பின் ஸீட்

குறுங்கதை

பின் ஸீட்


அந்த மருத்துவமனை மூடுவதற்கான நேரமாகி விட்டிருந்தது. சாயங்காலம் நாலு மணிக்கு முதல் டோக்கன் அழைக்கப்பட்டது. இப்போது மணி ஒன்பது முப்பத்தைந்து. ஐம்பத்து மூன்று பேர் டாக்டரை தரிசித்து விட்டுத் திரும்பியாயிற்று. இப்போது உள்ளே சென்றிருப்பவர் ஐம்பத்து நாலு. தற்போது தான் கெந்திக்கெந்தி வந்து அமர்ந்து பெரிய குரலில் உஸ் ஹப்பா என்று சலித்துக் கொள்பவனுக்கு வயது அதிகபட்சம் முப்பது இருக்கலாம். வயதுக்குப் பொருத்தமில்லாத தளர்வு. இதை விட இளைக்க முடியாது என்பதான ஒரு உடல்வாகு. குச்சிகளால் செய்யப்பட்ட பொம்மையின் கைகளை மடித்து வைத்தாற் போல் தன் கரங்களை மடித்துக் கொண்டான். இவனுக்கெதற்கு டோக்கன் போட்டுக்கொண்டு. இவனே நாளைய கணக்குத் தான். இன்னும் விட்டால் பத்தரை மணி வரைக்கும் வந்து கொண்டே இருப்பார்கள். செல்வி உரத்த குரலில் வண்ணமதியைப் பார்த்துச் சொன்னாள். யக்கா ஸார் டோக்கன் நம்பர் அம்பத்தஞ்சு. இதோட இன்னிக்கு கவுண்ட்டைக் க்ளோஸ் பண்ணிக்கலாம்ல என்றாள்.உள்ளே மருந்தகத்திலிருந்து உம்..சரி என்று குரல் வரவே நிம்மதியானாள்.

வண்ணமதி டாக்டருக்கு சொந்தக் காரப் பெண். தன் வேலையைத் தாண்டிய கூடுதல் அதிகாரத்தைத் தானே உற்பத்தி செய்து கொள்பவள். செல்விக்கு வீட்டுக்குப் போகும் வழியில் பாளை ஸ்டோர்ஸூக்குப் போய் சில சாமான்களை வாங்கிப் போகவேண்டும். மறந்து விட்டால் ஆளாளுக்குக் கத்துவார்கள். நாளை வியாழக்கிழமை. அவள் வாழ்வின் சமீபத்திய ஞாயிற்றுக் கிழமைக்குப் பெயர் வியாழக்கிழமை தான். வார லீவு. எல்லோரும் பள்ளிக்கு வேலைக்கு என வெளியே செல்வார்கள். அவள் மட்டும் வீட்டில் இருப்பாள். எதுவும் செய்ய முடியாத ஒரு மச்சத்தைப் போல இந்த நர்ஸ் வேலை. டாக்டர் ரொம்ப நல்லவர். சிவகடாட்சம் எனப் பேர். வயது கிட்டத்தட்ட எழுபதாகிறது. ஊரின் முதிர்ந்த டாக்டர். கைராசி அனுபவம் எனப் பல காரணங்களால் கூட்டம் அம்முகிறது. அவரைக் கேட்டால் எல்லாம் விதிவழி என்பார். செல்விக்குத் தெரிந்த காரணம் டாக்டரின் கனிவு. அவர் மெதுவான குரலில் பேசுவதும் எல்லாரின் எல்லாவற்றையும் தன் காதுகளைத் திறந்து கேட்பதும் நிச்சயச்சிறப்பு. அவரிடம் சொல்வது ஏதோ கடவுளின் காதொன்றில் கொட்டுவது போல ஆகிவிட்டிருந்தது ஊர்க்காரர்கள் பலருக்கும்.

இப்போது டாக்டரைப் பார்த்து விட்டு ஐம்பத்து நாலு வெளியே வர புதியவனை அனுப்புவதற்காகக் காத்திருந்த செல்வி மணிச்சப்தம் கேட்டதும் தான் உள்ளே சென்றாள். இன்னும் எத்தினி. ஒருத்தர் தான். டோக்கன் நமபர்? ஐம்பத்தஞ்சு. டாக்டரின் மனம் கன்ஸல்டிங் மற்றும் மருந்து மாத்திரைத் தொகைகளை மனதோரம் கணக்குப் பண்ணிப் பார்த்துக் கொண்டது. யாரோ வயிற்றுக்குள் ஐஸ்க்யூப்ஸைக் கொட்டினார் போல் ஜிலுஜிலுவெனக் காற்று வருடியது. சரி நீ போ என செல்வியை அனுப்பி விட்டு ரெஸ்ட் ரூமுக்குச் சென்றார். அவர் திரும்பி வரும் போது அந்த இளைஞனின் சலனமற்ற கண்களைப் பார்த்தார். வெறுமை. என்ன பண்ணுது என்றார். வயிற்றின் மேலிருந்த டீஷர்ட்டைத் தூக்கித் தன் உடம்பைக் காட்டினான். நாலைந்து வரிகளாகச் சிவப்பு நிறக் கோடுகள் இருந்தன. வித்யாசமான இடைவெளிகளில் அவற்றைப் பார்ப்பதற்குள் மூடிக் கொண்டான்.

“நா ஒரு சிங்கம் வளக்குறேன். அது என்னைய இன்னிக்கு ப்றாண்டிட்ச்சி” என்றான். எதோ பூனை வளர்க்கிறேன் என்றாற் போல் தான் இதனைச் சொன்னான். டாக்டருக்கு உதடுகள் துடித்தன. கண்புருவங்களில் ஒன்று லேசாய் நடுங்கத் தொடங்கிற்று. ஒரு நாளின் மொத்த கனத்தையும் தன் முதிய கரங்களால் தள்ளிக் கொண்டே வந்து கிட்டத் தட்ட மலைநுனிக்குக் கொண்டு வந்துவிட்ட தருணம் அவரது உற்சாகமெல்லாம் வடிந்து உடம்பு பல துண்டுகளாய் ஓயேன் என்று கெஞ்சத் தொடங்கி இருந்தது.

“மிஸ்டர் சிங்கம் எப்படிக் கடிச்சுது? சிங்கத்தை எங்க பார்த்தீங்க?” தான் இதுகுறித்து விசாரிப்பதே அவன் பக்கத் தீர்ப்பை ஒப்புக் கொள்கிறாற் போன்ற தோல்வி தெரிந்தது.
“ஸார் ,அது ரொம்பக் குட்டி. ஜூஜூன்னு பேர். நாந்தான் வளர்த்திட்டு வர்றேன். இன்னிக்கு அது மூட் சரியில்ல போலருக்கு. வெளில போயிட்டுத் திரும்பி வந்தேன் அப்பத்தான். ஹை ஜூஜூ அப்டின்னு தான் குரலெடுத்தேன் வறட்னு என்னைப் பிராண்டிட்ச்சி” என்றான். இப்போதும் அதே குரல். விளக்கெண்ணையால் வருடினாற் போன்று வழுமூண்ட குரல். அதினின்றும் எந்த உணர்வையும் பிரித்தெடுக்க முடியவில்லை. டேய் டேய் என மனசுக்குள் கோபம் எழுந்தது. கடுமையான மனப்பித்தாக இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.

“இது ஒரு செமி நகரம் ஸார். நான் வெறும் ஜீப்பி. இங்க இதுவரைக்கும் யாரும் சிங்கம் கடிச்சு வந்ததில்லை. நீங்க பெரியாஸ்பத்திரிக்கு வேணா போங்களென்.” என்றார். அத்தனை வருடத் தொடர்ச்சியான மெல்லிசையின் ஏதோவொரு நரம்பு அறுந்து போனாற் போன்ற தோல்வி தெரிந்தது அவர் குரலில்.

“சரி டாக்டர் நான் ஜீஹெச் தான் போகப் போறேன். ஐ ஹேவ் டு டூ சம் திங்க்ஸ் பிஃபோர். நீங்க ஒரே ஒரு டெட்டனஸ் போடுங்க. நா கெளம்புறேன் என்றான். குடித்திருக்கிறானா என்பதை அறியமுடியவில்லை. படித்த கிறுக்கா அல்லது குடித்த கிறுக்கா என்பது தெரியாத ஒரு ந்யூட்ரல் முகம் சிரிப்பு குரல்.

சிவகடாட்சம் எழுந்து கொண்டார். நர்ஸ் என்றார். செல்வி உள்ளே வந்ததும் “டீட்டீ போட்று ஸாருக்கு” என்றார். அவள் இஞ்செக்ஷனோடு நெருங்கும் போது வெளியேறினார். செக்யூரிட்டி பாபு உள்ளே வந்து நின்றுகொண்டான். க்ளினிக்கின் பின் பக்கத்தில் இருந்து தன் காரை ரிவர்ஸ் எடுத்தார். மணிக்குட்டி போன்றது அவரது ஆல்டோ800. அவரே ஓட்டி வருவார். நோ ட்ரைவர் பிஸினஸ். அவருக்குப் பிடிக்காது.

கிளினிக்கைத் தாண்டும் போது அந்த இளைஞன் தன் காரைக் கிளப்பிக் கொண்டு முன்னால் செல்வதைப் பார்த்தார். அந்த இருட்டிலும் ப்ளோரஸண்ட் பச்சையில் ஒளிர்ந்தது வாகனம். இவர் மெதுவாகவே சென்று கொண்டிருந்தார். புத்தடம் தாண்டும் போது மாபெரும் இருட்டு. முன்னால் சென்ற அதே கார் நின்று கொண்டிருக்க அதன் பார்க் லாம்ப்கள் செத்துப் பிறந்தபடி ஒளிர்ந்தன. அவன் ஒரு காலை மடித்து ஸ்டைலாக நின்றுகொண்டிருந்தவன் லிஃப்ட் கேட்கும் பாணியில் கட்டை விரலைத் தலைகீழாக்கி ஆட்டினான். இவர் நிறுத்தவேண்டாம் என ஒரு நொடி யோசித்தவர் ஏனோ நிறுத்தினார்.

“ஸாரி டாக்டர். இட் சீம்ஸ் டு பீ வெரி லேட். வண்டில சுத்தமா ஃபூயல் தீந்திட்ச்சி. பங்க் வரைக்கும் எனக்கொரு லிஃப்ட் கிடைக்குமா.? கொஞ்சூண்டு பெட்ரோல் வாங்கிட்டு வந்துட்டா சேஃப்” என்றான். மறுக்க முடியாமல் இவர் “ம்ம்” என்றார். ஏறிக் கொண்டவன் நெஞ்சுக் குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டான். பெட்ரோல் வாங்கி விட்டுத் திரும்பி வரும் வழியில் டாக்டர் மென் சகஜம் அடைந்திருந்தார். “என்ன பண்றீங்க?” என்றார் அவனைப் பார்த்து. “நானா? சொன்னேனே டாக்டர். எனக்கு சொந்தமா பெரிய காடு இருக்கு. அங்க நான் நெறைய்ய மிருகங்கள் வளக்குறேன். அதுல ஒரு சிங்கம் தான் என்னைப் பிறாண்டி”.
அவன் நிஜத்தின் நிஜமான குரலில் பேசிக்கொண்டிருந்தான். இவருக்கு உடலெல்லாம் எரிந்தது.

காரை நெருங்கும் போது சொன்னான். வில் ஷோ யூ டாக்டர் நீங்க ரொம்ப என்னை சந்தேகப் படுறீங்க. யூ மே திங்க் மீ அஸ் எ நட்ஸ் ஆஃப். பாருங்க என் சிங்கத்தைக் காட்றேன். ஜூஜூ இஸ் தேர் என்று அசட்டுக் கத்தலாய் சிரித்தான். அங்கே பின் சீட்டைக் காட்டினான். அந்த ஸீட் முழுவதும் இருளாக இருந்தது. சட்டென்று அங்கிருந்து ஒரு சிங்கம் சாட்சியாக எழப்போகிறது என ஒரு கணம் நினைத்தார். கண்களை மூடித் திறந்தார்.
அவன் சற்றே கோபமாக ஜூஜூ…வேர் ஆர் யூ எனக் கத்தினான்.
…..
……
“சரிங்க நா வர்றேன்” என்றார். தன் ஆல்டோவைக் கிளப்பிக் கொண்டு நேரே சென்றார்.