வண்ணதாசன் அந்நியமற்ற எழுத்தால் மனதுக்கு நெருக்கமாக உணரச் செய்பவர். அவருடைய கதைகள் தோரணப் பூக்களைப் போல் பரிச்சயத்தின் தற்கணங்களாகப் பெருகுகின்றன. வாழ்வின் நிமிஷங்களை மனிதர்களைப் பார்ப்பதற்கு உகந்த பார்வைமானிகளை உற்பத்தி செய்துகொள்ளக் கற்பிப்பவை. சின்னஞ்சிறிய எவற்றையும் சட்டென்று கடந்து விடுவதிலிருந்து மீண்டும் மீண்டும் விடுபட்டவண்ணம் உற்றுப் பார்க்கும் மனோபாவத்தை மனனம் செய்யக் காரணமாயிருப்பவை. தொடர்ந்து-அடிக்கடி-எப்போதாவது என்பதெதுவும் பொருந்தாத ஓர்மையைப் பராமரிக்கிற வல்லமை அவரது எழுத்துக்களின் பலம். சூட்சுமமா பிடிவாதமா என்பதை அறியத் தராத அவரது மென்மையான சுபாவம் இனிமையானது. கடலின் ஞாபகத்தில் ஒருங்கே தென்படுகிற கரையும் பாறைகளுமாய் அலையடித்துக் கொண்டே இருப்பவை தான் சர்வகால நீரொளிர் நுனிகள்.
இன்றந்தப் பவளத்தின் பிறந்த தினம்.
எல்லோரும் வாழ்த்திச் சென்ற பிறகு தனியாக வந்து தாமதமாய் வாழ்த்துவது கூச்சமோ சூசகமோ எதாகவும் இருந்துவிடட்டும்.
கல்யாண்ஜி என்ற பேரிலிருந்து தொடங்கி எனக்குப் பிடித்தமான சித்திரமுகத்தைச் சரசரவென்று வரைந்துகொள்ள முடிகிறது . சித்திரநேர்த்தியை விடவும் அதன் எல்லாக் கோடுகளையும் நானென் விரல்களால் எழுதினேன் என்பதான நினைப்பின் கிறக்கம் போதுமானதாயிருக்கிறது தானே..? நன்றாக எழுதவும் வரையவும் தெரிந்த ஒருவரை என்னாலான அளவுக்கு எழுதி வைத்துக் கொள்வதற்கு “எனக்குள்” என்கிற ஒரேயொரு சொல் போதுமானதாயிருக்கிறது இல்லையா..? நன்றாக எழுதவும் வரையவும் தெரிந்த கல்யாண்ஜி அண்ணாச்சியை என்னாலான அளவுக்கு எனக்குள் எழுதி வைத்துக் கொள்கிறேன்.
இனிய பிறந்த தின நல்வாழ்த்துகள் அண்ணாச்சி.
வாழ்தல் இனிது