கதைகளின் கதை 6

கதைகளின் கதை 6
       நதியற்ற நதி


தமிழின் ஆகச்சிறந்த சிறுகதைகள் நூறைத் தொகுத்து இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் நூறு என்ற பேரில் பேராசிரியர் வீ.அரசு தொகுத்திருக்கும் புத்தகம் அடையாளம் பதிப்பகத்தின் வெளியீடாக 2012ஆமாண்டு வெளியாகியது.காலக்கிரமமாகத் தொகுக்கப் பட்டிருக்கும் அனேகக் கதைகள் மிகச்சிறப்பானவை மற்றும் தவற விடக் கூடாதவை.என்னைப் பொறுத்தவரை சிறுகதை எழுத்தின் சூட்சுமம் என்பது பிறரிடமிருந்து கற்றுத் தேர்ந்து வருவது அல்ல.எந்த ஒரு சிறுகதை எழுத்தாளருக்கும் அவரது எழுத்தின் உச்சபட்ச ஆக்ரோஷமான இயங்குகாலம் ஒன்று இருந்தே தீரும்.பெரும்பாலானவர்களுக்கு அவர்களது எழுத்து வாழ்வின் பிற்பகுதியிலாவது மத்திமத்திலாவது அது அமையக் கூடும்.எடுத்த எடுப்பிலேயே சகல திசைகளிலும் வாள் சுழற்றிப் போனவர்களும் உண்டு.
சிறுகதை எழுத்தின் நுட்பங்களைத் தன் எழுத்தின் நதிவளைதல்களினூடே தானும் நகர்ந்தபடியே உணரத் தலைப்படுவதே ஒரு எழுத்தாளனுக்கு வாய்க்கும் மிகச்சிறந்த அனுபவம்.வெவ்வேறு தருணங்களைக் கலைத்துப் போடுவதன் மூலமாக ஒரே கதையின் மாறுபட்ட சொலல் வடிவங்களை முயற்சித்துப் பார்ப்பதன் மூலகாரணம் எது..?ஒரு சிறந்த கதையின் முடிவிற்கப்பால் எழுதுகிறவனுக்கு ஏற்படுகிற போதாமையின் நீட்சியே அங்கனம் எழுத விழைகிறது.
தமிழின் ஆகச்சிறந்த கதைகளை ஒருவர் தான் தொகுக்க முடியும் என்பதற்கில்லை.மேலும் அதற்கு நூறு என்கிற எண்ணம் போதுமானதில்லை என்பதே அடியேனின் சிறுகூற்று.அப்படி இருக்கையில் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் பிடித்தமான பத்துச் சிறுகதைகள் வீதம் தொகுத்தால் ஆயிரம் சிறந்த கதைகளைக் கண்டடைய முடியும்,உலக செவ்வியல் சிறுகதைகளுக்கு எந்த விதத்திலும் குறைவானதில்லை தமிழில் எழுதப்பட்ட சிறுகதைகள். இதன் சாட்சியமாகவே அத்தகைய தொகுத்தல் நிகழ்ந்தேறும்.

கல்லூரி காலத்தில் நாங்கள் ஒரு பத்துப் பேர் மாதத்திற்கு ஒருமுறை கூடுவோம்.அந்த ஒரு மாத காலத்தில் படிக்கக் கிடைத்த கதைகள் கவிதைகள் சிற்சில நாவல்கள் என அவற்றைப் பற்றியெல்லாம் வாசகானுபவத்தைப் பகிர்ந்து கொள்வோம்.அந்தச் சந்திப்புக்குக் முற்றம் என்று பெயர்.மெல்ல மெல்ல வாழ்வின் அபத்தங்களுக்குத் தரப்பட்ட விலைகளில் ஒன்றாகவே முற்றம் முடிவடைய நேர்ந்தது.அப்படியான ஒரு சந்திப்பில் வீரபாஸ்கர் என்ற ஒரு தோழர் மாபெரும் வாசக அனுபவத்திற்குச் சொந்தக்காரர்.அவரிடம் மூவேந்தன் கேட்டான்
“ஏன் அதிகமாகத் துன்பமும் துயரமும் வாழ்வின் இழத்தல்களுமே எழுதப்படுகிறது..?அல்லது இந்த உலகத்தில் துன்பம் எழுதப்படுகிற அளவுக்கு இன்பமும் வெற்றியும் மகிழ்தருணங்களும் ஏன் எழுதப்படுவதில்லை..?”
இதனைக் கேட்ட வீரபாஸ்கர் பத்து நிமிடங்களுக்குப் பின்னால் விளக்கம் தந்தார்.
மனிதனின் அகமனம் தான் உணர்கிற சந்தோஷங்களைத் தனக்கே தனக்கான பிரத்யேகங்களில் ஒன்றாகவும் தனக்கு நிகழ்கிற துக்கங்களைத் தனக்கும் நிகழ்கிற பொதுமைகளில் ஒன்றாகவும் உணரவிரும்புகிறது.வெளித்தெரிகிற துன்பங்களைத் தன்னுடைய துன்பமாகவோ அல்லது தனக்கு நெருக்கமாகவோ உணர்ந்து கொள்ள முடிகிற வாசக மனதால் மகிழ்ச்சியைத் தனக்கே நேர்ந்தாலொழிய நூறுசதவீதம் தன்னுடையதாக உணர்வது சாத்தியமில்லை என்றார்.
இந்த பதில் முழுமையானதா என்பதல்ல இங்கே விசயம்.இந்தப் பதில் ஒரு சிறப்பான தேடலுக்கான ஆரம்பமாக அமையும் என்பது நிசம்.உலக அளவில் படைப்பாற்றல் துன்பத்தின் மீது குவிவதையும் துன்பத்தைச் சார்வதையும் மீண்டும் மீண்டும் துன்பியல் சாட்சியங்களாகவே மலர்வதையும் எப்படிப் புரிந்துகொள்வது.?அதீதத்தை எழுதவிழைகையில் இதற்குச் சம்மந்தமில்லாத எதிர்ச்சாலையில் எழுத்துக்காரர்கள் நடைபோடுவதும் இங்கே கவனிக்கத் தக்கது.சிறுகதை என்றில்லை பெரும்பான்மையான கலைவடிவங்கள் துன்பமும் நிஜமும் கலந்த கலவைக்கு வெகு அருகாமையில் இயங்குவது அவற்றின் சூட்சுமசூத்திரங்களில் ஒன்றெனவே கருதவேண்டியிருக்கிறது.
காலத்தால் அழியாத கண்ணீரின் சித்திரங்கள் ப்ரவசனங்கள் பக்கம் பக்கமாக வடித்தெடுக்கப்பட்ட காவியங்கள் கதைப்பாடல்கள் இவையெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்…சிறுகதை என்னும் வடிவத்தின் உள்ளே துன்பத்தைக் கதைப்படுத்துவதில் இயல்பாக நேரக் கூடிய சிக்கல் என்ன..?ஏற்கனவே சொல்லப்படாத துன்பம் ஒன்றைக் கண்டறிந்து சொல்வது தான் உத்தமமா.?மனிதனின் புதிதாக்கப்பட்ட துன்பங்களுக்காக நாளும் எழுத்தாளன் காத்திருக்கிறானா..?ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்களும் கதைகளும் தங்களின் மறைபொருளாக வெளித்தெரியாத குருதிநரம்புகளாகத் துன்பங்களைத் தீர்த்துவிட்டனவா..?
கூறியது கூறல் என்பது துன்பத்துக்குப் பொருந்தாது என்பதே சுவையான நிஜம்.
ஆகச்சிறந்த கதைகள் அத்தனையுமே துன்பம் சார்ந்தவை என்பதல்ல நான் பகிரத் தலைப்பட்ட ஞானம்.அப்படி ஒன்று இருக்கவும் முடியாது.ஆனாலும் உலகின் பற்பல கொண்டாடப்பட்ட எழுத்துக்களும் சிறுகதைகளும் துன்பம் சார்ந்த மறைபொருளைக் கைக்கொண்டபடியே உழல்வதொன்றும் தற்செயலில்லை என்கிறேன்.அவ்வளவே.
வண்ண நிலவன் மகா எழுத்தாளர்.சிறப்பான கதாசொல்லிகளில் ஒருவர்.
1948ல் பிறந்த வண்ணநிலவன் என்று அழைக்கப்படும் உ.நா.ராமச்சந்திரன் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். இவரது “கடல்புரத்தில்” நாவல் இலக்கிய சிந்தனை பரிசு பெற்ற நாவல். இவரது ”கம்பா நதி” நாவல் தமிழக அரசின் பரிசை பெற்றது. எஸ்தர், பாம்பும் பிடாரனும், தேடித் தேடி, உள்ளும் புறமும், தாமிரபரணிக் கதைகள் போன்றவை இவரது முக்கிய சிறுகதைத் தொகுதிகள். மெய் பொருள் காலம், இவைகள், இவரது கவிதை தொகுப்புகள். புகழ்பெற்ற திரைப்படமான ருத்ரையாவின் “அவள் அப்படித்தான்” இத்ற்கு வசனம் எழுதியவர் வண்ணநிலவன் என்பது கூடுதல் தகவல்
வண்ணநிலவன் எழுதிய எஸ்தர் சிறுகதையை இங்கே உற்று நோக்கலாம்.
ஏழ்மை வேறு பஞ்சம் வேறு.ஏழ்மை என்பது பிறவியின் தொடக்கமாக இருக்குமேயானால் அதன் வலி நேர்கோட்டுத் தன்மையிலானது.ஏக்கங்களுக்கும் நிராசைகளுக்கும் நிதர்சனத்திற்கும் இடையிலான ஊடாட்டம் நாளும் நகர்ந்து சென்றாக வேண்டிய நிச்சலனம் என ஏழ்மையின் சித்திரங்கள் தீர்க்கமானவை.
பஞ்சமும் வாழ்ந்துகொண்டிருக்கையில் வறுமையை அடைய வேண்டிய துர் அதிர்ஷ்டம் என்பது ஏழ்மையை விடக் கொடியது.முன்னும் பின்னுமாய்க் காட்சி மாற்றமும் அதனூடாகக் கலைந்து பாதியில் அழித்தெறியப்பட்ட சித்திரங்களுமாய்த் ததும்பல்களும் கேவல்களும் இயலாமையும் இருந்து இல்லாமற்போன இரண்டுங்கெட்ட வாழ்வைச் சபிக்க வழியின்றிப் பலவீனத்தின் சாலைகளில் திக்குமுக்காடும் கூட்டத்தின் கேவல் அது.
அந்த ஊரின் பஞ்சகாலப் பின்னணியில் எஸ்தர் எனும் கதை தொடங்குகிறது.Reyinees Iyer Theru (Tamil Edition): Vanna Nilavan: 9788184931495: Amazon.com: Books

முடிவாகப் பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுச் செல்வதென்று ஏற்பாடாயிற்று.மேலும் பிழைக்கப் போகிற இடத்துக்குப் பாட்டி எதற்கு.?அவள் வந்து என்ன காரியம் செய்யப் போகிறாள்..?நடமாட முடியாது.காது கேளாது.பக்கத்தில் வந்து நின்றால் அதுவும் வெளிச்சம் இருந்தால் தான் தெரிகிறது.ஒரு காலத்தில் பாட்டிதான் இந்த வீட்டில் எல்லாரையும் சீராட்டினாள்.பேரப்பிள்ளைகளுக்கெல்லாம்,கடைசியாகப் பிறந்த ரூத் உள்பட,எல்லாருக்கும் பாட்டியின் சீராட்டல் ஞாபகம் இருக்கிறது.உபயோகமில்லாத பாட்டியை அழைத்துக் கொண்டு பிழைக்கப் போகிற இடத்துக்கெல்லாம் கூட்டிச் செல்ல முடியுமா..?
வீட்டில் பல நாட்களாக இது தான் பேச்சு,

நெல்லுக்கு மாற்றாகக் கம்பும் கேப்பையும் உணவாகிப் போன பின்னாலும் சித்தி எஸ்தர் புண்ணியத்தில் அது கூட மணக்கத் தான் செய்கிறது.மூத்தவன் அகஸ்டின் சின்னவன் டேவிட்.இருவருடைய மனைவி பெயரும் பெரிய அமலம் சின்ன அமலம்.இவர்களுடைய தந்தை மரியாதாஸின் ஒன்றுவிட்ட தங்கை தான் எஸ்தர் சித்தி.அந்த வீட்டில் அவள் இட்டது தான் சட்டம்.காட்டு வேலைகள் தொடங்கி வீட்டு நிர்வாகம் வரைக்கும் எல்லாவற்றையும் பொறுப்பாகப் பார்த்து வந்தவள் எஸ்தர் தான்.

வீடே சித்திக்காக இயங்கியது:வேலைக்காரர்களும்,அந்த ஊருமே கூட சித்திக்காகக் கட்டுப்பட்டு இயங்கியது.
மூத்த மருமகள் பெரிய அமலத்துக்கு ஒருவகையில் சித்தி அத்தை முறை வரும்.சுற்று வழியில் அக்கா முறையும் வரும்.அவள் ஒரு அப்பிராணி.அதிர்ந்து பேசத் தெரியாதவள்.அத்தனை பாந்தமும் அமைதியும் மிக்கவள்.அளவாகப் பேசுபவள்.சின்ன அமலம் கொஞ்சம் வெளிப்படையானவள்.என்றாலும் எதிலும் தவறாதவள்.
இனிமேல் இந்த ஊரில் என்ன இருக்கிறது..?சாத்தாங்கோயில் விளையிலும் திட்டி விளையிலும் மாட்டை விட்டு அழித்த பிற்பாடும் இங்கே என்ன இருக்கிறது..?

சுற்றத்து வீடுகள் ஊரைக் காலி செய்து போய்விட்டார்கள்.மேலத் தெருவில் ஆளே கிடையாது என்று ஈசாக்கு வந்து சொன்னான்.ஊரே சின்ன ஊர்தான்.இருந்த இரண்டு கடைகள் முற்றுப்பெற்றாயிற்று.வீட்டில் அப்போது ஒரே ஒரு தீப்பெட்டி தான் விஞ்சி இருந்தது.பீடி குடிக்கிறதற்காக டேவிட் நேற்று ஒரு குச்சியைக் கிழித்தான்.எவ்வளவோ ஜாக்கிரதையாகத் தான் குச்சியைக் கிழித்தான் டேவிட்.இருந்தாலும் எப்படியோ அந்த சப்தம் கேட்டு வெளியே இருந்த சித்தி ஓடிவந்து பார்த்து விட்டாள்.எதுவுமே பேசவில்லை.திட்டியிருந்தாலோ எதாவது கேட்டிருந்தாலோ கூட மனது ஆறி இருக்கும் டேவிட்டுக்கு.ஆனால் சித்தி எதுவுமே கேட்கவில்லை.எரிகிற ஜோதியின் இருபுறங்களிலும் ஒரு கணம் இருவரும் பார்த்துக் கொண்டனர்.சித்தி போய்விட்டாள்.டேவிட்டால் மனம் ஒப்பி அந்த பீடியைக் குடிக்க முடியாமற்போகிறது.

அந்த இரவு நெடுநேரம் எதுவும் சாப்பிடாமல் புரண்டு கொண்டே இருக்கிற டேவிட்டை சித்தி அதட்டி எழுப்புகிறாள்.சாப்பிடச் சொல்கிறாள்.அவன் வேண்டாம் என்று முனக அதட்டுப் போடுகிறாள்.டேவிட்டும் எஸ்தர் சித்தியும் கட்டி அணைத்துக் கதறி அழுகிறார்கள்.எப்படி வாழ்ந்த குடும்பத்தின் நிலை சீரழிகிறதே என்பது பட்டவர்த்தனமாகப் புரிகிரது.சித்தி எஸ்தருக்கு தன் கணவன் லாரன்ஸ் நினைவு வருகிறது.
அடுத்தடுத்த நாட்களில் அவர்கள் கூடிக் கூடிப் பேசுகிறார்கள்.காட்டுக்குப் போய் வரும் ஈசாக்கு காடு முற்றிலுமாக அழிந்து போயிருப்பதைக் கூறிக் கலங்குகிறான்.ஊரைக் காலி செய்து கொண்டு பஞ்சம் பிழைக்கப் பெரும்பாலானாவர்கள் போய்விட்டதையும் சொல்கிறான்.இவர்கள் குடும்பம் இனி எத்தனை நாட்கள் தாக்குப் பிடிக்க முடியும் என்று பேசி அடுத்த நாள் கிளம்பி விடலாம் என்ற முடிவுக்கு வருகிறார்கள்.
இருப்பில் இருக்கிற உணவுக்கான மூலப்பொருட்கள் வெகுவாய்க் குறைந்து விட்டதை பெரிய அமலம் எடுத்துக் கூறுகிறாள்.குடும்பம் மொத்தமும் தங்கள் நகர்தலுக்குத் தயாராகிறது.
பாட்டியை அழைத்துப் போக முடியாது.துணைக்கு ஈசாக்கை விட்டுப் போவது என்ற முடிவுக்கு வந்த பிற்பாடு ஈசாக் மீது அன்பும் ஆதுரமும் பெருகுகிறது எஸ்தர் சித்திக்கு.எப்படிப் பட்ட காரியக்காரன்..?பாட்டிக்காக ஒன்றுமில்லாத காட்டில் அவனை விட்டு விட்டுப் போகவா முடியும் என்று தனக்குள்ளாக மறுகுகிறாள்.இப்போதைய சூழ்நிலைக்கு என்ன தீர்வு இருக்க முடியும் என்று தனக்குள் சதா ஆர்ப்பரித்தவண்ணம் இருக்கிறாள் எஸ்தர் சித்தி.பெரிய அமலத்தையும் சின்ன அமலத்தையும் அவரவர் பெற்றவர் வீடுகளுக்குக் குழந்தைகளுடன் சென்றுவிடுமாறு கட்டளையிடுகிறாள் எஸ்தர்.அவர்கள் மறுப்பே சொல்லவில்லை.யாருக்குமே பற்றாத சாப்பாட்டைத் தட்டுகளில் பரிமாறினாள் எஸ்தர் சித்தி.குழந்தைகளுக்குக் கூடப் போதாத சாப்பாடு.
அகஸ்டினையும் டேவிட்டையும் பார்த்து நீங்க ரெண்டு பேரும் எங்கூட வாங்க ஈசாக்கும் வரட்டும் மதுரைக்குப் போயி கொத்த வேலை பார்ப்போம் மழை பெய்யத் தண்ணியும் எங்கனயாவது காலத்த ஓட்ட வேண்டியது தானே..?”என்கிறாள்.
பாட்டி இருக்காளா எனக் கேட்ட டேவிட்டுக்கு பதிலேதும் சொல்லாத எஸ்தர் சென்று அந்த இரவில் பாட்டிக்குப் பக்கத்தில் படுத்துக் கொள்கிறாள்.
அந்தக் கடைசி இரவின் கதை இனி வண்ண நிலவனின் அதே வரிகளில் பாட்டியைக் கல்லறைத் தோட்டத்திற்குக் கொண்டு போகிறதற்கு பக்கத்து ஊரான குரும்பூரிலிருந்து ஒரு பழைய சவப்பெட்டியைச் சொற்பமான விலைக்கு ஈசாக்கே தலைச்சுமையாக வாங்கிக் கொண்டு வந்தான்.அதற்குள் சாயந்திரமாகி விட்டிருந்தது.பாதிரியார் ஊரில் இல்லையென்று கோயில் குட்டியார் தான் பாளையஞ்செட்டி குளத்தூரிலிருந்து வந்திருந்தார்.ஊரை விட்டுக் கிளம்புகிறதுக்காகவென்று எஸ்தர் சேமித்து வைத்திருந்த பணத்தில் பாட்டியின் சாவுச் செலவுக்கும் கொஞ்சம் போய்விட்டது.

யாரும் அழவே இல்லை.மாறாகப் பயந்து போயிருந்ததை அவர்களுடைய கலவரமான முகங்கள் காட்டின.கல்லறைத் தோட்டம் ஒன்றும் தொலைவில் இல்லை.பக்கத்தில் தான் இருந்தது.கோயில் தெருவிலும் நாடாக்கமர் தெருவிலும் இருந்த இரண்டே வீட்டுக்காரர்கள் கொஞ்ச நேரம் வன் திருந்து விட்டுப் போய் விட்டார்கள்.துக்க வீட்டுக்குத் துக்கம் விசாரிக்கிற பொறுப்பை அவ்வளவு லேசாகத் தட்டிக் கழித்து விட முடியுந்தானா..?

எஸ்தர் சித்திக்கு மட்டும் பாட்டியின் ஈரம் நிரம்பிய கண்கள் கூரையைப் பார்த்து நிலைகுத்தி நின்றது அடிக்கடி ஞாபகத்துக்கு வந்து கொண்டே இருந்தது.வெகுகாலம் வரை அந்தக் கண்களை அவள் மறக்காமல் இருந்தாள்.


வண்ண நிலவனின் எஸ்தர் கதை எழுதப்பட்டு கிட்டத்தட்ட நாற்பத்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வாசிப்பின் பரப்பில் ஒரே அதே மாறாத அதிர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. வறுமையின் பஞ்சத்தின் கோரப்பிடியில் சிக்குண்டு தப்பியோட விழைகையில் வாழ்வின் ஆதார மதிப்பீடுகள் நம்பகங்கள் போன்றவற்றிலிருந்து விலக்கம் கொள்ளவேண்டியது தேர்வுகளும் மாற்றுகளும் அறவே வாய்க்காத ஒற்றை. இதனை அழுத்தந் திருத்தமாக மற்றும் அனாயாசமாக நிரூபித்துச் செல்கிற இன்னொரு கதை இல்லை என்று போற்றத் தக்க ஒரு கதை எஸ்தர் .காருண்யத்தின் எல்லை கருணையற்றது என்பதைச் சொல்ல முற்படுகையில் மனம் விம்முகிறது.முன் பழைய நம்பகங்கள் நதியற்ற நதியாய்ப் பெருகுகின்றன. கருணை என்பதன் பொருளாகவே கருணையற்ற இருண்மை வந்து நேர்கையில் எதிர்கொள்ளச் சொல் ஏது?