சாதா டாக்டர்

சாதா டாக்டர்

அந்த மலை நகரத்தில் புகழ்பெற்ற மருத்துவமனை. எப்போதும் கூட்டத்துக்குக் குறைவில்லை. சற்றே வயதான “டாக்டர் கிம்” அனுபவமிக்க மருத்துவர் மேலும் அவர் திருமணம் ஆகாதவர். ஒரு நாளின் பல மணி நேரம் தொடர்ந்து நோயாளிகளை பார்த்து மருத்துவம் செய்து வந்தார் சுற்றுப்பட்டு பல ஊர்களில் இருந்தும் அவருக்கு வாடிக்கை நோயாளிகள் பெருகினர். மருந்து தருவது மாத்திரம் ஒரு மருத்துவரின் வேலை அல்ல என்பதை அவர் நம்பினார். தன் மனத்திலிருந்து அவர் பேசுவார் அன்பொழுக அவர் விசாரிக்கும் போதே தங்கள் குறைகள் பாதி தீர்ந்து விடுவதாக மக்கள் நம்பினார்கள்

ஒரு நாள் காலையிலிருந்து எப்போதும் தூறிக்க்கொண்டே இருந்தபடியால் நகரத்தில் நிறைய நடமாட்டம் இல்லை. கூட்டம் மிக குறைவாகவே இருந்தபடியால் டாக்டர் கிம் உற்சாகமாக இருந்தார். இன்னும் ஒரே ஒரு பேஷண்ட் தான் காத்திருப்பதாக கம்பவுண்டர் வந்து சொன்னார். அவளையும் அனுப்பி விட்டால் அதன் பிறகு வீட்டுக்குப் போய்விடலாம். பொதுவாக அவர் விடுப்பு எடுப்பதேயில்லை. இந்தத் தினத்தின் முக்கால் பங்கு நேரம் இன்னும் மிஞ்சி இருக்கிறது.
“சீக்கிரம் வீட்டுக்குச் செல் கிம். பாதி படித்து விட்டு அப்படியே கிடத்தியிருக்கிற Troilus and Criseyde என்ற நூலை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து போ. ஜோசெப் ஹைடனின் சிம்பனிகளிலேதாவது ஒன்றை வாசித்துக் கொண்டே சின்னச் சின்ன மடக்குகளாக ஒயின் அருந்து. நன்றாக வறுத்த மாமிசத் துண்டுகளைப் புசி. சிறுவயதில் இறந்து போன உன் அம்மாவின் பழைய டைரியில் நடுங்குகிற சித்திரங்களாக அவளுடைய கையெழுத்தில் எதாவதொரு பத்தியைப் படித்துக் கண்கலங்கு. எதாவது செய். இந்தத் தினம் உன்னுடையதாக மாறவேண்டாமா..?”
ஒவ்வொரு பேஷண்டும் தங்களது சுய விவரங்கள் உடல் உபாதை இன்ன பிறதகவல்களைப் பூர்த்தி செய்து அளிக்கிற சீட்டைத் தந்த பிறகு தான் கிம் அவர்களைப் பார்க்க அனுமதிப்பார். அந்தப் பெண் தந்தனுப்பிய விபரச்சீட்டில் பாதி முகம் மட்டும் வரையப்பட்டிருந்தது. அவருக்கு எப்போதும் இல்லாத கோபம் ஒன்று தோன்றிற்று. கம்பவுண்டர் ஷின்னை அழைத்தார்.
” என்ன விளையாடுகிறாளா..? ஒழுங்காக பூர்த்தி செய்து தராவிட்டால் அவளை நான் சந்திக்கப் போவதில்லை என்று சொல்.இல்லா விட்டால் அவளைக் கிளம்பச் சொல் என்றார். இதைச் சொல்லும் போதே அவருக்கு ஏதோ விளையாட்டுப் பெண் தெரியாமல் செய்துவிட்டதாக மன்னிப்புக் கோரியபடியே உள்ளே வரப் போகிறாள் என்று தான் நினைத்தார். ஷின் வெளியே செல்வதற்குள் அந்தப்பெண் தன் மழைக்கோட்டு லெதர் பை குடை ஆகியவற்றை எல்லாம் சேகரித்துக் கொண்டு வழியும் கண்ணீரைத் துடைத்தவாறே வாசலைத் தாண்டிக்கொண்டிருந்தாள்.
அவளுடைய குரல் கேட்கவில்லை என்றதும் டாக்டர் கிம்முக்கு என்னவோ போலாகி விட்டது. அடடா என்ன இருந்தாலும் சிறுபெண் எத்தனை தூரத்திலிருந்து வந்தாளோ என்று பரிவுற்றவராகி எழுந்து வாசலுக்கு வந்தார். இந்தா பெண்ணே என்னைத் தேடி வரும் எவரையும் நான் மறுதலித்து அனுப்பியதில்லை. உன்னை மட்டும் திருப்பி அனுப்பினால் அதுவே எனக்கு மனவலியாகிவிடும். வா என்று ஒற்றைச் சொல்லால் உத்தரவு போல் சொல்லிவிட்டுத் தன் அறைக்குள் திரும்பினார்.
அவருக்கு முன்பாக அமர்ந்திருந்த அந்தப் பெண் மகிழ்ச்சியற்ற முகத்தோடு சன்னமான குரலில் பேசினாள் ” எனக்கு என் பெயர் உட்பட எல்லா விபரங்களுமே அப்படியே இருக்கின்றன என்றாலும் எனது கற்பனைகளின் உலகமானது முற்றிலுமாகக் குழம்பிவிட்டிருக்கிறது. நான் படித்த கதைகள் பார்த்த திரைப்படங்கள் சென்று வந்த பயணங்கள் பாடிய பாடல்கள் அறிந்த ஜோக்குகள் என எல்லாமே குழப்பமாகி இருக்கின்றன. சிரிக்கத் தேவையற்ற ஒன்றுக்காக சிரிக்கிறேன். சப்தமான பாடலொன்றைக் கேட்டு விக்கித்து அழுகிறேன். சாதாரணமான கதை நகர்தல் எனக்குத் திடுக்கிடுவதாக இருக்கிறது. மொத்தத்தில் எதெல்லாம் என்னவாகவெல்லாம் மாறியிருக்கின்றன என்பதே தெரியாமல் என் சொந்த உலகத்துக்குள் என்னையே எனக்கொரு அச்சமாக மாற்றிக்கொண்டு திகைத்து அலைகிறேன்” என்றவள் குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
கிம்முக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை ” இந்தா பார் பெண்ணே நான் வெறும் ஜென்ரல் ப்ராக்டீஷனர். இது மனவள நிபுணர் ஒருவரால் மாத்திரமே அணுகக் கூடிய பிரச்சினை போல் தோன்றுகிறது. நான் வேண்டுமானால் எனக்குத் தெரிந்த ஒரு மருத்துவரைப் பரிந்துரைக்கட்டுமா என்று கேட்கும் போதே உங்களால் தான் இதனைத் தீர்க்கமுடியும் என்று தெரிந்து தான் வந்தேன். என் பிரச்சினை மீது உங்களுக்கு நம்பிக்கை வரவேண்டும். அது வராவிட்டால் தீர்வு கிடைக்காது. சரி நான் கிளம்புகிறேன். இனி வரமாட்டேன்” என்றவாறே கிளம்பியவள் அவரை வெறுமை உமிழும் கண்களால் உற்றுப் பார்த்துவிட்டுக் காணாமல் போனாள்.
கம்பவுண்டர் நல்ல வேளை ஸார் சீக்கிரமே அனுப்பிட்டீங்க என்று மகிழ்ந்துகொண்டார். கிம்முக்கு அந்த நாளின் முந்தைய உற்சாகம் அப்படியே இல்லை என்றாலும் எதற்காகவும் தனது தினத்தைப் பொசுக்கிக் கொள்வதில்லை என்று உறுதியாயிருந்தார். காரில் ஏறியதும் வெப்பத்தை அதிகரித்துக் கொண்டு வெம்மை தந்த சந்தோஷத்தில் கார் டேப்பில் ஜாஸ் இசையை வழிய விட்டார். கற்பனை எல்லாம் மாறிவிட்டால் குழப்பம் தான். அந்தப் பெண் பாவம் தான் ஆனாலும் என்ன கற்பனைகள் தானே மாறியது..? உண்மைகள் அப்படியே தானே இருக்கின்றன..? என்று சொல்லிக் கொண்டவர் வளைந்து நெளியக் கூடிய சாலைகளால் தன் வீடிருக்கும் மலைமேட்டுக்கு வந்து சேர்ந்தார்.
வாசலின் பெரிய இரும்புக்கதவை ஸெக்யூரிடி திறப்பதற்காகக் காத்திருந்தபோது அந்தப் பகுதியின் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் கூட்டமாக வந்து சேர்ந்தார்கள். மரியாதைக்காக இவர் காரிலிருந்து இறங்கினார்.
“இன்னும் பத்து நாட்களில் புதுவருடம் பிறக்கிறது. நம்முடைய சங்கத்தின் விழா பிரம்மாண்டமாக நடக்கவிருக்கிறது. வழக்கம்போல் நீங்கள் நல்லதொரு நன்கொடையை நல்க வேண்டும்” என்று அவர்கள் கேட்டுக் கொண்டார்கள் அப்படியே நிச்சயம் செய்வதாக உறுதி அளித்தார் காரை மீண்டும் கிளப்பிக் கொண்டே “அப்ப நா வர்றேன்” என்றார்.
எல்லோரும் ஒரே குரலில் “ரொம்ப நன்றி இஞ்சினியர் ஸார்” என்றார்கள்