அதற்கப்பால் இருந்த வனப் பகுதியில் குதிரைகளில் நுழைந்தார்கள்.டெரியன் வில்ஃப்ரெட் ஆலன் மூவரும் அடுத்தடுத்த குதிரைகளில் நுழைய தன் குதிரையில் சடகோபனை அமர்த்திக்கொண்ட ஷெனாய் பின்னால் வருகிற மாறனைப் பூரிப்பாகப் பார்த்தான்.தனக்கு அனுபவம் இல்லை என்றாலும் தான் இன்றைக்கு பன்றிவதம் செய்ய விரும்புவதாக மாறன் சொன்ன கணம் தன்னை அறியாமல் அவனது நம்பிக்கை மீது பேருவகை கொண்டான் ஷெனாய்.நீ தானடா ஆண்மகன் என்று தன் கண்களால் அவனுக்குத் தெரியப்படுத்தினான்

.நீ பன்றியைக் கொல்கிறாயோ இல்லையோ முதலில் களத்தில் குதிப்பதற்கே பெரும் துணிவு வேண்டும்.இகழ்ச்சி குறித்த அச்சமும் நடுக்கமும் யாரிடம் இல்லையோ அவன் தான் ஆட்டத்துக்கு உகந்தவன்.அது போராட்டமோ விளையாட்டோ எதுவாக இருந்தாலும் முதலில் தன் உணர்ச்சிகளை உதற வேண்டும்.ஷெனாய் தன் உணர்ச்சிகளை உதறாமல் போனதற்காக இன்னும் தினம் தினம் தன்னையே சபித்துக் கொண்டிருப்பவன்.மாறன் தன் கையில் பிக் ஸ்டிக் ஒன்றை லாவகமாகப் பற்றி இருப்பதைப் பார்த்து பூரித்தான்.

பன்றிகள் நா இங்க இருக்கேன் நீ வா என்று கடிதமா எழுதும்..?ஓரளவுக்குக் கானகத்தின் ஆழ்பகுதியை அடைந்ததும் வில்ஃப்ரெட் தன் துப்பாக்கியால் விட்டு விட்டு மூன்று தடவைகள் சுட்டான்.வான் நோக்கிய வெடி வீணாகிப் போனாலும் அதன் சப்தம் எதாவதொரு விலங்கினத்தைக் கலைத்துத் தங்கள் பக்கம் அனுப்பும் என்பது நம்பகம்.அது தவறவில்லை.
சரியாக மூன்று நிமிடங்களில் இரவின் கருமை புலரியின் போது கலைகிறாற் போல அவர்களைத் தாண்டி கனத்த ஒரு பன்றி கடப்பது தெரிந்தது.சடாரென்று அதனைத் தொடர்ந்து மாறன் தன் குதிரையை செலுத்தினான்.எல்லோரும் தொடர்ந்தார்கள்.ஆனாலும் அந்தப் பன்றியின் வேகத்துக்கும் புகுந்து கலைத்து ஓடுகிற லாவகத்திற்கும் மாறனளவுக்கு வேகத்தை மற்றவர்களால் புரவிகளை செலுத்த முடியவில்லை.

அந்தப் பன்றி தன் வாழ்வின் எச்சத்தில் இருந்ததோ என்னவோ காடு என்பது வெறும் கணிதம்.சரியான அணுகுமுறைகள் இருந்தால் அது விடையை நோக்கித் துல்லியமாக அழைத்துச் செல்லும்.பாரபட்சம் காட்டத் தெரியாத ஒற்றை அது.மாறனுக்கு மிகச்சரியாக பத்து நிமிடங்கள் ஆனது.அந்தப் பன்றியின் கொழுத்த வயிற்றில் தன் கையில் இருந்த கூர் முனை கொண்ட வேல்கழியை ஓங்கிச் செலுத்தினான் பூட்டைத் திறந்து விடுகிற சரியான சாவியைப் போல அதன் வாழ்வு அந்தக் கணம் முடிவுக்கு வந்தது.பெரும் அலறலோடு அது பக்கவாட்டில் சரிந்தது.தன் குதிரையிலிருந்து இறங்கிய மாறன் மறுபடி கழியை உருவி மீண்டும் சில முறைகள் அந்தப் பன்றியைக் குத்தி அதன் வாழ்வை முழுவதுமாக முடித்து வைத்தான்.
தொடர்ந்து வந்த அனைவருமே மாறனைத் தூக்கி வைத்துக் கரவொலிகளை உதிர்த்தார்கள்.

ஷெனாய் துரைக்கு உடலெல்லாம் லேசாக நடுக்கமானது.இதென்னடா இது..?இதனை ஒரு பிரார்த்தனையாகக் கூட எந்தத் தெய்வத்திடமும் வைத்ததில்லையே..?இன்றைக்கு சற்று முன்னம் இந்தப் பய்யன் குதிரையிலேறிக் கழியைத் தன் கையில் ஏந்திக் கடக்கையில் கூட இவனாவது பன்றியையாவது என்று எதிர்மறையாகவும் சிந்திக்கவில்லை அதே நேரம் இதோ இவன் பன்றியைக் கொன்றுவிடுவான் என்று நம்பிக்கையும் கொள்ளவில்லை.

மொத்தத்தில் என்னவோ ஒரு சொல் மறந்து போனதனால் முற்றுப் பெறாமல் தேங்கி நிற்கிற கவிதை ஒன்றைக் கையிலேந்தி மலங்க மலங்க விழிக்கிற மென்மனக் கவிஞனைப் போலல்லவா இவர்களைத் தொடர்ந்து வந்தேன்..?இந்த வெற்றியைத் தன்னுடையதாக்கிக் கொள்வது இப்போது முக்கியம்.இது வெறும் தருணமல்ல.வரலாற்றின் தெறிப்பு.வா ஷெனாய் கொண்டாடு.
அடேய் மாறா என்று ஆரத் தழுவின ஷெனாய் நீ சரியான ஆளடா என்று கண் கலங்க அவனைக் கட்டியபடியே நின்றான்.தன் கால்சராயின் பக்கவாட்டு பாக்கெட்டிலிருந்து கொத்தாகப் பணத்தை எடுத்து அவன் தலை மீது அபிஷேகித்தான்.ஜஸ்ட் அமேஸிங் என்று அவனது உடனாளிகள் அதிசயித்தார்கள்.ஒரு இந்தியன் இதுவரை வாய்க்கப் பெறாத சவாரி ஒன்றில் முதல் முறையிலேயே பன்றியைக் கொல்வது அவர்களுக்குப் புதிராகவே இருந்தது.

ஹே ஹே என்று தங்களுக்குள் முணுமுணுத்தபடி அவர்கள் ஒரு விசித்திரத்தைப் பார்ப்பது போல மாறனைப் பார்த்தார்கள்.கட்டை விரலை உயர்த்திக் காட்டிய ஆலன் தன் பங்குக்கு ஒரு தங்க வில்லையைப் பரிசாக மாறனின் கைகளில் வைத்து அழுத்தினான்.அதன் ஒரு பக்கத்தில் பிரிட்டிஷ் அரசரின் முகமும் இன்னொரு பக்கம் அரசியின் முகமும் பதிக்கப் பட்டிருந்தது.யதார்த்தமாய் நிகழ்கிற மிக உயர்ந்த தருணங்களின் போது அப்படிப் பரிசளிப்பதற்கென்றே உருவாக்கப் படுபவை அந்த வில்லைகள்.

வெறித்த கண்கள் வான் நோக்கி நிரந்தரித்திருக்க உடலின் பொத்தல்களிலிருந்து குருதி வழிந்தபடி கிடந்த அந்தப் பன்றியின் ப்ரேதத்தை ஒரு முறை தன் வெறுப்பத்தனையையும் கொண்டு பார்த்த ஷெனாய் துரைக்கு பெயர்தெரியாத நிம்மதி மனமெல்லாம் படர்ந்தது.