ஜெய்பீம்

நீதி என்பது இறுதியாக எஞ்சவல்ல தெய்வம். எல்லா இருளுக்கும் எதிரான ஒற்றைப் பேரொளி. ஜெய்பீம் நீதிமன்றக் களனை மையமாக எடுக்கப் பட்ட இந்தியத் திரைப்படங்களில் மிகவும் முக்கியமானதொரு திரைப்படம். நீதிநாயகர் சந்துருவின் வழக்குரைஞர் வாழ்வில் முக்கியமானதொரு வழக்கை மையக்களனாக்கித் தனது ஜெய்பீம் படத்தை எடுத்திருக்கிறார் த.செ.ஞானவேல். உண்மைக்கு மிக அருகே வருகையில் புனைவுக்குப் பெரியதோர் கலைமதிப்பு ஏற்பட்டுவிடுகிறது. ஜெய் பீம் திரைப்படமோ உண்மையை மறுதோன்றல் செய்த வகையில் மிகுந்த கவனத்தைப் பெறுகிறது. இப்படி ஒரு படம் பார்த்துப் பல வருடங்கள் ஆயிற்று என்று சொல்லத் தக்க படம் ஜெய்பீம்.

இந்தப் படம் ஏற்படுத்துகிற காண் அனுபவம் வார்த்தைகளால் விவரித்து நிறைவுறாத மாபெரும் உணர்வுக் குவியல். இத்தனை நிஜமான கண்கள் இத்தனை அனலான சொல்லாடல்கள் எடுத்துக் கொண்ட கதையை விவரித்த விதம் அடுத்தடுத்த காட்சிகளினூடே குன்றாத தகிப்பு கொஞ்சம் கூட வலிந்து ஏற்படுத்தப் படாத உரையாடல் உறுத்தாத பாடல்கள் கதை முடிவில் எஞ்சக் கூடிய சிறு ஒளி போன்ற நம்பிக்கை என இந்தப் படமெங்கும் அற்புதங்கள். படம் முடிகிற இடத்தில் அந்தச் சிறுமி நாளிதழைப் படிக்கிற பாங்கு ஒரு மாபெரும் தெறிப்பு. கலங்கித் தகர்ந்ததும் உறைந்து நொறுங்கியதுமாக படமெங்கும் பல இடங்கள் அபாரமான படவுருவாக்கம். நடிகர்கள் தேர்வு கச்சிதம். இந்தப் படத்தின் ஜீவநாடியாக மணிகண்டனும் லிஜோ மோள் ஜோஸூம் தத்ரூபமான நடிகத் தேர்வு. வாழக் கிடைக்கிற சிறு துளியளவு வாழ்க்கையும் அதன் சர்வசகலமாய்த் ததும்புகிற காதலும் சோப்புக் குமிழியாய் உடைந்து சிதறுகிற எல்லாமுமாக மிரளச் செய்கிற நடிப்பு. குருசோமசுந்தரம் ராவ் ரமேஷ் தமிழ் ராஜிஷா விஜயன் ஜெயப்ரகாஷ் எம்.எஸ்.பாஸ்கர் இளவரசு சூப்பர்குட் சுப்பிரமணி பாலஹாஸன் என இந்தப் படத்தின் நடிகர்கள் எல்லாருமே அனேகமாக இதுவரையிலான வேடமேற்றல்களை எல்லாம் அழியச் செய்து இந்தப் படத்தின் பாத்திரங்களாக மட்டும் எஞ்ச முனைந்திருப்பது துல்லியம். சூர்யா நடிகனாக தயாரிப்பாளராகப் பெருமிதம் கொள்வதற்கான எல்லாத் தகுதிகளும் கொண்ட படம் ஜெய்பீம். பெருமைக்குரிய சினிமா

பார்த்தே ஆக வேண்டிய படம்.