கதிமா கள்ளரு


பாப்கார்ன் படங்கள்
3 கதிமா கள்ளரு


எண்பதுகளின் திரைப்படங்கள் இன்று ஒரு காவிய அந்தஸ்தைத் தொட்டு விட்டன. நாயகன் கோபக்காரன். திறமை சாலி. எல்லாம் வல்ல அவனுக்கு எதிரிகள் அனேகர். எல்லோரையும் வெல்லுவான். அவனுக்கொரு பழங்கதை தெரியவரும். எதிரி நண்பனாவான். நண்பனே எதிரியும் ஆகக்கூடும். லட்சியம் ஒன்று உருவாகும். பழைய பகை ஏதேனும் மிச்சமிருக்கும். செய்து முடிக்க வேண்டிய காரியத்துக்காக மெனக்கெட ஆரம்பிப்பான். அடைவான். தீர்ப்பான். பழியெடுப்பான். கொல்லுவான். காப்பாற்றுவான். புரியவைப்பான். சிக்கலை அவிழ்ப்பான். நிரூபிப்பான். எல்லாம் முடிகிற புள்ளியில் கடைசியில் அவன் தான் வெல்லுவான்.

இதை மையப்படுத்தி ஆயிரக்கணக்கான படங்கள் வந்தன. இந்தியத் திரையெங்கும் இப்படியான கொண்டாட்ட சினிமாக்கள் எக்கச்சக்கம். ஒன்று மற்றதிலிருந்து லேசாய்ப் பொரிந்து பொரிந்து மாற்றம் கொண்டவாறே அடுத்தடுத்த காலத்தை நோக்கிச் சென்றன கதைகள். அப்படியான படங்களில் எதையாவது இன்றைக்குத் திறந்தால் ஞாபக பலம் ஒன்றே போதுமானதாயிருக்கும். முற்றிலும் அறியாத மொழியின் திரைப்படம் கூட எங்கோ பார்த்த படம் கேட்ட கதை நடந்தேறிய நிகழ்தல்கள் மனத்துக்கு நெருக்கமான பாடல்கள் என உள்ளார்ந்து செல்ல முடியும். கண்ணீரும் புன்னகையும் ஒன்றே தான் இல்லையா..?

கதிமா கள்ளரு என்ற கன்னடப் படம். வீராச்சாமியின் மகன் ரவிச்சந்திரன் தயாரித்து நடித்தது. இதன் நாயகர்களாக அம்பரீஷ் மற்றும் டைகர் பிரபாகர் நடித்தனர்.கதீமா கள்ளரு படம் விஜய் இயக்கியது. கன்னட சினிமாவில் வணிகப் பொழுதுபோக்குச் சித்திரங்கள் பலவற்றின் வெற்றியினூடாக அறியப்படுகிற இயக்குனர் விஜய். கன்னடத்தின் பல பெரு நட்சத்திரங்களுக்கும் விஜய்யோடு கூட்டணியில் வெற்றிப்படங்கள் உண்டு. விறுவிறுப்பான சண்டைக்காட்சிகளும் உணர்ச்சி பொங்கும் வசனப் பிரவாகங்களும் இவரது ஸ்டைல்.

ஆரம்பத்தில் சிலபல நிமிடங்களுக்கு நீளும் ஒரு பைக் துரத்தல் காட்சி கவர்ந்தது. அம்பரீஷ் ஒரு திருடனாக வருவார். அவரை போலீஸ் துரத்தும். சைடு பாக்ஸ் வைத்த புல்லட்டில் ஏறி தப்புவார். கிட்டத் தட்ட பெங்களூருவின் அனேக இடங்களுக்கெல்லாம் போய்க் கொண்டே இருப்பார். பின்னால் போலீஸ் துரத்திக் கொண்டே இருக்கும். பெரிய மால் ஒன்றின் கடைத்தெருக்கள் மாடிகள் என துரத்தப்படும் போதே ஒரு ஓட்டலுக்குள் நுழைந்து விடுவார். நுழைந்து என்றால் புல்லட்டோடு. பின்னால் போலீஸூம் தன் புல்லட்டோடு துரத்த ஓட்டல் முழுக்க அலைந்து விட்டு வெறியேறி ஸாரி வெளியேறி அடுத்ததாய் சில பல தெருக்களில் அலைந்துவிட்டு துணிக்கடை ஒன்றினுள் நுழைந்து செக்சன் செக்சனாகப் போய்க்கொண்டே இருப்பார். பின்னால் போலீஸூம் துணியெடுக்க ஒரு தடவை இதே கடைக்கு வரணும் என மனசுக்குள் நினைத்துக் கொண்டே சின்சியராகத் துரத்துவார். பெரிய கட்டிடத்தின் மாடிப் படிகளில் கஷ்டப்பட்டு புல்லட்டை ஏற்றிக் கொண்டு போய் கடைசி மாடியில் அதை விட்டு விட்டு அங்கேயிருந்து வேறொரு கட்டிடத்துக்குள் தாவுவார். அங்கே அந்த வீட்டைக் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கும் டைகர் பிரபாகரை இன் பிட்வீன் எ கொள்ளை சந்திப்பார். உடனே இருவரும் பங்குதாரர்கள் ஆகித் தப்புவார்கள். அங்கே இருந்து தப்பி ஒரு மது விடுதிக்குள் போவர். போனதும் போலீஸிடமிருந்து தப்புவதற்காக உடைகளை மாற்றிக் கொண்டு டான்ஸ் சீக்வன்ஸ் ஒன்றில் கலந்து கொள்வார்கள். அங்கே ஈசி சேரில் இளவயது வில்லர் ரவிச்சந்திரன் அவரது முதல் படம் இது. தட் வில்லன் ஸ்டைலாக சரக்கடித்துக் கொண்டே பாடலுக்கான ஆடலை ரசித்துக் கொண்டிருப்பார்.

அங்கே ஆடுபவர் சுபாஷிணி. அவரது டிஸ்கோ டான்ஸ் பாடல் அந்த மதுக்கூடத்தில் நடக்கும். அந்த டான்ஸை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் ரவிச்சந்திரன் பாட்டு முடிந்ததும் அம்பரீஷ் மற்றும் பிரபாகரோடு பேசிக்கொண்டே சென்று காரில் ஏறப்போகையில் சுபாஷிணியை (ஃப்ரம் தி மொட்டை மாடி) சுட்டுக் கொல்வார். உடனே மாடியில் இருக்கும் ரவிச்சந்திரனைப் பிடிக்க சிரமப்பட்டு படிப்படியாய் ஏறி (தி மொட்டை மாடி தட்ஸ் தி) கொலை ஸ்பாட்டுக்குச் செல்லும் அம்பரீஷ் மற்றும் பிரபாகர் பார்க்கும் போது ரவிச்சந்திரன் ஸ்டைலாக லிஃப்டில் இறங்கிச் சென்று தன் புல்லட் வண்டியில் ஏறி டாட்டா கூட சொல்லாமல் கிளம்பிப் போவதைப் பார்ப்பார்கள்.அடுத்த சீனில் அதே ரவிச்சந்திரன் அதே புல்லட்டில் யாருமே இல்லாத வனாந்திர புல் பிரதேசத்தின் நடுவே தன் கார் பானட் மீது சூட்கேஸோடு காத்திருக்கும் இன்னொரு கயவரை சந்திப்பார். அந்தக் கயவர் ரவிச்சந்திரனைப் பாராட்டுவார். “வெல் டன்” என்று சொல்லிக் கொண்டே பெட்டியைத் திறந்து உள்ளே இருக்கும் நாலே நாலு கட்டுப் பணத்தைப் பொறுப்பாக எடுத்து ரவியிடம் தந்து விட்டு காலி சூட்கேஸைத் தானே வைத்துக் கொள்வார். இவரும் பணம் மட்டும் போதும் என்ற மன சமாதானத்தில் பணத்தைத் தன் கோட்டுக்குள் போட்டுக் கொண்டு டுபுர்ரென்று புல்லட்டில் கிளம்பிப் போய் விடுவார்.

சாதா திருடர்கள், திருட்டுத் தங்கத்தை வாங்கும் வில்லன் (ஆல்சோ தி டாடி ஆஃப் தி ஹீறோயின் ஜெயமாலா), அந்த வில்லனின் மூன்று முதலாளிகள் எனப் படத்தோடு சேர்ந்து குற்றத் தொழிலும் அபிவிருத்தி ஆகிக் கொண்டே போகும் வண்ணம் இதன் கதை அமைந்திருந்தது.

படத்தில் அம்பரீஷின் சித்தம் கலங்கிய அன்னை கதாபாத்திரத்தில் நடித்தவர் கமலா காமேஷ். அம்மாவுக்கு நினைவு திரும்பி ராஜா என ஒரே ஒரு தடவை அழைத்தால் கூடப் போதும் என்று உருகுகிறார் அம்பரீஷ். அந்த லட்சியத்தை அடைய மருத்துவத்திற்குத் தேவைப்படுகிற லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை அடையப் பல திட்டங்களைத் தீட்டுகிறார். வெற்றிகரமாக கொள்ளை ஒன்றை முடித்துக் கிளம்பும் போது வழக்கம் போலவே அங்கே வந்து பாதிப் பங்கு கேட்கும் நியாயமான அநியாயவாதி டைகர் பிரபாகரோடு சண்டை போடுகிறார். எங்கே என்றால் அந்தக் கட்டிடத்தின் (தி மொட்டை மாடி தி ஸ்கை சீயிங்) ஸ்பாட்டில் தான்.

இந்தப் படத்தில் பெங்களூரு நகரின் பல உயரமான கட்டிடங்களின் பற்பல மொட்டை மாடிகள் இடம்பெற்றிருப்பதை உணரமுடிகிறது. டீவீ ஆண்டனாவைச் சுற்றிச்சுற்றி வந்து கைகளால் கால்களால் தாக்கிக் கொண்டு உடல்களால் அழுத்திக் கழுத்துகளை நெறித்துக் கண்கள் பிதுங்க சமபாக சண்டை ஒன்றை டைகரும் அம்பரீஷூம் விடாமல் புரிகின்றனர். டைரக்டர் கட் சொல்ல மறந்த இடமாக அது இருக்கிறது.

இப்போது அந்தக் கட்டிடத்தின் உச்சியிலிருந்து கயிற்றைப் பிடித்துக் கொண்டு டைகர் பிரபாகர் உயிருக்குப் போராடும் காட்சியில் அந்தக் கட்டிடம் பார்க்க சென்னை எல்.ஐசி பில்டிங் போலத் தோன்றுகிறது. எல்.ஐசி இல்லை என்றும் தோன்றுகிறது. ஆனால் அதே அளவு உயர்ந்த கட்டிடம் தான். நிறைய மாடிகள் இருக்கின்றன. செமை ட்விஸ்ட் ஒன்று ஏற்பட்டு எந்த அம்பரீஷ் எந்த டைகரை அதுவரை புரட்டி எடுத்தாரோ அவரே உயிரைக் காப்பாற்றி மீண்டும் மொட்டை மாடியின் பாதுகாப்பான பகுதியில் நின்று கொண்டு நட்பு உப்பு நன்றி ஹென்றி என்று கன்னடத்தில் மனம் கசியும் காட்சி வருகிறது. காண்பவர்கள் கண்களைக் குளங்கள் ஆக்கும் காட்சி இது.

அடுத்ததாக வேறு உலகப் படம் எதிலும் இடம் பெறாத காட்சி ஒன்று இடம்பெறுகிறது. தங்கள் பணங்கள் நகைகள் தங்கங்கள் எல்லாம் கொள்ளை போனதை அறியும் மூன்று முதலாளிகள் ஒரே நேரத்தில் தங்கள் ஸ்டாஃபான வஸந்த் அலையஸ் டாடி ஆஃப் தி ஹீறோயின் ஜெயமாலா வுக்கு ஃபோன் செய்வார்கள். ஒரு ஃபோனுக்கு மூணு கலரில் ரிசீவர்கள் இருக்கும். நான் சொன்னால் புரியாது. எய்தர் யூ மஸ்ட் சீ தி ஃபில்ம் அல்லது குறைந்த பட்சம் இணைப்பில் இருக்கும் புகைப்படத்தையேனும் சில நொடிகளுக்கு வெறித்துப் பார்க்கவும்.
No description available.

ஃபோனில் தங்கள் முதல்-லாலிகள் மூவரும் கொள்ளை போனதைப் பற்றி வஸந்திடம் உருகிப் புலம்ப சற்றைக்கெல்லாம் வஸந்திடமே அந்த நகைகளைக் கொண்டு வந்து “வாங்கிக் கொள்றீங்களா ப்ளீஸ் வீ டேர்லி நீட் சம் மணி” என்று அப்ராணியராய் வந்து நிற்கின்றனர் அம்பரீஷ் மற்றும் டைகர் பிரபாகர் தி இன்னொஸெண்ட் கொள்ளையர்ஸ்

“ஏண்டா எங்க எட்டாபீஸ்ல கொள்ளையடிச்சதை ப்ராஞ்சில வந்தே விக்க பாக்குறீங்களா” என்று பத்துப் பாஞ்சு டுபாக்கி வீரர்களைக் கொண்டு இருவரையும் பிணையாக்கிக் கொண்டு தன் முதலாளிகளுக்கு ஃபோன் செய்கிறார் வஸந்த் தி டாடி ஆஃப் தி ஹீறோயின் ஜெயமாலா. அந்தப் பக்கம் சாதாரணமாக ஒரு ஃபோன் ஒரே ரிஸீவரில் அதை எடுத்து பேசும் ஒன் பை த்ரீ முதலாளியிடம் “எல்லாம் கெடச்சிருச்சி. நா அவனுங்களைப் பிடிச்சி வச்சிட்டேன்” என்று சொல்கிறார் வஸந்த். உடனே ரிசீவரைக் கையில் எடுத்து அதன் வாயைப் பொத்திக் கொண்டு ஒன்றே முக்கால் நிமிஷத்துக்கு தங்களுக்குள் வருங்காலத் திட்டங்களை எல்லாம் டிஸ்கஸ் செய்து கொண்டே இருக்கின்றனர் மும்மூர்த்தியர். இந்த ஸீனில் எதிர்ப்பக்கம் அந்த வஸந்த் நிலைமையை எண்ணும் யார்க்கும் கண்ணில் ஜலம் வரும்.

அதென்ன என்றால் ஜெயிலில் இருந்து கொண்டு ரிலீஸ் ஆகாமல் ரிலீஸ் ஆக வேண்டி வரும்போதெல்லாம் ஜெயிலிலேயே மீண்டும் எதாவது செய்து தன் தண்டனையைத் தானே நீட்டித்துக் கொள்ளும் சாமர்த்தியசாலி ‘குட்டப்பா’ என்பவனைக் கொண்டு வந்து எங்கிட்ட ஒப்படைச்சிரு..ஆளுக்கு அஞ்சு லச்சம் தரேன் என்று தம் முதலாளீஸ் சொன்ன டீலிங்கை அம்பரீஷ் மற்றும் டைகரிடம் சொல்கிறார் வஸந்த். அம்மாவின் மருத்துவத்துக்காக அந்த டீலிங்கை ஒப்புக்கொள்கிறார் அம்பரீஷ். உடன் நிற்கிறார் டைகர். பட் இங்கே இன்னொரு ட்விஸ்ட். அந்தக் குட்டப்பா படத்தைப் பார்த்ததும் டைகருக்குள் ப்ளட் பிரஷர் கன்னா மற்றும் பின்னா என ஏறிக் கொந்தளிக்கிறது. அதற்குக் காரணம் என்ன என்பது அப்போது சொல்லப்படவில்லை.

இந்த இருவரும் ஜெயில் கைதிகள் அவுட் டோரில் கல் உடைத்துக் கொண்டிருக்கும் டூர் ஸ்பாட்டுக்கு போலி அதிகாரிகளைப் போல் வேடமிட்டுப் போய் “வேர் இஸ் குட்டப்பா” என்று தேடும் போது எங்கோ தூரத்தில் உயரத்தில் மலை மீதிருந்தபடி படுத்தவாக்கில் டுபாக்கி கொண்டு அதே குட்டப்பாவைக் குறி வைத்துக் காத்திருப்பது வேறு யார்..? சாட்சாத் தி ப்ரொட்யூஸர் ஆஃப் தி படம் அலையஸ் ஆரம்பக் காட்சிக் கில்லர் வில்லர் ரவிச்சந்திரன் தான். பட் அதற்குள் ஒருபக்கம் நிஜ அதிகாரிகள் வந்து போட்டுக் கொடுக்க கையெறி குண்டூஸை பல திசைகளிலும் எறிந்து புகையாக்கியபடி சென்ற காரியத்தில் வென்ற தைரியர் என்று புகழும் வண்ணம் அம்புவும் பிரபாவும் குட்டப்பாவைக் கஜக்ஸ்பாங் (கடத்தல்) செய்து விடுகின்றனர்.

இப்போது அவர்களைத் துரத்த போலீஸ் வரும் முன் கடமை தவறாத கண்ணியராக ரவிச்சந்திரன் தன் அதே பழைய பாக்ஸ் இல்லாத புல்லட்டில் வருகிறார். பட் கொஞ்ச தூரம் போவதற்குள் பைக் பின் தங்கி விட நடுவே போலீஸ் முன்னால் தலை தெறிக்க காரில் குட்டப்பா அண்ட் கோ என பார்க்க தமாஷான விறுவிறுப்பாக இந்தக் காட்சி கவர்கிறது.

போலீசிடமிருந்து தப்பும் அம்பரீஷ் பிரபாகர் காரின் மீது தன் பைக்கால் மீண்டும் மீண்டும் மோதி, பைக்கை கார் மேல் பார்க் செய்து பல வித்தைகளைக்காட்டி காரைத் தன்னாலான டேமேஜ்களை செய்த பிறகு ரவிச்சந்திரன் அசந்த நேரம் அவரிடமிருந்து தப்பி ஓடும் கார் குழுவை மீண்டும் போலீஸ் துரத்துகிறது. பாலத்திலிருந்து ஆற்றுக்குள் குதித்து புதுவிதமாகத் தப்புகின்றனர் அம்பரீஷூம் பிரபாகரும். இதில் குட்டப்பாவையும் பத்ரமாகத் தன் வீட்டுக்கே கொண்டு சென்று சேர்க்கிறார் அம்பரீஷ்.

போலீஸிடம் சிறப்பு அதிகாரிகள் ஆளுக்கொரு ஓவியம் வரைந்து இவன் தான் ராஜா அலையஸ் அம்பரீஷ் இவன் தான் ரவி அலையஸ் பிரபாகர் என்று நீட்ட இனி அவங்களால தப்பவே முடியாது என்கிறார் க்ளோஸ் அப்பில் இன்ஸ்பெக்டர். டீவீயில் ராஜ்குமார் பாடல் ஒன்றைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கிறார் ஜெயமாலா. அருகில் டாடி வஸந்தும் டீவி பார்க்கிறார். அப்போது டீவீயில் அறிவிப்பு வருகிறது. அதாவது ரெண்டு பேர் சேர்ந்து ஒரு தண்டனைக் கைதியை தப்ப வச்சிட்டாங்க. இதான் குட்டப்பா என அவரது போட்டோவையும் இதான் ரவி மற்றும் ராஜா என அந்த சுமார் ஓவியங்களையும் காட்ட தன்னை மறந்து சபாஷ் என்கிறார் டாடி வஸந்த்.அப்புறம் சமாளித்துக் கொள்கிறார். ஜெயமாலாவுக்குத் தெரியாமல் ஃபோனை எடுத்து எட் ஆபீஸ் முதலாளி ஒன் பை த்ரீக்கு ஃபோன் செய்து பேசுகிறார். அவ்விடம் குட்டப்பா சேஃபா கைக்கு வந்து சேர்ந்ததும் அந்த ராஜாவையும் ரவியையும் பஜ்ஜி பன்னிடு என்று உத்தரவு வர ஓக்கே பாஸ் என்கிறார் வஸந்த் அலையஸ் விஸ்வாசி ஆஃப் தி த்ரீ முதலாளிஸ்.

இதை இன்னொரு ரூமில் இருக்கும் வேறொரு டெலிபோன் ரிசீவரின் வழியாகக் கேட்டு வாய்பொத்தி ஹேக் என்று அதிர்கிறார் ஜெயமாலா. பிகாஸ் ஆஃப் தி பாஸ்ட் லவ் வித் தி லவ்வர் பாய் அம்பரீசர்.

அடுத்த சீன் அப்படியே குரு சிஷ்யன் படத்தில் பின்னாளில் பஞ்சுஸார் சுட்டிருப்பார். அதாவது குட்டப்பா இஸ் தி ஃபாதர் ஆஃப் தி ராஜா. நினைவு திரும்பிய கமலாகாமேஷ் தி மதர் ஆஃப் தி ராஜா இவர் தாம்பா உன் அப்பா என்று குட்டப்பாவை அம்பரீஷூக்கும் இவன் தாங்க நம்ம பையன் ராஜா என்று குட்டப்பாவுக்கும் பரஸ்பரம் இன்றோடக்சன் தந்து மகிழ மூவரும் கண்ணூஸ் கலங்க ஒன்றாகும் காட்சி வரும். இதே சீன் செந்தாமரையைக் கவர்ந்து வரும் ரஜினி வித் அம்மா கோகிலா வரும் அல்லவா குரு சிஷ்யனில்…நினைவில் கொள்ளுங்கள். அடுத்து என்னாகும்..? பிரபு வந்து இவன் ஒரு கொளஹாரன் என்று ரஜினி சேவிங் செய்து கூட்டி வந்திருக்கும் ஷேவிங் செய்யாத தாடி செந்தாமரையைக் கழுத்தைப் பிடித்து நெறிப்பார் அல்லவா..? அந்த இடத்தில் அவர் என் அப்பாடா என்று ரஜினியும் அவன் ஒரு கில்லர்டா என்று பிரபுவும் அடித்துக் கட்டி உருள்வார்கள் அல்லவா..? தி சேம் சண்டை நடக்கும். அப்புறம் வஸந்த் வந்து பிரபாகரைக் கவர்ந்து செல்வார். ஏற்கனவே குட்டப்பா அண்ட் கமலா காமேஷ் ரெண்டு பேரும் மலை மேல் தவழ்ந்து ஏறுவார்கள். அதே வனப்பகுதிக்குத் தன் ஆட்கள் சகிதம் வந்து சேர்வார் வஸந்த். அங்கே திடீரென்று க்ரூப் டான்ஸர்கள் சகிதம் ஜெயமாலா வந்து அம்பரீஷுடன் ஒரு டூயட் பாடுவார். வில்லன் வஸந்துக்கு அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தில் சின்னக் கொழந்தைகள் முகமூடியை அணிந்து பாடியாடுவார்கள். அதைக் கூடக் கண்டுபிடிக்கத் திறனின்றி அலைவார் வஸந்த்.

ஒரு பக்கம் போலீஸ் இன்னொரு பக்கம் வஸந்தின் ஆட்கள் என எல்லாரிடமிருந்தும் ரவியை மறுபடியும் காப்பாற்றுவார் ராஜா.

அப்புறம் தான் வார்த்தை யுத்தம் வெடிக்கும். உன் அம்மாவ நா கொல்லலப்பா என்பார் குட்டப்பா. நம்ப மறுப்பார் ரவி.

இப்ப தான் ட்விஸ்ட்… அதாவது பிரபாகரின் குடும்பம் பெரிய பணக்காரர்கள். அவர்கள் எஸ்டேட்டில் மூன்று மேனேஜர்ஸ் இருப்பார்கள். அவர்கள் தான் எட் ஆபீஸ் மூன்று முதல் லாலி வில்லனுஸ். அவர்களது முறைகேடுகளைக் கண்டுபிடித்து திட்டுவார் பிரபாகரின் அம்மா. போலீஸூக்கு போவாதீங்க என்று கெஞ்சி விட்டு அசந்த நேரம் அவர்கள் வீட்டில் கொள்ளை அடித்து விடுவார்கள் மூன்று கேடிகள். அம்மாவைக் கொன்று மூவரும் தப்பிச் செல்வதை அறியாமல் குட்டப்பா தான் கொலை செய்தார் எனத் தப்பாய் எண்ணிக் கொள்வார் சின்னப்பய்யன் பிரபாகர். அந்த கொள்ளை செல்வத்தை குட்டப்பா எங்கே ஒளித்து வைத்திருக்கிறார் என்பதை அறியத் தான் இப்போதும் மூன்று வில்லர்கள் குட்டப்பாவைக் கடத்தியுள்ளனர் என்பதை எல்லாம் விளக்கியதும் மறுபடி ராஜாவும் ரவியும் ஒன்றே என்றே ஆகி வில்லன்களை அழிக்கப் புறப்படுவார்கள்.

மூன்று வில்லர்களில் ஒருவர் மட்டும் சூப்பர் வில்லனாக மாறி தன் தம்பிகளை மிரட்டி வஸந்தை ஆஸிட்டில் முக்கி வெறும் எலும்புக்கூட்டை மட்டும் வெளியே எடுத்து சாரி மிஸ்டர் வஸந்த் என்பாரே பார்க்கலாம். அந்த சூப்பர் வில்லனின் அடியாள் தான் முன் சொன்ன ரவிச்சந்திரன் என்பது தான் மோஸ்ட் அன் வாண்டட் ட்விஸ்ட். பிரபாகரை ஆசிட் மீது தொங்க விட்டுவிட்டு அம்பரீஷை ஐஸ்கட்டி மேல் படுக்க வைத்து புதுமை செய்திருப்பார். பாதி வெம்மை பாதி குளிர்மை என்று வித்யாச ஜங்ஷனாக வில்லன் தென்படுவார்.

க்ளைமாக்ஸ் நடக்கும் இடமே பாட்டில்களால் சுவரெல்லாம் அலங்காரம் செய்திருப்பார்கள். சுச்சு போட்டதும் கதவுகள் ஓபனாகி ஐஸ் கட்டிகள் வெளிவருவதெல்லாம் தமாஷாக இருக்கும் எல்லோரும் எல்லாரோடும் சண்டை போட்டு நல்லவர்கள் எல்லாம் ஜெயித்து கெட்டவர்கள் எல்லாம் செத்து தம்பிவில்லன்கள் ரெண்டு பேரும் மூத்த சூப்பர் வில்லனைக் கொன்று பிறகு தம்பிகள் மற்றும் படப்பொடியூசர் ரவிச்சந்திரன் சகிதம் போலீசில் பிடிபட்டு அந்தப் போலீஸ் அம்பரீஷையும் பிரபாகரையும் பாராட்டி இருந்தாலும் நீங்களும் சட்டத்தோட பார்வைய்ல குற்றவாலீஸ் தான் என்றதும் ஒரே விலங்கில் இருவரையும் பிணைத்து சின்னூண்டு தண்டனையைக் கழிக்க புறப்பட்டு செல்வதோடு தி ஃபில்ம் எண்ட்ஸ் என்கிற சுபமுகூர்த்த நேரம் வந்து சேரும்.;

கதிமா கள்ளரு படத்தின் க்ளைமாக்ஸில் நாயகர் இருவரையும் கட்டி வைத்து விட்டு ஒரு பாட்டு ஒலிக்கும். வில்லன் அகம் மகிழ்வதற்காக அவருடைய அணியைச் சேர்ந்த பெண்கள் ஆடிப்பாடும் அந்தப் பாடல் ஜானகி பாடியது. அந்த சிச்சுவேஷனில் அப்படி ஒரு பாடலை எதிர்பாராப் புன்னகை ஒன்றாக மனத்துள் நிறையும். சங்கர் கணேஷ் இசையமைப்பில் அனேக பாடல்களை எஸ்பிபாலசுப்ரமணியம் பாடினார். எந்த மொழியானால் என்ன..? தேன் என்பதற்கும் தேனு என்பதற்குமான சின்னச்சின்ன வித்யாசங்கள் தான் என்றாற் போல் தேனு குரலில் பாடினார் பாலு. எண்பதுகளின் டிபிகல் வணிக சினிமாவுக்கான உதாரணப் படமாக கதீமா கள்ளரு படத்தைக் கொள்ள முடிகிறது.

கதிமா கள்ளரு ஜாலியான படம். எளிமையான கதையும் சுவை குன்றாத நகர்தலுமாக எப்போது பார்த்தாலும் ரசிக்கக் கூடிய எண்பதுகளின் திரைக்கதைக்கு மொழிகள் தாண்டிய உதாரணம். இதைப் போலப் பல படங்கள் உண்டு. அன்றைய காலத்தின் ரசனைக்கு ஈடு கொடுத்ததென்னவோ யதார்த்தம் தான்.


பின் குறிப்புகள்

1.டைகர் பிரபாகர்

டைகர் பிரபாகர் பின்னாட்களில் அண்ணாமலை படத்தில் ஐம் ய பேட் மேன் என்று இருட்டில் தம் புகை சூழ நிழல்கள் ரவியை மிரட்டுபவராக வந்தார். பாண்டியன் மற்றும் முத்து படங்களிலும் ரஜினியோடு நடித்தார். ரோஜாவைக் கிள்ளாதே படத்திலும் நடித்திருக்கிறார். மம்முட்டி படம் உட்பட மலையாளத்திலும் பிரபாகருக்கு ஸ்கோர் உண்டு.

The Ambareesh you didn't know | Deccan Herald

தெலுங்கில் மிகப் புகழ் பெற்ற பிரபாகருக்கு அங்கே கன்னட பிரபாகர் எனப் பேர். இந்தியிலும் அமிதாப் படமான இன்குலாப் ஆகியவற்றில் மின்னியவர். 10க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியும் இருக்கிறார். 2001 ஆமாண்டு காலமானார். தனக்கென தனி ஸ்டைல் கொண்ட நடிகர். கன்னடமும் ஆங்கிலமும் கலந்து இவர் பேசிய தனித்துவத்தை இன்றளவும் ரசிக்கப் பலர் உள்ளனர்.

2 ரவிச்சந்திரன்

தமிழில் சுஜாதாவின் ஆகச்சிறந்த படைப்பான காகிதச்சங்கிலிகள் நாவலைத் திரைப்படமாக்கி பொய் முகங்கள் என்ற பேரில் உருவாக்கி நாயகனாக நடித்தார். அந்தப் படத்திற்காக அவர் சூட்டிக் கொண்ட பெயர் ராகேஷ். காகிதத்துக்கும் திரைக்கும் சங்கிலிக் கனமாய் வித்யாசம் வந்தது. எழுதியதை எடுக்காமல் சோகப்பாட்டு இத்யாதிகள் எல்லாம் வைத்துத் தன் கதையைத் திரையில் பார்த்து சுஜாதா கதறிக் கதறிக் கண்ணீர் சிந்தும் அளவுக்குப் படத்தின் மேகிங் இருந்தது. ராகேஷ் அதோடு முடிவடைந்தார்.

Crazy Star`s chemistry with Priyanka 1

 

அடுத்ததாகக் கன்னடத்தில் அந்த வருடத்தின் பணமழைப் படமான ப்ரேமலோகா தமிழில் பருவராகம் என்று வந்தது. இங்கே டப்பிங்கில் 100 நாட்களைக் கடந்தது. ஜூஹி சாவ்லா அதன் நாயகி. ஹம்சலேகா இசையில் எல்லாப் பாட்டுக்களும் கமர்கட் தித்திப்போடு ஒலித்தன.

அதே ரவிச்சந்திரன் பிற்காலத்தில் ரஜினியின் கதாகாலத்திலேயே ஆகச்சிறந்த துன்பியல் சம்பவமான நாட்டுக்கு ஒரு நல்லவன் படத்தை நாலு மொழிகளில் எடுத்தார். நாலிலும் ரவிச்சந்திரன் நடித்தார். நாலு மொழிகளிலும் பெருந்தோல்வியை எய்தினார்.


Son Abhishek performs Ambareesh's last rites | Deccan Herald

3 அம்பரீஷ்

ப்ரியா படத்தில் ரஜினியோடு இன்னொரு நாயகனாக வந்தார். ஆரம்பத்தில் அந்த வேடத்தில் நடிக்க இருந்தவர் சிவக்குமார். நோ…நெவர் என்று உக்கிரமாய் முறைத்து அந்தப் படத்தைத் தவிர்த்தாராம் சிவா. அந்தப் படம் எக்கச்சக்கமாக ஓடி ஜெயித்தது. கன்னடத்திலும் தமிழிலுமாக அம்பரீஷூம் ரஜினியும் பரஸ்பர நன்மையடைந்த படம்.

4ஜெயமாலா

கன்னடத்தில் அறியப்பட்ட நாயகி. இங்கே ஸ்ரீப்ரியாவுக்கு இருந்த வரவேற்புக்கு நிகராக ஜெயமாலாவுக்கு இருந்தது. நாலு மொழிகளில் கலக்கினார்.

Jayamala Biography, Age, Height, Weight, Family, Caste, Wiki & More

தமிழில் ஜம்பு கர்ணன் இயக்கிய படம் ஜெயமாலாவின் வரைபடத்தில் முக்கிய இடம் பெற்ற படம். முன்பே ஒரு கொடியில் இருமலர்களில் நடித்திருந்தார். பாமா ருக்மணி கல்தூண் கண் சிவந்தால் மண் சிவக்கும் படிக்காத பண்ணையார் நம்பினார் கெடுவதில்லை உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் நடித்தவர். திருமணமாகி இருந்த கன்னட நடிகர் டைகர் பிரபாகரைக் கரம் பிடித்தார். புகழின் உச்சியில் இருந்த போது படங்களில் நடிப்பதைத் துறந்தார். பிற்பாடு பிரபாகருக்கும் அவருக்கும் மண முறிவு ஏற்பட்டது. பிரபாகர் நடிகை அஞ்சுவை மூன்றாவதாகத் திருமணம் புரிந்தார். ஜெயமாலா ஒளிப்பதிவாளர் ஹெச்.எம்.ராமச்சந்திராவை மணம் செய்தார். ஜெயமாலா தயாரித்து நடித்த கிரீஷ் காஸரவல்லி இயக்கிய தாயி சாஹேபா தேசிய விருதுகளைப் பெற்றது. கன்னட சினிமாவின் முக்கிய மைல் கல்லாக மாறிற்று. கன்னட இலக்கியவாதி லோக்புரா ரெங்கநாத் ஷ்யாம்ராவ் எழுதிய அதே பெயரிலான நாவலைப் படமாக்கினார் கிரீஷ். ஜெயமாலாவுக்கும் சிறந்த நடிகை-சிறப்புக் குறிப்புடனான தேசிய விருது கிடைத்தது. ஜெயமாலா அரசியலிலும் ஒளி வீசிய தாரகை. பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர் நலத்துறை ஆகியவற்றின் அமைச்சராகப் பணியாற்றினார்.

5 சுபாஷிணி

நடிகை ஜெயசுதாவின் தங்கை. மலையாளத்தில் சில படங்கள் கள்ளன் பவித்ரன்- ஆஸ்தி- மின்னாரம் உள்ளிட்டவை. தமிழில் ஸ்ரீதரின் அழகே உன்னை ஆராதிக்கிறேன் படம் இவரது அறிமுகப் படம்.

NAKARAJAN: SUBHASHINI ,ACTRESS SISTER OF JEYASUDHA BORN 1958 OCTOBER 17

நினைத்தாலே இனிக்கும் -தேன் சிட்டுக்கள்- கரும்புவில் போன்றவற்றில் நடித்தார். ஜானி படத்தின் அழியாப் புகழ்ச்சுடர் பாடலான ஆசையைக் காத்துல தூது விட்டு சுபாஷினியின் மறக்க முடியாத கண்களின் பொங்குசுனைப் பாடல். என்றும் இனிப்பது.

செகண்ட் இன்னிங்ஸில் வருஷமெல்லாம் வசந்தம் பாய்ஸ் கொண்டாட்டம் எனச் சில பல படங்களில் வந்தார். டீவீயிலும் நாடகங்களில் நிறைந்து தோன்றியவர் சுபாஷிணி.

சுபம்