பந்தயம்

   பந்தயம்
குறுங்கதை

 

அந்த ஊர் பந்தயங்களுக்குப் பிரசித்தி பெற்றது.

முதன் முதலில் அங்கே யாரோ ஒருவர் இன்னொருவரிடம் விளையாட்டாகப் பந்தயம் கட்டினார்.

வெற்றியின் மீதான ஈர்ப்பு அந்த ஊரில் வெகு சீக்கிரமாகப் பரவத் தொடங்கியது.

ஒரு கட்டத்தில் காலை முதல் நள்ளிரவு வரைக்கும் ஆடவர் பெண்டிர் மூத்தோர் இளையோர் என எந்த வித்யாசமும் இல்லாமல் எல்லோரும் எப்போதும் பந்தயமிடுவதில் ஈடுபடலாயினர்.

எந்தப் பேச்சுமே சடுதியில் பந்தயமாகவே மாறலாயிற்று.

முன்பிருந்த எல்லாமே பந்தயங்களின் உள்ளே புகுந்து கொண்டன.

அன்பும் நட்பும் காதலும் பாசமும் எல்லாமே பந்தயங்களால் சூழப்பட்டன. தோற்றவர்கள் உடனடியாக அடுத்ததொரு பந்தயத்தை நாட விழைந்தனர். தோல்வியின் இருள் தங்கள் மீது படர்வதைக் கொஞ்சமும் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் என்ன செய்தாவது வெற்றியின் வெளிச்சத்தைச் சென்றடைய வேண்டி ஆவேசம் கொண்டனர்.

வெல்வதற்கும் தோற்பதற்கும் பல்வேறு உபாயங்களை வழங்குகிற வல்லுனர்களும் பெருகிவிட்டனர். தொடர்ந்து தோற்றவர்கள் கூடத் தங்கள் அனுபவங்களை மற்றவர்களுக்கான படிப்பினையாக மாற்றித் தருவதன் மூலம் ஆதாயம் பெறப் பார்த்தனர்.

சகோதரர்கள் நிரந்தரமாய்ப் பகை கொண்டலைந்தனர். காதலர்கள் வெவ்வேறு தரப்புக்களைச் சார்ந்திருக்க நேர்ந்ததால் பிரிவுற்றனர். உறவுகள் உடைந்து சிதறியதன் பின்னே பரிச்சயமாய் ஒரு புன்னகை கூடப் பூப்பது கடினமாக மாறியது. இலையுதிர் காலத்தில் வழுமூண்ட மரங்களைப் போல் அந்த நகரம் வெறுமையால் சூழப்பட்டிருந்தது.

திடீரென்று ஒரு கூச்சல் கேட்கும். பொதுவான நிசப்தம் அறுந்து போய்ப் புதிதாய்ப் பெரியதாய் வென்றவர்களின் ஆரவாரமும் களிப்பும் கெக்கலிப்பும் எல்லா வீதிகளிலும் எதிரொலித்த வண்ணம் கொண்டாட்டத்தின் பேரொலிகள் காற்றில் வலம் வரும். கொஞ்ச நேரம் தான் மறுபடியும் நகரத்தின் மொத்த அமைவும் மீண்டும் நிசப்தத்தைப் போர்த்திக் கொண்டு அடுத்த சுற்றுப் பந்தயங்களின் மீது பார்வைகளைக் குவித்த வண்ணம் பல்வேறு தரப்புக்களாய்ப் பகுபட்டிருக்கும்.

தோற்றவர்கள் அழிந்தவர்களின் கூக்குரல் பெரும்பாலும் சன்னமாய்ப் பலருக்கும் கேட்காதவண்ணம் குன்றியொலிக்கும். நம்பமுடியாத அபத்த வியப்பைப் பரிகசித்தவண்ணம் ஒரு சிலர் மட்டும் நடந்து திரும்புவது நிகழும்.

எத்தனையோ பேர்கள் மனத்திலெல்லாம் எப்படி இருந்த ஊர் இப்படிப் பந்தயம் என்கிற பைசாசத்தின் இரும்புப் பிடியில் சிக்கிக் கொண்டுவிட்டதே என்கிற கவலை கசிந்து கொண்டு தான் இருந்தது.ஆனாலும் செய்வதற்கு ஏதுமின்றி பித்தூறிய உறைநிலையில் தடுமாறித் தவித்தனர்.

என்றேனும் ஒருதினம் எல்லாம் மாறும் என்கிற சிறிய ஒளியை மட்டும் விடாமல் பற்றிக் கொண்டு சிலர் வலம் வந்தனர்.

ஒரு நாள் அந்த ஊருக்குள் பாவலன் ஒருவன் வந்து சேர்ந்தான்.

அவன் தன் மனம் போன போக்கில் பாடல்களைப் பாடத் தொடங்கினான்.

யார் அழைத்தும் அவன் ஒருபோதும் பந்தயத்தில் ஈடுபடவே இல்லை.

தன்னிடம் பாடல்களைப் பயில வேண்டுமானால் அவர்கள் பந்தயத்தில் ஈடுபடக் கூடாது என்று அவன் நிபந்தனை விதித்தான்.

அந்த ஊரில் ஒவ்வொருவராகப் பந்தயங்களில் ஈடுபடுவதிலிருந்து விடுபடத் தொடங்கினார்கள்.

அப்படித் தான் அவ்வூர் பந்தயத்தின் பிடியிலிருந்து பாடல்களின் தழுவலுக்குள் வந்து சேர்ந்தது