4 சொல்லாச்சொல்

 

சமீபத்துப்ரியக்காரி
4 சொல்லாச்சொல்


ஏழு கடல் ஏழு மலை இன்னும் பிற எல்லாமும் தாண்டி வந்து
நீ துயிலெழக் காத்திருக்கும் ஓர் நாளில்
கனவின் பிடியில் சற்றுக் கூடுதலாய்ச் சஞ்சரித்து விட்டுத்
தாமதமாய் எழுந்துகொள்கிறாய்.
“எப்போது வந்தாய்
  ஏன் என்னை எழுப்பவில்லை
  இப்படியா செய்வாய்
  நீ வருவாய் எனத் தெரியும்.
  இன்றென்பதைத் தெரியாததனால் தான் இன்று கொஞ்சம் அயர்ந்துபோனேன்.
   நீ வராத இரவுகள் தம்மைத் துவக்கிக் கொள்வதற்கு
   எத்தனை பாசாங்கு செய்கின்றன என்பது உனக்குத் தெரியும் தானே..?
  விழிகள் சிவந்து எரிந்து முடித்த பிற்பாடு தான்
உறக்கம் துவக்கம் என்பதை அறியாதவனா நீ

  அதனால் தான்”
ன்றெல்லாம் காரணங்களை ஒவ்வொன்றாகச் சுட்டியபடியே பதறியபடி எழ முனைகிறாய்.
அப்படியே அப்படியே இரேன்.
இன்னும் கொஞ்ச நேரம் அப்படியே இரேன் என்றவாறே அமர்த்துகிறேன்.
அந்தக் கணத்தின் படபடத்தல் மொத்தமும்
கட்டுக்குள் வரும்வரை துடிக்கும் உதடுகளோடு
சொல்லாச் சொற்கள் அத்தனையும் கொண்டு
பேசாமொழியைப் பேசியபடியே இருக்கிறாய்.
மெல்ல என் கரங்களை விடுவிக்கையில்
இப்போது
நீயென் கரங்களைப் பற்றிக் கொள்கிறாய்
.

“இன்றைக்கு இவ்வண்ணம் எதற்கு வந்திருக்கிறாய்
எதாவதொரு காரணம் வைத்திருப்பாயே சொல் ”
என்கிறாய்.

“ம்ஹூம்…ஏதுமில்லை” என்கிறேன்.
“ஏதுமில்லையா..?
அப்படியென்றால் என்னைப் பார்
க்க வருவதற்குக் காரணம் ஒன்று கூட இல்லை உன்னிடம் ”
எனப் போலிக்கோபம் அணிகிறாய்
“ஆம்…ஒன்று…மே…யி…ல்…லை…..”என்று
இன்னும் சன்னமான குரலில் மொழிகிறேன்.
“நான் நிசமாகவே கோபமாகி விட்டேன் போ என்னோடு பேசாதே”
என முகம் திருப்புகிறாய்
“இப்போதும் சொல்கிறேன்.
உன்னைப் பார்க்க வருவதற்குக்
காரணம் ஒன்று கூட என்னிடம் இல்லை.

அப்படித் தான் சொல்கிறேன்.
அதுதான் நிஜமும் கூட”.
“போதும்” என்று காதுகளை மூடிக் கொள்கிறாய்.
மூடிய விழிகளை இறுக்குகிறாய்.
இப்போது உன் கண்கள் உள்ளே கலங்குகின்றன.
கண்ணீரின் பெயர் மழை என்று கொண்டால்
நீ இருக்கும் நிலை தூறல்.
இமைகளைத் திறந்தால் தூறல் தோன்றும் என்றெண்ணிக்
கலங்குகிற கண்களோடு அப்படியே இருக்கிறாய்.
நான் இறுக்கமாக உன் இருகரங்களையும் பற்றிக் கொள்கிறேன்.
மறுக்கமாட்டாமல் நீ அப்படியே இருக்கிறாய்.
“இதோ பார். உன்னைப் பார்க்க வருவதற்கு
ஒரு காரணம் சொன்னால் இந்த வருகை
ராணி ஒருத்தி சொந்தம் கொண்டாடும்
ஒரு வைர அட்டிகை போல் குறுகியல்லவா போகும்?
அதுவே காரணம் என்ற ஒன்றில்லை என்கையில்
என்னாகிறது பார்..?
யாரும் சொந்தம் கொண்டாட முடியாத
அன்பின் சிறுமலர்கள்
ப்ரபஞ்சம் முழுவதிலும்
தினங்கள் புலர்கையிலெல்லாம்
மலர்கிறாற் போல் மலர்கிறதில்லையா..?
இப்போது சொல்
உண்டு என்கிற ஒன்று போதுமா அல்லது
இல்லை என்கிற முடிவிலியாய் மலர்த்தட்டுமா?”
இப்போது மெல்லக் கண்கள் பிரிக்கிறாய்.
“இப்படித் தான்
அதையும் இதையும் சொல்வாய் வெல்வாய்
நீ ரொம்ப மோசம்” என்கிறாய்.

“நீ இப்படித் தான் சொல்வாய்
 ரொம்ப மோசம்
என்று உன் குரலிலேயே சொல்லிப் பார்க்கிறேன்.


நீ சொன்னதற்கும்
நான் சொன்னதற்குமிடையில்
எப்படியோ நுழைந்து விடுகிறதொரு முத்தம்.
மீண்டும்

“ச்சீ போடா நீ ரொம்ப மோசம்”
என்றாயே
மலர்வாதினி…..
அது என்னைச்சொன்னாயா
அல்லது
அந்தக் கபட முத்தத்தையா