எனக்குள் எண்ணங்கள் 1

எனக்குள் எண்ணங்கள்
        1 பதவிக்காக


நெடு நாட்கள் தேடிக் காத்திருந்து கைவரப் பெற்ற புத்தகம் எதாவது உண்டா..?
எனக்கு அப்படியான புத்தகம் சுஜாதாவின் பதவிக்காக.

அதைப் பற்றி நண்பர் ஷேகர் பெரிதாகச் சொல்லி பிரமிக்க வைத்தார். நாவலின் உள்ளடக்கத்தை எதையும் திறந்து விடாமல் அதைப் பற்றிப் பேசினார். சுஜாதாவின் நடை கதையின் தன்மை எனப் பலவற்றையும் சொல்லி விட்டுக் கடைசியாக அவர் சொன்னது தான் ஹைலைட். ரவீ எங்கிட்ட இல்லை. உனக்கு உன் பிறந்த நாளுக்கு பதவிக்காக நாவலைத் தான் பரிசளிக்கணும்னு ரொம்ப ஆவலாத் தேடினேன். எங்கயுமே ஸ்டாக் இல்லை. ரீப்ரிண்ட் வரவேண்டி இருக்குதாம். இப்பத்திக்கி வர வாய்ப்பில்லையாம் என்று அறிவித்துக் கொண்டே சென்றவர் அந்தப் பிறந்த தினத்துக்கு எனக்கு வழங்கியது ஆதலினால் காதல் செய்வீர் என்கிற ஒல்லிப்பிச்சான் நாவலை. அது ஜாலியான ஒரு கதை. ரொம்பவே பிடித்தது என்பதெல்லாம் வேறு . கையில் அகப்படாத மரகதம் தானே கனவெல்லாம் மிளிரும்..? என்னிடம் அந்த நாவல் பற்றிய அபாரம் குறித்த சொற்களும் அதன் பேரும் மட்டும் தங்கிவிட்டன. பார்க்கும் இடங்களெல்லாம் நின்றன் பச்சை வண்ணம் தோன்றுதய்யா என்று பாரதியின் கண்ணபிரான் தேடல் போலவே என் பதவிக்காக இல்யூஷன் படுத்தி எடுத்தது. ந்யூ சினிமா பழைய புத்தக சந்து அதற்குப் பிந்தைய வீதி ரீகல் தியேட்டர் வாசலிலிருக்கும் பாலு கடை தவிர அப்போது நெல்பேட்டையில் ஒரு பழைய பேப்பர் கடை வாசலில் தாற்காலிக பகுதிபாக பழைய புத்தகக் கடை ஒன்று செயல்படும். சினிமா புஸ்தகங்கள் தொடங்கி யாரோ ஒருவர் குண்டு பைண்டிங் நோட்டில அழகான கோடுகளோடு வரைந்திருந்த கோலங்கள் வரைக்கும் தனி-விநோத-தங்கங்கள் அங்கே தென்பட்டதுண்டு. 93ஆம் வருஷம் எனக்கு 1947 ஆம் ஆண்டின் ஃபில்மிண்டியா கலெக்ஷன் ஒன்று அகப்பட்டது அந்தக் கடையில் தான். இன்றும் அதை பத்திரமாக வைத்திருக்கிறேன். அன்றைய தினத்தில் கேள்வி பதில் பகுதியில் சிறந்த கேள்வி கேட்டவருக்கு முதல் பரிசு 1000 ரூபாய் நம்பவே முடியாத செல்வந்தம் அன்றைக்கு அதைக் கொண்டு சென்னையிலேயே அழகான காம்பவுண்ட் சுவருடன் கூடிய இரண்டு மாடி வீடு கட்டிவிடலாம். அதொரு காலம்.

தல்லாகுளத்தில் ஒரு பழைய புஸ்தகக் கடை உண்டு. ஒரு ட்ரை சைக்கிள் நிறைய புஸ்தகங்கள் இருக்கும். அம்பாரத்திலிருந்து வேண்டியதை எடுத்துக் கொண்டு மற்றதை மீண்டும் கட்டி பழையது போலவே தோன்றச்செய்ய வேண்டும். அப்படி ஒரு கண்டிஷன் அந்தக் கடையை நடத்திய பெரியவருக்கு அப்போது எழுபது வயது இருக்கும். கண் பார்வை சரியாய்க் கிடையாது. தனக்கு வேண்டியதை மட்டும் பார்த்துக் கொள்வார் என்று கிண்டலாய்ச் சொல்வான் பழனி. ஒரு தடவை யாரோ ஒருத்தர் ரெண்டு புஸ்தகங்களை அபேஸ் செய்ய முயன்ற போது கிழவனார் சத்தமிட்டு ஊரையே கூட்டி தர்மமொத்து வழங்கச் செய்தாராம். அதைப் பழனி பார்த்தானாம். எனக்கென்னவோ அது பழனியாய்க் கூட இருக்கலாம் என்று ரொம்ப காலமாக டவுட்டு. கேட்கவில்லை. அந்தக் கடையில் ஒரு நாள் கிட்டத் தட்ட ஷேகர் குறிப்பிட்ட எனது பிறந்த நாளில் இருந்து ஏழெட்டு மாசங்கள் கழித்து மழை சீஸனில் ஜெயராஜ் தியேட்டர் பக்கம் தாணுமாலயன் என்று என்னோடு படித்த பய்யன் வீடு கிரகப்ரவேசம் என்று வகுப்பின் அனைவரும் ஒன்றாய்க் கிளம்பி வந்தோம். நல்ல சாப்பாடு. வீட்டின் மாடியில் ஷாமியானா பந்தலின் கீழ் சாப்பிடத் தொடங்கும் போது மழை ஊற்றத் தொடங்கியது. தொர்ரென்று விசித்திரமாய் சப்தம். கடினமான துணியின் மீது விழுந்தோடும் தற்காலிக நதியாய் மழை. சன்னமாய் உடலை நடுக்குகிற குளிரோடு ஒரு விருந்து. சாப்பிட்டு முடிக்கும் வரை இன்னும் மழை வலுத்துவிடக் கூடாதே என்ற கவலையோடு இருந்தோம். அப்படி எதுவும் நடக்கவில்லை. கொஞ்சத்துக்கெல்லாம் மழை குறுகிக் கொண்டே சென்று இருப்பு முழுவதுமாய்த் தீர்ந்து போய் நின்றது. பசங்கள் அங்கிருந்து வேறோர் பய்யன் வீட்டுக்குச் செல்லூருக்குப் போய்விட்டுத் திரும்பலாம் என்று முடிவெடுத்தார்கள். நானும் ஜோன்ஸூம் மாத்திரம் வர்லை என்று தனிவழி கண்டோம்.

சுற்றிச் சுற்றி தல்லாகுளத்துக்குத் தான் வந்து பஸ் பிடிக்க வேண்டும். அங்கேயிருந்து 49 ஆம் நம்பர் பஸ் கிடைத்தால் நேரே திருநகர் சென்று விடலாம். ஆனால் அதுவொரு ஈயச்சோம்பேறி எருமை. குறித்த நேரம் என்று எதுவுமே இல்லாத ஒரு தன்னிஷ்டத்தோடு அலையும். அதுவாக வந்தால் தான் உண்டு. தல்லாகுளத்தில் பஸ் நிறுத்தத்தில் ஜோன்ஸை நிறுத்தி விட்டு பஸ் வந்தா சப்தம் போடு என்று சொல்லியபடியே கிழவனார் கடைக்கு வந்தேன். ரெண்டொரு புஸ்தகங்களை அசுவாரசியமாகக் கலைக்கும் போது அந்தக் கனமான புத்தகம் கையில் தட்டியது. மேலட்டை இல்லை. முதல் பக்கமும் இல்லை. மற்ற படிக்கு பின் அட்டை இருந்தது. பதவிக்காக. நான் நினைத்ததை விடப் பெரிய சைஸில் இருந்தது. என் கைகள் நடுங்கின. போதைப் பழக்கம் கொண்டவன் சிறியதோர் இடைவெளிக்கப்பால் மீண்டும் அதன் உள் ஆழ இருளுக்குள் தன்னை அமிழ்த்திக் கொள்ளுகிற கணம் போல எனக்குள் எண்ணங்கள் ஊசலாடின. எனக்குத் தெரியாதெனினும் நான் நாட்டியமாட விரும்பினேன். என்னிடம் இல்லாப் பொருளையெல்லாம் அள்ளியெடுத்துத் தானம் வழங்கச் சம்மதமான மனோநிலையில் அல்லாடினேன். பெரியவர் அட்டை இல்லை என்றதும் பதுவான தொகையைத் தான் கேட்டார். வழக்கமென்றால் எதாவது குறைக்கச் சொல்லிப் பேரம் பேசியிருப்பேன். அது பதவிக்காக. சட்டென்று கேட்டதைக் கொடுத்து விட்டு அதற்கு மேல் அடுத்தாற் போல் என்னவெல்லாம் இருக்கிறது என்று பார்க்கக் கூட விருப்பமின்றி சாலை கடந்து எதிர்ப்பக்கம் போனேன். ஜோன்ஸூக்கு என்னைப் பார்த்ததும் தான் நிம்மதி என்றாற் போல் சிரித்தான்.

அந்தக் கணத்தின் பரவசம் அலாதியாயிருந்தது.வெளிப்படுத்த முடியாத சுய ரகசியம் ஒன்றைச் சுமப்பவன் போல் தள்ளாட்டம். இதைப் பகிர்வதற்குக் கூட ஷேகரோ அல்லது மூவேந்தனோ தான் வேண்டும். வாழ்வின் மறக்க முடியாத தருணங்கள் தனக்கான சீருடையைப் போல் உணர்வுகளை அணிந்துகொண்டு நிகழ்கின்றன. நம்பவே முடியாத இன்னொரு விஷயமாக 49 ஆம் நம்பர் பஸ் கூட்டமே இல்லாமல் வந்து நின்றது. ஏறியதும் இடம் கிடைப்பதெல்லாம் காஸ்மோபாலிடன் கிளப்பில் மெம்பராவது போன்று நம்ப முடியாத அற்புதம். ஜோன்ஸூக்கு நாலு ஸீட்டுத் தள்ளி இடம் என்பதால் அவனுடைய இடைஞ்சலும் இல்லாமல் மெல்ல பதவிக்காக நாவலைப் பிரித்து வாசிக்க ஆரம்பித்தேன். அப்போதெல்லாம் என் வாசிப்பு வேகம் கொஞ்சம் குறைவு தான். பயணத்துக்கான நாற்பது நிமிஷத்துக்குள் இருபது பக்கங்கள் வரை படித்திருப்பேன். 3ஆவது ஸ்டாப்பில் இறங்கிக் கொண்டதும் ஜோன்ஸ் தன் வழி சென்றான். சைக்கிள் ஸ்டாண்டில் இருந்து என் சைக்கிளை எடுத்துக் கொண்டேன். பின் ஸீட்டில் கேரியரில் வைத்திருக்கும் புஸ்தகம் எங்கேயாவது வழியில் விழுந்துவிடுமோ என்ற பயத்தோடு பூமாதிரி சைக்கிளை செலுத்திக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். உறக்கமில்லை உணவில்லை ஒரே சிந்தை ஒரே செய்கை என்று முழுவதுமாக அந்த நாவலைப் படித்து முடித்து விட்டுத் தான் உலகமீண்டேன். பிற்பாடு பதவிக்காக மறுபதிப்பு கிடைத்த போது ஒன்றை விட அதிகப் பிரதிகளை வாங்கி வைத்துக் கொண்டேன். யாரும் அதை என்னிடமிருந்து அபகரித்து விடக் கூடாது என்கிற மனோபாவத்திலேயே இன்றுவரை இருக்கிறேன்.

பதவிக்காக சுஜாதாவின் எழுத்துலகில் மிக முக்கியமானதொரு நாவல். தனபால் என்ற பாத்திரம் தான் குவிமையம் என்றபோதிலும் பல உப பாத்திரங்களின் குணக் கொத்தாக அந்த நாவலை வளப்படுத்தியிருப்பார் சுஜாதா. பூடகம் எதுவும் இல்லாத நேரடித் தன்மையோடு எழுதப்பட்ட நாவல். இத்தனை பட்டவர்த்தனமாக அப்படி வேறோர் புதினம் நாட்டின் அரசியலைப் பேச முனைந்திருக்கவில்லை.

இந்தக் கதையின் ஓரிழையை எடுத்துக் கொண்டு தமிழில் பிறிதொரு காலத்தில் புதுமைப்பித்தன் என்றொரு படம் வந்தது.சுஜாதாவே முதல்வன் படத்தின் திரைக்கதையில் பதவிக்காகவிலிருந்து சிலபல வஸ்துக்களைப் பெயர்த்தெழுதினார். என் இனிய இயந்திராவின் இரண்டாம் பாகமான மீண்டும் ஜீனோவின் க்ளைமாக்ஸில் பதவிக்காக க்ளைமாக்ஸின் பாதிப்பு நிச்சயமாய்த் தெரியும். பதவிக்காக நாவலின் பேரெழில் என்று நான் கருதுவது அதன் அபாரமான வசனபலம். காட்சியால் கதை சொல்வதில் வல்லவரான சுஜாதா உரையாடல் கூர்மைக்கும் பெரிதும் புகழப்பட்டவர். இந்த இரண்டுமே பெரிதாய்த் திரண்டுவந்ததொரு படைப்பு பதவிக்காக. சினிமாவில் வசனம் எழுத விழைபவர்களுக்குத் தரவேண்டிய பயிற்சிப் புத்தகம் என்று பதவிக்காக நாவலைத் தாரளமாய்ச் சொல்லலாம்.