தேன் துளிகள் 5

     


                                        புலன் மயக்கம்


71
இசை என்பது பேரலை ஓயாப் பெரும் சாகரம்
*

72
திருப்பித் தர முடியாத அன்பளிப்பின் பெயர் காதலென்றும் சொல்லலாம்தானே?
*

73
ஏன் பிடிக்கும் என்றா பிடிக்கும் எவர் மீதான ப்ரியமும்..?வந்தவழியே தெரியாது அல்லவா..
*

74
காலத்தின் போக்கையும் அதன் திசையையும் மாற்ற முயற்சிக்கவில்லை என்பது குற்றச்சாட்டல்ல.ஊரோடு ஒத்து வாழ நேர்வது நிர்ப்பந்தமன்றோ.ஆனாலும் வழமையான அதன் சதுக்கங்களுக்குள் தன்னால் ஆன அளவுக்கு எதிராடல்களையும் வித்யாசங்களையும் எவனொருவன் முயன்றுகொண்டே இருக்கிறானோ அவனே கலைஞன்
*

75
ஒரு பாடல் ஆன்மாவிலிருந்து எழவேண்டும்.அல்லது ஆன்மாவைத் தொட வேண்டும்.வருடலோ கீறலோ துளைத்தலோ வெட்டுக்கத்தியின் இரக்கமற்ற கூர்மையோ ஏதோ ஒன்றை நிகழ்த்தினால் தான் அது பாடல்.தமிழர்களின் வாழ்வு பாடல்களால் ஆனது.தாலாட்டுத் தொடங்கி ஒப்பாரி வரைக்கும் வாழ்க்கையின் கணங்களைப் பாடல்களால் அலங்கரித்துக் கொண்டவன் தமிழன்.இத்துணை தூரம் பாடல்களுக்கு இடம் தந்து தானும் அதுவும் தாங்களாகிப் பெருகுகிற இன்னொரு சமூகத்தைச் சுட்டமுடியாது என்பது தமிழின் தனித்துவம் மாத்திரமில்லை.அது ஒரு அமோகமான உயரம்.நமக்கெல்லாம் கம்பீரம்.வாழ்க தமிழிசை.
*

76
உண்மையில் எல்லா மொழிகளிலும் கவிதைக்கும் பாடல்களுக்கும் இசைக்கும் இடமில்லாமல் இல்லை.ஆனால் ரசனை வேறு வாழ்க்கை வேறு என்பதான இரண்டு கோடுகள் எப்போதும் எல்லோர்க்கும் உண்டு.இங்கே வித்யாசம் நம் நிலத்தின் வாழ்வியலுக்குள் இருப்பதை முன்மொழிய விரும்புகிறேன்.பாடல் கேட்டுக் கொண்டே பணி செய்வதை அனுமதிக்கிற மேற்கத்திய நவ உலகத்துக்குச் சற்றும் மாற்றுக் குறையாத நிசப்பொன் தான் பாடிக் கொண்டே நடவிலிருந்து மலர் பறித்தலிலிருந்து அறுவடை வரைக்குமான நம் நிலத்தில் தனித்தொலிக்கும் பாடல்கள்.இங்கே பாடிக் கொண்டே நெசவு செய்பவனிலிருந்து மந்திரம் செய்பவன் வரை உண்டல்லவா..?
*

77
கித்தாய்ப்புத் தான் தமிழ்.தத்துவமும் ஆன்மீகமும் அருகமைந்த நதிகள்.ஆன்மீகத்தை மறுதலிப்பவனுக்கு அதன் பெரும்பகுதி தத்துவமாய்த் தெரிந்தேகும்.உளம் என்ற ஒன்று இருந்தும் இல்லாதிருப்பதை என்னவென்று உபகூறு கொண்டு அலசுவது என்பதில் மாற்றுக் கருத்தில்லாத முரணாளர்கள் உளவியலின் சகல இருளுக்கும் வாழ்வின் வீதிகளெங்கும் விடை தேடுவதை ஒப்புக்கொள்வார்கள்.நாளைய குற்றங்களை நடவாமல் கட்டுப்படுத்துவதற்கும் குறைப்பதற்கும் அகற்றுவதற்கும் உளவியலால் ஆகும் என்பது அறிவியலின் விந்தை குன்றா விள்ளல் எனக் கூறலாம்
*

78
ஒவ்வொருவர் வாழ்விலும் ஆயிரக்கணக்கான பாடல்களின் நுழைகின்றன.ஆனால் எல்லாப் பாடல்களும் தங்குவதில்லை.கலயத்தில் சேகரமான மழையின் சொற்பம் போலச் சிற்சில பாடல்கள் மாத்திரமே நிகழ்கின்றன.எந்த ஒரு மனிதனும் தனக்குள் நுழைகிற பாடல்களை எளிதாகக் கடந்து மறந்து விடுகிறான்.தனக்குள் நிகழ்ந்த பாடல்களை ஒருபோதும் மறப்பதற்கில்லை.கடப்பதும் நிகழாது.இப்படியான தனித்த பாடல்கள் அன்பின் சரடுகளில் ஒன்றை அழுத்தமாய்ப் பற்றியபடி வருகின்றன.அவற்றை முதலில் கேட்ட தருணங்கள் அழகானவையாக இருந்துவிட்டால் அந்த ஞாபகத்தோடு அப்பாடல்களும் தம்மைப் பொருத்திக் கலைத்துப் போடுகின்றன.பிறகென்ன..?எப்போதெல்லாம் அந்தத் தருணத்தின் நிகழ்வின் ஞாபகத்தைக் கைக்கொள்ள நேர்கிறதோ அப்போதெல்லாம் அப்பாடலின் ஞாபகமும் வந்து சேர்கிறது.இதன் தலைகீழ் சம்பவித்தலும் நிகழ்வது ரசம்.அதாவது ஒரு பாடலின் ஞாபகம் அடுத்த வீட்டுக் குழந்தையைத் தன் விளையாடற்காலத்துக்குள் அழைத்து வருவதைப் போல வெகு எளிதாகக் கைப்பற்றி அழைத்து வந்து விடுகிறது அன்பின் சரடுகளை.இதுவும் அதுவும் எனப் பிரித்து உணர்வதற்கான தேவையுமின்றி அப்படிப் பிரித்து விடுவதற்கான வழியும் இல்லாமற் போய் மற்றவர்களின் மற்றுமொரு பாடல் நமக்கு மாத்திரம் மந்திரம் போல மாறுகிறது.யார் யாரின் பாடல்கள் எவ்வெவை என்றறிவது பழைய கதையைத் திறந்து தருகிற நினைவின் சாவிக் கொத்தாகிறது.
*

79
ஒரு பாடலின் கேட்கும் அனுபவம் என்பது எந்தப் புள்ளியிலிருந்து வேண்டுமானாலும் தொடங்கக் கூடிய ஒரு கோலத்தைப் போன்றது. அந்த வகையில் ஒவ்வொரு பாடலுக்கும் மனித வாழ்வைப் போன்றே ஒரு பிறப்பு, ஒரு வருகை இருக்கிறது என்பதை உணர முடிகிறது. சில பாடல்களின் வருகையை ஒட்டிய (முதல் முறை அவற்றைக் கேட்க நேர்தலை அதன் வருகையென்று கொள்ளலாம்தானே) எதிர்பாராமை எத்தனை அழகானது.
*

80
நம் அறியாமையின் மீது, தன்னைப் பூர்த்தி செய்தபடி வருகை தரும் அறிதலின் மகரந்தம்தான் பாடல் என்பது. இதில் வியப்பு என்னவெனில், துளி மகரந்தம், மானசீகத்தில் முழுப் பட்டாம்பூச்சியாகவே மாறும் என்பது
*

81
நல்ல பாடல் தரும் கண்ணீர்த் துளி என்பது ஸ்படிகம் போன்றது.
*

82
பாட்டென்பது பைத்தியத்தின் கையெழுத்து
*

83
யாரென்றே தெரியாத ஒரு முகத்தை உள்ளுறையும் ஒரு மனதை அவரது குரலை மாத்திரம் அறிந்துகொள்வதன் மூலமாகத் தன் மனசு மொத்தத்தையும் எழுதித் தருவதற்குச் சம்மதிக்கிற பித்து தானே இசை மீதான ரசனை..?உலக அளவில் மற்ற திறமைகளை எல்லாம் விடவும் எளிதில் மனக்கொள்ளை சாத்தியப்படுவது இசையாலணையும் செயல்களால் தான்.இன்று நேற்றல்ல.நீ வாசி.நான் தூங்குகிறேன் என்று ராஜாக்களே அயர்ந்து ராஜ்ஜியங்களை இழந்து திரிந்ததெல்லாம் பழங்கதை
*

84
மெல்ல மெல்லத் தன் பழைய தனி முகங்களை இழந்து ஒவ்வொரு தொழிலாய் உலகின் ஒருமித்த முகத்திற்கு மாறியபடி இருக்கின்றன.
*

85
எதிர்காலத்தில் சினிமா பல சின்னஞ்சிறிய கதையாடல்களின் துண்டு துணுக்குகளாக உடையும்
*

86
பாடல்களின் மீதான ரசனை என்பது ட்ரெண்டிங் சார்ந்த பிரச்சினை போலத் தோற்றமளித்தாலும் தற்காலத்துக்கு சற்று முந்தைய காலத்தின் இசை மீது தான் ஒவ்வொருவருக்குமான ப்ரியத்தின் பிடிவாதம் அமையும்
*

87
ஒரு பாடல் என்பது அதன் காலத்திலிருந்து தன்னை எப்போது விடுவித்துக் கொள்கிறது..?ஒரு படத்தின் சூழல்தேவை மற்றும் அதன் படமாக்கல் இன்னபிறவற்றிலிருந்தெல்லாம் விலகி எப்போதாவது கேட்கும் போது நனவிலியில் இருப்பவனின் முதல் ஞாபகம் போல அதனைக் கேட்கும் அனுபவம் வாய்க்கிறது.ஒவ்வொன்றாக அந்தப் படத்தின் கதையாடல் வரைக்கும் எல்லாவற்றையும் தேடித் தருகிறது.மீட்டுக் கொடுக்கிறது
*

88
கவிதை மீது பித்துக் கொண்ட யாருக்கும் கண்ணன் எனும் சித்தாந்தம் மீதான பித்து இருந்தே தீரும்.கண்ணனை ஒருதலையாய்க் காதலிக்கலாம்.எப்போதும் காத்திருக்கலாம்.கண்ணனிடம் ஏமாறுவதன் பேர் தான் வாழ்க்கை.சேராக் காதலின் தலைவன் கண்ணன்.
*

89
பொய்த்தாலும் பரவாயில்லை என்றான பிற்பாடு எழுகின்ற விஸ்வாசத்தின் பேர் தான் பக்தி என்கிற பிடிவாதம்.அதன் இன்னொரு பேர் தான் காதல் என்பது
*

90
இசை என்பதன் மாயம் இது.வேறெந்த தொடர்பும் இல்லாத வேறோர் நிலத்தின் வேறொரு வாழ்வியலின் முற்றிலும் அன்னியப் புதிய மனிதன் ஒருவனை மனசுக்குள் நெருக்கமாய் உணர்ந்து கொள்ள நேசிக்க அவனுக்காகப் பிரார்த்திக்க அவனையே பிரார்த்திக்க அவனோடு முரண்பட அவனை வெறுக்க அத்தனையுமாய் அவனைக் கொண்டாடி மகிழ்ந்து உயரே தூக்கிக் குழந்தையை அந்தரத்தில் இட்டு மறுபடி கைக்கொள்ளும் ப்ரியத்தின் நடுக்கக் கணங்களுக்குக் கொஞ்சமும் குறைவற்றவை இசைஞர்கள் மீது ரசிகன் கொள்ள வல்ல ப்ரியங்கள்
*

91
எந்த ஒரு பாடலும் இடையில் ஆண்குரல் குழைந்து மென்மையாகையில் அங்கே ஒரு இடரேற்பு (ரிஸ்க்) ஏற்படும். எவ்வளவு சரிந்து இறங்குகிறதோ அதனை உடனே மேலேற்ற முடியாமல் போகலாம். அல்லது பட்டவர்த்தனமாகச் சரிந்தபடியே சென்று முடியலாம்.அதனை வென்றெடுத்தவர்கள் வெகு சிலரே.
*

92
காலத்தைப் பத்திரம் செய்துகொள்ளத் தெரியாதவர்கள் பாடல்களைச் சரணடைகிறார்கள். வரிகள், குரல்கள், இசை, காட்சி இன்னபிற என எல்லா நதிகளும் சென்று சேர்வது காலமெனும் கடற்கடவுளைத்தான்
*

93
பாத்திரத்தின் கச்சிதத்துக்குள் பாடுகிற குரலைக் கொண்டுபோய்ப் பொருத்துகிறவனே நற்பாடகனாக முடியும்.இதை சாதாரணமாக உடனொலி தருபவர்களின் குரல்களிலிருந்தே எதிர்பார்க்கப் படும் என்பது தான் நிசம்.ஆனாலும் பாத்திரத்தின் கச்சிதத்தின் அதி அற்புத துல்லியத்துக்குள் தன் குரலை நிறுத்துவது என்பது பயிற்சியின் மூலமாகக் கைவரப் பெறுகிற மேதமை
*

94
பாடல்கள் வெறும் பாடல்களல்ல,மறக்க முடியாத மாபெரிய சந்தோஷ காலத்தின் இணைநதிகள். கூழ்பனிக்கனவுகள் என்றும் இனிக்கும் பாடல்ஞாபகங்கள்.
*

95
ஆயிரமாயிரம் பாடல்களால் ஆகாத சித்துவேலை பாடல் முடிவடைகையில் பல்லவி ஈற்றுமுறை ஒலிக்கையில் ஆனந்த அழுகைக்கு நிகரான உணர்தலைக் கேட்பவர் மனதுள் சுரக்கச் செய்வது. அதனை ஒவ்வொரு முறை ஒலிக்கையிலும் நிகழ்த்துகிற காலங்கடக்கும் மாயமழைப் பாடல்கள் அபூர்வமானவை.
*

96
ஒவ்வொரு பாட்டுக்குள்ளேயும் ஒரு வாழ்க்கை இருக்கும்.இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை.இருக்கும் என நிச்சயமும் இல்லை. அப்படியான வாழ்க்கை இருக்கிற பாடல்கள் மட்டும் தனிக்கும். ஏன் எதற்கெனத் தெரியாமல் நமக்குள்ளே சின்ன பெரிய அலைகளாய் அடித்து நிதானத்தினுள் சிறியதோர் ஆர்ப்பரிப்பை உண்டாக்குகிற காரணமில்லாத உணர்வுகளின் பின்னணியில் அப்படியான பாடல்கள் ஒலிக்கும்.
*

97
திரைப்படம் என்பதே பொய்யாய் உருவாக்கப்படுகிற நிகர் உண்மை தானே…?அப்படி ஒன்று நிகழ்த்தப்படுகிறது.ஆனால் அப்படி ஒன்று நிகழ்கிறது போலத் தோற்றம் தருகிறது.ஆக நிஜம் கலைந்து அழிந்து நிஜம் போலத் தோற்றமளிக்கிற அறிவியற்கூடமே திரைப்படம்.அந்த வகையில் பாடல் என்பது புனைவின் தேவை.இல்லாத ஒன்றை ஏற்படுத்தி இருப்பது போலச் செய்தலின் உச்சபட்சம் பாடல்கள்.அவற்றின் வரிகள் ஊசிமருந்தைப் போல என்று வைத்துக் கொண்டால் அவற்றை அடைத்திருக்கிற ஊசிதான் பாடலிசை.பாடுகிற குரல் தான் ஊசியை ஒவ்வொரு மனசுக்குள்ளும் ஒவ்வொரு முறையும் செலுத்தித் தருகிறது
*

98
ஒரு பாடலின் அதியுச்ச இயங்குதளம் என்பது அதன் காணொளி மூலமாய் ரசிக மனங்களில் ஒரு உறைந்த சித்திரமாய்த் தேங்குவது.மங்கலான ஒரு கனவின் விடுபடல் போலத் தான் ஒவ்வொரு பாடலின் காணொளியும் தேங்கும்.ஆனாலும் அவற்றைக் கேட்க அல்லது பார்க்க வாய்க்கையிலெல்லாம் மற்றவற்றை முந்திக் கொண்டு மேலெழுந்து வருகிற மாயத்தையும் தாமாகவே நிகழ்த்திக் கொள்ளும் ஒலிமந்திரம் தான் பாடல்கள்
*

99
இசையில் ஒரு பாடலின் செல்வாக்கு இன்னொரு அல்லது சில பாடல்களில் தென்படுவது என்பது வேறு.சாயல்கள் வேறு போலிகள் வேறு
*

100
இன்றைக்கும் இந்தப் பாடல்களைக் கேட்டால் ஒரே ஒரு முறை கேட்பதோடு விடுதலையாகி வெளியேற முடிவதே இல்லை.இந்தப் பாடல்கள் நம்மையெல்லாம் பொன்சிறைகளிலிட்டுப் பூட்டுகின்றன.சாவி ஏதோ ஒரு முன் பழைய காலத்தில் இருக்கிறது.இனி இவற்றை எப்படித் திறப்பது..?
*