கதைகளின் கதை 1 

யாருக்குத் தான் கதை பிடிக்காது?

நம் பால்ய காலம் கதைகளால் துவங்கியது.கதை என்பது நெடுங்கால வழக்கத்தின் தொடர்துளி.குழந்தைகள் சொல்லத் தெரியாமல் சொல்லிப் பார்க்கும் பொய்களும் கதைகள் தாம்.நேராய்ப் பார்க்கக் கிடைக்கும் காட்சியை அடுத்தவரிடம் விவரிக்க ஆரம்பிப்பவரின் குரலின் தொனி அந்தச் சம்பவத்தை விவரிக்கிற பாங்கு மேலதிகமாய் நிரவும் சொற்கள் உணர்ச்சிப் பூர்வங்கள்  எல்லாமும் கதை சொல்லலின் வாழ்வியல் சாட்சியங்களே முழு நிஜங்களுக்கும் முழுப் பொய்களுக்கும் இடையிலான மஞ்சள் கோட்டின் பெயர் தானே கற்பனை என்னும் அற்புதம்?

கதைகள் வாழ்க


கதைகளின் கதை 1
முழு வைத்தியன்
       சுஜாதா


   ஸ்ரீரங்கத்தில் பிறந்த சுஜாதா என்னும் ரங்கராஜன் அடிப்படையில் ஒரு கணிப்பொறி வல்லுனர்.அவரது தாகம் எழுத்தாக இருந்தது எல்லோர்க்கும் தெரிந்ததே.அவர் ஒரு பன்முகத் தன்மை கொண்ட ஆளுமை.அவரது எழுத்துக்கள் துப்பறியும் கதைகள் சரித்திர சமூக அறிவியல் கதைகள் எனப் பல்வகைக் கதைகளை எழுதிப் புகழ் அடைந்த சுஜாதா அறுபதுகள் துவங்கி 2008இல் அவர் இயற்கை எய்திய வரை கிட்டத் தட்ட நாற்பதாண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் மொழியின் மிக முக்கியமான பல படைப்புக்களை எழுதியவர்.அவரது சிறுகதைகள் கச்சித சிக்கன காந்தங்களாக வாசிப்பவர்களை எப்போதும் தொடர்பித்தில் லயிக்கச் செய்தன.முன்னூற்றுக்கும் அதிகமான சிறுகதைகளை தமிழின் பல்வேறு பத்திரிக்கைகளில் எழுதி உள்ள சுஜாதாவின்  சிறுகதைகள் பல விதங்களிலும் தனித்தன்மை வாய்ந்தவை.
            சிறுகதையின் முதல் வாக்கியத்தை மிக முக்கியமாகக் கருதுபவராக இருந்திருக்கிறார் சுஜாதா.அவரது கதைகள் (கிட்டத் தட்ட எல்லாமே எனலாம்) ஆரம்பம் சடாரென்று ஒரு அல்லது இரண்டு வாக்கியங்களில் நேரே கதைக்குள் இழுத்துச் செல்வதாக இருப்பது குறிப்பிடத் தக்கது.ஒவ்வொரு கதையின் ஆரம்பமும் முடிவும் அதன் இருவேறு வாசல்கள்.அவற்றில் தலைவாயில் கதையின் ஆரம்பம் தானே..?ஒரு கதையின் ஆரம்பம் வெகு சடாரென்று கதைக்குள் வாசகனை இழுத்துச் சென்றுவிடுவதாக அமையவேண்டும் என்பது சுஜாதாவின் ஸ்டைல்.
  சுஜாதாவின் சிறுகதைகளில் பெரும்பாலும் நீள்நெடிய வர்ணனைகள் இருப்பதில்லை.அவரது கதாபாத்திரம் குறித்த தகவல்சொல்லல் தாண்டி இடம் சூழல் இன்னபிற என எதற்காகவும் எப்போதும் வெகு சிக்கனம் என்ற அளவைத் தாண்டாத வர்ணனைகள் மாத்திரமே இடம்பெறும்.தன் எழுத்துத் திறன் என்பதற்கு அடுத்து சுஜாதாவை இதற்காகவும் பாராட்ட வேண்டியிருக்கிறது.சுஜாதா தன் கதைகளின் ஒவ்வொரு வாக்கியத்தையும் வெட்டிச் செதுக்குவதில் ஒரு கருணையற்ற தச்சனைப் போலவே இருந்திருக்கிறார்.
               அவை எழுதப் பட்ட காலத்தை ஒரு உப கூறாகவே அவரது கதைகளில் உணரலாம்.இதற்கடுத்து இதே கூற்றை நீட்டித்தால் சுஜாதாவின் சிறுகதைகளில் அவை எழுதப்பட்ட காலத்தைத் தாண்டிய ஒரு நவீனமான இளமையான மொழியோட்டம் எப்போதும் இருந்துகொண்டே வந்திருப்பதை உணரமுடிகிறது.சுஜாதா தன் கதைகளின் முதல் வாசகராகவே இயங்கியிருக்கிறார்.சமரமற்ற கண்ணாடியைப் போலவே அவரைத் தாண்டி உயிர்த்தாலொழிய அவர் கதைகள் வெளிப்பட்டு விட முடிவதில்லை.
           கதையின் இறுதியை துப்பறியும் கதைகளுக்கு இணையான ஒரு முடிச்சை நோக்கிய வாசக ஓட்டமாகத் தன் பெருவாரிக் கதைகளில் அமைப்பது சுஜாதாவின் பாணி.அதாவது ஒரு குற்றம் சார் சம்பவத்தை விவரித்து அதனைச் செய்தது யாரென்று இறுதிவரை தெரியாமல் கதையின் இறுதியில் அதன் சகல ரகசியங்களும் அவிழ்ப்பது அது வரைக்குமான துப்பறியும் புதினங்கள் மற்றும் சிறுகதைகளின் வழக்கமாக மாத்திரம் இருந்ததை முதன் முதலாக சுஜாதா ஒருவர் மாத்திரம் தான் சமூக விஞ்ஞானக் கதைகளின் சொலல் முறையில் பரீட்சித்தவர்.அவரது அனேகக் கதைகளின் இறுதிமுடிச்சு அவிழும் இடம் ஒரு மகாரகசியத்தின் அவிழ்புள்ளியாகவே அமையும்.அதுவரைக்கும் அந்தக் கதை எங்கே எப்படி முடியும் என்று தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் வாசகனின் மனசமாதானத்துடனான வேறொரு ட்விஸ்ட் ஒன்றில் அவரது கதைகள் முடியும்.இப்படிச் சொல்லலாம்.சுஜாதாவின் சிறுகதைகளின் முடிவைச் சரியாக யூகிப்பது வாசகனுக்கு எப்போதைக்குமான சவாலாகவே இன்றுவரை தொடர்கிறது.
             ஸ்ரீரங்கத்து தேவதைகள் எனும் கதை வரிசையில் சுஜாதா தன் பால்ய நடுமைக் கால ஸ்ரீரங்க வாழ்வியல் அனுபவங்களைக் கற்பனையும் நிஜமும்  கலந்து எழுதினார்.தூண்டில் கதைகள் மற்றும் மீண்டும் தூண்டில் கதைகள் மத்யமர் கதைகள் ஆகியன சுஜாதாவின் பிற சிறுகதை வரிசைத் தொடர்கள்.பல்வேறு உத்திகளைக் கையாண்டதிலும் சுஜாதாவின் பங்கு பரவசம் கொளத் தக்கது.ஒரு கதையில் இரண்டு கதை சசி காத்திருக்கிறாள் மஹாபலி அப்பாவின் ஆஸ்டின் ஈன்று புறந்தருதல் எல்டொராடோ தலைகீழ் ராணி,வந்தவன், எய்தவன்,அனுபமாவின் தீர்மானம்,லூயிஸ் குப்பத்தில் ஒரு புரட்சி,நீலப்புடவை ரோஜாப்பூ திமலா,கருப்புக் குதிரை,எல்லாமே இப்பொழுதே,ஒரு லட்சம் புத்தகங்கள்,ஆட்டக்காரன், பாலம் மற்றும் நகரம் போன்ற சுஜாதாவின் பல சிறுகதைகள் கட்டாயம் வாசிக்க வேண்டியது.
               சுஜாதாவின் முழு வைத்தியன் என்னும் ஒரு சிறுகதை.1984இல் எழுதப்பட்டது.அவரது தேர்ந்தெடுத்த சிறுகதைகள் இரண்டாம் பாகத்தில் (உயிர்மை வெளியீடு) இந்தக் கதை இடம்பெற்றிருக்கிறது.
Sujatha - IMDb

சென்னை எழும்பூருக்கு வந்து இறங்கும் சாமி என்பவனுக்கு சங்கீதா லாட்ஜைத் தேடி அடைவது அப்படி ஒன்றும் சிரமமாயிருக்கவில்லை.சங்கீதா லாட்ஜ் எனக் கேட்டதுமே டாக்டர் ராஜ் தானே என்று கேட்கப்பட்டு எளிதாக அங்கே சென்றடைகிறான்.வைத்தியப் பேரரசு டாக்டர் லோக்ராஜ் என்று லாட்ஜ் வாசலிலேயே போர்டெல்லாம் இருக்கிறது.101 ஆம் அறைக்கு வந்து இளைப்பாறியபடியே டாக்டர் ராஜை விசாரிக்கிறான்.லுங்கி பனியனுடன் கதவைத் திறப்பவர் இவனை அமரச்சொல்லி விட்டு பல் தேய்த்தலைத் தொடர்கிறார். அது ஒரு பழங்கால அறையாகத் தோற்றமளிக்கிறது.பேஷண்டுக வர்ற நேரம் தான் என்றபடியே பாத்ரூமிலிருந்து வெளிப்படும் லோக்ராஜ் இவனிடம் விசாரிக்கிறார்.
சாமி தயங்குகிறான்.சாமி ஒரு பத்திரிக்கைக் காரன்.வரும் புதன் கிழமைக்குள் லாட்ஜ் வைத்தியர்கள் எனும் தலைப்பில் கட்டுரை ப்ரிண்ட் ஆகித் தீர வேண்டிய கட்டாயத்திலும் நீயே ஒரு பேஷண்டு மாதிரி போயி அவன் தர்ற மருந்து மாயத்தை எல்லாம் டேஸ்ட் பண்ணிப் பாரு.அதான் நேர் அனுபவம்.அப்புறம் கட்டுரை என்ன ஷோக்கா வரும் பாரு”என்று சொல்லி அனுப்பப் பட்டிருப்பவன்.
சாமி இப்போது தன் பொய்களைத் தொடங்குகிறான்.பிரம்மச்சாரியான அவன் தனக்குக் கலியாணமாகி ஒரு வருசமானதாகப் பொய் சொல்கிறான்.டாக்டர் ராஜ் அவராகவே இவனிடம் தொடர் கேள்விகளை வீச ஒவ்வொன்றுக்கும் ஆமாம் ஆமாம் என பதில் சொல்கிறான்.மனைவிக்கும் அவனுக்குமான உறவில் சிக்கல் என்று புரிந்து கொள்ளும் டாக்டர் ஒரு லேகியத்தை முதலில் அவன் வாயில் போடுகிறார்.தன் மருந்துகள் குறித்த மார்க்கெட்டிங்கை துவங்குகிறார்.
“எதுக்கும் பயப்படாதீங்க.இப்ப ஒரு செட்டு 30 நாளைக்கு வாங்கிக்கங்க.உயர் ரகம்”என்கிறார்.
உஷாரான சாமி இது என்ன விலை என்கிறான்.விலை என்னாங்க விலை.அதெல்லாம் அப்பறம் பேசிக்கலாம் என்று சொல்கிறார் ராஜ்.
இல்லைங்க முதல்லியே பேசிக்கலாம் என்று மறுபடி கேட்கிறான் சாமி
முப்பது நாளைக்கு தொளாயிரம் ரூபா என்கிறார்.
அவரிடம் இருந்து எப்படி எஸ்கேப் ஆவது எனத் தெரியாத சாமி முதலில் பத்து நாளைக்கு இல்லை இல்லை ரெண்டு நாளைக்கு தாங்க என்று சமாளிக்க டாக்டர் ராஜ் மறுபடி பணம் எங்கே போகுது  என்று அந்த மொத்த மருந்தையும் பார்ஸல் பண்ணி பேப்பர் பேக் எல்லாம் ஆக்கி வெச்சிக்கங்க..எவ்ளோ குடுப்பீங்க என்கிறார்.தர்ம சங்கடமாகும்  சாமி என் கிட்டே பத்து ரூபா தாங்க இருக்கு என்று உடைக்க பொய் சொல்றீங்க இருந்தாலும் பரவாயில்லை.முதல் முறைங்கறதால ஃப்ரீயாக் கூடத் தர்லாம்.நீங்க எட்டு நூறு தாங்க போதும் என்று சொல்ல
எங்கிட்ட சத்தியமா பத்து ரூபா தான் இருக்குங்க என்று காட்ட முயலுகையில் சட்டைப் பையில் பணத்தோடு இருக்கும் இவனது ஐடி கார்டும் வந்து விட அதைப் படித்து விடுகிறார் ராஜ்.
ஓ நீங்க நிரூபரா என்று கேட்கும் ராஜ் அப்ப நீங்க வைத்தியம் பார்த்துக்க வர்லை என்று கேட்க பதிலின்றி அமைதியாக இருக்கும் சாமியைப் பார்த்து
“வைத்தியம் பார்த்துக்கற மாதிரி வந்து ரகசிய நோய் லாட்ஜ் வைத்தியம்னு மசாலா எல்லாம் சேர்த்து ஒரு ஸ்வாரசியமான கட்டுரை எழுத வந்தீங்க அப்படித் தானே என்ன புத்தாண்டு மலரா
டாக்டர் என்னை மன்னிச்சிடுங்க முதல்லியே நான் பேட்டினு கேட்டுருக்கணும் கேட்கத்தான் நினைச்சேன்.அதுக்குள்ளே நீங்க என்று சமாளிக்க முயலும் சாமி நான் எடிட்டர் கிட்டே சொல்லிக்கிறேன்.உங்களைப் பத்தி எழுதலை.நிச்சயமா எழுதமாட்டேன்”
“இல்லை தாராளமா எழுதுங்க.முழுசா எழுதுங்க,.வெறும் லாட்ஜ் வைத்தியனா அரை வைத்தியனா இழந்த சக்தி ஆசாமியா மட்டும் எழுதி நிறுத்திராதீங்க.நான் என்ன பரம்பரைன்னு எழுதுங்க.நாங்கள்லாம் ஜெயின்ஸ்.எங்க குடும்பத்தை சிறுபஞ்சமூலம் எழுதின காரியாசான் வரைக்கும் ட்ரேஸ் பண்ணலாம்னு எழுதுங்க.வீட்டுல இருக்கிற சுவடிங்களைப் பத்தி எழுதுங்க.தமிழ் வைத்தியமுறையைப் பத்தி எனக்கு மனப்பாடமாத் தெரிஞ்ச 3000 பாட்டுக்களைப் பத்தி எழுதுங்க…..அத்தனையையும் எழுதுங்க…தமிழ் படிச்சதை இங்கிலீஷ் படிச்சதை எல்லாத்தையும் படிச்சிட்டு டையைக் கட்டிக்கிட்டு முப்பது நாளும் கொக்கு மாதிரி பேஷண்டுகளுக்காகக் காத்திருக்கிறதையும் உங்களை மாதிரி சென்சேஷனுக்காக வர்றவங்ககிட்டே ஏமார்றதையும் எழுதுங்க.எம்பிள்ளைகளை எழுதுங்க.அவங்களுக்கு சோறு போட அங்காடி நாய் மாதிரி அலையுற என்னைப்பத்தி முழுசா எழுதுங்க..But pray do not mock me!”
லோக்ராஜ் அமைதியாகக் கதவைத் திறந்து போய்வாங்க என்றார்.வாசல் விளிம்பில் காத்திருந்தவனை அடுத்த பேஷண்டைப் பார்த்ததும் அவர் முகம் மறுபடியும் நிதானப்பட்டு புன்னகைத்தது.வாங்க.உள்ள வாங்க என்றார்
.

சுஜாதா கதைகளின் தனித்துவம் உலகில் கடந்து கொண்டிருக்க சாத்தியமுள்ள அனர்த்தங்கள் என்று நாமெல்லாரும் புறக்கணித்து விரைந்துகொண்டிருக்கக் கூடிய நேர்சாலைகளில் மாத்திரம் பயணிக்காமல் அவற்றின் குறுக்குச் சந்துகளிலும் இருண்ட மூலைகளிலும் எண்ணற்றுப் பெயருமற்று மெல்லக் காலாவதி ஆகும் வாழ்வை எப்படியாவது நகர்த்த முற்படுகிற சாமான்யர்களை தனித்தவர்களை விளிம்பு நிலை மானுடர்களின் சார்புநிலைகளின் நிகழ்தகவுகளைக் கதைப்படுத்தத் தன் சிறுகதைகளைப் பெரியதோர் களமாகப் பயன்படுத்தியது என்றே கருதுகிறென்.
        மேற்சொன்ன முழு வைத்தியன் என்னும் கதை நாடு சார் சித்த மருத்துவம் என்னும் துறையில் பரம்பரையாக ஈடுபட்டு வருபவர்களிலிருந்து ஒரு மனிதனை எடுத்து அவனது இடவலப்புறங்களைக் கதையினூடாக விவரித்துத் தருகிறது.வாசிப்பனுபவத்தின் ஆதி நம்பிக்கைகளைப் புறந்தள்ளி வேறொன்றை மெய்ப்பிக்க முனையாமல் அதன் கூடுதல் நம்பகமாகவே இக்கதையின் முடிவு அமைகிறது.தன்னைப் பற்றிய முழுமையான வெளிக்கொணர்வாகத் தன்னைப் பற்றிய கட்டுரை அமையட்டும் என்று டாக்டர் லோக்ராஜ் சொல்கிற இடம் பேரதிர்வு.மேலும் எதுவும் நடக்காதது போல் அடுத்த பேஷண்டை அவர் வரவேற்கும் இடத்தில் இக்கதையின் நிசமுடிவு வேறொரு திறப்பைத் தருவதாக அமைகிறது.
சுஜாதாவின் சிறுகதைகள் தமிழ்ச் சிறுகதைப் பரப்பின் அணிகலன்கள்