நடிகன்

  நடிகன்  
குறுங்கதை  

“வரவிருப்பது யார் தெரியுமா..? வேதநாயகம். தி கிரேட் ஆக்டர் வேதநாயகம் தான்”. விமானத்தில் பலரும் கிசுகிசுத்துக் கொண்டிருந்தார்கள்.குணச்சித்திர நடிப்பில் தனக்குக் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் அடித்து விளாசிக் கொண்டிருந்தார். இந்தப் பத்து ஆண்டுகளில் வேத நாயகம் சம்பாதித்துச் சேர்ந்த புகழ் பலகோடிக்கு ஈடானதாக எல்லாத் திசைகளிலும் பேச்சு. எக்கோலம் பூண்டாலும் ஏற்கும் திருமேனி என்று பகவானைப் புகழ்வார்கள் அல்லவா..? அப்படி எவ்வேடம் பூண்டாலும் ஏற்கும் திருமேனியாகத் திகழ்ந்தார் வேத நாயகம். சென்னப்பட்டினத்தைத் தாண்டித் தமிழ் புழங்குகிற எல்லா ஊர்களிலும் அவர் புகழ்க்கொடி பறக்கத் தான் செய்தது.

விமானம் ஏறுவதற்குத் தாமதமாக வந்தார். விமானம் அவருக்காகக் காத்திருந்தது. ஏற்கனவே நேரத்துக்கு வந்து விமானத்தின் உள்ளே அமர்ந்திருந்தவர்களில் நடப்பு ராஜாங்க மந்திரி அழகப்பன் பெரும் தனவந்தர் புண்ணியகோடி மற்றும் நடனத் தாரகை ஜீவாம்பாள் என முக்கியஸ்தர்கள் பலர் இருந்தார்கள்.ஆனாலும் தாமதமாக வந்து சேர்ந்தவர் வேத நாயகம் என்று அறிந்த ஷணத்தில் அவர்கள் முகமெல்லாம் முன்பிருந்த கோபமும் கடுகடுப்பும் சென்ற இடம் தெரியவில்லை.என்னவோ பல வருடங்கள் பழகினாற் போல் அவரைப் பார்த்துப் பார்த்துப் புன்னகைத்தார்கள். தன் மீது அவர் பார்வை விழாதா என்று சிலர் ஏங்கியது பட்டவர்த்தனமாகத் தெரிந்தது.

விமானம் இப்போது சீராய்ப் பறந்துகொண்டிருந்தது. ஜே வரிசையில் இரண்டாவதாக அமர்ந்திருந்த அந்த யுவனுக்கு அதிகமிருந்தால் இருபத்தைந்து வயது இருக்கலாம். மெல்ல எழுந்த அவன் ஏர் ஹோஸ்டஸிடம் பிஸினஸ் க்ளாஸில் இருக்கும் வேதநாயகத்தைத் தான் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தான். அவள் தூங்குகிற பிரபலஸ்தர்களைத் தொந்தரவு செய்யமுடியாது என நளினமாக மறுத்தாள். அவன் உடனே “இப்போது வேண்டாம். அவர் எழுந்து கொண்ட பிறகு சூரக்குடி சன்னதி தெரு பார்வதி முத்தையா தம்பதியின் மகன் அரவிந்தன் அவரைச் சந்திக்க விரும்புவதாகச் சொல்லுங்கள். அவர் என்னை நிச்சயம் அழைப்பார்” என்றான்.

அந்த விமானப் பயணம் மொத்தம் மூன்றரை மணி நேரங்கள் இருந்தது. இன்னும் சற்று நேரத்தில் சென்னப் பட்டினத்தில் இறங்கவிருப்பதாக மும்மொழிகளில் அறிவிப்பாளினி தெரியப்படுத்திக் கொண்டிருந்தாள்.ஸீட் பெல்டுக்களைக் கட்டாயம் அணியவேண்டியதை வலியுறுத்தினாள். அரவிந்தனுக்கு முகம் சிறுத்துப் போனது. அவன் மட்டும் வந்திருந்தால் கூடப் பரவாயில்லை.அவனோடு வந்திருப்பது மல்லிகா. ரெண்டு வருஷங்களுக்கு மேல் அவர்கள் ஸ்னேகமாக இருந்ததன் பலாபலனாகச் சமீபத்தில் தான் அவளிடம் தன் காதலை மன்றாடினான். அவளும் பெரியமனம் செய்து அதனை ஏற்றாள். அவனைப் போலவே அவளும் புதுக் கல்லூரியில் பி.ஏ. படித்து விட்டு வங்கி ஒன்றில் பெரிய வேலை பார்ப்பவள் தான். முக்கியமான மீட்டிங்குக்காக ஒன்றாக டெல்லி சென்று திரும்புகிறார்கள்.மனசு வேலை உட்படப் பல பொருத்தங்கள் அவர்களிடம் இருந்தன. இன்றைக்கு எதிர்பாராமல் வேத நாயகத்தை இங்கே பார்க்க நேர்ந்தது தான் பிசகு.

“அவர் என்னுடைய உறவினர்” என்றான் அரவிந்தன். அப்போது தான் பிஸினஸ் கிளாஸூக்குள் வேத நாயகம் நுழைந்து கொண்டிருந்தார்.
“அப்படியா?” என்றாள் மல்லிகா.
“பின்னே..? என் அப்பா அவருக்குப் பல உபகாரங்கள் செய்திருக்கிறார். மறக்கக் கூடியதா?” என்று பெருமூச்சு விட்டான்.
“பிறகு தொடர்பில்லையா..?”
” அவர் பெரிதாக வெற்றி பெற்ற பின்னரும் என் அப்பாவை எதிர்பார்த்துக் கொண்டு தான் இருந்திருப்பார்.இவர் பிடித்த பிடியில் பித்தாய் நிற்பவராயிற்றே? என் அப்பா பேசினாரென்றால்அந்தக் காலத்தில் இங்கிலீஷ் காரனே மூக்கில் விரல் வைப்பான். முத்தையா என்றால் நேர்மை என்று புகழாதவர் உண்டா..? அவருக்கு இந்த ஸினிமா கினிமா எதுவும் பிடிக்காது. அதனால் தொடர்பு இல்லாமற் போயிற்று போலும்.பின்னர் அப்பாவும் காலமானார். இவரும் இன்னுமின்னும் பெரிய உயரத்தை அடைந்தார். எல்லாம் நடப்பதற்குரிய நேரம் என்று ஒன்று இருக்கிறதில்லையா..? பிராப்தம் இன்று தான் யதார்த்தத்தில் நாங்கள் சந்திக்க வேணுமென்றிருக்கிறது, அதை மாற்றவா முடியும்?” என்று ஜம்பமாகப் பேசியிருந்தான்.

நேரம் ஆக ஆக அவனுக்குள் பரபரத்தது. வெளியே காட்டிக் கொள்ளவில்லை. உள்ளே சுக்கு நூற்றைம்பதாக மாறியிருந்தான். அவன் சொன்னது பொய்யல்ல. தகவல்கள் எல்லாமும் கொஞ்சம் பெரிதுபடுத்தப் பட்ட ஆனால் உண்மைகளே. அவர் ஏன் சுத்தமாகத் தன் ஊரை தனது ஜனங்களை முற்றிலுமாகப் புறந்தள்ளி விட்டார்..? அப்பா அம்மா பேரைச் சொன்ன பிறகும் ஒரு வார்த்தை பேசத் தோன்றவில்லையா?நான் என்ன யாசகமா கேட்கப் போகிறேன்? “உறவு தானே அய்யா? நீ மேலே உயரத்தில் இருந்தாலும் நானொன்றும் பள்ளத்தில் இல்லையே..? நீ பறக்கிற அதே விமானத்தில் தானே நானும் பறக்கிறேன்? இது என்ன திமிர்..?” நினைக்க நினைக்க ஆறாமல் கோபம் வந்தது அரவிந்தனுக்கு.

பக்கத்தில் இருப்பவள் என் சினேகிதி மட்டுமல்ல. நாகரீக நாரீ. நான் மணக்க இருக்கும் மங்களம். அவள் முன்பு தேவையில்லாமல் அசடனாக நிற்க வேண்டி வந்ததே என்பது தான் அரவிந்தனின் கவலை. ஒருவேளை தான் சொல்லச் சொன்னதை அந்த ஏர் ஹோஸ்டஸ் பெண்மணி அவரிடம் சொல்லாமலே விட்டிருந்தால்..? ஆம்.அப்படித் தான் இருக்கும் அவனுக்குள் சின்னதாய் ஒரு வெளிச்சம் பூத்தது.

எல்லோரும் இறங்கி விமான நிலையம் வரை செல்வதற்கான பேருந்தில் ஏறியிருந்தார்கள். அரவிந்தனுக்கு முந்தைய ஸீட்டில் தான் வேத நாயகம் அமர்ந்திருந்தார். நல்லதாய்ப் போயிற்று. இவர் என் அம்மாவுக்குத் தம்பி முறை தானே வரும்..? “மாமா மாமா” என்று அவர் தோளைத் தொட்டான். அவர் திரும்பினார். “என்னைத் தெரியலையா..? நான் சூரக்குடி சன்னதித் தெரு பார்வதி முத்தையா அவங்க பய்யன். என் பேரு அரவிந்தன்” என்றான்.

அவர் முகத்தில் எதுவுமே மாற்றமில்லை “ஸோ வாட்” என்றவர் “ஸ்டுப்பிட்” என்றார். தன்னை அறியாமல் “ஸாரி” என்று சுருங்கித் திரும்பினான்.அவன் கண்கள் கலங்கிவிட்டன. பக்கத்தில் அமர்ந்திருந்த மல்லிகாவுக்கு என்னவோ போலாகி விட்டது. “ரிலாக்ஸ்” என்றாள்.

அந்த சம்பவத்துக்குப் பிறகாகத் தான் அரவிந்தன் பார்த்துக் கொண்டிருந்த வங்கி வேலையை விட்டு விட்டுத் தானும் ஒரு நடிகனாவது என்கிற தீர்மானத்துக்கு வந்தான்.