மறுதினம்


 மறுதினம்
குறுங்கதை


தலைவர் கட்டிலில் அமர்ந்திருந்தார். அவருடைய உடல் தளர்ந்திருந்தது. எத்தனையோ வருடங்கள் எவ்வளவோ போராட்டங்கள். அவருடைய வலதுகரத்தில் மருந்துகள் ஏற்றுவதற்கான ட்யூப் குத்தப்பட்டிருந்த ஊசி லேசாய் விலகியதில் அந்த இடத்திலிருந்து ரத்தக்கசிவு தென்பட்டது. ரவுண்ட்ஸ் வந்துகொண்டிருந்த அந்த டாக்டர் அவனொரு இளைஞன். இன்னும் வாழ்வில் பலவண்ணமயங்களை மிச்சம் வைத்திருப்பவன் அந்த ரத்தக் கசிவைப் பார்த்ததும் உடனே ட்யூட்டி நர்ஸை அழைத்துச் சன்னமான குரலில் கடிந்து கொண்டான். அப்போது அவர் உறங்கிக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. அமர்ந்த வாக்கில் கண்களை மூடியிருந்தார். அவன் சொன்ன ஒரு வாக்கியம் அவருடைய மன ஆழத்தை நிரடியது.
நீங்கள் இன்னும் அவரைப் பத்திரமாகப் பேண வேண்டும். நானெல்லாம் இன்றைக்கு டாக்டராக இருக்கிறேன் என்றால் அதற்கு அய்யா வகுத்துத் தந்த அரசியல் பாதையும் சமுதாய நீதியும் தான் காரணம். எங்களுக்கெல்லாம் அவர் தெய்வத்தை விடப் பெரியவர் தெரிந்ததா என்று அந்த அறையை விட்டு நீங்கிப் போனான். அவர் அன்றைய காலை உணவின் நடுவே அந்த டாக்டரின் பெயரென்ன என்று கேட்டார். வெற்றித் திலகன் என்று சொன்னார்கள். அவனைப் பார்க்க வேண்டும் என்றார். அவன் தன் ஷிஃப்டை முடித்து விட்டு வந்தால் போதும் என்றும் சொன்னார்.
காலையில் பார்த்ததை விட மதியம் சற்றே சோர்வாகத் தெரிந்த டாக்டர் தன் புன்னகையால் அதனை மறைத்துக் கொள்ள முயன்றான். தலைவரின் கைகளைப் பற்றிக் குலுக்கும் போது அவனது கரங்களின் மென்மை கலந்த வெம்மையை உணர்ந்தவர் சிரித்தார். நீ எந்த ஊரப்பா என்றார் தலைவர். அவர் இயல்பாக அவனை ஒருமையில் அழைத்ததை அவன் ரசித்ததாகவே பட்டது. உன்னை அப்படி அழைக்கலாமில்லையா என்றும் கேட்டார். தலைவரே…நீங்கள் வைத்த பெயர் தான் வெற்றித் திலகன் என்பது என்று தன் கதையைத் தொடங்கியவன் நான் செந்தாமரைப் புதுவூர் கிராமத்தைச் சேர்ந்தவன். என் அப்பா பெயர் நாகராஜன். செல்லமாகுளம் ஒன்றியத்தில் இளைஞரணி செயலாளராக இருந்தார். சின்ன வயதிலேயே இறந்து விட்டார். கட்சிக்காகப் பல முறை சிறை சென்றிருக்கிறார். என்று சொன்னவன் மீண்டும் தன் அதே புன்னகைக்குத் திரும்பினான்.
தலைவர் பெருமூச்சொன்றை உதிர்த்தார். “எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. கானா சினா நாகராஜன். நல்ல உயரம். நெற்றியில் ஒரு வெட்டுத் தழும்பு இருக்கும். அது கூட எதிர்க்கட்சிக்காரர்கள் நாகராஜனின் உயிருக்கு வைத்த குறி. அதில் தப்பித்துக் கொண்டாலும் விதி சீக்கிரமே அவரை அழைத்துக் கொண்டது. என் கட்சியின் உரமாகவே திகழ்ந்தவர். இருந்திருந்தால் எத்தனையோ உயரங்களுக்குப் போயிருக்கக் கூடும்” என்றவர் “உனக்குத் திருமணமாகிவிட்டதா” என்றார். சிரித்த வெற்றித் திலகன் “இல்லை தலைவரே. இன்னும் ஓரிரண்டு ஆண்டுகள் போகட்டும் என்று பார்க்கிறேன். இப்போது தான் இருபத்தி ஆறு வயதாகிறது “என்றதை அவசரமாக தலையை ஓங்கி அசைத்து மறுத்தார். “இல்லை திலகன்…அப்படிப் பார்க்கக் கூடாது. இருபத்தி ஐந்து வயதில் முதல் பிள்ளை பிறந்தால் தான் உனக்கு ஐம்பது வயதாகும் போது உன் பெயரப் பிள்ளைகளை நீ கண்டு இன்புற முடியும். சீக்கிரமே திருமணத்தை ஏற்பாடு செய். நான் வந்து நடத்தித் தருகிறேன்” என்றார்.
நெகிழ்ந்து போனவனாய் “சரிங்க தலைவரே” என்றவன் அதற்குப் பிறகு அவருக்குச் சிகிச்சை முடியும் வரை நேரந்தவறாமல் அவரைப் பேணினான்.தலைவர் வீட்டுக்குக் கிளம்பும் நாள் வந்தது.ஆஸ்பத்திரி ஊழியர்கள் பலரும் அவரோடு படமெடுத்துக் கொண்டார்கள். தலைவர் தன்னுடைய செல்பேசியில் வெற்றித் திலகனோடு படம் எடுத்துக் கொண்டதை ஆஸ்பத்திரி டீன் முதற்கொண்டு எல்லோரும் கவனிக்காமல் இல்லை. தன்னுடைய பர்ஸனல் நம்பரை அவன் செல்லில் பதிந்துகொள்ளச் சொன்னவர் இன்னும் ஓரிரு வாரங்களில் தலைமையகத்திற்கு வந்து விடுவேன். நீ வந்து என்னைப் பார். உனக்கு நிறைய வேலை இருக்கிறது என்றார். அவன் ஒன்றுமே சொல்லவில்லை. மீண்டும் அவன் மென்மையான கரங்களைப் பற்றிக் குலுக்கி விட்டுக் கிளம்பினார் தலைவர்.
மறு தினம் மாலை தலைவரின் வீட்டில் அவருக்கு நெருக்கமான உறவினர்கள் மட்டும் கூடியிருந்த தருணத்தில் அப்போது தான் வந்து சேர்ந்த அவருடைய அக்காள் மகன் சாரங்கனிடம் எதெதையோ பேசிக்கொண்டிருந்துவிட்டுத் திடீரென்று நினைவுக்கு வந்தவராய் ” சாரங்கா, உன் மகள் பப்பிக்கு அருமையான ஒரு பையனைச் சொல்கிறேன். டாக்டராக இருக்கிறான். என்னை அவன் தான் நன்றாகக் கவனித்துக் கொண்டான். அவனது டீடெய்ல்களைக் கேட்டுக் கொள். பப்பிக்கு அவனைப் பேசி முடி. புரிந்ததா என்றார்.
அதற்கு சாரங்கன் தலைவரே நம்ம பப்பி அவளோடு படிக்கும் க்ளாஸ்மேட் ஒருவனைத் தான் கலியாணம் செய்துகொள்வேன் என்று பிடிவாதம் பிடிக்கிறாள். உங்களிடம் கூட வாட்சப்பில் மெசேஜ் பண்ணினாளாம். நீங்களும் சரின்னு சொல்லிட்டீங்கன்னு சொன்னாளே என்றார் கவலையோடு
அப்டியா என்று அமைதியானவர் சற்றைக்கெல்லாம் ஃபோனை எடுத்துத் தன் உதவியாளரை அழைத்தார். அவர் வந்ததும் சங்கரன்…வெற்றின்னு ஒரு டாக்டர் எனக்கு வைத்தியம் பார்த்தாரே…அவரொட டீடெய்ல்ஸ் வாங்கிக்க. வரசொல்லிப் பேசு. தொண்டர் அணி அல்லது டாக்டர்ஸ் அணியில ஸ்டேட் செகரட்டரியா நியமிக்கிறதா ஒரு அறிக்கை ரெடி பண்ணிக் கொண்டுவா. சரியா?
அரை மணி நேரம் கழித்து தயக்கமாய் அவரருகே வந்து நின்ற சங்கரன் தலைவரின் முகத்தையே பார்த்தார் என்னய்யா என்று சாதாரணமாய்க் கேட்டவரிடம்
“தலைவரே…அந்த டாக்டர் நேத்து ராத்திரி சூசைட் பண்ணிக்கிட்டாப்ளயாம். லவ் ஃபெய்லியராம்”  என்றார்