நீ ர் வ ழி


              நீர்வழி குறுங்கதை                  

அந்த ஊருக்குள் அவன் நுழையவே கூடாது என்று தடை விதித்திருப்பதாக அந்தப் பதாகை சொன்னது. ஊரின் பல இடங்களிலும் அவன் படத்தோடு கூடிய பதாகைகள் தொங்க விடப்பட்டன. அதை லட்சியம் செய்யாதவனாகத் தன் ஒரே ஒரு கைப்பையை எடுத்துக் கொண்டு அவன் அந்த ஊரை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தான்.

அவன் ஒவ்வொரு ஊராகக் கடந்து சென்று கொண்டிருப்பவன். அந்த ஊரிலிருந்து வெளியேறுவதற்காக படகுத் துறைக்கு வந்தடைந்திருந்தான். அவன் ஊரைத் தாண்டிக் கிளம்புகிறானா என்பதைக் கண்ணுற்று உறுதி செய்துகொள்வதற்காக ஊர்க்காவலர்கள் ரகசிய உளவாளிகள் சிலர் அவனைப் பின் தொடர்ந்தே வந்திருந்தார்கள். அவனைக் கவனிப்பது யார்க்கும் தெரியாமல் ரகசியம் காத்தார்கள். ஆனாலும் அவன் அவர்களது நிழலின் அல்லாட்டத்தைக் கொண்டே அவர்களது உத்தியோகத்தை அறிந்திருந்தான். அவனுக்கு இந்தக் காட்சி அடிக்கடி நடக்கிற ஒன்று தான் என்றாற் போலிருந்தது அவனது முகபாவங்கள்.

கரையிலிருந்து படகில் ஏறுகிற வழியில் டிக்கட் பூத் இருந்தது. நெடுந்தொலைவு நகரம் ஒன்றுக்குக் கடைசியாக அந்தப் படகு போய்ச் சேர்வதாக டிக்கட் விற்பவள் சொன்னாள். அவன் அந்த இடத்துக்கே தனக்கொரு டிக்கட் வாங்கிக் கொண்டான். அந்த ஊரிலிருந்து அவன் பயணிக்கிற பெரும்படகு அது உண்மையில் ஒரு சிறிய கப்பல்,அது மூன்றாம் நாள் காலை சேர்விடத்தைச் சென்றடையும் என்று புன்னகை மல்க அவள் தெரிவித்தாள். அவன் முகம் இறுக்கமாக இருந்தது. தன் சீட்டையும் பாக்கிச் சில்லறையையும் சேகரித்துக் கொண்டு தண்ணீர்போத்தல் ஒன்றையும் கைப்பற்றியவாறே படிக்கட்டுக்களில் ஏறிப் படகின் மேல்தளத்தை அடைந்தான். அங்கே அவனுக்கான ஸீட் எண்ணைப் பார்த்து குறிப்பிடப்பட்டதில் அமர்ந்தான்.

பாதி நாள் பயணித்த பிறகு சுற்றமும் சூழலும் நீரின் பிடியில் ஆழ்ந்திருக்க அவன் மட்டும் யாரிடமும் பேசவே இல்லை. அவனுக்கு அருகமைந்த இரண்டு ஸீட்டுகளில் ஒரு யுவனும் யுவதியும் இருந்தனர். அவர்கள் தனித்தனியே வந்தவர்கள் தான். நடுவே இவன் இருப்பதைப் பொருட்படுத்தாமல் அவர்கள் இருவரும் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் தத்தமது கதைகளின் அதுவரையிலான திருப்பங்களை எல்லாம் பகிர்ந்தவண்ணம் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். இவனிடமிருந்து சிறு புன்னகையைக் கூட அவர்களால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. அவன் பேசவும் கேட்கவும் இயலாத ஒருவனாக இருப்பான் என்று கூட அவர்கள் யூகித்துக் கொண்டார்கள். நேரம் செல்லச்செல்ல அவன் என்கிற ஒருவன் இருப்பதையே முற்றிலுமாக மறந்துகொண்டார்கள்.

அடுத்த நாள் காலையில் யாரோ தன் தோளைத் தொடுவதை உணர்ந்து திரும்பியவன் அந்த யுவன் புன்னகையோடு தயை செய்து நாமிருவரும் நமது இருக்கைகளை மாற்றி அமர்ந்துகொள்ளலாமா நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது ப்ளீஸ் என்றான். ஒரு தேவலோக சமாதானத்தோடு அவன் எப்படியும் சம்மதிக்கப் படுவோம் என்று எண்ணிக்கொண்டு தான் கேட்டான். அந்த யுவன் யாரிடமோ பேசுகிறான் என்ற பாவனையில் வேறு புறம் பார்த்தவன் அப்படியே உறங்கவும் தொடங்கினான். தன் தலையில் அடித்துக் கொண்டான் அந்த யுவன்.

சாப்பிடும் போதும் சுடுபானங்களை அருந்தச் செல்கையிலும் கூட அவனிடமிருந்து சிறு துளி அணுக்கத்தைக் கூடப் பெறமுடியாமல் யுவனும் யுவதியும் தவித்தார்கள்.நேரம் செல்லச்செல்ல ஏன் அவன் அப்படி இருக்கிறான் அவனுக்குப் பின்னால் இருக்கும் கதையென்ன என்பதைப் பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருந்தார்கள். அவனும் அவற்றை எல்லாம் கேட்டுக்கொண்டே இருந்தான் என்பது வசீகரம்.

அன்றைய மாலை ஒரு நகரத்தில் ஒரு மணி நேரம் படகு கரைதொட்டு நின்றிருந்தது. அந்த யுவனும் யுவதியும் காலாற நகரத்தின் தலைவாயில் வீதியில் நடைபோட்டார்கள். நாளிதழ்களை விற்கும் கடையில் அன்றைய மாலை நாளிதழை விலை கொடுத்து வாங்கினான் யுவன். இதென்ன நடுவாந்திரத்தில் நின்றுகொண்டு பேப்பர் வாங்குகிறாய் என்று சிணுங்கியபடி கேட்டாள் யுவதி. அவர்கள் கை கோத்திருந்தார்கள்.கடல் நடுவாந்திரத்தில் தானே காதல் கிடைத்தது என்று கேட்டான் யுவன். அவள் முகம் வெட்கத்தில் நிறம் கூடிற்று. அவள் அவன் தோளைச் செல்லமாய்க் குத்தினாள்.

இங்கு பாரேன் என்று கூவினான் யுவன். “கனவுகளைத் திருடுபவன் நாடுகடத்தல்” என்று நேற்றைய சம்பவம் விலாவாரியாக வந்திருந்தது. அந்த மனிதனின் பெயர் ஊர் இத்யாதி விபரங்கள் எதிலும் அவர்களது ஆர்வம் குவியவே இல்லை. அதென்ன கனவுகளைத் திருடுபவன் என்று அறியத் துடித்தபடி ஏழாம் பக்கத்தைத் தேடி ஓடினார்கள்.” மேற்படி பலே ஆசாமி ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்த சொல்லைத் தயாரித்து வைத்திருப்பான். அதை அவர்கள் கண்ணைப் பார்த்துப் பேசினான் என்றால் போதும் அவர்களுடைய கனவுகளைத் திறக்கும் சாவியாக அது மாறிவிடும். நினைத்த நேரத்தில் அவர்கள் கனவுகளுக்குள் நுழைந்து அவற்றைத் திருத்துவது,மாற்றி அமைப்பது களவாடுவது எனப் பல ஜாலவேலைகளைச் செய்துவிடுவான். அவனிடம் கனவுகளை இழந்தவர்கள் பலாயிரம் பேருண்டு. இதுவரை அவன் நூற்றி நாலு ஊர்களிலிருந்து விரட்டப்பட்டிருக்குறான். இப்போது நூற்றி ஐந்தாவது ஊராக அவன் எங்கே சென்றுகொண்டிருக்கிறான் என்பது யாருக்கும் தெரியவில்லை. பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது”

அவள் நடுங்கினாள். அவனுக்கும் உடல் வியர்த்தது. இருவரும் படகுக்குத் திரும்புகிற வழியில் தங்களுக்குப் பலமான ஆறுதல் மொழிகளைப் பகிர்ந்துகொண்டார்கள். நல்ல வேளை நாம் எத்தனையோ முயற்சித்தும் அவனிடம் ஒரு சொல்லைக் கூடப் பேசவேயில்லை என்று நிம்மதியானார்கள்.

மிகுதிப் பயணத்தை அவர்கள் இருவரும் முன்பொழுதின் உற்சாகத்தோடு கழிக்கவே இயலவில்லை. இறுக்கமும் கசகசப்புமாய்க் கழிந்த பொழுது பாரமாகத் துருத்திற்று.

மூன்றாம் நாள் அதிகாலை படகு சேர்விடத்தில் கரையொதுங்கிற்று. எல்லோரும் இறங்கி நடந்தார்கள். அவர்கள் இருவரும் கோத்த கரங்களை விலக்காமல் அரைகுறை உறக்கச்சடவு முகத்தில் வழிய படகு ஸ்டேஷனை விட்டு வெளியேறி சாலையில் நடந்தார்கள். ஒரு தேநீர் அருந்தலாமா என்று கேட்டாள் அந்த யுவதி. அவன் சரி என்று தலையாட்டியபடியே தேநீர்க்கடை நோக்கி நகர்ந்தான். சூடான திரவம் உள்ளே உற்சாகத்தை விளைவித்தது. “ஸ் இந்த ஊரில் தேநீர் எப்போதுமே டாப் ஆக இருக்கும்” என்று கூவினான் .

யாரோ சமீபிப்பது தெரிந்து திரும்பினார்கள்.அங்கே நின்றபடி “எக்ஸ்க்யூஸ் மீ” என்றான் கனவுகளைத் திருடுபவன். அவன் கண்கள் லாகிரியாக ஒளிர்ந்தன. யுவனும் யுவதியும் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். “நீர் மேல் என் வசியம் வேலை பார்ப்பதில்லை என்பதால் நான் நீர்ப்பயணங்களில் மௌனவிரதம் இருந்துவிடுவேன்” என்றவாறே முன்னால் நடந்து சென்றான். அவர்கள் இருவரும் ஆர்வமாக அவன் பின் சென்றார்கள்.