என்ன அழகு எத்தனை அழகு

                                                       என்ன அழகு எத்தனை அழகு


 

இந்தப் பாடலை பாலு பாடிய விதம் ஒரு ஐஸ்க்ரீம் யுத்தம். கம்பீரத்தைக் குறைத்துக் கொண்டு காதலில் கரைவதும் கரைப்பதுமான பாடல்கள் பல நூறு உண்டு. இந்தப் பாடல் எந்த விதத்தில் அபூர்வமாகிறது என்றால் இதனைப் பாடிய பாலுவின் குரல் அதைச் செய்து காட்டுகிறது. கண்ணீரும் புன்னகையும் கலந்து தோற்றுவிக்கக் கூடிய மிளிர்சிகரக் குரல் பாலுவுடையது. இந்தப் பாடலை சந்தோஷமும் சன்னமான விழிநீர்த் தூறலுமாய்ச் சேர்த்துப் படைத்தார் பாலு. விஜய்யின் நடிப்பு வரைபடத்தில் மிக மிக முக்கியமான படம் லவ் டுடே என்பது என் கணிப்பு. அந்தப் படத்தின் கதை நகர்வு மெல்லிய மன இறுக்கத்தைப் படைத்தபடி வளரக் கூடியது. படம் முடிவில் ஒரு அந்தகாரமும் சொல்லொணா மௌனமுமாய் நிறையும். இந்தப் பாடல் ஒரு அபத்த வியத்தலாக நம்பவியலாத கனாவொன்றின் கிளர்தலாகப் படமாய் விரியவல்லது.

ஆர்.பி.சவுத்ரி தயாரிப்பில் பாலசேகரன் இயக்கிய லவ் டுடே படத்துக்குப் புதியவர் ஷிவா இசையமைத்திருந்தார். வைரமுத்து எழுதிய இந்தப் பாடலுக்கான இசைத் தேர்வும் மெட்டு நகர்கிற விதமும் இடையிசைச் சங்கதிகளும் என எல்லாமே சொல்லி வைத்துச் செதுக்கிய ஓரளவுச் சிலைப் பிரதிகளின் வரிசை வீற்றிருத்தலாகவே பல்லவியிலிருந்து சரணங்கள் வரை சென்று நகர்ந்து பூர்த்தியடையும். மறுபடியும் சொல்வதானால் பாலுவின் குரல் இந்தப் பாடலைத் தன் குரல் வழியாகப் பெற்றுக் கொண்டு தனதாக்கித் திரும்பச் செலுத்திய விதம் இருக்கின்றதே..அப்படி ஒரு பாடகர் அவர் ஒருவரே என்று புகழத் தக்க பாடல். கானலாற்றை சமீபித்து விட்டதாகத் தன் தாகமத்தனையும் ஷண நேரத்தில் தீர்ந்து விடப் போவதாகக் கருதி அந்தக் கணத்தின் உள்ளே அவசரமாய்த் தன்னை நுழைத்துக் கொள்கிற ஒருவனின் பொய்க்குமிழ் உற்சாகமும் காத்திருத்தலின் வலிபெருக்கும் துயரமும் ஒருங்கே கலந்து தோன்றுகிற வரவு செலவுக் கணக்கேட்டின் நடுப்பக்கம் ஒன்றாகவே இதனைப் பாடினார் பாலு. பாற்கடலைக் கடைந்தால் தான் என்றில்லை, பாலு தன் குரல்வளையிலிருந்து தோற்றுவித்தாலும் அமுதம் தான். இன்றெல்லாம் கேட்கலாம்.