சமீபத்துப்ரியக்காரி
11 உருள் பெரும் முத்தம்
- எதெதையோ வாசித்துக் கொண்டிருப்பதற்கு நடுவே
என் மண்டை கொஞ்சூண்டு வீங்கி விட்டது.
வாரண்டி இல்லாத பொருட்களின் வரிசையில் தானே
சென்ற நூற்றாண்டின் மண்டைகளும் வரும்?.
வாசித்தால் அது சீக்கிரம் சூடாகும்
என்பதைத் தெரிந்தும்
அதைக் கைக்கொள்வது அவரவர் குற்றம் தானே? - நானென்ன செய்வேன்.
வாசிப்பை நிறுத்தி விட்டு இசை கேட்கலாம்
இசையை வாசிக்க ஆரம்பித்தது அதே மண்டை.
அதையும் நிறுத்தினேன்
நடை பழகலாம் என எழுந்து நடந்தேன்.
காலடிகளை வாசிக்கத் தொடங்கியது மண்டை
எதிர் வீட்டு நாய்க்குட்டியின் குரைப்பொலிகள்
அவற்றையும் விட்டு வைக்கவில்லை - பவுலில் அலையும் மீனுக்குட்டிகள்
இதழ்களைத் திறந்துதிறந்து
நீர்வெளியின் மீது உதறிச் செல்லும்
பெறுவோரற்ற முத்தங்களை வாசித்தேன்.
பிரக்ஞாபூர்வமாக எதையாவது சிந்திக்கலாம்
என எண்ணத் தொடங்கிய கணம்
மண்டைக்குள் அடுக்கி வைத்திருந்த
சகல பண்டங்களும்
சரிந்து விழத் தொடங்கின .
- ‘எதுவும் செய்யாமல் இரேன்’ என்று இறைஞ்சியபடி
இருந்தவிடத்திலேயே த்யானித்தேன்.
ஒரு வழியாக மெல்ல எல்லாம் கட்டுக்குள் வந்தது.
மண்டை வீக்கம் பரவாயில்லை.
மீண்டும் பார்க்க உத்தேசித்த போது
பழைய கன பரிமாணங்களுக்குத் திரும்பியிருந்தது. - வழக்கமாகத் திரும்பி வருகிற நேரத்தைத் தாண்டிப்
பத்திருபது நிமிட தாமதத்தில்
வீடு திரும்பிக் கொண்டிருக்கும் நீ
இதனை எப்படி எடுத்துக் கொள்வாய்
என்பதைக் குறித்துத் தான்
அச்சமாக இருக்கிறது. - இதற்கு முந்தைய மனவிகாரம் ஒன்றை
உன்னிடம் விவரித்துச் சொன்ன போது
“எப்டிடா இப்பிடி? புது உருட்டா இருக்கே?” என்று
புன்னகைத்துவிட்டுப் போனாய்.
அன்றெல்லாம்
என் மனதுக்குள் நானும் என் மண்டையும்
குமுறிக் குமுறி அழுதுகொண்டிருந்தோம். - என்ன தான் சொல்
ஆயிரம் முத்தங்களுக்கப்பாலும்
ஒரேயொரு வினாவை எய்து
மனத்தை நோகடிக்கும் காதலியாளிடம்
பகிர்வதைக் காட்டிலும்
சொல்வதையெல்லாம் நம்புகின்ற
ஒரு சினேகிதன் இல்லாமலா போவான்
என ஃபோன்புக்கை அலசியபடி
மண்டையை
வருடிக் கொண்டு மௌனித்திருக்கிறேன்.
- வந்து சேர்.
எதுவும் பேசாமல்
முத்தம் செய்வோம்.