திறந்த கதவு

   திறந்த கதவு

      குறுங்கதை

 

இதற்குமேல் பொறுத்துக்கொள்ள முடியும் என்று தோன்றவில்லை. எல்லாவற்றுக்குமே ஒரு அளவு இருக்கிறது என்பது க்ளிஷே. அவரவர் வாழ்க்கையில் எவற்றையெல்லாம் அடைந்தார்கள் எதையெல்லாம்  இழந்தார்கள் என்பதைப் பொறுத்து மாறக்கூடியது.ரேடியோ பெரிதாக இருந்தால் சத்தம் அதிகமாக வரும் இல்லையா அது மாதிரிதான் பொறுமையும்.

எதில் விட்டேன்?

எஸ்!!!

இதற்குமேல் பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு புள்ளி எல்லோருக்கும் வாழ்க்கையில் எப்போதாவது வந்துதான் தொலைக்கிறது. சந்தானத்தைத்  தீர்த்துவிடுவது என்று சில நாட்களுக்கு முன்னால் யாராவது யோசித்து இருந்தால் கூட அவர்களுக்கு நான் தான் மிகப்பெரிய எதிரியாக இருந்திருப்பேன்.
ஆனால் வினோதம் பாருங்கள் எண்ணி நாலே நாளில் எல்லாம் தலை கீழாக மாறிவிட்டது போல் சந்தானத்தை நானே என் திருக்கரங்களால் கொன்று போடவேண்டும் என்று வேக வேகமாய் நடந்து போய்க் கொண்டிருக்கிறேன்.  என்ன பிரச்சனை என்பதை விடுங்கள். பிரச்சினைகள் அரதப் பழையவை. வாழ்க்கை ஒன்று தான் ஆட்கள் தான் மாறிக் கொண்டே இருக்கின்றார்கள் அப்டின்றதை சொன்னதும் சந்தானம் தான். பேச்செல்லாம் வண்ணமாத் தான் இருக்கும்.

 உலகத்ல ஆக முக்கியமான வார்த்தைகளில் ஒண்ணு ஆட்டிட்யூட். அது தான் தப்புங்கிறேன். எதை யார் சொன்னாலும் விட்டேத்தியா ஒரு பதில், அலட்சியமா ஒரு புன்னகை. ஏதோ தான் தான் இந்த உலகத்தை செப்பனிட வந்தா மாதிரி பாவனை அடுத்த மாசம் செலவுக்கு துந்தணாப் பாடணும். இதான் நிதர்சனம் ஆனாலும் பவுசுக்கு ஒண்ணும் குறைச்சலில்லை. எனக்கு வியர்த்து வருது பாருங்க. சந்தானத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பிச்சாலே படபடப்புத் தான்

என்னை விடுங்க ஸார் நீங்க அன்னியர் தானே..? உங்கள்ல யாராச்சும் கேளுங்களேன்… என்னப்பா சந்தானம்,ஏன் இந்த பந்தா..? எதுக்கு இத்தனை மெழுமை? உலகம் முச்சூடும் உன்னைப் புரிஞ்சுக்கணும்னு சொல்லிட்டே இருக்காதே…நீ இந்த உலகத்தைப் புரிஞ்சிக்கத் தொடங்குன்னு சொல்லுங்களேன். அப்பறம் தெரியும் உங்களுக்கான மரியாதை.

சொல்லிப் பயனில்லைன்னு   ஒவ்வொரு உறவுக்காரங்களும்  சந்தானத்தின் ஆட்டிட்யூட் காரணமாகவே விலகிப் போய்ட்டாங்க.
அதெல்லாம் பிரச்சினையில்லைங்க. நடந்திருக்கலாம்.
எஞ்சியிருந்த ஒரே ஒருத்தி… மஞ்சு! அவளையும் இரண்டு நாட்கள் முன்னாடி துரத்தியாச்சு… வேண்டாம் அதை நினைக்காதேன்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டாலும் மனசு சமாதானம் ஆவலை.
 விசும்பி விசும்பி அழுதுக்கிட்டே திரும்பி திரும்பி பார்த்தபடி அவள் நடந்து போன காட்சி இன்னும் மனத்தை அறுக்குது ஸார்

அப்பத் தான் மனசு விட்டுப் போச்சு. இருக்கிறதை அழிச்சி ஒரு வாழ்க்கை. எதும் சம்பாதிக்க திராணியில்லை. எதுக்கெடுத்தாலும் குதர்க்கம். சார்ந்தவங்க கிட்டேவன்மம் பாராட்டுறது நாயோட குணமா மனுஷன் கிட்டே இருக்கிறதும்..?

இதையெல்லாம் நான் சொல்லலை ஸார். என்னை விடுங்க. போய் நாலு பேர்கிட்ட கேட்டுப் பாருங்க சந்தானம் அப்டின்னு பேரை மட்டும் சொல்றப்பவே இந்த உலகத்தோட அபிப்ராயங்கள் கொத்துக் கொத்தா பொழியுறதைப் பார்ப்பீங்க.

என்னால எளிதில் மன்னிச்சிருக்கக் கூடியது தான். எத்தனை மன்னிச்சிருக்கேன். இன்னிக்கு தாங்க முடியாத புள்ளிக்கு வந்து சேர்ந்ததுக்கு காரணம் சந்தானமே தான். தனக்காக அழுவுறதுக்குன்னு மிச்சமிருந்த ஒருத்தியைக் கலங்க வச்சித் துரத்தியாச்சு. இனிமே என்ன..? என்னால ஒரு துளிக் கண்ணீர் கூட சிந்தமுடியாது. என் கையாலயே கொன்னாத் தான் திருப்தி. எனக்கெல்லாம் எத்தனை தோல்வி சரிவு இதையெல்லாம் எத்தினி பொறுத்துக்கிட்டு எழுந்து நிக்கிறதுக்கு முயற்சிபண்ணிட்டிருக்கேன். சரி அதை விடுங்க. கருணை காருண்யம்னு லெக்சர் அடிக்கிறவங்க மட்டும் இந்தக் கதையை விட்டு வெளில போயிருங்க. இதோ தெரு முனைக்கு வந்தாச்சு. அந்த நாலாவது வீட்டு மாடி போர்ஷன் தான் சந்தானத்தோட ஏகாதிபத்யம். பாருங்களேன் பப்பரப்பான்னு கதவத் தெறந்து போட்ருக்கதை..!

மெல்ல வீட்டு வாசலை நெருங்கிறேன். கீழ்வீSet featured imageடு சித்தப்பா குடும்பம். சந்தானம் மேல அலாதி பாசம். அவங்க யார் கண்லயும் படாமத் தான் படியேறி மாடியை அடையணும். பிடிபட்டுட்டா போச்சு. பூனையோட பாதங்களால மாடிக்குப் போற அனேக படிகள்ல ஏறிக் கிட்டத் தட்ட நெருங்குறப்ப கீழே யாரோ பார்த்துட்டாங்க ஏய்னு சத்தம் கேட்கவே சட்டுன்னு ரூமுக்குள்ளே புகுந்து கதவை உள்பக்கமா தாழிட்டுக்கிட்டேன். ஒரு கொலைக்குத் தேவையான முன் நிம்மதிக்கு எத்தனையெல்லாம் கவலைப் படவேண்டிருக்கு

அதுக்குள்ளே வெளில காலடிகளோட சத்தம் தபதபன்னு கதவைத் தட்டுறாங்க. இன்னும் சில நிமிடங்கள் உடையாமல் தாங்கும். அதுக்குள்ள..

“டே சந்தானம் சந்தானம் கதவை திறடா…திறப்பா சந்தானம்
அய்யய்யோ எத்தனையோ பார்த்திட்டிருந்தும் சட்டுன்னு படியேறி கதவைப் பூட்டிக்கிட்டான் கடவுளே…கதவைத் திறப்பா!”