7.காற்றின் ஆதுரம்
ரேடியோவில் ஒலித்துக் கொண்டிருந்த பாடல் முடிவடைந்து செய்திகள் தொடங்கின. சிந்தாமணிக்கு இந்தக் கரி அடுப்பை விட்டொழிப்பது என்றைக்கு வசப்படும் என்று ஆற்றாமையாக வந்தது. அவள் முன்பு வேலை பார்த்த இஞ்சினியர் பங்களாவில் இருக்கிறதும் தெரியாமல் எரிவதும் உறுத்தாமல் சமையல் நடக்கும். கேஸ் அடுப்பு கரியுமில்லை புகையுமில்லை. அப்படியும் ஒரு வாழ்க்கை இருக்கிறது தெரியாமலே இருந்தால் ஒன்றும் இல்லை. அதனைத் தெரிந்து கொண்ட பிறகு மனம் அடிக்கடி அதையே நினைத்துத் தவிக்கும். சுற்றிலும் பார்த்தாள். சுவரெல்லாம் கரிப்புகையின் கோலங்கள் வெள்ளை நிறம் முற்றிலுமாக மங்கி மொத்தச் சுவருமே அழுக்குப் பழுப்பேறித் தெரிந்தது. அடுப்பிலிருந்து பொறியல் சட்டியைப் பிடி துணி கொண்டு பற்றி இறக்கினாள். செல்வாவுக்குக் கறிக்குழம்பென்றால் உயிர். அதுவும் சிந்தாமணியின் கைப்பக்குவத்துக்கு அவன் அடிமை. இன்னும் எத்தனை நாட்கள் இப்படி வெளியே சந்திப்பது என்பது தான் அவளுக்கு ஆத்திரமாக வந்தது. செல்வாவுக்கு டைவர்ஸ் கிடைக்க வேண்டும். அவன் பெண்டாட்டிக்கு மனச்சமன் இல்லை. கடுமையான நோய்மை. அதை மறைத்து கட்டி வைத்துவிட்டார்கள்,அவள் அடிக்கடி கோபித்துக் கொண்டு காணாமல் போய்விடுவாளாம். எங்கே போகிறாளென்றே தெரியாது. இவை அத்தனையும் நிரூபித்த பிறகு வழக்கு முடிவை நோக்கி வந்து சேர்ந்திருக்கிறது. தீர்ப்பு வந்ததும் கோர்ட்டிலேயே வைத்து சிந்தாமணியின் இடுப்பை ஊர் பார்க்க வளைத்து “நான் இவளோட செல்வாடா. இவ என்னோட சிந்தாமணிடா, எல்லாரும் பார்த்துக்கங்கடா” என்று சப்தமாகச் சொல்லப் போவதாக அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்வான் செல்வா.
எத்தனை நல்ல செல்வா. அவளுடைய காதலன் கணவன் எல்லாவற்றையும் விட அவளுக்காகவே தயாரிக்கப்பட்ட பொம்மை அவன்.
இன்னார்க்கு இன்னாரென்று
எழுதி வைத்தானே தேவன் அன்று
இந்த வரிகளைக் கேட்கும் போதெல்லாம் சிந்தாமணிக்குக் கன்னங்கள் சிவக்கும். அவளுக்கான செல்வா.
என் ஆம்பிளை
என் ராசா
என் சிப்பாயி
என் குட்டி நாயி
என் எல்லாமே நீ தான்
எல்….லாமே
என்று இறுக்கிக் கொண்டு காதோடு கிசுகிசுப்பாள். அவன் “ஆமா ஆமா நாந்தான் நாந்தான்” என்று கிறங்குவான்.
சோறு குழம்பு பொறித்த முட்டை குடல் கூட்டு என பார்த்துப் பார்த்துச் செய்ததை எல்லாம் கூடையில் வைத்து அடுக்கினாள். கிளம்பலாம் என்று நினைத்த மாத்திரத்தில் சடசடவென்று சப்தத்தோடு வெளியே மழை ஆரம்பித்தது. என்னடா இது என நொந்து கொண்டாள் அவளுக்கும் மழை பிடிக்கும் தான் என்றாலும் வேலையைக் கெடுத்து பொழிகையில் என்ன செய்வது? ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. கொடியில் உலர்த்தியிருந்த துணி எடுக்க மறந்து விட்டு மழையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்ததை எதிர் வீட்டு அல்லி ‘எடீ சிந்து சிந்தாமணீ துணியை எடுறீ” எனக் குரல் ஓங்கியதும் பதற்றமாக எல்லாவற்றையும் எடுத்து கூடைச் சேரில் போட்டாள். மாடி போர்ஷனில் அவளுடைய அக்கா வடிவு குடும்பம் வசித்து வந்தது. பவுன்ராஜ் மோசமான மனிதன் என்றபோதும் அவளை ஒருபோதும் சீண்டியதில்லை. அவள் பாம்பு என்பது ஒரு காரணமாக இருந்திருக்கலாம். இந்த உலகிலிருக்கும் தீயவர் எல்லாரையும் விட அவ்ளுடைய அக்காள் வடிவு கொடியவள். அவள் உற்றுப் பார்த்தாலே ஒரு பிடி சாம்பலாக மாறிவிடுவான் பவுன்ராஜ். அல்லது மந்திரப் படங்களில் வருகிற முனகும் நாயாக மாறி அவள் கால்களையே முட்டிக் கொண்டு நிற்க வேண்டியிருக்கும்.
அவளது பதற்றம் செல்வா. அவன் வளையல் கடை பஸ் ஸ்டாப்பில் வண்டியோடு காத்திருப்பான். வருவதற்குத் தாமதமாகும் எனத் தகவல் சொல்லக் கூட வழியில்லை. எப்படியாச்சும் சொல்லிரணும்
தூரத்தில் பவுன்ராஜ் சைக்கிளில் இருந்து இறங்காமலே பேசிக்கொண்டு இருப்பது தெரிந்தது “வந்துவிட்டான் போச்சு” என பற்களை கடித்துக் கொண்டாள் ‘மழை பெய்வதைக் கூட சொரணையில்லாமல் இது என்ன ஜென்மம்’ என நினைத்தாள். அமர்த்தலான குரலில் “சிந்து சிந்தாமணி சிந்து” என மாற்றி மாற்றிக் கூப்பிட்ட படியே வந்த பவுன்ராஜை விக்கெட்டுக் கதவுக்கு அந்தப்பக்கமே மறித்து “இப்ப என்ன வேணும் மாமா?” என்றாள் “என்னல என் வீட்டுக்குள்ற என்னையவே விடமாட்டேங்குற?” என்றவனிடம் “உன் வீட்டுப் படி சைட்ல இருக்கு. இது என் வீடுல்ல” என்று கடுமை காட்டினாள்.
அதற்கு மேல் அவளை வம்பிழுத்தால் சரிவராது என்ற நினைப்பில் “எலே எந்தங்கம்ல சின்னூண்டு வேலை செய்றியா கை நெறைய காசு கிடைக்கும்” என்றான். “நீ ஆகாவளிக்குத் தானே கூப்டுவே” என்றவளிடம் “நான் ரொம்ப டீசண்டானவன் இல்லையா..அப்டில்லாம் செய்வனா தங்கம்” என உருகினான். “என்ன சொல்லு” என்றவளுக்கு உண்மையிலேயே காசு என்றதும் கிளர்ந்து பாதியானாள். எதைச் செய்தாலும் கிடைக்கப் போகும் பணம் அவளுக்கு அவசியம். இந்த உலகத்தில் எல்லோரை விடவும் அவள் தனக்கான ஆபரணமாகவே பணத்தை நினைப்பவள். இந்த லூசு என்ன கல் சுமக்கும் வேலையா சொல்லப் போகிறது..?
‘சொல்லு மாமா’ என்றவளின் குரல் நசிந்து மென்மையாகி இருந்தது. “எங்கூட வா..ஒரு மூட்டையை ஆட்டோல ஏத்தி வீட்டுக்கு கொண்டாந்திரு அவ்ளோ தான்” என்றான் . “ஏய் திருட்டா…ஆளவிடு சாமி” என்றவளிடம்
“ஏ, என்னலே திருட்டு கிருட்டுன்ற…நானென்ன அப்பிடி ஆளா..? பெரிய வீட்டு முதலாளி சின்னு எடைக்குப் போட்டதுல சிலதுகளை நீ எடுத்துக்கன்னு சொன்னாப்டி. முன் பக்கமா கொண்டாந்தா இன்னம் நாலு பேரு எனக்கு எனக்கும்பான். அதான் பின்வளில தூக்கியாந்துரலாம்னு பார்த்தா சலிச்சிக்கிறியே?” என்று நிசமாகவே வருந்தினான். அவன் சொன்னதில் பாதி உண்மை உண்டு. ‘எனக்குக் கொடு’ என்று கேட்டால் சின்னு தந்திருப்பான். ஆனால் அதில் என்ன சுவாரசியம் இருக்கிறது? மேலும் அவனுக்குத் தேவை இருக்கும் போது பவுன்ராஜ் “இதைக் குடு அதைக் குடு” எனக் கேட்கவா முடியும்..? மாங்காயைக் கல்லாலடித்துக் கைப்பற்றி ருசித்தால் தான் பேரின்பம். காசு கொடுத்து வாங்கும் போது வெற்றுச்சுவை மட்டும் தான் மிஞ்சும்.
“உன்னையத் தெரியாதா எனக்கு? நீ ஒரு ஃப்ராடு ” என்று மனசுக்குள் சொல்லிக் கொண்ட சிந்தாமணியின் கையில் “இந்தா வச்சிக்க 100 ரூவா” என்று முன் பணமாகவே அழுத்தினான். அதை வாங்கித் தன் ஜாக்கெட்டுக்குள் இடப்புறமாய்ச் செருகிக் கொண்டவள் அவனிடம் “மழை நின்னதும் வாரேன்” என்றாள். “மழையெல்லாம் நின்றுச்சி பாரு” என வானம் காட்ட வந்த சுவடே தெரியாமல் நின்று போயிருந்தது.
உள்ளே சென்று சாப்பாட்டுக் கூடையை எடுத்து தெரு முனையில் அன்னத்தாய் கடையில் கொடுக்க அவளது மகன் மணி அதை என்னவென்றே கேளாமல் வாங்கி வைத்துக் கொண்டான். ‘என்ன உன் வீட்டிலிருந்து கறி வாசம் மணத்ததே?” என்று மாமன் காரன் கேட்கவில்லை. இது உறவு தான் என்றாலும் ஊதினால் உடையக் கூடிய பலூனும் ஊசியும் காலமெல்லாம் உறவாடுகிற வினோதம், எப்போதாவது தான் பவுனு ஊசியாவான். பெரும்பாலான காட்சி நகர்தல்களில் ஊசியாவதும் உளியாவதும் சிந்தாமணி தான்.
பக்கத்தில் சென்றதும் ‘நான் சின்னு வீட்டுக்கு உள்ளே போறேன் சரியாப் பத்து நிமிசம் கழிச்சு சன்னல் வழியா ஒரு சிகப்பு கலர் டர்க்கி டவலை வீசுதேன் நீ காம்பௌண்ட் சுவரை ஒட்டி வெளிப்பக்கம் நில்லு. புறக்கதவைத் தொறந்து நான் ஒரு மூட்டையைத் தாரேன். நீ அத்தை எடுத்துக்கிட்டு நாலு எட்டு நட எதுத்து வர்ற ஆட்டோல ஏறி வீட்டுக்கு வந்து வச்சிட்டு அப்பறம் உன் வேலையைப் பார்க்க போ.. அம்புட்டு தான்’ என்று அசிங்கமான வாயசைப்போடு சிரித்தான். இவன் மற்ற எல்லாரையும் போல சாதாரண உடல் அமைப்புடன் இருந்திருந்தால் ஒருவேளை நல்லவன் என்று பெயரெடுக்க விரும்பியிருப்பானா என்று சிந்தித்தாள் சிந்தாமணி. இவன் ஏன் இப்டி இருக்கான் என்றுதான் தோன்றிற்று.
தன்னைப் பார்ப்பவர்கள் கண்களில் தான் சர்க்கஸ் பஃபூன் போலத் தோற்றமளிக்கிறோம் என்று நன்கு அறிந்திருந்தான் பவுன்ராஜ் . ஒரு போதும் அந்தத் தோற்றத்தை மாற்றுவதற்கு அவன் முயலவே இல்லை. தானொரு கோமாளி என்பதை அதிகரித்துக் கோமாளிகளின் சக்கரவர்த்தி யார் என்று கேட்டால் பவுன்ராஜ் என்று சரித்திரத்தில் எழுதி வைக்கத் தான் இத்தனை பிரயாசைப் படுகிறான். அவனொரு முழுமையான மனிதன். இன்னும் முடியாத தன் கதையில் தானொரு விபரீதக் கதாபாத்திரமாக வாழ்ந்து மறைவது மட்டுமே லட்சியம் என்று வாழ்பவன். பவுன்ராஜ் கனவு காண்பவனல்ல. அவனிடம் திட்டங்கள் இருந்தன. உறங்கும் போதும் எதாவதொரு திட்டத்தை எடுத்துத் தூசு தட்டி வைப்பது தான் அவனது வாடிக்கை.
ஒரு கையில் நுனியும் வேஷ்டி நுனி இன்னொரு கையில் தன் சைக்கிள் ஹாண்டில்பாரைப் பற்றியபடி ஆவலோடு நடந்து கொண்டிருந்தான் பவுன்ராஜ். பேசிக்கொண்டே தொடர்ந்தாள் சிந்தாமணி. ராமையா தெரு தாண்டி சர்ச் ரோடு திரும்புகையில் சிமெண்ட் பெயர்ந்த பழைய பஸ்ஸ்டாப்பின் அருகில் அவளுக்காகக் காத்திருந்த செல்வா பவுன்ராஜூம் கூட வருவதைப் பார்த்து லேசாய்முகம் சுருங்கினான். செல்வா என்றொரு மனிதனையே தனக்கு தெரியாது என்றாற் போல முன் திசையைப் பார்த்தபடி நடந்த சிந்து சரியாக அவனைக் கடக்கும்போது “ஏன் மாமா நீ சொல்ற வேலை ஒன் அவர்ல முடிஞ்சிரும்ல?” என்றாள் ஒரு மணி நேரத்தில் அவள் வந்துவிடுவாள் இந்தக் குறிப்பைப் பெற்றுக்கொண்ட செல்வா நிம்மதியானான் இந்தப் பெண் எவ்வளவு அழகாக யோசிக்கிறாள் எனத் தனக்குள் வியந்தான். ‘ஒரு டீ குடிக்கலாமா’ என நினைத்தபடி திரும்பினவன் பக்கத்தில் வைத்தி நிற்பதைப் பார்த்து சட்டென்று ஒரு கணம் அயர்ந்து ” என்னடா இவ்ளோ பக்கத்துல வந்து பயமுறுத்துறே” என்று சிரித்தான்.
அவனது மனம் முழுக்க இன்னும் சிந்தாமணி வந்து சேர்வதற்கு ஒரு மணி நேரம் ஆகுமே என்பது மட்டும் தான் அழுத்தியது. அந்த நேரத்தில் வைத்தி எதிர்ப்பட்டதும் குதூகலமானான். தேவையான சமயத்தில் எதிர்ப்படுவது தானே சிறப்பு அவனுக்குப் பொழுது போகவேண்டும். “என்னடா எலி முகம் வாட்டமா இருக்கே” என்றான். அதை அக்கறை என்றே எடுத்துக் கொண்ட வைத்தி ‘ஷிப்ட் பாத்துட்டு வர்றேன்யா சரியான பசி’ எந்த எதிர்பார்ப்புமில்லாத குரலில் சொன்னான்
‘சரி வா எதுனா சாப்டு வர்லாம் வண்டியில ஏறு’ என்றதும் மறுப்புச் சொல்லாமல் ஏறினான்.
“கோமளவிலாஸ் போ அங்க தக்காளி சாதம் பட்டயை கிளப்பும்” எல்லாவற்றுக்கும் ஒரே குரல் தான் வைத்திக்கு. ‘எதையுமே இத்தனை நேரடியாக பேசாதே’ என்று சொல்லிக் கொடுத்தால் கூட கல்மிஷம் தெரியாது வேண்டும் வேண்டாம் சரி இல்லை எது கேட்டாலும் நேரடி பதில் தான் அதனாலேயே வைத்தியைப் பலருக்கும் பிடிக்காது அதற்காகவே செல்வாவுக்குப் பிடிக்கும் செல்வாவின் கல்யாணத்துக்கு வைத்திதான் துணை மாப்பிள்ளை கட்டியவள் மனசு சரியில்லாமல் தாய் வீட்டுக்குப் போய்விட்ட பிறகு நேரே வைத்தியைத் தேடித்தான் போனான் செல்வா. கதறியபடியே விஷயத்தைச் சொல்ல கொஞ்ச நாளைக்கி நீ தனியா இருக்க வேணாம் எங்கூட தங்கிடு என்றான். அப்படியே ஒன்றரை வருடம் தன்னோடே வைத்து கண்ணின் மணி போல் காப்பாற்றவும் செய்தான். இப்போது செல்வா தனியாக வசிக்கிறான் என்றாலும் வைத்தி அவனுடைய நிழல்தரு.
சாப்பிட்டு முடித்து ஒரு காப்பி ஆளுக்கு பாதி குடித்தார்கள். ‘வந்திருக்கிற புது முதலாளி ரொம்ப உசுர வாங்குதுடா’ என முனகினான் வைத்தி ‘யார்ரா’ எனக் கேட்டதற்கு “எம்எஸ் முதலாளி பொண்ணுய்யா, பேரென்ன தெரியுமா ‘பப்பி’ இப்பல்லாம் முதலாளி அதிகம் வர்றதில்லை மில்லுப் பக்கம் எல்லாமே இந்தப் பொம்பளையோட நாட்டாமை தான் தூள் பறக்குது” என்றான். செல்வா அவனிடம் “அது புருஷனைத் தானே கொண்டாங்கிய” என்று கேட்டான் செல்வாவின் குரல் சாதாரண சப்தத்தோடு ஒலித்ததற்கே யாரும் கேட்டுவிடப் போகிறார்கள் கவனம் என்றாற் போல் “ஸ்ஸ்” என்ற வைத்தி “ஆமய்யா, அதுக்கு முன்பே பூட்டின மில்லுதான். இன்னம் தொறக்கலை” என்றவன் தொடர்ந்து “நா ஒண்ணும் மெயின் கேட் பாக்குறதில்லை செல்வா சைடு கேட்டுத் தான். நானும் பெருசு நாட்ராயனும் பார்க்கிறோம். அவரு தூங்கிருவாப்ள வயசாளி நாந்தான் ராமுச்சூடும் ரேடியோல பாட்டு கேட்டுக்கிட்டு கொசு அடிச்சிகிட்டு முழிச்சிட்டே இருக்கறது நைட் டையத்துல என்னிக்காச்சும் தூக்கம் இல்லாட்டி கெளம்பி வந்துரு. உட்கார்ந்து பொழுதைப் போக்கலாம் என்ன” என்று வகையாய் சிரித்தான். மறுபடி வளையல் கடை பஸ் ஸ்டாப்புக்கு வந்ததும் தன் வண்டியை வைத்தியிடம் தந்த செல்வா ” நீ உன் ரூமுக்கு கொண்டு போயிரு. நா வந்து எடுத்துக்கிறேன் ” எதுவுமே சொல்லாமல் குதிரை கிடைத்த ராஜா போல் ஏறி அமர்ந்து எதிரே கையில் சாப்பாட்டுப் பையோடு வந்து கொண்டிருந்த சிந்தாமணியைக் கடந்து கியர் மாற்றிக் காணாமல் போனான் வைத்தி. ஐந்து நிமிடம் பஸ் ஸ்டாப்பில் அன்னியர்களைப் போல் நின்றார்கள். வந்து நின்ற முதல் பேருந்தில் ஏறி ஆளுக்கொரு ஸீட்டில் அமர்ந்து கொண்டதும் செல்வா “ரெண்டு பவளத் திட்டு” என்று டிக்கட் வாங்கித் தன் வாட்சு ஸ்ட்ராப்பில் செருகிக் கொண்டான். முகத்தில் அறைந்த காற்றின் ஆதுரம் கிறக்கமாயிருந்தது. ‘திரவியனூர் பஸ் ஸ்டாண்டெல்லாம் எறங்குங்க’ என்ற கண்டக்டரின் குரல் கேட்டதும் சில நிமிடத் தூக்கம் கலைந்து திரும்பி சிந்தாமணியைப் பார்த்து சிரித்தான் செல்வா.
இந்தச் சிரிப்பு இப்போதைக்கு குடும்ப நல கோர்ட்டில் வழக்காடிக் கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் இந்தச் சிரிப்பு யாருக்கும் சொந்தமில்லை என்று விடுதலை ஆகும். அந்த தினம் வரட்டும். சிந்தாமணி இந்தச் சிரிப்பை அன்றைக்குத் தான் தனக்குச் சொந்தம் என்று எண்ணுவாள். இந்தச் சிரிப்பை, அது உற்பத்தியாகும் இதழ்களை, கட்டளையிடும் மனதை என எல்லாவற்றையும் ஆட்டுரலில் போட்டுச் சட்னி அரைக்கிறாற் போல் அரைத்துத் தனக்குள் வார்த்துக் கொள்வாள். செல்வா…என்னோட செல்வா…உன்னைக் கடிச்சே சாவடிக்கிறேன் இரு…” என்றெல்லாம் எண்ணிக் கொண்டே தானும் லேசாய் உதட்டைக் கோணிச் சிரிக்கலானாள் சிந்தாமணி.
வளரும்