1 விஷயத்தை இங்கே எழுது

       நேற்று வந்த காற்று
1 விஷயத்தை இங்கே எழுது


செயிண்ட் மேரீஸ் ஸ்கூலில் படிக்கக் கிடைத்த வாய்ப்பு பூர்வ ஜென்மப் புண்ணியம். அப்பாம்மா ரெண்டு பேருமே சேர்த்துப் புண்ணியம் செய்தாலொழிய அந்த ஸ்கூலில் சீட் கிடைக்காது. ஆயிரமாயிரம் பேருக்குக் கிடைக்காத வாய்ப்பு என் ஒருவனுக்குக் கிடைத்திருக்கிறது. இதை மாத்திரம் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டால் நான் வருங்காலத்தில் தளபதி படத்து அரவிந்தசாமியைப் போல் தொளதொள பைஜாமா மற்றும் ஜிப்பா ஆகியவை அணிந்து கொண்டு மதுரையின் இளம் கலெட்டராகும் வாய்ப்புக் கிடைக்கும். மெக்கானிக் செல்வராசு அண்ணனின் பய்யன் கோமதிநாயகம் இதே பள்ளியில் படித்துப் (பிறகு வெவ்வேறு காலேஜ்களில் படித்துப்) பெரிய வேலையில் சிங்கப்பூரில் இருக்கான். அப்படியாச்சும் நானும் ஆகவும் தேவையான அடிவார அடித்தளங்களை இந்தப் பள்ளிக்கூடத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்றெல்லாம் என் அப்பரின் இளவலான சித்தப்பர் என் வலது காதில் தொடர்ச்சியாக ஓதியவாறே என்னை செயிண்ட் மேரீஸ் ஸ்கூலில் சேர்த்து விட்டார். அதிசயப் பிறவி படத்தில் தன் சொந்த சித்தப்பா செந்தாமரையிடம் பிரம்பால் அடி வாங்கி வளர்வார் பாலு அலையஸ் ரஜினி. பிறகு அதே உடம்பில் புகுந்து கொண்ட காளை ரஜினி அதே சித்தப்பர் செந்தாமரையைப் பிரம்பால் அடித்துக் கணக்கை டேலி செய்வார். சினிமா சித்தப்பரை அடிப்பது எளிது. சொந்தபந்தத்தில் அது இயலுகிறதில்லை. என் சித்தப்பர் என்னை சேர்த்து விட்ட ஸ்கூலில் ஆறாப்பு முடிப்பதற்குள் வாத்தியார்கள் என்னை அடிச்ச அடிகள் நூறாப்பு படித்தாலும் ஆறாது என்பதை அவர் பாவம் அறிந்திருக்கவில்லை.
பாடம் நடத்துகையில் ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்தால் குற்றம் என்பது யாருக்குத் தெரியும். அப்படிப் பார்த்துக் கொண்டே இருக்கும் போது புள்ளினங்கள் பாடுவதும் தூரத்தே மாடு அதன் வகைகளான பசு எருமை காளை இத்யாதிகள் சுதந்திரமாய் சப்தமிட்டபடியே அலைவதும் காணக் கோடியின்பம். இன்னும் நாலேழு நாய்களும் கோழிகளும் கூட என் சிறைவாசத்தை எள்ளிக் கொண்டே அந்தப் பிரதேசத்தைக் கடப்பதைக் கண்ணுறும் போது மனசு எனும் பண்டம் எத்தனை வலிக்கும்..?
இதைப் படி…
அதை எழுது..
இதுக்கு என்ன விடை?
அதுக்கு என்ன பதில்?
என்றெல்லாம் கேட்டுக் கேட்டுத் துன்புறுத்திக் கொண்டே இருக்கும் போது ஜன்னல் வழியாக வருடிக் கொடுக்கும் காற்று இருக்கிறதே காற்று….அது காலை வேளையில் டி.ராஜேந்தர் போல் அளவாகத் துன்புறுத்தும் என்றால் அதுவே மதிய சாப்பாட்டுக்கப்பால் வட்டத்துக்குள் டிக் மார்க் போட்டு வெறிஃபைட் என்ற முத்திரையுடனான சிம்பு என்கிற சிலம்பரசன் போல் அளவுகடந்து துன்பம் தரும். நான் என்ன செய்வேன். சின்னஞ்சிறுவன். காற்று வந்தால் தூங்குவதைத் தவிர வேறு மார்க்கமில்லை. வகுப்புக்கு ஒரே வாசல் என்பது யார் குற்றம்..? எழுந்து ஓடவும் முடியாதன்றோ?
இந்த வாத்திகளிலேயே தமிழ் வாத்திக்குத் தான் கோபம் குறைவாக வரும். அதற்குக் காரணத்தை பட்டாசி எளிதாக விளக்குவான். கணக்கோ சயின்சோ சிலபஸூக்கு வெளில நமக்கெதும் தெரியாதுல்ல…அதுவே தமிழ்ல நமக்கும் கொஞ்சம் தெரியும்ன்ற ஆறுதல் தான் என்பான்.
அப்படியாப் பட்ட தமிழய்யாவையே நான் கடுங்கோபத்துக்கு ஆளாக்கிவிட்டது என் மதியத் தூக்கத்தினால் என்பது தான் கதையின் ட்விஸ்டு.
காளை ரஜினிகாந்தின் நேரடி ஆசி பெற்ற ஒருவனைத் தாக்குகிறோம் என்பது கிஞ்சித்தும் தெரியாத அந்த வாத்தி கோழை போல் என் முதுகில் அறைந்தார். அமர்ந்தசயனனைத் துன்புறுத்தியதற்கு மேலுலக அமாவாசையன்று எண்ணெய்கொப்பரையில் ஏழு வித ஃப்ளேவர்களோடு அவரைப் பொறிப்பார்கள் என்பதை அறியாத கிழபாலகர் அவர். பாவம் செய்து விட்டார். நான் ஓவென்று அழுதவண்ணம் எழுந்து “பாட்டி…காப்பி” என்று கதறினேன். என் உறக்கங்களைப் படுக்கைக் காப்பி தந்து எழுப்புகிற வல்லமை அவளிடம் தான் இருந்தது என்பதாலும் அப்படித் தான் பலதடவை பாதித் தூக்கங்களில் நான் எழுப்பிவிடப் பட்டிருக்கிறேன் என்கிற வழக்கபழக்கத்தின் அடிப்படையிலும் அப்படிச் செய்தேன். பட் காலம் கடந்து விட்டது. பள்ளிக்கூடத்தில் காப்பி அடிக்க முடியும்,பட் பாட்டி கொடுக்கும் காப்பி குடிக்க முடியாது என்ற நிஜம் சுகர் பேசண்டின் நாவில் இறங்கும் டிகாசனாய்க் கசந்து வழிந்தது.
என்னை பெஞ்சு மேல் நிறுத்திய தமிழய்யாவ் மேல் ரெண்டு பெஞ்சுகளையாவது நிறுத்தாவிட்டால் ஆட்சிக்கு வந்து என்ன பயன் அதிகாரம் கிடைத்துத் தான் என்ன பயன். மனோகரா படத்தின் டைட்டில் ரோலே மனோகரா தான் என அறியாமல் இவாஜியைச் சங்கிலியால் பிணைத்து அரசவைக்கு அழைத்து வந்து கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொடுமை செய்யும் கொஸ்டீன் ஹவர் போலவே என்னைப் பற்றி இழுத்துக் கொண்டு போய் “பெரியவாத்தியார் அலையஸ் ஃபாதர்” முன்பாக நிறுத்தினார்கள். அவர் வழக்கு என்ன என்று முதலில் வாத்தியிடம் விசாரித்தார். அந்த ஸ்கூலில் நான் சேர்ந்தே பதினேழு நாட்கள் தான் ஆகி இருந்தன. அதில் பள்ளியோடம் நடந்ததே பத்து நாட்கள் தான். ஆனால் அந்த வாத்தி என் மீது சுமத்துகிற சாட்டைப் பாருங்கள்.
“இவன் பொழுதண்ணிக்கும் க்ளாஸ்ல உறங்கிட்டே இருக்கான் ஃபாதர். இன்னிக்கு கொறட்டை வேற விட்டான்” என்றார்.
ஃபாதர் நல்லவர்.அவருக்கு ஒரே ஒரு குறைபாடு. இப்பைக்கெல்லாம் தூக்கம் வருவதே இல்லை. புரண்டு புரண்டு படுத்து எப்போது எனத் தெரியாமல் ஒருவழியான பிறகு தான் ஒருவழியாகத் தூக்கம் வருகிறது. டாக்டர் எழுதித் தந்த தூக்க மாத்திரையைப் பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டாம் என்று ஒவ்வாமையும் உண்டு. இத்தனைக்கப்பால் அவர் கண் முன் ஒருவன் மதிய க்ளாஸில் உறங்கினான் எனச்சொல்லப் பட்ட போது “ச்சே…டக்குன்னு உறங்கிட்டானோ” என்று பரிவோடு பார்த்தவர் சட்டென்று தன் நிலை உணர்ந்து பதவிக்குத் திரும்பி ” எடே…க்ளாஸ்ல உறக்கமா..?” என்று கடுமையானார்.எம்.என்.நம்பியார், எஸ்.ஏ.அசோகன் ஆர்.எஸ். மனோகர் இன்னபிறர் நடித்த கேவாகலர் படங்களில் முக்கிய சீன்களின் போது அவர்கள் முகத்தின் கீழே கொடூரத்தை உசத்திக் காட்ட லைட்டிங் எஃபெக்ட் தருவார்களே..அது போல் ஃபாதரின் முகம் சிவந்தது. தன் சைடிலிருந்து ஒரு மணிப்பிரம்பை எடுத்தார்.
வாத்தி குறிப்பை உணர்ந்து என்னைத் தனியனாக விட்டு விட்டுத் தன்னால் ஆன அளவு தூரம் சென்று நின்றுகொண்டார். சுளீர் என்றெல்லாம் சத்தம் வராது. சும்மா நாமாக எழுதிக் கொள்வது தான். புளிச்சுப் புளிச்சென்று மூன்று நாலு அடிகள். ஒவ்வொன்றும் சிலை மேல் உளிகளாய் பெற்றுக் கொண்டேன். வேறு வழி. அந்தப் பள்ளியோடத்தில் நான் பெற்றுக் கொண்ட அடிகள் விதவிதமானவை. கையால் காலால் கம்பால் கயிற்றால் என வகைதொகைப் படும். அவற்றில் ஃபாதரின் அடிகள் மிதவாதி ஒருவனின் கோபம் போல் வலித்தும் வலிக்காமலும் முடிந்து போகும். அதுவே ரெக்டர் மற்றும் சின்னஃபாதர் ஜோசப்ராஜ் இருவரின் அடிகளை மாத்திரம் தனியே தொகுத்து வைக்கலாம். புதன் கிழமை வாங்கிய அடிகள் ஞாயித்துக் கெழமையிலும் வலித்துத் தீராது.
அதற்கப்பால் மீண்டும் வகுப்பினுள் நுழைந்ததும் வாத்தி இட்ட கட்டளை கொடூரத்தின் உச்சம்.
“நாளைக்கு வரும்போது பெற்றோர்கிட்டேருந்து ஒரு லெட்டர் எழுதி வாங்கிட்டு வரணுமாம். ஃபாதர் சொன்னாங்க. இனிமே வகுப்பிலே தூங்கமாட்டேன்னு எழுதிட்டு வா. வெளங்குதா?” என்றார். என்னோடே வந்து எனக்கு அடி பெற்றுத் தந்துவிட்டு என்னோடே திரும்பவும் க்ளாஸூக்கு வந்து சேர்ந்த பில்கிரிம் பயணத்தின் நடுவே அவரிடம் எப்போது ஃபாதர் அப்படிச் சொல்லிப் பரவசமூட்டினார் என்பது தெரியவில்லை. கேட்டால் அதற்கும் அடி விழும். தேவையா..? இதை மட்டுமா கேட்க வேண்டிய எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றனவே..கேட்க முடியாமல் போகின்றனவே..”ஏன்யா வாத்தி. அதான் என்னைய அடிச்சு எழுப்பினீரே…பிறகு எதற்கு ஃபாதரிடம் கூட்டிப் போய் மேலும் சில அடிகள் அதும் பிரம்படிகளை வாங்கித் தந்தீர்? ஒரே பண்டத்துக்கு மாநில மத்திய அரசுகள் வரி விதிக்கிறாற் போல் இரட்டை அடிவிதிப்பு நியாயமா?” என்று யார் கேட்பது..? வாத்திக்கோ அந்த நிமிடமும் திருப்தி வந்தாற் போல் தோன்றவில்லை. ஒரு வண்டி பிடித்து என்னை அழைத்துக் கொண்டு போய் சீ.ஈ.ஓ அலுவலகம் சென்று அவர் கையாலும் நாலு அடிகள் வாங்கித் தந்தால் என்ன என யோசித்துக் கொண்டிருந்தார்.
அம்மாவிடம் இந்த விஷயத்தை சொல்ல முடியாது. சொன்னால் சீ.ஈ.ஓவாகத் தன்னைத் தானே ப்ரோமோட் செய்துகொண்டு என்னைத் துணியென்றெண்ணி வெளுப்பாள். டீச்சர் என்பதால் அகில உலக வாத்தி அசோசியேஷனின் அத்தனை உள்விதிகளையும் அப்படியே பின் பற்றுகிறவள். வாத்தியார்கள் தெய்வம் என்பதைத் தாண்டித் தமிழ் வாத்தியார் தமிழ் தெய்வம். கணக்கு வாத்தியார் கணக்குத் தெய்வம் என்றெல்லாம் நம்புகிறவள். அதனால் அம்மா இல்லாத சமயத்தில் அப்பாவிடம் விஷயத்தைப் பக்குவமாகத் தெரியப்படுத்தினேன். அவர் எனக்கு அந்தக் கடிதத்தை வரைந்து கொடுக்க சம்மதித்தார்.
நான் எழுதுவதாக அப்பர் எழுதித் தருவார். அதை என் கையால் நான் பிரதி செய்வேன். அந்தப் பிரதியில் அப்பர் தன் கையெழுத்தை இடுவார். அதை நான் மறுநாள் வாத்தியிடம் சமர்ப்பிப்பேன். இதான் டீல். எழுதிக் கொண்டே வந்த அப்பருக்குத் திடீரென்று முகம் பளீரிட்டது. பாளாப் போன ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்குமான ஒண்டேய் மேச்சு தொடங்குகிற நேரம் அவசரமாய் ரேடியோவில் தன் காதை ஒப்புக் கொடுக்கும் அவசரத்தில் அப்பர் எழுதி நீட்டிய கடிதத்தை அச்சு பிசகாமல் பிரதி எடுத்து அவரிடம் நீட்டினேன்.டாஸ் தோற்று இந்தியா பவுலிங்கு செய்யத் தொடங்கி இருந்தது. அப்பர் மானசீகத்தில் எரிச்சலின் முதல் அத்தியாயத்தில் இருந்த நேரம் என்பதையும் அறிக. இடது கையால் வாங்கி செக்கில் கையெழுத்துப் போடும் கஜினி படத்து சஞ்சய் ராமசாமி போலவே தன் கையெழுத்தைக் கிறுக்கித் தந்துவிட நானும் அப்படியே அதை நாலு போல் மடிக்காமல் நாலாய் மடித்து பள்ளிக்கூட பையில் வைத்து விட்டு வெளியுலகம் சென்றேன்.
மறுநாள் தமிழ் அய்யாவ் மதிய உணவுக்கப்பால் பல் குத்திக் கொண்டே பத்து நிமிசம் எல்லாருக்கும் ‘ழெஸ்டு’ எனப் பரந்த மனம் காட்டியவாறே அகமகிழ்ந்து கொண்டிருந்த தருணம். நான் லட்டரை நீட்டி ‘லட்டர்’ என்று சொல்ல வேறு செய்தேன். அவர் ‘என்ன லட்டர்’ என்றார். “நான் தூங்குனதுக்கு நீங்க எழுதச்சொன்னீங்க” என்றேன். என்னவோ என் மீது பரிவு உண்டாயிற்று போலும். அதை அசிரத்தையாய் வாங்கி மேசை மீது வைக்க இடம் தேடி எதற்கும் இருக்கட்டும் எனப் பிரித்துப் படித்தார்.
பகபகவென சிரித்த அய்யாவ் “எடே…உங்கப்பார் எழுதித் தந்ததை அப்டியே காப்பி பண்ணியாக்கும்…நீ தூங்குனதைத் தன் கையால எழுத வெட்கப்பட்டு அவர் “விஷயத்தை இங்கே எழுது” அப்டின்னு ஸ்பேஸ் விட்டுருக்கார். நீ அதை அப்டியே காப்பியடிச்சிருக்கடே….”நினைத்து நினைத்து சிரித்தார்.
என் அப்பர் என்னைக் கிரிக்கெட் மீதான அவசர வெறியில் கவிழ்த்திப் போட்டதை அறிய நேர்ந்தது.
“யேவ்… அப்பா…இன்னிக்கு சாயந்திரம் என் கையில சிக்குறப்ப உனக்கு இருக்குடீ பொங்கல் போனஸ்..”என்று நினைத்துக் கொண்டேன்.
அவ்வண்ணமே வழங்கினேன்