உதிராப் பூக்கள்

                                     ஞாபக மாலையின் ஹைக்கூப் பூக்கள்

உதிராப் பூக்கள்

ஹைகூ ரவியின் தேர்ந்தெடுத்த நூறு ஹைகூக்கள்


என்ன நடந்தாலும் நன்றி கூறுங்கள் என்பது விவிலியச் சொல்லாடல். ரவிக்கோ என்ன நடந்தாலும் ஹைகூ கூறுவது தன்மன வெளிப்படுதல்.அவரது விழிகளால் இந்த உலகத்தைப் பார்ப்பதை விடவும் தன் அகவிழி கவிதைவழி புறவெளி பார்ப்பதையே பெரிதும் விரும்புகிறார்.அவரது அகம் ஹைக்கூக் கண்களால் வான் பார்க்கிறது. வரலாற்றை நிரடுகிறது தலைவர்களைப் போற்றுகிறது ஆளுமைகளை வியக்கிறது நன்மணிகளை சிலாகிக்கிறது அரசியலை எள்ளுகிறது அரக்கர்களைக் கண்டிக்கிறது எதிர்காலத்தை வேண்டுகிறது இளையவர்களை எதிர்பார்க்கிறது தீயவற்றைச் சுடுகிறது சிறந்தவற்றை ஏங்குகிறது எல்லாவற்றையும் பேசுகிறது. இன்னது தான் என்றில்லாமல் எது நடந்தாலும் அதனைத் தன் கவிப்பொருளாக்கி உடனே கவிப்பரப்பில் விதைகளாய்த் தூவிப் பார்க்கிற கவிதைமனம் ரவியின் சிறப்பு. ரவி பல தளங்களில் புகுந்து புறப்பட்டுப் புதிய பொருளைத் தேடி வந்த வண்ணம் இருக்கும் அயராத புதிய வண்டினமாகவே தென்படுகிறார். அது உள்ளூர் வண்டுகளுக்குச் செண்டு தரும் அயல்நாட்டு வண்டு என்பது கூடுதல் சுவை. ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஹைகூ வண்டினம் ரவியவர் கவிமனம்.

சின்னச்சின்ன புள்ளிகளை மட்டும் சேமித்துக் கொண்டே செல்லும் குழந்தமை மாறாத மனம் எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை. இரவி அப்படிப் பட்ட மனம் வாய்த்தவர் என்பதும் அப்படியான மனதின் ஈரம் குறைந்துவிடாமல் தன் துளிப்பாக்களெங்கும் படர்த்துகிறார் என்பதும் தான் விஷயம். தன்னைச் சுற்றி நிகழ்கிற எல்லாவற்றையும் கவிதைகளினூடாகப் பேசிப்பார்க்கும் விழைதல் மாறாத மனிதர் ரவி. மின் தடை தொடங்கி பணம் மதிப்பிழப்பு வரைக்கும் விழிக்கொடை துவங்கி உடல்தானம் வரைக்கும் கவிதை தொடங்கி அறிவியல் வரை அரசியல் தொடங்கி அன்றாடம் வரை விலையேற்றம் தொடங்கி விளையாட்டு வரை ஒலிம்பிக்ஸ் தொடங்கி ஒவ்வாமை வரை பெண்ணியம் தொடங்கி பக்திமார்க்கம் வரை திரைப்படம் தொடங்கி சங்ககாலம் வரை இலக்கியம் தொடங்கி இணையம் வரை அவர் தொடாத துறையே இல்லை என்பது கூடுதல் சுவை. எல்லா விதையும் மரமாவதில்லை என்பதெல்லாம் கணக்குப் பார்க்கிற கண்களுக்கு மட்டும் தான். என் கடன் கவி செய்து கிடப்பதே என்று எழுதுவதற்குப் பெரிய ஆதுரம் பொங்கும் மனம் வேண்டும், மொழி மீதான வாஞ்சையும் சமூகம் மீதான பற்றுதலும் கொண்டால் ஒழிய இப்படிக் கண் பார்த்து மனம் கொள்வதை எல்லாம் கவிதாபூர்வமாய் மாற்றித் தருவது இயலாது. ரவி அத்தகையவர்.

இனியவர் முதுமுனைவர் திரு. இறையன்பு I.A.S எழுதியிருக்கும் “நட்பெனும் நந்தவனம்” நூலின் ஒரு தங்க நிகர்வாசகம் இப்படிச் சொல்கிறது “நண்பர்கள் எப்போதும் புகைப்படங்களைப் போல் இருப்பதில்லை நிலைக்கண்ணாடியாகவே நீடிக்கிறார்கள்”. ரவி அத்தகையவர்.அவர் எல்லோரில் ஒருவராக வாழக் கிடைத்த வாழ்க்கையை எந்தச் சலிப்பும் இல்லாமல் வாழ்ந்து கொண்டே தன் அகத்துக்குள் கவிசொல்லியாகவும் எப்போதும் விழிப்போடு இருக்கிறார். என்னவெல்லாம் அவருக்குக் கவிதைக்காகும் என்று படுகிறதோ அது காதலானாலும் சரி கண்டனமானாலும் சரி அன்பானாலும் சரி அடக்குமுறை ஆனாலும் சரி இன்பம் துன்பம் எல்லாவற்றின் கீற்றுக்களை மட்டுமல்ல அவற்றின் இழைகளையும் கனிகளை மட்டுமல்ல அவற்றின் துளிகளையும் சேமிக்கிறவராய் சொல்லிப் பார்க்கிறவராய் வெளிப்படுகிறார்.

இந்தத் தொகை நூல் எப்போதும் ஹைக்கூப் பூர்வமாகவே சிந்தித்துக் கொண்டிருக்கிற ரவியின் ஹைகூப்ரியத்தைப் பதம் பார்ப்பதற்கான அணுகல் அன்று. கவிதை எனும் கோயிலுக்குள் அதன் எந்த வாசலில் நுழைந்தாலும் தெய்வம் ஒன்று தான். மரபுக்கவிதை புதுக்கவிதை நவீனத்துவக் கவிதை பின் நவீனத்துவம் ஹைகூ சென்ரியூ தொடங்கி இந்தக் கணத்தின் இப்போழ்தைய வெடிப்பும் திறப்புமாய் கவிதையின் உச்சம் எனக் கொண்டாடப் படுவது கவிதையின் எந்தவடிவமானாலும் இருந்துவிடட்டும். மொழி மீதான பற்றுமிக்க விழிப்புணர்வு இல்லாமல் மொழி மீதான குன்றாப்ரியம் இல்லாமல் மனதை முழுவதுமாய்க் கரைந்தழித்துக் குழைத்தாலன்றிக் கவிதை சாத்தியமே இல்லை. ரவியின் கவிதைப்ரியத்தை வாழ்த்திப் பல வருடங்களைத் தன் வாழ்வினின்றும் அகழ்ந்து கவிதைக்காகச் சிந்தியவனின் வழிவனங்களிலிருந்தெல்லாம் அதிலும் இதிலுமாய்ச் சில இலைகளைக் கனிகளை மட்டும் ஞாபகமாலையின் பூக்களாய்க் கோர்த்தால் என்ன என்று தோன்றியதன் விளைவே இந்தத் தொகுப்பு.

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி மட்டுமல்ல மொழி மீதான பித்தும் தன் மெய்வருத்தக் கூலிகளை வழங்கியே தீரும். இதற்கு உலகமெல்லாம் ஆயிரமாயிரம் சாட்சியங்கள் உண்டு. தன்னை முன்னிறுத்துவதற்குப் பதிலாகத் தன் கவிதைகளை முன் நிறுத்தித் தான் அவற்றின் பின்னே நிற்க விரும்புகிற நல்மனம் கொண்ட ரவி ஆயிரக்கணக்கான ஹைகூக்களைப் படைத்திருக்கிறார். அவற்றிலிருந்து நூறு மட்டும் எடுத்துத் தருவது உண்மையாகவே சவாலான விடயம் தான். ஆனாலும் தேனாய்ப் பெருக்கெடுக்கும் கவிதைக்கடலில் இருந்து என் மனதைக் கவர்ந்த நூறு கவிதைகளை எடுத்துக் கோர்த்திருக்கிறேன். இந்தக் கோலம் ரவியினுடையது. இதன் புள்ளிகளை அவர் இதுகாறும் இட்ட பலவருடக் கோலங்களிலிருந்து எதுவும் சிதையாமல் கலையாமல் எடுத்திருக்கிறேன். இப்போது இந்த நூறு ஹைகூக்கள் என்கிற கோலத்தை இடுகிறேன். வெவ்வேறு கோலங்களின் புள்ளிகள் சேர்க்கையில் பிறந்திருக்கும் இந்தப் புதிய கோலம் ஒன்றெனினும் உண்மையில் அவை நூறும் நூறு.

வாழ்க கவிஞர் ரவியின் ஹைகூ ப்ரியம். மொழியால் இணைவோம்.
மிளிர்வோம். வாழ்தல் இனிது

28/03/2020