சுமதியின் கால தானம் சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து
14 சிறுகதைகள் அடங்கிய இந்தத் தொகுப்பில் பெரும்பாலான கதைகளின் அடிநாதமாகப் பயணிப்பது ரசனையும், மனித உறவுகளும் தான். அக விரிதல்களை மையப்படுத்தி எழுதப்படுகிற சிறுகதைகள் வெளியாகிற காலத்தோடு முடங்கி விடுவதில்லை. பெரு நெடுங்காலம் கழித்தும் அவற்றை வாசிக்கும் போதும் அவற்றிலிருந்து வாழ்க்கையை நோக்கி எடுத்துச் செல்வதற்கான விஷயங்கள் எஞ்சியுயிர்க்கவே செய்யும். சுமதி தன் எழுத்தினூடாக முன்வைப்பது ஒருவிதமான நுண்மையான சுய-வார்த்தலைத் தான். அவர் எழுதிப் பார்க்கும் பல கதாபாத்திரங்களும் தானே தன்னை உருவாக்கிக் கொள்ளுகிற சுயம்புக் குழாமில் சேர்வதற்கான தகுதி படைத்தவர்களே.
பாடல் வரிகளும், ராகங்களும், ‘நறுவிசான’ நடை, உடை, பாவனைகளுமாக ரசனையின் விதவிதமான வெளிப்பாடுகள் கிட்டத்தட்ட அனைத்து கதைகளிலும் தென்படுகின்றன. ரசனை என்பது ஒரு வாழ்க்கைமுறை அது வெறுமனே நேரவிரயமோ அல்லது மேலோட்டத் தேடலோ அல்ல. ரசனையும் வேட்கையும் வெவ்வேறல்ல என்பதை இன்னுமொரு முறை மெய்ப்பிக்கின்றன இவரது கதாசம்பவங்கள்.
அப்பாவின் ரசனை, அழகியல் என்று தொடங்கி, அம்மாவை நோக்கிப் பாய்ந்து, ரசனைதான் உசத்தியா என்ற கேள்வியை முன்வைத்து முடியும் ‘அம்மா’ கதையாகட்டும், வாழ்க்கை எப்படிப் புரட்டிப்போட்டு அடித்தாலும் தன் ரசனையைக் கைவிடாத தன்சு உலவும் ‘ரசனைக்காரி’ கதையாகட்டும் ரசனை என்ற நாணயத்தின் இருபுறங்களாகவே வெளிப்படுகின்றன. ரசனையைக் கொண்டு மூடிவிடமுடியாத குறைபாடுகளும், பலவீனங்களால் மழுங்கிவிடாத ரசனைகளும் கொண்ட மனிதர்கள் கதைகள் முழுக்க உலவுகிறார்கள். அம்மாவின் கடிதத்தில் சொல்லப்படும் சின்னச் சின்ன பொட்டலங்கள் திறக்கத் திறக்கத் தன் மனத்தில் இதுவரை தான் திறந்துபார்க்க விரும்பாமல் மூடி வைத்திருந்த கதவுகள் திறப்பதையும், அந்தத் திறப்புகளின் ஒளியும் காற்றும் தாளமுடியாமல் ஒரு மகள் மனம் பொங்கி அரற்றுவதையும் கச்சிதமாகச் சொல்லியிருக்கிறது ‘அம்மா’ சிறுகதை. இந்தக் கதையில் சொல்லப்பட்டிருக்கும் திருமண உறவின் தோல்வி, ‘ரசனைக்காரி’ கதையில் வேறு விதமான அழுத்தத்துடன் சொல்லப்பட்டிருக்கிறது.
எனக்கு நீதான் ஹீரோ என்று கொண்டாடும் மனநிலை கொண்ட மனிதர்களை நாம் அன்றாடம் பார்க்கிறோம். இத்தகைய பாத்திரங்கள் இருக்கும் கதைகளில் அந்த நாயகத்தன்மை மீது விழும் கீறலும் அதே இயல்புடன் சொல்லப்பட்டிருக்கிறது. தன் கனவை அப்பா என் மீது திணிக்கிறார் என்ற ஒவ்வாமையுடனே வளரும் ஒருவன், அதையே தன் பிள்ளை வசம் ஒப்படைக்கையில் அதன் நியாயத்தைப் புரிந்துகொள்வதும், கடைக்குட்டி தங்கை தன் மீது வைத்திருக்கும் அபிமானத்தைப் புரிந்துகொள்ளாமல் ஒத்திப்போடும் ஒருவன், அவளிடமிருந்து வரும் நீண்ட கடிதத்தின் மூலம் முற்றாக உணர்ந்துகொள்வதுமாக, பல கதைகளில் ‘கால தானம்’ என்ற தலைப்புக்கான நியாயம் தென்படுகிறது.
தன் மாணவியை மீண்டும் சந்திக்கும் ஒருவருக்கு, ஆசிரியப் பொறுப்பில் இருந்து வழுக்கியதால் ஏற்படும் குற்ற உணர்வு, ஆடிய கால்களைச் சமையலறைக்குள் குறுக்கியதைப் பற்றிய எந்தக் குற்ற உணர்வும் இல்லாத ஒருவனுக்கு ஏற்படும் அதிர்ச்சி என்று குடும்ப உறவுகள் மட்டுமல்லாமல் தோழமை, குரு-சிஷ்ய உறவு, கல்லூரிக்கால காதல் என்று மனித மனத்தின் உறவு சார் உணர்வுகளை இந்தக் கதைகள் சுமந்திருக்கின்றன. பல்லக்கில் வீற்றிருக்கும் இளவரசியின் கம்பீரத்துடன் விறகுக் கட்டைமேல் அமர்ந்து அடுப்புக்குள்ளிருந்து வெளிவரும் ‘சாம்பல் பூ’வைப் பற்றி அபாரமாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். அப்படியான கம்பீரத்துடன் இம்மனித உணர்வுகளை அவற்றுக்கான அரச-சாலையில் உலவ விட்டிருக்கிறார்.
காட்சியுருவக் கதைகளை எழுதுவதில் ஆர்வம் மிகுந்திருக்கிற சுமதி கதாமாந்தர்களைப் பேசவைத்துப் பார்க்கும் பல உரையாடல்களும் மனத்தை ஈர்க்கின்றன. இந்தத் தொகுப்பில் நான் ரசித்த பல இடங்களில் ஒரு சிலவற்றை மட்டும் தவறவிடாமல் சொல்லிப் பார்க்க உத்தேசிக்கிறேன்.
அடவுகள் கதையின் இந்த வண்ணமயமான விள்ளலை சட்டென்று கடந்து போகவே முடியவில்லை. மீண்டும் மீண்டும் வாசித்து அயர்வது தான் அதற்குண்டான நியாயமாகிறது. “ஒரு நாட்டிய மேடையில் பாட்டும், மிருதங்கமும், மற்ற எல்லா கருவிகளின் முன்னால் வைக்கப்பட்டிருக்கும் ஒலிபெருக்கிகளும் நின்றுபோக, புல்லாங்குழல் மட்டும் சுருள் சுருளாய்த் தன் இசையைக் காற்றுவெளியில் கலக்க, அந்த சங்கீதம் அப்படியே தசாங்கப் புகையின் ஒரு கீற்றாய் உருமாறி கண்ணுக்குத் தெரிந்தால் எப்படி இருக்குமோ அப்படியான ஒரு பாவத்தை வீணாவின் கண்ணசைவில் பார்த்தான் ரவி”. Tremendous!!!
ஏகலைவம் கதையில் கட்டைவிரலைக் கேட்டபோதே ஏகலைவன் ஜெயித்து விட்டான் என்ற போது அட எனச் சொல்லத் தோன்றுகிறது அதிலேயே இன்னுமோர் இடம் பொட்டல அழகில் பொருள் தோற்றுப் போகும் உலகத்தில் என்ற வரியைத் தாண்டமுடியாமல் திகைத்து நிற்கிறேன்.
சுமதி இன்னும் பல கதைகளைப் படைக்க எனது அன்பான வாழ்த்துகள்.
வாழ்தல் இனிது!
(காலதானம் சிறுகதைத் தொகுப்பு ஜீரோ டிகிரி எழுத்து பிரசுர வெளியீடாக வந்திருக்கிறது).