பாப்கார்ன் படங்கள் 1
        மணி-ரத்னம்


ஆனந்த் பாபு பாத்திரக் கதா பேர் மணி
நெப்போலி பாத்திரக் கதா பேர் ரத்னம்
சோ படத்தோட பேர் மணிரத்னம்

அப்டின்னு வச்சி மணி ஸாரை டென்ஷனாக்கிப் பார்த்த படம் மணிரத்னம்.மணி ஸார் கோச்சுக்கப் படாது என்பதற்காக ஒரு உபாயம் செய்தது தான் ஹைலைட். அதாகப்பட்டது படத்தின் டைட்டிலில் மணிரத்னம் என்று பதியாமல் மணி மைனஸ் ரத்னம் அதாவது மணி-ரத்னம் என்று தோன்றச் செய்தார்கள். தட் மீன்ஸ் தி சைன்ஸ் ஃபிக்சன் ஆஃப் 90’ஸ் கிட்ஸ். இந்தப் படத்தை கிளாப் கட்டை அடித்து தொடக்கம் செய்து வைத்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள். அதனாலேயே படம் பிய்த்துக் கொண்டு ஓடும் என்று எதிர்பார்த்தவர்கள் ஓடிக்கொண்டே பாப்கார்ன் பாக்கெட்டுக்களை பிய்த்துக் கொண்டார்கள்.

படத்தின் ஆரம்ப சீனே அமர்க்களமாக இருக்கும். நெப்ஸூக்குத் தனது வாத்தியார் பட்டத்தை ட்ரான்ஸ்பர் செய்து தருவார் வெள்ளை சுப்பையா. அதற்கு சாட்சியாக நெப்ஸூக்கு பரிவட்டம் கட்டி விடுவார். எல்லோரும் சந்தோசப்படுவார்கள். தட் இஸ் தி பிகின்னிங் என்று சொல்லாமல் சொல்லி படத்தை ஆரம்பிப்பார்கள்.

மார்த்தாண்டன் கருப்பு சுப்பையா வெள்ளை சுப்பையா இடிச்சபுளி செல்வராஜ் மற்றும் கேகே சவுந்தர் போன்ற பண்பட்ட நடிகர்களின் புண்பட்ட நடிப்புக் காட்சிகள் நிறைந்த படம் மணி-ரத்னம். பார்த்து உய்யவும்.

வானத்துல நிலா ஒண்ணுதான். அதே மாதிரி என் மனசுலயும் நிலா ஒண்ணே ஒண்ணுதான். அது நீ தான் என்று நிசமாகவே தன்னிடம் அழுதபடி பேசும் ஈரோயினிடம் தானும் அழுது பேசும் காட்சியில் நெப்ஸ் நடிப்பில் மிளிர்வார் பாருங்கள். அந்தக் காட்சி ஒன்று போதும் டிக்கட் காசு செரிமானம் ஆகும். இதே படத்தில் டிங்கி டாகா டிங்கி டாகா என்று ஒரு பாட்டு வரும். தமிழில் எடுக்கப்பட்ட மிகச்சிறந்த சைன்ஸ் பிக்சன் பாடல் காட்சிகளில் ஒன்று.

இதே படத்தில் வில்லனும் அவருடைய அஜீஸ்டெண்டும் ரூமுக்கு வெளியே இருந்தபடி ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருப்பது தெரியாமல் தனக்குத் தானே பேசி சிரித்து மகிழும் நட்ராஜந்தம்பி அலையஸ் பப்புலுவின் பெர்பார்மன்ஸ் இருக்கிறதே பத்துப் பைனஞ்சு எண்டி.ராமராவ் ஆறேழு அமிதாப்பச்சன் ஆகியோரைக் கரைத்து ஒன்றாக்கினாற் போலத் தோன்றும். சந்திரமுகி படத்தில் ரூமுள்ளே ஜோதிகாவின் இலக்கிய எழுச்சியைக் கண்ணுற்று வெளியே கண்கலங்கும் பிரபோ மற்றும் கூடவே நிற்கும் ரஜ்ஜினியார் என்கிற அந்தக் காட்சிக்கு முன் மாதிரி ஸீன் மணி-ரத்னம் படத்தின் இந்தக் காட்சி தான் என்பது நம்மில் எத்தனை க்ராஜூவேட்களுக்குத் தெரியும்..?

வில்லன் பெரியமண்டை தன் பய்யன் பப்புலு அலையஸ் நட்ராஜந்தம்பி ஒன்சைடு ஆக நெப்ஸின் தங்கச்சி மோகனாவை சிறுவயதிலிருந்தே காதழிப்பதை அறிந்து கொண்டு நூதனமாக ஒரு உபாயத்தைக் கைக்கொள்வார். அதாகப்பட்டது நாம ஏன் நெப்ஸை சந்திச்சு டென்சனாக்கி டென்சனாகணும்..? நெப்ஸின் மனைவி தங்கத்திடம் பக்குவமாய் பேசி காரியத்தை பலிதம் செய்தால் என்ன என்பதே அந்த யோசனா உபாயம். இதில் பாருங்கள் உலகப் படங்களில் எதிலும் எந்த மொழியிலும் இடம்பெறாத காட்சி ஒன்று இங்கே மலரப் போகிறது என்பது தான் அதிசயம்.

வில்லன் தங்கத்தை மீட் பண்ணி தன் மகனுக்கு நெப்ஸ் தங்கையைப் பெண் கேட்பார். கெஞ்சுவார். கண் கலங்குவார். தங்கம் என்கிற நெப்ஸின் மனைவி பாத்திரம் அவரைக் கண்டபடி திட்டும். அழவைக்கும். அவமானப் படுத்தும் . வில்லன் கண் மல்க கிளம்பிச் சென்றுவிடுவார். இத்தனை கண்ணியமான வில்லனும் இவ்வளவு திட்டு திட்டுகிற ஈரோயினியும் சந்திக்கும் காட்சி வேறெந்தப் படத்திலும் இல்லய் இல்லய் இல்லவேய் இல்லய்.

படத்தின் ஆணிவேராய்ப் பல காட்சிகள் வரும். அவற்றின் ஆதிப் பிடிமானமாய் ஒரு காட்சி. தன் தங்கையும் ஆனந்த்பாபுவும் காதழிக்கிறார்கள் என்பதைக் கண்ணுற்ற நெப்ஸூக்கு கண் மற்றும் மண் தெரியாமல் கோவம் வரும். வரணுமில்லியா..? உடனே அவர் ஆனந்த்பாபுவை அடிக்கத் தொடங்குவார். அதுவொரு தியாக ஃபைட்டிங்.தன் வீட்டின் மர செல்ஃபைத் தானே தள்ளி விடுவார். தான் கஷ்டப்பட்டு உருவாக்கிய மண்பானைகளைத் தானே தள்ளி விட்டு நொறுக்குவார். தன் வீட்டைத் தானே சூறையாடிய தானைத் தலைவர் நெப்ஸ் என்று தியேட்டரில் கத்தியவர்கள் கேண்டீன் பக்கம் அப்புறப்படுத்தப் படுவார்கள். காண்பதற்கு ஆனந்தம் ஆனந்தம் பாபு என்று இனிக்கும் காட்சி அது. தன்னை அடிக்க அடிக்க வேண்டாம் வேண்டாம் என்று விறைப்பாக முறைப்பாக சொல்லிக் கொண்டே இருப்பார் ஆனந்தமற்ற பாபு அடித்துக் கொண்டே வீட்டை விட்டு வெளியேற்றி அழைத்து வரும் நெப்ஸை ஒரு கட்டத்தில் அவர் வீட்டு அரிவாளை எடுத்து ஒரே ஒரு கீறல் கீறுவார் அடிகள் பெற்ற பாபு. என் வீட்டுக்கு வந்து என்னையே மெரட்டுறியா என்று நெப்ஸ் அவரைப் பார்த்துக் கேட்ட பிறகு தான் வெட்டுவார்.வெட்டிருவியா வெட்டிருவியா என்று கேட்டால் வெட்டாமல் என்ன பண்ண என்று கேட்காமல் கேட்பார் அரிவாள் தூக்கி பாபு. அப்புறம் வெட்டுப் பட்ட நெப்ஸின் காதோடு போய் அண்ணே என்னைய நீ பேசவே விடல்லியே அவர் என் கூட படிச்சவர்ணேய் என்பார். அதைக் கேட்ட அதிர்ச்சியில் ரத்னம் அலையஸ் நெப்ஸ் மயக்கமுறுவார். மணி அலையஸ் அரிவாள் ஹோல்டிங் பாபு ஆல்ஸோ கண்கள் கலங்குவார்.ஊரார் எல்லாரும் கண்கள் கலங்கி ப்ரபஞ்சமே ப்ளர் மோடுக்குப் போய்விடும்.

வில்லனாக மனம் முகிழ்ந்து வில்லனாகவே மாறிவிடும் பப்புலுவுக்கும் ஆனந்தபாபுவுக்கும் ஷண்டய் வரும். சேதி கேட்டு ஓடி வரும் நெப்ஸைப் பார்த்து தங்கச்சி மோகனா கண்கலங்க அதைப் பார்த்து ஆனந்தமற்ற பாபு கண்கலங்க துரத்தி வரும் வில்லக்குட்டி நடிகர்கள் எல்லாரும் கண் கலங்கும் அரியவகை இலக்கியக் காட்சியும் அடுத்து இடம்பெறும்.

இந்தப் படத்தைத் துவக்கி வைத்தவர் யார்..?
சூப்பர் ஸ்டார் ரஜ்ஜினிகாந்தர்.
அவருக்கு படத்தில் ஒரு முக்கிய கேரட்டர் வழங்காமல் இருக்க முடியுமா..? படத்தில் ஒரு சிவலிங்கம் ட்ரான்ஸ்போர்ட் பஸ் வரும். அதன் ஓனர் வில்லன் பெரியமண்டை தட் மீன்ஸ் பப்புலுவின் தந்தையாகப் பட்டவர். அவருடைய பஸ் ட்ரைவர் ஒரு தியாகட்ரைவர். அவரது தங்கை காதலைத் தடுத்ததில் தங்கை மரித்ததில் தான் மட்டும் சோகட்ரைவராக வாழ்க்கை எனும் பஸ்ஸை நிறுத்தாமல் ஓட்டிக் கொண்டிருப்பார். அவர் தான் அடிபட்டு விழும் அவஸ்தை பாபுவுக்கு அவசர உதவி ட்ரைவராகவும் விளங்கித் தன் வீட்டில் அடைக்கலம் தந்து ஆதரித்திருப்பார். கண் விழிக்கும் அடிபட்ட பாபுவுக்கு நடந்த கதையை விளக்குவார். அவர் வீடு முழுக்க ரஜ்ஜினி காந்தம் படங்களைக் கட் பண்ணி ஒட்டி வைத்திருப்பார். தங்கச்சி காதழைத் தான் தடுத்ததில் தங்கச்சி இறந்து விட்ட கதயையும் சொல்லித் தான் ஒரு ரஜ்ஜினி காந்தத்தால் ஈர்க்கப்பட்ட ரசிக இரும்புத் தூள் என்பதையும் விளக்கி சொல்லி இருப்பார். பிற்காட்சியில் நெப்ஸூக்கு உண்மைகளை விளக்கி சொல்லி விட்டு உயிரை விட்டு அடுத்த பிறவியில் தமிழறியாத ஆங்கிலேயனாகத் தான் பிறப்பேன் என்று சந்தோஷமாய் நரகத்துக்குப் போவார்.

இது வரய் இந்தப் படத்தின் கதயை பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் அனைவருக்கும் நாலாவது வார்ட் ஆனந்த்பாபு தற்கொலைப் படை சார்பாக நன்றிகலந்த வணக்கங்கள்.  படத்தின் பெயருக்கு கூடுதல் வால்யூ ஆடட் விஷயமாக மழைக்கு நடுவே மின்னல் வெட்டியதில் வில்லன் பப்புலு மேல் பிரம்மாண்டமாண கோயில் மணி அறுந்து விழுந்து அவர் நசுங்கிச் செத் போவார். மணி இஸ் தி கில்லர் பட் நோபடி கேன் பனிஷ் தி மணி என்கிற சைன்ஸ் ஃபிக்சன் தியரி ப்ராக்டிகலாக வெரிஃபை ஆகும் உன்னத இடம் அது. பெரியமண்டை தி ஃபாதர் ஆஃப் தி பப்லு ஆல்சோ கோடரி வெட்டுப் பட்டு பப்புலு பக்கத்திலேயே விழுந்து செத்துப் போவதுடன் படம் நிசமாகவே முடியாது.ஜெயிலுக்குப் போய் விட்டு மீண்டும் ஊருக்குத் திரும்பி வரும் நெப்ஸைக் குடும்பத்தோடு சந்திப்பார் எக்ஸ்டெண்டட் ஆனந்தம் பாபு. அங்கே தான் ரீல் அறுந்து விழும்.

சிற்பி இசையில் வைரமுத்து எழுதி எஸ்பி பீ மற்றும் சித்ரா பாடிய அருமையான பாடலொன்று இந்தப் படத்தில் க்ளைமாக்ஸூக்கு முன்பாக இடம்பெறும்.
காதல் இல்லாதது ஒரு வாழ்க்கை ஆகுமா என்ற அந்தப் பாடலை இன்றைக்குக் கேட்டாலும் இனிக்கும். மொத்தப் படமும் கசக்கும்.

Download Sirpy New Songs Online, Play Sirpy MP3 Free | Wynk

மணி ஸார் எடுத்த படங்களை மட்டும் தான் மணிஸார் படம் என்று அழைக்க முடியுமா மணி ஸார் பேரிலேயே படமெடுத்து அதையும் மணிஸார் படமாகவே மாற்றிக் காட்டுறேன் பார் என்று தயாரிப்பாளரும் தைரடக்கரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொண்ட சவாலில் கூட்டம் கூட்டமாகப் படம் பார்த்த பலரும் தலை சுற்றிக் கிறுக்குப் பயித்தியமாக மாறி அலைந்தது இந்தப் படத்தின் பின் வரலாறு.

படத்தின் ஒரு காட்சியில் மக்களிடம் பேசவேண்டும் என்று வடிவேலு கேட்பார் “அறிவு இல்ல உங்களுக்கு?” அதைக் கேட்கும் போது தேனாய் இனிக்கும்.

மணி ஸாரின் உலகப் பட ரசிகர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம் மணி-ரத்னம்

எ வேர்ல்டு ஃபில்ம் பை கே.ஜெயபாலன்