நவரசா-பாயசம்

நவரசா என்கிற திரைப்பூந்தொகுப்பில் வஸந்த் எஸ்.சாய் இயக்கத்தில் வெளிவந்திருக்கிற பாயசம் படத்தைப் பார்த்தேன். வேறோர் காலத்தை அதன் வண்ணமீறாமல் தோற்றுவிப்பதன் கடினம் அளப்பரியது. அதைவிடவும் நம்பகதுல்லியத்தில் வழுவாமல் பாத்திரங்களும் கதாநகர்வும் தொடக்கம் தொட்டு நிறைவு வரைக்கும் பயணித்தது செம்மை.
தொடர்ந்து இலக்கியத்தைத் திரையூட்டிப் பார்ப்பதில் அடங்காத பேராவல் கொண்டவர் வஸந்த். (இந்த முறை தி.ஜாவின் சிறுகதை). இன்னும் நிறைய நிறைய அவருடைய கனவுக் கதைகள் இருப்பதை அறிவேன்.
வெல்டன் பாஸ்…!
டெல்லிகணேஷ் மற்றும் ரோகிணி இருவருக்கும் இந்தப் படம் ஒரு போன்ஸாய்ப் பெருமரம். இத்தனை உக்கிரத்தை இந்த வயதில் தன் இடுங்கிய கண்களினூடாகப் பிறப்பிப்பதெல்லாம் அனாயாசம். டெல்லி கணேஷின் பெயரைச் சொல்லிக் கொள்வதற்கான அத்தனை தகுதிகளும் மிக்க பாத்திரம் பாயசத்தில் அவரேற்ற சாமநாது.
வாலாம்பாளாக ரோகிணி. குழந்தை நட்சத்திர காலம் தொட்டு இந்தக் கணம் வரைக்கும் நடிப்புக்கலையின் எல்லா உன்னதங்களையும் தன் மனத்தினூடே தோன்றச்செய்துவிட வேண்டும் என்கிற தீராநெருப்பு ரோகிணியின் திரைவாழ்வெலாம் ஒளிருலாக் கொண்டிருப்பது சத்தியம். தென்னக மொழிகள் எல்லாவற்றிலும் எத்தனையோ பாத்திரங்களை ஏற்றிருக்கும் ரோகிணி இந்தப் படத்தில் பேசி நடித்த தருணங்களை எல்லாம் தாண்டிச் சின்னஞ்சிறிய முகபாவங்களால் முக்கியமாக விழி நோக்கும் சிறு பார்வையால் கூட மின்ன முடியும் என்பதைப் புலப்படுத்தி இருக்கிறார். “சிரிச்ச முகமாக இருக்கச் சொல்லி” டெல்லிகணேஷை வலியுறுத்தி விட்டுக் கலைந்து நகர்கையில் போலச்செய்யவே முடியாத ஒரு அரிதான பார்வை பார்ப்பதெல்லாம் சர்வதேசத் தரம். இசையும் காட்சித் தோரணங்களும் முக்கியமாக கலை இயக்கமும் எல்லாமும் தேவைக்கு உகந்தாற் போல் தொனிக்கின்றன.