கிறக்கங்களின் பேரேடு

  சமீபத்துப் ப்ரியக்காரி
1. கிறக்கங்களின் பேரேடு


அன்பே
எப்போது உன் கண்கள் இரண்டையும்
மூடிக் கிறங்குவாய் என்பது
எனக்குத் தெரியும்.
எனக்குத் தான் தெரியும்.
எப்போதெல்லாம் அப்படிக் கிறங்கினாய்
என்பதைக்
குறித்து வைக்கிறதற்கென்று
சின்னஞ்சிறிய கிறக்கங்களின் பேரேடு ஒன்றை
எனக்குள் வைத்திருக்கிறேன்.
எவ்விதம் எவ்வண்ணம் நிகழ்ந்தாலும்
எச்சில்தானத்தை முத்தமென்ற
ஒருபெயரிட்டு அழைப்பது உலகோர் வழக்கம்.
நாமிருவருக்கு மாத்திரமான உலகத்தில்
அதற்கு அதுமட்டும் பெயரில்லை.
அந்த இன்னொரு பெயர் ஒரு சிக்கனச்சொல்.
சின்னஞ்சிறியது அதன் உரு.
எத்துணை பேர்கள் இருக்கின்ற கூட்டத்திலும்
எங்கேயென்று துளாவுகையில் கண்ரெண்டும் அலைபாயும்.
தட்டுப்பட்டதும் முந்தைய வேகம் மட்டுப்படும்.
“இங்கே தான் இருக்கிறாயா நீ…?” என்று
உன் மீது கவிழும்.உன்னோடே அலையும்.
எங்கோ பார்ப்பது போல் அங்கேயே நிலைகுத்தும்.
எல்லாம் உணர்கிற தருணத்தில்
சட்டென்று கண்கடிந்து
“ஏன் இங்கேயே பார்க்கிறாய்..?
வேறெங்காவது பார்த்துத் தொலை” என்பாய்.
அப்படிச் சொல்வதற்கு
உனக்குச்சொற்களே தேவைப்படாது
என்பது தான் விசேஷம்.
அதை நீ சொன்ன மாத்திரத்தில்
சற்றே நெருங்கி வந்து
எங்கோ நோக்கி
எங்கோ செல்கிறாற் போன்ற பாவனையில்
உன்னைக் கடக்கையில்
சரியாக ஒரு தும்மலுக்கு நடுவே
அந்தச்சிறு சொல்லைச் சொல்லிக் கடக்கிறேன்.
மீண்டும் வேறெங்கோ நின்றுகொண்டு
உன்னைத் திரும்பப் பார்க்கிற
அந்த விநாடியில்
முகமெலாம் குருதி பாய்ந்து
கண்கள் குலைந்து
உதடுகள் துடிக்க
நாசி நுனியில் கூரென்றோர் கோபமும்
கூடவேயோர் வெட்கமுமாய்ச்
சிலிர்க்கிறாய் பாரேன்.
அடுத்த தனிச் சந்திப்பின் முதற்சொல்லாய்
அந்தக் கணத்தை மீட்டெடுத்துச் சொல்லித் தொடங்குவாய்
“ச்சீ….போடா…நீ ரொம்ப மோசம்”என்று.

ச்சீ என்பது
ஒரு சொல் பெரு மொழி.