எனக்குள் எண்ணங்கள் 12. வாழ்வின் ஃப்ளேவர்

எனக்குள் எண்ணங்கள்
12 வாழ்வின் ஃப்ளேவர்


நான் பிறந்தது மதுரை சம்பந்த மூர்த்தி தெருவில். ஒரு STORE வீட்டில் 12 குடித்தனங்களில் ஒன்றாக எங்கள் வீடு இருந்தது. வீடு அருகே அப்போது சந்திரா என்று ஒரு தியேட்டர் இருந்தது. மற்ற ஊர்களை போலவே மதுரையிலும் பட மாளிகைகளுக்கு பஞ்சமே இல்லை. மார்க்கெட்டுக்குள் ஸ்ரீதேவி தியேட்டர், ஆற்றங்கரையோரம் கல்பனா தியேட்டர், தீபா ரூபா தியேட்டர், சக்தி சிவம் தியேட்டர் சென்ட்ரல், சிட்டி சினிமா, நியூ சினிமா, ரீகல் டாக்கீஸ், இந்தியாவின் மாபெரும் தங்கம் என பல தியேட்டர்கள். அவற்றில் பெரும்பாலானவை தற்போது ஓட்டத்தில் இல்லை.

சென்ற நூற்றாண்டின் செல்வாக்கான பண்டம் என நிச்சயமாக சினிமாவை தான் சொல்ல வேண்டி இருக்கிறது. நாடகத்தின் ஒளி மங்கும் அதே நேரத்தில் மங்காத வெளிச்சத்தோடு வந்து சேர்ந்தது சினிமா. அன்றாட வாழ்க்கை எப்போதும் ஏதாவது ஒரு வகையில் சினிமாவைப் பற்றிய பேச்சு ஞாபகம் தேடல் ஏக்கம் இவைகளால் பூசப்பட்டு தான் இருந்தது. சினிமாவின் விசித்திரம் நெருங்கவே முடியாத நட்சத்திர தூரத்தை எளிதாக சென்று கலக்கிற பாவனையோடு உண்மைகளை ரத்து செய்துவிட்டு ஒரு பொய்யை நம்ப வைத்ததுதான். அந்த லாகிறிக்கு மயங்காதவர்களே இல்லை.

சினிமா தான் காலமாற்றத்தின் எல்லா புதிய அடைதல்களுக்கும் காரணம் என்று குடும்பத்துக்கு ஒழுக்கத்துக்கு கல்விக்கு உழைப்புக்கு தியாகத்துக்கு பக்திக்கு எதிரான போகவஸ்துவாக கட்டமைத்து தோல்வி அடைந்ததும் நிகழ்ந்தது. சினிமா பாடல்கள் வசனங்கள் காட்சி அமைப்பு போன்றவற்றால் பெரிய செல்வாக்குடன் திகழ்ந்தது.

தியேட்டர்களுக்கு அழைத்துச் செல்லப்படுவது அரிதாகவே நிகழ்ந்தது. அடிக்கடி வீடு மாறியது வழக்கமாக சென்று திரும்பக் கூடிய படமாளிகைகளில் இருந்து துண்டித்து வைத்தது ஒரு முக்கிய காரணம். சந்திரா தியேட்டர் அருகில் இருந்து வீடு மாறி கல்பனா தியேட்டர் அருகே ஒரு வீட்டில் குடியேறினோம். அநேகமாக என் ஞாபகங்களின் தொடக்கம் கல்பனா தியேட்டரில் இருந்து தான் நிகழ்வதாக கருதுகிறேன். புதிய படம் வரும்போது தெருவே திருவிழா கோலம் பூண்டு நிற்கும். அதிகாலையில் இருந்தே படத்தின் பாடல்கள் குறிப்பிட்ட நட்சத்திரத்தின் பல பட பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் எல்லாம் நாலைந்து நாட்களுக்கு தான் பிறகு ஆரம்ப ஆரவாரங்கள் குறைந்து போய் நிலைமை ஒரு நிதானத்துக்கு வரும். சில குறிப்பிட்ட பாடல்கள் வசனங்கள் ஓங்கி ஒலிப்பவை, நெடு நாட்களுக்கு அந்த படம் குறித்த எஞ்சிய ஞாபகமாக மனத்தில் தங்கும்.

பிறகு புதூர் வீடு.

அங்கே இருக்கும் போது தான் இந்தியாவில் தொலைக்காட்சியின் ஆரம்பம் நிகழ்ந்தது. எண்பதுகளின் எல்லை வரை டிவி ஒரு காணாப் பண்டம். அது அடுத்தடுத்த வீடுகளுக்கு வந்து சேர்ந்தது 90களில் ஆரம்பத்தில் தான். அந்த நேரத்தில் வெறுமனே இந்தி மட்டும் பேசிக் கொண்டிருந்த தொலைக்காட்சி 13 வாரத்துக்கு ஒரு முறை ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரே ஒரு தமிழ் படம் காணக் கிடைக்கும் என்று இருந்த நிலை மாறி வாரம் ஒரு படம் வாரவாரம் வெள்ளிக்கிழமைகளில் புதிய பாடல்களுக்காக காத்திருந்து ஒளியும் ஒலியும் என்று நிகழ்ச்சி பார்த்தது எங்கேயாவது தமிழ் ஒலிக்காதா என்று ஏங்கிய ஒரு காலத்துக்கு அப்பால் சட் என்று எல்லா விளக்குகளையும் ஒரே நேரத்தில் ஒளிர செய்தாற் போல் சாட்டிலைட் தொலைக்காட்சிகளில் வருகை 90களில் பாதியில் நிகழ்ந்தது.

புதூர் வீட்டில் இருந்தபோது அந்த தெருவில் மொத்தம் நான்கு டிவி இருந்திருந்தால் அதிகம் இரண்டு புறமும் சேர்த்து அறுபது வீடுகள் இருக்கும் அந்த ஈஎம்ஜி நகர் இரண்டாவது தெருவில் ஒவ்வொரு வீடாக டிவியின் வருகை தனித்தனியே நிகழ்ந்தது. தலைக்கு மேலே கிரீடம் வைத்தார் போல் சென்ற நூற்றாண்டில் மத்தியம வகுப்பு வீடுகளின் கிரீடம் போல் மொட்டை மாடியில் நெடிதுயர்ந்து நிற்கும் தொலைக்காட்சி ஆன்டனாக்களை சொல்ல முடியும். தூரத்திலிருந்து ஒரு வீட்டில் டிவி இருக்கிறதா இல்லையா என்பது வெளிப்படையாக தெரியும் விவரம் பற்றாமல் எங்கள் வீட்டில் டிவி இருக்கு ஆனால் அதற்கு ஆண்டனா தேவையில்லை என்று பொய் சொன்ன தீபக் அதன் காரணமாகவே பிற்பாடு வருட கணக்கில் கிண்டலடிக்கப்பட்டான்.

ஆண்டனாவில் கூட கலர் டிவிக்கு இன்னும் பெரிதான உருவம் இருந்தது. டிவி தொலைபேசியை விட அத்தியாவசியமாகவும் ஆடம்பரமாகவும் ஒரே நேரத்தில் கருதப்பட்டது மனித மனோபாவத்தின் வினோதங்களில் ஒன்றுதான். இந்த இரண்டும் இருந்துவிட்டால் அந்த வீட்டைச் சார்ந்தவர்களுக்கு ஒரு கோடீஸ்வர அந்தஸ்தை கேட்காமலேயே வழங்குவதற்கு எல்லோரும் தயாராக இருந்தார்கள். செல்வந்தத்தின் முகமாக இவற்றை தரிசித்தவர்கள் போக வேலையின் காரணமாக டெலிபோன் வழங்கப்பட்ட சிலரும் உற்று நோக்கப்பட்டு வணங்கப்பட்டார்கள்.

டேப் ரெக்கார்டர் கிராமபோன் போன்றவை இவற்றுக்கு அப்பால்தான் சத்தமாக பாடல் கேட்கும் ஒரு வீட்டின் வாசலில் அரை மணி நேரம் எல்லாம் நின்று ஆறு ஏழு பாடல்களை காதுகளுக்கு வழங்கி திரும்பி இருக்கிறோம். அழைக்காத விருந்தாளிகளாக டிவி ஓடும் வீடுகளில் உள்ளே நுழைந்து வரிசையாக அமர்ந்து கொள்வோம். எங்களை வைத்துக் கொள்வது அவர்களுக்கு எத்தனை சிரமம் என்று பின்னால் புரிந்தது. வரக்கூடாது என்று சொல்லுவதற்கு தயங்கும் ஒரு சில வீடுகளில் எப்போதும் எங்கள் கூட்டம் இருந்தது.

அந்த காலகட்டத்தில் தான் இந்தியா உலகக் கோப்பையை வென்றது. அடுத்த உலகக் கோப்பை 1987 ஆம் வருடம் இந்தியாவைச் சேர்ந்த ரிலையன்ஸ் மெயின் ஸ்பான்சர் ஆக இருந்து நடத்துவதாக செய்தி வந்தது ரிலையன்ஸ் என்ற பெயர் பெரிதும் தெரிய வந்தது அப்போதுதான்

டிவியும் இருந்து படமும் பார்க்க வேண்டும் என்றால் அதற்கு வீடியோ கேசட் பிளேயர் என்கிற VCP வேண்டும் AKAI- FUNAI -SONY -BOSCH -PANASONIC போன்றவை  தேவதூதர்களின் பெயர்களைப் போல பிரசித்தமாக இருந்தவை. கொரியா என்றால் சுமார் சீனா என்றால் மோசம் ஜப்பான் என்றால் பிரமாதம் என மூன்று தாரக மந்திரங்கள் அப்போதே ஆழப் பதிக்கப்பட்டன. வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட வீடியோ பிளேயர் தான் அதிகம். அது ஒன்றுதான் வழி என்று சொல்லலாம் முதன்முதலாக இந்திய தயாரிப்பு வீடியோ கேசட் பிளேயர் எப்போது வந்தது என ஞாபகம் இல்லை. டிவி வந்த பிறகு தான் ஸ்டேஷன்கள் வந்தன அதைப்போலவே வீடியோ பிளேயர் வந்த பிறகுதான் கேசட்டுகள் கிடைக்க தொடங்கின.

எண்பதுகளில் வீடியோ கேசட் அரசியல் ரீதியாகவும் மிகுந்த செல்வாக்கு பெற்ற ஒரு வஸ்துவாக இருந்தது. பூமாலை என்று ஒரு வீடியோ கேசட் பத்திரிகை சுமங்கலி குடும்பத்தால் கொண்டுவரப்பட்டது. ஏக் நாத் ராஜ் டிவி போன்றவர்கள் இதேபோல வீடியோ பத்திரிகைகளை நடத்தினார்கள். அடுத்த காலத்தின் பிரதானம் வீடியோ தான் என்பது புரிந்து அப்போதே சுதாரித்துக் கொண்டவர்கள் பிற்காலத்தில் கோடிகளை குவித்தார்கள்

எங்கள் வீட்டில் 90 ஆவது வருடம் தொலைக்காட்சி வந்தது. முதன் முதலில் ஒரு பிளாக் அண்ட் ஒயிட் டிவி. அதை வாங்குவதற்குள் எக்கச்சக்கமான ஆலோசனைகள் தீர்மானங்கள் நிராகரிப்புகள் அம்மா கடைசி வரை தைலமாவில் தான் இருந்தார். பாட்டி தான் ஒரே பிடியாக “குழந்தைகள் வளர்ந்து விட்டார்கள். இனி அடுத்த வீட்டுக்கு போய் டிவி பார்ப்பது கூடாது. ஒருவேளை சாப்பாட்டை குறைத்தாவது சமாளிக்கலாம். நீ டிவி வாங்கு” என்றாள்.

டிவி வைப்பதற்கு ஒரு ஸ்டாண்ட் அதன் கீழ்த்தட்டில் என்ன வைப்பது என அக்காவுக்கும் எனக்கும் பெரிய சண்டை வந்தது டிவிக்கான ஸ்டேபிலைசர் ரேடியோ டிவியின் ரிமோட் இவையெல்லாம் டிவிக்கு கீழ் தட்டில் அதற்கு கீழ் தட்டில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கம்பிகளால் ஆன கீழ்த்தட்டில் விகடன் குமுதம் நடப்பு வாரத்துக்கான பிரதிகளை மாத்திரம் வைத்துக்கொள்வது என முடிவாயிற்று. அது ஒரு சாலிடேர் டிவி. என்னை பொருத்த வரை வர்ணஜாலங்களில்
பொங்கிப் பெருகும் ஆயிரம் வண்ணங்களைக் காட்டிலும் வாழ்வின் முதலும் கடைசியுமான வண்ணங்களாகவே கருப்பு வெள்ளை இரண்டையும் கருத முடிகிறது. மற்ற நிறங்களை நீக்கி விட்டு பார்த்தால் ஓடுகிற படம் அத்தனை பாந்தமாக இருக்கும் என இப்போது தோன்றுகிறது வண்ண படங்களை கூட கருப்பு வெள்ளையில் பார்க்கும்போது ஒரு விதமான காண் அமைதியுடன்  அவற்றைப் பார்த்ததாகவே இப்போது தோன்றுகிறது

தொலைக்காட்சி குடும்பத்தில் ஒரு புதிய உறுப்பினரை போலவே, ஒரு பெயரற்ற தம்பி போல அல்லது எதிர்த்துப் பேசாத ஒரு தங்கை போல எங்களோடு வந்து சேர்ந்து கொண்டது. பார்க்காத நேரங்களில் அதை மூடி வைப்பதற்கு ஒரு கவர் ஒன்று டிவி வாங்கிக் கொடுத்த மெக்கானிக் கணேசன் பரிந்துரையின் பேரில் பெரிய மனது பண்ணி அதையும் வாங்கினாள் அம்மா. பெரும்பாலும் நாங்கள் வீட்டில் இருக்கும்போது அதை மூடிய ஞாபகமே இல்லை. தெரிகிறதோ இல்லையோ எதையாவது தேடிக் கொண்டிருப்பார் அப்பா ஆயிரம் கோடி மணற் புள்ளிகளுக்கு நடுவில் ஏதோ படம் தெரிகிறார் போலவே நம்புவார். அந்த வட்டக் குமிழ் பொத்தானை திருகுவதன் மூலமாக எங்கோ இருக்கும் தொலைக்காட்சி ஸ்டேஷன் ஒன்றை இங்கே கொண்டு வந்து விட முடியும் என்று போராடி தோற்பார்.

முதலில் இந்தி தான் ஒலித்தது. செய்திகள் பாடல்கள் படங்கள் நாடகங்கள் விளம்பரங்கள் என எல்லாம் இந்தி மயம் மெல்ல மெல்ல ஹிந்தி படைப்புகள் தமிழில் டப்பிங் செய்யப்பட்ட ஒரு காலம் வந்தது. பிறகு தமிழின் ஆட்சி தொடங்கியது.

டிவியில் வரக்கூடிய விளம்பரங்களை மீண்டும் மீண்டும் பார்த்து மனத்துக்குள் வேற எதை விடவும் சிறு பிராய ஞாபகங்களின் பின்னணி இசை கோர்வைகளாகவே அவற்றை இன்றளவும் வைத்துக் கொண்டிருப்பவர் பலர். வீக்கோ வஜிரதந்தி பர்பஸைக்கு ஒரு விளம்பரம் வரும் அதில் வரக்கூடிய ஒரு வாசகம் “எட்டி எட்டி பறந்துகிட்டு எத்தனை நெருக்கம்?” என்பது. விஷயம் இதுதான் புதிய தம்பதியர் பற்களின் துர்நாற்றம் காரணமாக அன்பு செய்வதில் தடை ஏற்பட்டு வெள்ளை வெளேர் உடை அணிந்த டாக்டர் ஒருவர் தோன்றி வீக்கோ வஜிர் தந்தி பற்பசை சிபாரிசு செய்வார். அதை வாங்கி பிரயோகித்தவுடன் தம்பதியரின் அன்பிடை தடை யாவும் அற்றுப்போய் ஈருடல் ஓருயிராக குலாவுவார்கள். அப்போதுதான் அந்த வாசகம் வரும் “எட்டி எட்டி பறந்துகிட்டு எத்தனை நெருக்கம்?”.

எங்கள் சினேகிதத்தில் யாராவது யாருடனாவது பேசாமல் இருந்து ஒரு நெடிய காலத்துக்கு பிறகு மீண்டும் பேச ஆரம்பிப்பது சகஜம். இதில் பல படிநிலைகள் இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும். சண்முகமும் ரமேஷும் பேசிக்கொள்ள மாட்டார்கள் என்பது முதலில் தெரியவரும். பிறகு அது உறுதி செய்யப்படும். அந்த இருவரும் கிரிக்கெட்டில் ஒரே அணியில் விளையாடுவதை தவிர்ப்பதன் மூலமாக அந்த சண்டை மிகச் சமாதானமாக பேணி பாதுகாப்பதற்கு உறுதி செய்யப்படும் எங்காவது ஒன்றாக கிளம்பி செல்வதாக இருந்தாலும் ஒத்த செயலை செய்வதாக இருந்தாலும் அந்த இருவருக்கும் இடையில் இருக்கக்கூடிய பிணக்கை பேணி தருவது மற்ற நண்பர்களின் கடமை. “அவங்க ரெண்டு பேரும் பேச மாட்டாங்கள்ள? நீயேன் தொந்தரவு செய்கிற என்று மற்றவர்களை தான் கடிவார்களே ஒழிய ‘பேசாமல் இருக்கிறது தப்பு பேசு’ என்று சொல்லவே மாட்டார்கள்.

ரமேஷுக்கும் சண்முகத்துக்கும் சண்டை, சோ வாட்?
இருந்துவிட்டு போகட்டுமே
என்று அதை மிக இயல்பாக எடுத்துக் கொண்ட மற்றவர்களாக நாங்கள் இருந்தோம். இருவரில் ஒருவர் வரும்போது எல்லோரும் சகஜமாக பேசிக் கொண்டிருக்கும் காட்சியில் அந்த ஒருவர் சட்டு என்று மௌனிப்பது எங்கோ பார்ப்பது முடிந்தால் கிளம்பி நகர்வது இது எல்லாமே ஏதோ தோல்வியுற்ற காதலர்கள் அதன் பிறகு ஒருவரை ஒருவர் ஏறிட்டுப் பார்க்க திகைப்பது போலவே இருக்கும்.

ஒரு முக்கியமான கட்டம் வரும். யாராவது ஒரு நலம் விரும்பி திடீரென்று ஒரு சுய பரிதாபத்தில் “அவங்க ரெண்டு பேர் தான் சண்டை போட்டுக்கிட்டாலும் நாம சேர்த்து வைக்க வேணாமா?” என்று கிளம்பி “நீயும் அவனும் இனி பேசியே ஆகனும்” என்று உயிரை வாங்கி வேண்டா வெறுப்பாக இரண்டு பேரும் பேசுவதாக பாவனா காட்டிவிட்டு மீண்டும் அடுத்த தினம் சந்திக்கும்போது பேசுவதா வேண்டாமா என்று புலம்புவது ஒரு அழகான TWIST.

அதைவிட முக்கியம் இரண்டு பேரில் யார் வீட்டிலாவது ஏதாவது விசேஷம் வரும் அப்போது நண்பர்களை உபசரிப்பதில் நிச்சயமாகவே ஒரு குழப்பம் ஏற்படும் நான் வரல டா என்று அந்த சண்டை பங்காளி கழண்டு கொள்ள முயற்சிப்பார். மொத்த கும்பலும் சேர்ந்து மௌன ராகத்தில் கிளைமாக்ஸ் காட்சி போல் மோகனையும் ரேவதியும் சேர்த்து வைக்க துடிக்கும் மணிரத்தினம் இளையராஜா பி சி ஸ்ரீராம் ரோல்களில் எல்லாம் வேலை பார்த்து ஒரு வழியாக விட்டுருங்கடா நாங்க பேசி தொலைகிறோம் என்று ஆக்குவோம்.

இதெல்லாம் இல்லாவிட்டால் பெரிய பண்டிகைகள் தீபாவளி பொங்கல் போல அதற்கு வாழ்த்து சொல்வது போல் அந்த இருவரில் ஒருவர் மற்றவரிடம் ஹேப்பி பொங்கல் ஹேப்பி தீபாவளி என்று சொல்ல சட்டு என்று அந்த மாற்றத்தை எப்படி ஏற்பது எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியாமல் திணறி திகைத்து தானும் பதிலுக்கு சொல்லி மீண்டும் சமாதான சமநதியில் குதித்து குளிப்பது ஒரு அழகிய திருப்பம்.

இது எதுவுமே இல்லாவிட்டாலும் சண்டை போட்ட இருவரில் ஒருவரது பிறந்தநாள். காதலில் எப்படி காதல் சாமியார் பிறந்தநாள் முக்கியத்துவம் வாய்ந்ததோ அப்படி நட்பில் நண்பர்களின் பிறந்தநாளே சிறந்தது. இன்னிக்கு ரமேஷுக்கு பிறந்தநாள் நீ விஷ் பண்ணிடு என்று அந்த பர்டிகுலர் சண்முகத்தை தூக்கிக் கொண்டு வந்து மந்தையில் நிறுத்தி சொல்லு விஷ் பண்ணு ஹாப்பி பர்த்டே சொல்லு என்று பல குரல்களில் மேஜர் தேங்காய் ஒரு விரல் வெண்ணிறாடை நிழல்கள் என பல குரல்களில் சண்முகத்தை மிரட்டி இரண்டு பேரும் பழம் விடுவதை உறுதி செய்து கொண்டு பிறந்தநாளை சிறந்த நாளாக மாற்றி மகிழ்வோம்

இதுவரை நிகழ்ந்ததற்கு பிறகு ஒரு நாள் வரும்.

தம்பி பாலா அடிக்கடி கேட்பது “கிளைமாக்ஸ் அடுத்த சீன் இருந்தால் அத்தன அடி வாங்கின நம்பியாரும் அடிச்ச எம்ஜிஆர் மீட் பண்ணிக்கும்போது சங்கடமா இருக்காது?” என்கிற அறிவியல் கேள்வியை அவன் தான் கேட்பான். எனக்கும் அது குறித்து யோசிக்கும் போது திகிலாக தான் இருந்தது அதைப் போலத்தான் டூ விட்டுவிட்டு ஒரு பெரிய காலம் எதிர் எதிர் திசைகளில் மௌன அரசியல் செய்து விட்டு திடீரென்று மறுபடி பழம் விட்டு விட்ட பிறகு அவர்கள் இருவரும் கேசுவலாக இயல்பாக மறுபடியும் பேசுவதும் சிரிப்பதும் ஒன்றாக வந்து திரும்புவதுமாக இருந்தால் மற்றவர்கள் அதை விட மாட்டார்கள்.

இங்கே ஒரு முக்கிய சம்பவம் நடக்கும். மற்ற நாங்கள் பேசி வைத்துக் கொள்வோம் .ஒரே குரலில் ஒன்றாக ஒன்று… இரண்டு…. மூன்று… என்று சொல்லிவிட்டு அவர்கள் இருவரும் பேசி சிரித்து வரும்போது எட்டி எட்டி பறந்துகிட்டு எத்தனை நெருக்கம்? வீக்கோ வஜ்ரதந்தி என்று கைதட்டுவோம். ரமேஷும் சண்முகமும் இடுப்பில் கை வைத்துக் கொண்டு போலியாக முறைப்பார்கள்.

மீண்டும் பேசுவதாக இருந்தால் எந்த சண்டையும் சிறப்பானது தான்

அப்போதெல்லாம் பான்பராக் விளம்பரங்கள் டிவியில் பிரசித்தம். ஒரு விசேஷ வீட்டுக்கு முற்காலத்தில் காதல் நாயகனாக இருந்து எண்பதுகளில் பருமனாக மாறிய ஷம்மிகபூர் வருவார். அவரை வரவேற்றுப் பேசிக் கொண்டிருக்கும் அசோக் குமாரிடம் எதையோ கேட்பார் முகம் மாறும் அசோக் குமார் பிறகு புரிந்துகொண்டு பாக்கு டப்பாவை எடுத்து நீட்டுவார். at last they smile.

இதே போல் இன்னொரு விளம்பரம். கையில் எதையோ வைத்துக் கொண்டு கும்பலாக பேசி சிரித்துக்கொண்டிருக்கும் பசங்கள் “மாஸ்டர் வந்துவிட்டார்” என்று ஓடி ஒளிவார்கள் கட்டிலுக்கு மேலும் கீழும் டார்மெட்ரி அமைப்பில் படுத்துக் கொண்டிருக்கும்போது ஒவ்வொரு பையனும் எனக்கு எனக்கு என கேட்க பாட்டிலை ஆள் மாற்றி உருட்டி விடும் போது ஒரு பையன் மாட்டிக் கொள்வான் மேலிருந்து கீழாக முறுக்கு மீசையுடன் முறைத்து பார்க்கும் வார்டனிடம் ஹாஜிமுலா சார் என்று டப்பாவை நீட்டுவான் மாட்டிக் கொண்ட சிறுவன். என் பள்ளி காலம் முழுக்க பல ஆழக்கனவுகளில் அந்த வார்டன் தோன்றுவதை பார்த்திருக்கிறேன்

ஜெயிலுக்கு போய்விட்டு வரும் குடும்பத் தலைவனை வரவேற்க காத்திருக்கும் மனைவி குழந்தைகள் ஓட்டமாக ஓடி அவனைத் தாண்டி அவன் கையில் எடுத்துச் சென்று விட்ட புஷ் டேப் ரெக்கார்டரை எடுத்து அணைத்து கண் மலங்குவது ஒரு விளம்பரம்.வாஷிங் பவுடர் நிர்மா விளம்பரத்தின் செல்வாக்கு அளப்பரியது .அந்த விளம்பரத்தில் வரும் மாடல் பெண் குழந்தை இறந்துவிட்டது என்று ஒரு கதை நெடுநாட்கள் உலா வந்தது.

டிமெக்ரான் மற்றும் குமாண்ட் என இரண்டு பூச்சிக்கொல்லி மருந்துகள் இரண்டையும் சேர்த்து தெளித்தால் விளைச்சல் அமோகம் என்று ஒரு விளம்பரம் வரும் இரண்டு பேர் சேர்ந்தார் போல் சைக்கிளில் சுற்றினால் டிமெக்ரான் மற்றும் குமாண்ட் சேர்ந்து உபயோகிச்சு பாருங்க விளைச்சல் அமோகம் பாருங்க என்று அந்த விளம்பர பின்புறம் போலவே நக்கல் செய்வோம்.

பின் நாட்களில் மூட்ஸ் என்ற பேரிலான ஆணுறை விளம்பரம் ஒன்று அப்போது எங்களைப் போன்ற பதின்மர் மத்தியில் பேசுபொருளாயிற்று. ஒருவன் மருந்துக் கடையில் விற்பனையாளன் முன்பு நின்று கொண்டு தனக்குத் தேவைப்படும் பொருளைப் பற்றிப் பேசிப் புரிய வைக்க முயன்றுகொண்டிருப்பான். CAN I HAVE SOME….PACK OF..என்றெல்லாம் முழக்குவான்.அவன் பேச்சிலிருந்து தேவைப்படும் பண்டம் என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் கடைக்காரர் திகைப்பார். இவனும் எப்படிச் சொல்வதெனத் தெரியாமல் முழிப்பான். அப்போது அங்கே வரும் புதிய வாடிக்கையாளன் நேரே வந்து விற்பனையாளரிடம் மூட்ஸ் ப்ளீஸ் என்று இரண்டே சொற்களில் தனக்குத் தேவையானதைப் பெற்றுச் செல்வான். இந்த விளம்பரத்தை சிலாகித்து நாராயணன் அண்ணன் அவருடைய ஆப்த நண்பரான சூசையிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது ஒளிந்து பிடித்து விளையாட்டின் இருள்மறைவுக் கணமொன்றில் கதவுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த நானும் அந்த உரையாடலை முற்றிலுமாகக் கேட்க நேர்ந்தது. ஒரே தினத்தில் சிறுவனது உலகத்திலிருந்து வாழ்க்கை எனும் வீடியோ விளையாட்டில் அடுத்த லெவலுக்கு உயர்த்தி வரப்பட்டாற் போலிருந்தது. எல்லாம் தெரிந்த ஏகாம்பரனாகத் திரும்பினேன்.

சண்டேன்னா ரெண்டு என்று இரண்டே சொற்களுடன் தினமலர் ஞாயிற்றுக்கிழமை இரண்டு பேப்பர்களுக்குப் பெரிதாக விளம்பரம் செய்தது. புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா என்ற பிரச்சாரம் சென்ற நூற்றாண்டின் செல்வாக்கு மிகுந்த விளம்பரவாசகங்களில் ஒன்று; புள்ளிராஜா என்று படமெல்லாம் வந்தது தனிக்கதை.

நெடுங்காலத்துக்கப்பால் “”வண்ணப் பட்டு மிளிர“”” என்று தொடங்கும் கார்த்திக் ராஜா இசையமைப்பில் மதுரை ராஜ்மகால் விளம்பரப்படமும் அதை எடுத்திருந்த விதமும் அதன் காட்சிகளும் பாடிய குரல்களும் இசையும் எனப் பல அம்சங்களும் மனத்தைக் கிளர்த்தின. அந்தப் பாடலின் ஆடலில் வந்த மாடலிடத்தில் என் மனத்தை நான் பறிகொடுத்தாற் போலவே முனீஸ், ரகு, சோனி மூவருமே செமையா இருக்கால்ல என்று ஏக்கம் கசியச் சொன்னபோது லேசாய்ப் பொஸஸிவ் ஆனான் ரஞ்சித். பின் நாட்களில் அந்த மாடல் தான் தமன்னா என்று பெயர் பெற்ற நடிகையாக உருமாறினார். ஒரு கட்டத்தில் ரஞ்சித் மட்டும் தான் அந்தப் பாடலை விடாமல் பற்றிக் கொண்டிருந்தான். எந்த அளவுக்கு என்றால் ரேடியோ சானல்களில் உங்களுக்கு விருப்பமான பாடலை சொல்லுங்க எனக் கேட்கும் போது கூட வண்ணப் பட்டு மிளிர என்று கேட்டு அதெல்லாம் போடறதுக்கில்லீங்க என்று மறுக்கப் பட்டு விரக்தி கொள்ளும் அளவுக்கு அந்தப் பாடலின் நாயகமாய்த் திகழ்ந்தான். ரொம்ப நாட்களுக்கு கரகாட்டக் காரனில் கவுண்டமணியிடம் செந்தில் சொல்லும் அதே குரலில் ரஞ்சித்தைப் பார்த்து “ஒரு விளம்பரம்..!” என்று சொல்லிக் கிண்டல் செய்தோம்

சமீபத்தில் கூட முதிய தம்பதியினருக்கு அவர்கள் விரும்பும் பதத்தில் தேநீர் தந்து பெர்ஃபெக்ட் என்று புகழப்படும் விளம்பரம் மற்றவற்றிலிருந்து தனித்து மனத்துட் கலந்தது. விளம்பரம் இல்லாத வாழ்க்கையைக் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு இரண்டறக் கலந்து விட்ட வாழ்வின் ஃப்ளேவர் என்றே அவற்றைச் சொல்ல முடிகிறது.

பழைய புத்தகங்களைத் தேடுவதனூடாக சமீபத்தில் கிடைத்த இரண்டு பைண்டிங் புஸ்தகங்கள் வியப்பளித்தன. எண்பதுகளில் வெளியான கல்கி மற்றும் மங்கையர் மலர் சஞ்சிகைகளில் இருந்து விளம்பரங்களை மட்டும் தொகுத்து இரண்டு புஸ்தகங்கள். எந்த விளம்பரமும் இரட்டிக்காமல் கிட்டத் தட்ட 900 பக்கங்களைக் கொண்ட கலெக்ஷன். யார் சேர்த்த திரவியம் என்று தெரியவில்லை. “என்னை வந்து சேர்ந்தாயடி செல்வமே” என்று ஆரத் தழுவிக் கன்னங்களில் முத்தமிட்டு மகிழ்ந்தேன்.

அந்தப் புத்தகக் கன்னங்களில் தான்.