Post Views:
219
பழுப்பு டைரி
இதை விட்டால் இன்னோர் சமயம் வாய்க்காது. வேணு பரபரத்தான். அவன்வீட்டில் எல்லோரும் சொந்தக்காரர் திருமணம் என்று பழயனூர் சென்றிருந்தார்கள். அவனுக்கு ஆபீசில் முக்கியமானதொரு மீட்டிங்க் இருந்தபடியால் செல்ல முடியவில்லை. அது முற்றிலும் உண்மை அல்ல. அவன் நினைத்திருந்தால் சற்றுத் தாமதமாகப் பழையனூர் சென்றுஇருக்க முடியும். அதை நிராகரித்து விட்டுத் தான் பழைய டைரி ஒன்றை அவன் தேடிக் கொண்டிருந்தான். அந்தடைரியை அவன் பொருட்களோடு சேர்த்து இருத்தியிர வில்லை என்பது அவனுக்கே தெரிந்தது. முதலில் பரணில் இருக்கும் மரப்பெட்டியைத் திறந்து பார்க்க வேண்டும். அதில் தான் அவனுடைய சிலபல ரகசியங்கள் இருந்தன. முக்கியமாக அந்தப் பழுப்பு டைரி. அதன் உள்ளே பக்கங்களில் எந்த சுவாரசியமும் இல்லை என்றாலும் அதன் ரெக்சீன் கவருக்குப் பின்னால் கவனமாக கோந்து போட்டு ஒட்டியிருந்த சின்னூண்டு கடிதம் ஒன்றை எடுத்துப் பார்த்து விட வேண்டும். தன் காலத்துக்கு அப்பால் யாராவது அதைத் தேடாமல் கிடைத்துப் படித்தால் படிக்கட்டும். அதுவரை வேறார் கைகளுக்கும் கண்களுக்கும் அந்தக்கடிதம் சிக்கி விடக் கூடாது என்று தான் அப்படி ஒட்டியிருந்தான்.
அந்தக் கடிதம் அவன் பாகீரதிக்கு ஆசைகளைக் கொட்டி எழுதியது. அப்படி ஒன்றும் விஷரகசியம் ஏதும் இல்லை. எல்லாம் வழக்கம் போலத் தான். நீ என் நிலா நீ இல்லாவிட்டால் இருண்டு போகும் என் வாழ்வெனும் வானம் ஃப்ளா ஃப்ளா ஃப்ளா தான். ஆனாலும் அதை அவன் ரத்தத்தால் எழுதியிருந்தான். தன் ஒவ்வொரு விரலாய் சட்டைக்குப் போடும் பின் ஒன்றின் கூர் நுனியால் குத்தி அதிலிருந்து துளிர்க்கும் ரத்தப் பொட்டை ஆவலோடு ஒரு கணம்பார்த்திருந்து விட்டு அதைத் தொட்டுத் தொட்டு மனசில் ஏற்கனவே பலமுறை ஒத்திகை செய்திருந்த காதலின் வாக்கியங்களை மீண்டும் ஒரு தடவை உதடுகளுக்கு வருடக் கொடுத்தபடி ஒவ்வொரு சொல்லாய் அதன் எழுத்துக்களாய்த் தன் காதலைக் கிறுக்கலான எழுத்துக்களில் நிரப்பி நிரப்பி எழுதினான். மொத்தக் கடிதத்துக்கும் செலவழிந்த ரத்தத்தின் அளவை விட நேரமும் ரத்தத்தை அவன் கையாண்ட வகையும் அவனுக்கே பைத்தியம் மிகுந்த கிறக்கத்தைத் தந்திருந்தது. அந்தக் கடிதத்தை அதாவது அந்தக் காகிதத்தை அவனால் நாலாக மடிக்கக் கூட மனம் வரவில்லை. கூசும் வெளிச்சத்தோடு தென்பட்ட மாலை வானத்தை ஒருதடவை ஓங்கிப் பார்த்தவனுக்கு அதன் மேகப்பரப்பெங்கும் தன் குருதி மொத்தத்தையும் கொண்டு யாராலும் எழுதிவிட முடியாத மாபெரும் காதல் கடிதத்தை எழுதிவிட்டால் என்ன என்று தோன்றியது. பாகீரதி. இப்போது இந்தக் கணம் தான் எத்தனை காதலிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பது குறித்த எந்தவொரு சிந்தையுமின்றி என்ன செய்துகொண்டிருப்பாள். அவனுக்கு அந்தக் கணமே லாகிரியாய் வழிந்துகொண்டிருந்தது. ஒரு தலையாய்க் காதலிக்கிற தருணங்கள் தான் கடவுளைத் தாண்டுபவை என்று கவிதை செய்ய ஆசைப் பட்டான்.
அவன் தற்போது பஸ் ஸ்டாப்பில் நின்றுகொண்டிருந்தான். டைப் ரைட்டிங் வகுப்பு முடித்து இங்கே தான் கூடவே பழகும் லீலாவதியுடன் வந்து நிற்பாள் பாகீரதி. தினமும் இங்கிருந்துதான் பஸ் ஏறி வீடு திரும்புவார்கள். இன்றைக்கு எவ்வண்ணமாவது இந்தக் கடிதத்தை லீலாவதி மூலமாக அவளிடம் தந்தே ஆகவேண்டும். “நீ யில்லாத வாழ்வு நரகத்தைத் திறந்து தரும் மரணமாகவே மாறிவிடும்” என்று தான் கடிதத்தை முடித்திருந்தான். அவளுக்குப் புரியும். அந்தக் கண்களும் அதன் உள்ளே பொங்குகிற காதலும் அவனுக்குத் தான்…
சட்டென்று ஒரு கணம் தள்ளாடினான். மரப்பெட்டியைச் சுமந்துகொண்டு கீழே இறங்குவதற்குள் போதும் என்றானது. சன்னலின் வழியே காற்றும் தூசியுமாய்க் கூரென்று வழிந்தன. இரண்டொரு முறை தும்மல் வந்தது. தான் நின்ற இரும்புச் சேரின் மீதே அந்தப் பெட்டியை வைத்தான். நடுங்கும் கரங்களால் அதைத் திறந்த வேணுவுக்குப் பழைய காலத்தின் தீராத ஆட்டத்தை விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடர்வது போலத் தோன்றியது. அது தான் நிஜமற்ற நிஜம். அந்தப் பழுப்பு டைரியை எடுத்து ரெக்ஸீன் கவரைப் பிரிக்கிற நேரம் முதுகின் பின்னால் எதோ ஆரவாரம் கேட்டது.
“தலைவர் இறந்து விட்டாராம். ஊரெல்லாம் ஒரே ரகளை. பஸ் ரயில் எதும் கிடையாதாம். கல்யாணத்துக்குப் போகவில்லை. கேன்ஸல்” என்றபடியே மலரச்சிரித்தவள் “ஆமாம் ஆபீஸ் மீட்டிங் என்று சொன்னாய். இப்போது இங்கே எதையோ உருட்டிக் கொண்டிருக்கிறாய்?” என்றவளிடம் சட்டுச்சட்டென்று அந்த டைரியை அதன் பழைய இருப்புக்குத் திருப்பி பெட்டியை மூடி தாழிட்டுவிட்டு ஒன்றுமில்லை ஒரு பழைய சர்ட்டிஃபிகேட்டைக் காணவில்லை.எங்கெல்லமோ தேடியாயிற்று. இங்கே இருக்குமோ என்றொரு எண்ணம் அதான். என்றவன் மீண்டும் சேரில் ஏறி பெட்டியை பரணில் வைத்து விட்டு இறங்கினான்.
என்ன நினைக்கிறாள் என்பதே தெரியவில்லை. இன்று நேற்றா எப்போதும் இப்படித் தான். கலியாணம் ஆனதிலிருந்து இதே தான். வாயைத் திறந்து சொன்னாலொழிய என்ன நினைக்கிறாள் என்பது யூகிக்கவே முடியாது. முகமே திரை என்றானவள். வேணுவுக்குத் தன் மீதே இரக்கமாய் வந்தது.
முன் அறைக்கு வந்தான். சோட்டுவும் சோனுவும் டீவீ ரிமோட்டுக்காக சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். இவனுக்கு சற்று அமைதி தேவை. தன் ரூமுக்குப் போனவன் சட்டையைக் கழற்றி கோட் ஸ்டாண்டில் மாட்டினான். கட்டிலில் சரிந்து விழுந்தான்.
அழப்போகிறாயா வேணு…அதட்டிக் கொண்டான். பாகீரதீ என்று ஒரு தடவை உதடுகளுக்கே கேளாமல் முணுமுணுத்துக் கொண்டான்.
அப்படியே அமர்ந்திருந்தவனுக்குத் தலை வலிக்கிறாற் போலத் தோன்றியது.
சமையலறையில் எதையோ உருட்டுகிற சப்தம் கேட்டது.
“ஒரு காஃபி தரியா….தலைவலிக்கிறாப்ல இருக்கு” என்று குரல் தந்தான்.
“தரேன்ப்பா…”என்று சமையலறையிலிருந்து பதில் தந்தாள் லீலாவதி.