ஸ்மாஷன் தாரா


ஸ்மாஷன் தாரா; தற்கண நிழல்கள்


சில விஷயங்கள் யதார்த்தம் என்னும் சுழல் கதவைச் சுற்றிக்கொண்டே இருப்பதால் நிகழ்ந்து விடுகின்றன.சாரு நிவேதிதா எழுதிய கவிதைகளைத் தொகுத்து ஸ்மாஷன் தாரா என்ற தலைப்பில் நூலாக்கம் செய்யப்படுவதாக காயத்ரி சொன்னபோது அதைப் படிக்கவேண்டுமே என்கிற ஆவலில் மனம் பரபரத்தது. “அப்படியா” என்றேன் அந்த “அப்படியா” என்பது வெறுமனே அதன் அர்த்தத்தோடு நின்றுகொள்வதல்ல. “நீங்கள் அதனை ஒரு பார்வை பார்க்கிறீர்களா?” எனக் கேட்டார் காயத்ரி. அப்படிக் கேட்டதும் நிசமாகவே மகிழ்ந்து போனேன். ஒருவகையில் முன் சொன்ன “அப்படியா” எனும் சொல்லின் நீட்சியாகவே அந்த மகிழ்ச்சி அமைந்திருக்கக் கூடும். மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டேன். இந்தக் கவிதைத் தொகுதியை முதன் முதலாக வாசிக்கக் கிடைத்தவர்களுள் நானும் ஒருவன்.
சாரு சொற்களைக் கையாள்வதில் சமர்த்தர் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. என் ஆச்சர்யங்கள் எழுத்தாளர் சாருவைப் புகழ்வதல்ல. அதைத் தவிர்த்துச் சொல்வதற்கு வேறு பல விஷயங்கள் இருப்பதையே சுட்ட விருப்பம்.
 கவிதை எனும் மகாசன்னிதியின் முன் நிற்கும் போது அதற்குண்டான ஆகம-விதி-முறைகளைப் பின்பற்றி மனசும் உடம்பும் நேர்புள்ளியில் நிறுத்தித் தன்னால் ஆன மட்டிலும் கவிதையை விஸ்வசித்து விடுவதைக் குன்றா மன ஒழுங்கோடு செய்திட விழைந்திருக்கும் சாரு நிவேதிதா எனும் புதிய கவிஞனின் மனமொழி தான் முதல் ஆச்சரியம். தான் செய்வது என்னவென்று அறியாத” ஃப்ளா ஃப்ளாவுக்கெல்லாம் எப்போதுமே வேலையே இல்லை சாருவினிடத்தில். ஒன்று தெரிந்து புரிந்து அறிந்து அதுவே தானாய்த் தானே அதுவுமாய் மூழ்கி முத்தெடுப்பது நிகழும். இல்லாவிட்டால் ஸாரி…எனக்கும் இதற்கும் ஆகப் பொருந்தவில்லை என்று உதிரும் இலைக்கும் கிளைக்குமான அதே வலியற்ற பரியந்தத்தோடு விலகி விடுவது தான் அவருடைய வழக்கம். சாரு இந்தத் தொகுப்பை ஒரு புதிய எழுத்துக்காரனின் அதே மனத் திறப்போடு அணுகி இருப்பது பல கவிதைகளினூடாகப் புரிய நேர்கிறது.
ஆதித்தாயின் முதல் கதை உள்ளிட்ட நெடிய கவிதைகளாகட்டும் இரண்டே வரிகளில் நிறைந்து ததும்புகிற சின்னஞ்சிறு கவிதைகளாகட்டும் சாரு இந்தத் தொகுதியில் கவிதையின் பலவகை வாசல்களைத் திறந்து பார்க்க முனைந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அடுத்து வரவிருக்கும் அரை நூற்றாண்டு காலம் குறுங்கதைகளும் சின்னஞ்சிறு மற்றும் குறுங்கவிதைகளும் தான் மொழிகளை ஆளப்போகின்றன என்று கடுமையாக நம்புகிறவன் நான். அதைக் குறித்துப் பல இடங்களில் எழுதியிருக்கிறேன். என் வாதத்துக்கு வலு சேர்க்கும் வண்ணம் சாரு போன்ற தீவிரமாய்ப் பல ஆண்டுகளாக எழுதி வருபவரும் அதனை மெய்ப்பிக்கும் வண்ணம் தன் கவிதைகளை எழுதுவதைக் காண்கையில் பரவசமாய் அதிர்கிறேன். Welcome to the world of short and sweet poems,Charu என்று அன்போடு முகமன் கூறுகிறேன்.
என்னளவில் இது “ஒரு அல்லது முதல் தொகுதி” அல்ல. சாரு இதில் கனிபல கலந்து பிழிந்த கவிச்சாற்றினை மதுவாக்கிப் பார்த்திருக்கிறார். வெவ்வேறு கவியுட்பொருட்கள் கூறல்முறைகள் வரியிடை மௌனங்கள் மொழிச்சுழல் ஒன்றை மற்றொன்றாக்கி அயரடித்தல் எனப் பல  வித்தகங்களை சாத்தியப் படுத்துகிறார். தனக்குப் பிடித்தமான பாடலின் மெட்டுக்குத் தன் சொந்த வார்த்தைகளை சீழ்க்கையும் சொல்லுமாய்க் கலந்தடித்துத் தன்  தனிமையெங்கும் நிரப்பிப் பார்க்கிற பாவல நர்த்தனமாகவே இந்த ஸ்மாஷன் தாராவைப் பார்க்கிறேன். இதில் சாரு தொட்டுச் செல்லும் தடங்கள் நேர்வழிச் சாலைகள் அல்ல. மழையின் ஒழுங்கற்ற தாரைகளின் ஒழுங்கெனவே பெருக்கெடுக்கும் கவிதைகள்.

அரிவை நெடுங்கண் சுழல்கின்ற
அசைவத்தனையும் இயல்பே காண்
இந்த வரியை எப்படிக் கடப்பது..? இதை எழுதியவர் மகாகவி பர்த்ருஹரி.அறுபதுகளில் மகாகவி பர்த்ருஹரியின் ஸ்ருங்கார சதகம், திருச்சி  கலைப்பண்ணை வெளியீடாகச் சின்னஞ்சிறிய கைக்கடக்கமான கவிநூல் ஒன்று வந்தது. வடமொழியில் பர்த்ருஹரி எழுதியவற்றைத் தமிழ்ப்படுத்தியவர் கவிக்கடல் அரங்க சீனிவாசன்.ஒவ்வொரு கவிதையையும் தமிழில் எழுதியதோடு நில்லாமல் அதற்கான விளக்கத்தையும் அதே பக்கங்களில் இடம்பெறச் செய்திருந்தனர். பர்த்ருஹரியின் கவிமனத் தேட்டத்தை, எப்போதும் ஆர்ப்பரிக்கும் தீராக்காதலின் உள்மன அழுத்தத்தை, ஆசையின் நேர்தன்மையுடனான வெளிச்சொல்லலை, இன்னபிற வதங்கலை எல்லாம் உறுதியோடு வெளிச்சொன்னவை அக்கவிதைகள்.
காலந்தாண்டியும் சாகாமல் நிரந்தரிக்கிற வல்லமை கவிதைக்கு உண்டல்லவா..? அப்படிப் பார்க்கையில் பர்த்ருஹரியின் கவிதைகளை எங்ஙனம் அவர் காலத்தோடு சேர்த்துப் புரிந்து கொள்ள முயலுகிற அதே நேரம் அதே கவிதைகளின் தற்கண நிழல்களையும் நம்மால் அவதானிக்க முடிகிறதோ அதே வல்லமையோடு இன்னும் பன்னெடுங்காலம் கழித்தும் நின்று நிலைத்துப் பேசப்படுவதற்கான சகல சாத்தியங்களையும் கொண்டிருப்பவை சாருநிவேதிதாவின் ஸ்மாஷன் தாரா கவிதைகள். தன் மனத்தின் குரலைப் பதிவு செய்வதை ஒரு ஓங்கிய குரலாக்கி ஒலிப்பதன் மூலம் வேறொரு சில பலரின் வெவ்வேறு காலத்தின் குரல்களை அதற்கான எதிரொலிகளாக மாற்றிப் பார்த்த வகையில் இந்தக் கவிதைகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகின்றன.
“எழும்போதே பெரிதென்றெழுக” என்பது பொற்றொடர். யாவர்க்குமான சாத்தியப்பாடு இதற்கில்லை. தோன்றின் புகழொடு தோன்றுக என்பது மனிதர்க்கு மட்டுமான சொல்லாடல் அன்று. அது ஒட்டு மொத்த ப்ரபஞ்சத்துக்கும் ஒட்டியொலிக்கத் தக்க ஒன்று தான். அந்த வகையில் ஸ்மாஷன் தாரா கவிதைத் தொகுதி புகழொடு தோன்றிப் பெருங்காலத் தேர்வலம் கொள்ளும் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமே இல்லை.
நிறைந்தெழுக சாரு. மென்மேலும் கவி செய்க என்று வாழ்த்துகிறேன்.
வாழ்தல் இனிது

சாரு நிவேதிதாவின் ஸ்மாஷன் தாரா கவிதை நூலை இணையவழியில் வாங்குவதற்கான சுட்டி இங்கே இணைப்பில்

Smashan Thara/ஸ்மாஷன் தாரா-Charu Nivedita/சாரு நிவேதிதா