Post Views:
180
ஜெயமோகன்
காலகால ஒளி
ஜெயமோகனை எப்போது முதன்முதலில் வாசித்தேன் என்பது குழப்பமாகத் தான் நினைவிலிருக்கிறது. நன்கு அறிந்து வாசித்தது பின் தொடரும் நிழலின் குரல். அதற்குப் பல வருடங்கள் முன்பே சின்ன சைஸ் கணையாழியில் என நினைவு என் பதின்மத்தின் பாதி வரை கணையாழி சின்ன சைஸில் வந்து கொண்டிருந்தது. காலச்சுவடு கூட அந்த சைஸில் வந்திருக்கிறது என நினைக்கிறேன். கணையாழியில் டார்த்தீனியம் என்ற கதையை முதன்முதலில் வாசிக்க நேர்ந்தது.
திருநகர் நாலாவது ஸ்டாப்பில் ஆனந்த் என்ற நண்பரின் கடை இருந்தது. அது ஒரு ஆடவர் சிகையலங்காரக் கடை. அங்கே பல நாட்கள் பொன் நிகர்ப் பொழுதுகளாக நண்பர்கள் பலர் குழுமுவோம். என் கல்லூரி சீனியரான சீனிவாசன்(இயக்குநர் சீனு ராமசாமி) அப்போது அவரைக் கல்லூரி நண்பர்கள் தமிழன் என்று அழைப்பார்கள். நான் முதலாம் ஆண்டு படிக்கச் சேர்ந்த போது இளங்கலைக் கணித வகுப்பில் மூன்றாம் வருடத்தில் இருந்தார் அவர். பரவான வாசிப்பும் தான் படித்ததைப் பலரோடு பகிர்ந்து கொள்ளும் மனப்பான்மையும் கொண்டவரான அவர் தான் இந்தக் கதையை என்னிடம் வெகுவாக சிலாகித்துச் சொன்னார். அவர் சொன்னதுமே அங்கேயே அந்தக் கடையிலேயே வைத்து அந்தக் கதையை முழுவதுமாக வாசித்துவிட்டேன். முதல் வாசிப்பின் முடிவில் அது வரை கதைகளின் உலகமாக எனக்குள் விரிந்து கொண்டிருந்த அத்தனை சித்திர ஒற்றைகளையும் அந்தக் கதை மறுதலித்திருந்தது. மனத்துக்கு வெகுவாய்ப் பிடித்தமான ஒன்று இலகுவான எடையற்ற இன்பமாகத் தான் மனத்தில் விரியும் என்பதான அதுவரையிலான நம்பகத்தையும் அந்தக் கதை வாசிப்பனுபவம் முற்றிலுமாக நீக்கியிருந்தது. சீனுவாசன் அந்தக் கதையின் முக்கியத்துவங்களை ஒவ்வொன்றாக சிலாகித்து விவரித்துப் பேசிக் கொண்டிருந்தார். எனக்குள் அவரது அனுபவத்தின் சொற்களை சேகரித்துக் கொண்டே முற்றிலும் புதிய சற்றே மந்தகாசமான இருளொன்றைக் கண்டுகொண்டவனாக இருந்தேன். அந்தக் கதை எனக்கு நிகழ்த்தித் தந்த கனம் நான் அதுமுன் அறியாத அனுபவமாயிற்று. அந்தக் கதையோடு இடம்பெற்றிருந்த ஓவியங்கள் கூட மறக்க முடியாதவையாகப் பலமுறை எனக்குள் விருப்பமற்ற தோன்றல்களை நிகழ்த்துவதன் மூலம் கதாஞாபகம் ஒன்றினைத் தொடர்ந்து உண்டுபண்ணிக் கொண்டே இருந்தது. அதன் பிற்பாடு விஷ்ணுபுரத்தை ஊரே கொண்டாடித் தீர்த்த போது நான் அதனுள் நுழைவதில் ஏனோ சிறு தயக்கம் காட்டினேன்;
ஜெயமோகன் எழுதிய அறம் சிறுகதைத் தொகுப்பை என் வாழ்வின் முக்கியமானதொரு காலத்தில் கையிலெடுத்தேன். சற்றே வினோதமான சூழல் அது. 2014ஆம் வருடம், மதுரை புத்தகத் திருவிழா ஆரம்ப தினம். மனுஷ்யபுத்திரன் அன்று காலை தான் மதுரை வந்தடைந்து வழக்கமாய்த் தங்குகிற லேக்வ்யூ ஓட்டலில் தங்கியிருந்தார். அவரைச் சென்று பார்த்து விட்டு அப்படியே புத்தகத் திருவிழாவுக்குப் போகலாம் என்ற முடிவில் அபார்ட்மெண்டில் என் வீடிருந்த நாலாவது மாடியில் லிஃப்டில் ஏறி 0 என்ற பொத்தானை அழுத்தினேன். மின்வெட்டுக் காலத்தின் உக்ரமான தினம் அது. மின்வெட்டானதில் பாதியில் லிஃப்ட் நின்று கொண்டது. ஜெனரேட்டரை ஆன் செய்தால் தான் மீண்டும் லிஃப்ட் இயங்க முடியும். உள்ளே இருந்து அலாரத்தை அழுத்தினால் தான் உள்ளே ஆளிருப்பதை அறிந்து கொள்வர். அலாரம் வேலை பார்க்கவில்லை. எமர்ஜென்ஸி பேட்டரி பழுதாயிருந்தபடியால் சின்னஞ்சிறு விளக்கும் எரியவில்லை. எனக்கோ மயக்கம் வராத குறை. கையில் செல்பேசி இருந்தது நினைவுக்கே எட்டவில்லை. பதற்றத்தில் உடல் வியர்த்து வெள்ளமாய்ப் பெருக எதோவொரு விருப்பமற்ற வெப்பத்தின் அழுத்தம் வேறு தாக்க அரை மயக்கத்தை உணர்ந்த போது ஒரு வழியாக லிஃப்ட் மீண்டும் இயங்கிற்று. நான் மீண்டும் மீண்டேன்.
அதன் பிறகு தான் ட்விஸ்ட். அந்தச் சம்பவம் எனக்குள் எங்கோ எதையோ பிறழ்த்தி விட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் அந்தப் பன்னிரெண்டு மணி நெருங்கும் போதெல்லாம் இருப்புக் கொள்ளாது. மனம் பதைபதைக்கும் உடம்பு தன்னிச்சையாக நடுங்கும். வெளியே சென்றால் மரண பயத்தோடு வீடு வந்து சேர்வேன். வீட்டிலிருந்தால் சகஜத்துக்குத் திரும்ப சில மணி நேரங்கள் ஆகும். இப்படிக் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கும் மேலாகப் பயமெனும் பேயொடு குழம்பிக் கலங்கியிருந்த காலகட்டத்தில் மனம் எதிலும் ஒருமுகப் படவே இல்லை. டீவீ பார்க்கவோ இசை கேட்கவோ மனமில்லை. புத்தகம் வாசிப்பதில் சுத்தமாக ஈடுபாடு இல்லவே இல்லை. என்ன செய்தாவது என்னை மீட்டெடுக்கச் சொல்லி என்னிடமே ப்ரார்த்தித்துக் கொண்டிருந்தேன். அந்தப் பொழுதில் தான் புத்தகத் திருவிழாவில் வாங்கிய புத்தகங்களிலிருந்து அறம் தொகுப்பை விருப்பமே இல்லாமல் புரட்டத் தொடங்கினேன். எப்படியும் பத்துப் பக்கங்களுக்குள் தூக்கி எறியத் தான் போகிறேன் என்று எனக்கே தெரிந்திருந்தது. அந்தப் பருவத்தில் அனேக புத்தகங்களை என் மனவதங்கலின் காரணமாக அப்படித் தான் எறிந்திருந்தேன். சுயத்தின் பிசகாக பயத்தின் பேருருவைத் தாளவொண்ணாமல் என்னை நானே தூக்க முடியாமல் தூக்கித் திரிந்த காலமல்லவா..?
நம்பக் கடினமான வியத்தல் இன்றும் தொடர்கிறது. நான் அறம் தொகுப்பின் அத்தனை கதைகளையும் முடித்து விட்டுத் தான் அடுத்த திசை நோக்கினேன். அது வெறும் வாசிப்பல்ல. அது வெறும் புத்தகமும் அல்ல. அதனுள் இருந்தவை வெறும் கதைகளா அல்லவே அல்ல. யாருக்கு எது அற்புதமாக இருக்கும் என்பதை யாராலும் தீர்மானித்துச் சொல்லி விட முடியாது. என் வாழ்வில் என்னை மறுபடியும் சரியாக்கித் தந்த மகத்துவ மருத்துவமாகவே அறம் தொகுப்பின் வாசிப்பைக் கருதுகிறேன். இலக்கியத்தில் ஆழ்தல் பலன் சார்ந்ததோ பலிதம் எதையும் முன்வைத்ததோ அல்லவே அல்ல. ஆனால் வாசிப்புப் பழக்கம் என்பது நிகழ வேண்டிய எதோவொரு சரி-நிகழ்தலைச் சரியாக நிகழ்த்தும் அல்லது நிகழக் கூடாத எதோ ஒரு சரியற்ற நிகழ்தலை சரியாக அகற்றும் என்பதை நம்புகிறேன். அப்படியான நிகழ்தலின் உட்புறம் தான் அறம் தொகுதியின் கதைகள் என் வாழ்வின் நோய்மிகு காலமொன்றிலிருந்து என்னை மீட்டெடுத்துக் கொடுத்ததை உணர்கிறேன்.
ஜெயமோகனை அவர் எழுத்தையும் கருத்தையும் காரணம் காட்டிப் பலரும் ஏற்பதையும் மறுப்பதையும் இன்று வரை தொடர்ந்து கண்டுகொண்டே இருக்கிறேன். ஜெமோவைப் பிடிக்காது என்று சொல்வதைச் சொல்லி முடிக்கும் முன்பே அவரது எழுத்தைப் பல தளங்களிலும் பாராட்டுகிறவர்களைப் பார்க்கும் போது வியப்பேன். தவிர்க்க முடியாத ஒருவராகத் தான் எனக்கு அவர் அறிமுகமானார். இந்தக் கணம் வரைக்கும் அப்படியே தொடர்கிறார். இது எல்லோர்க்கும் எளிதில் கைவராத சாகசம் தான் எனினும் எந்த முனைப்புமின்றி இதனைக் கூடுதல் விளைதல் ஒன்றெனவே செய்து வருபவர் ஜெயமோகன். அவரை ஏற்கும் தருணங்கள் அனேகம். முரண்படும் தருணங்களும் இல்லாமல் இல்லை. ஆனால் இரண்டுமே உயிர்ப்புள்ள தருணங்கள் என்பது தான் கூறவேண்டியது.
ஏழாம் உலகம் நாவலைப் படித்து விட்டு அதற்கடுத்து வந்த சில மாதங்கள் எதையும் வாசிக்காமலே இருந்தேன். என் நண்பன் மூவேந்தன் என்னை மிகக் கடுமையாகத் திட்டினான்.
“ஒரு படைப்பைக் காரணம் காட்டி வாசிப்பிலிருந்து மெல்ல நீ விலக்கம் கொள்கிறாயோ எனத் தோன்றுகிறது. இதெல்லாம் ஒரு சாக்கு” என்று ஏசினான். அவனிடம் நான் சிரமப் பட்டு எடுத்துச் சொன்னேன். சட்டென்று அடுத்த படைப்பினுள் செல்வதை ஏழாம் உலகம் நாவலின் எதோவொரு அறியமுடியாத அம்சம் தடை செய்து வைத்திருக்கிறது; அதைப் புறந்தள்ளி விட்டுப் புதிய சில படைப்புகளை நோக்கி அதிகரித்துக் கொண்ட வேகத்தோடு உட்செல்வது ஒன்றும் கடினமில்லை. ஆனால் நம் உடலில் நாமறியாத ஏதோவொரு பகுதியில் முள்ளொன்று குத்தியிருக்கிறது என வைத்துக் கொள்வோம். அது கடுக்கிறது வலிக்கிறது என்றால் அதனைக் கண்டறிந்து அகற்றினாலொழிய முழுமையான நிம்மதிக்கு வாய்ப்பில்லை அல்லவா..? அப்படிச் செய்யாமல் வலி நிவாரணி மாத்திரைகளை வரிசையாக உட்கொண்டவண்ணம் அந்த முள்ளைச் சமாளிப்பதாகக் கருதினால் நட்டம் நமக்குத் தான் இல்லையா? ஒரு சிறந்த படைப்பு அப்படித் தான் முள்ளாக இறங்கும். நாட்பட்ட உடனிருத்தலும் உட்கிரகித்தலும் விளையச்செய்கையில் ஆழ்ந்து திளைப்பதன் மூலமாக மட்டும் தான் அடுத்த காலத்தின் பிற படைப்புக்களை நோக்கிச் செல்ல முடியுமே ஒழிய வேரொடு பிடுங்கவியலாத தாவரத்தின் வெளித்தெரியும் பாகங்களை மட்டும் வெட்டியெடுத்துப் பத்திரம் செய்வது அர்த்தமற்றது என்றெல்லாம் சொன்ன பிறகு அரைமனமும் பாதிப் புன்முறுவலுமாக அவன் கிளம்பிச் சென்றான். சொன்னாற் போலவே நெடிய மௌனத்திற்கப்பால் தான் என்னால் அடுத்த வாசிப்பை நோக்கி வேறு நூல்களை நோக்கிச் செல்ல முடிந்தது.
அதே நாவல் படமாக மாறும் போதும் உக்கிரமான வாதங்கள் எங்கள் நண்பர்களுக்குள் நிகழ்ந்தன; பாலா இயக்கிய நான் கடவுள் அற்புதமான படைப்புத் தான். அதில் இசைஞானி இளையராஜாவின் இசையும் நடிகர்களின் நடிப்பும் திரைக்கதையின் தடையற்ற பெருக்கமும் எனப் பல அம்சங்களை வியந்து பாராட்டுகிறவனாகத் தான் நானும் இருந்தேன் என்றாலும் ஏழாம் உலகம் என்னும் அளக்கவியலாப் பேரற்புதம் ஒன்றைக் காகிதத்திலிருந்து காட்சிப்படுத்தியதை ஒப்பிட விரும்பாத பலருள் ஒருவனாகத் தான் இருந்தேன். இன்றும் இருக்கிறேன். வாசிப்பின் மூலமாய் ஏழாம் உலகம் எனக்குள் நிகழ்த்திய தடமும் இருளும் அலாதியானது.ஒப்பிட ஏதுமற்றது.
சங்கச்சித்திரங்களை ஒவ்வொரு வாரமும் வாசிக்கும் போது வாழ்வின் உன்னதமான படைப்பொன்றை அது ஒவ்வொரு மலராய்க் கோத்தெடுக்கிற கால-உடனிருத்தலாகவே உணர்ந்திருக்கிறேன். ஜெயமோகன் எழுதிய எல்லா நூல்களையும் வாங்கியதும் முகாந்திரமின்றி அவர் எழுத்தை மனத்துக்கு நெருக்கமாய் உணரத் தொடங்கியதும் அப்போது தான்.
நான் எழுத வந்த பிற்பாடு எழுத்தாளன் என்கிற பதத்தைக் கையிலேந்திக் கொண்டு தென்பட்ட வாசல்களிலெல்லாம் தெரிந்துகொள்ளக் கிடைத்த எவற்றையும் தவற விடாத மனோபாவத்தோடு அலைந்து கொண்டிருந்தேன். மனத்துக்கு நெருக்கமாய் உணர்கிற ஒவ்வொருவரையும் சந்திப்பதற்குக் கிடைத்த எல்லா சந்தர்ப்பங்களையும் மனதார விரும்புகிறவனாகவே என்னைக் கட்டமைத்துக் கொண்டேன். முதன்முதலில் சென்னையில் உயிர்மை நிகழ்த்திய புத்தக வெளியீடு ஒன்றில் ஜெயமோகனைச் சந்தித்தேன். அவருக்கு என்னை அறிமுகம் செய்து வைக்கும் படி முன்னரே மனுஷ்யபுத்திரனிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். என் பேரைக் கேட்டதும் நீங்கள் மலேசிய எழுத்தாளரா என்று கேட்டார். நான் வரைபடத்தில் மட்டுமே மலேசியாவை அறிவேன் என்று பதில் சொன்னேன். வரைபடத்தில் அறிவதில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. எல்லா நாடுகளையுமே அறியலாம் என்று சொல்லி விட்டுப் புன்னகைத்தார்.
மதுரையில் புத்தகத் திருவிழாவை ஒட்டி சுரேஷ்குமார் இந்தர்ஜித்தின் சிறுகதைத் தொகுதி ஒன்றினை வெளியிட்டுப் பேசுவதற்காக வந்த போது அடுத்த முறை சந்தித்தேன். மதிய உணவருந்தும் நேரத்தில் நண்பர்களோடு அளவளாவக் கிடைத்த சிறு பொழுதில் எப்படி அவரால் இத்தனை உற்சாகமாகப் பேச முடிகிறது என்று வியக்கும் அளவுக்கு அதி உன்னதமான உரை அது. போகிற போக்கின் அதே தொனியில் அவர் பேசிக் கொண்டிருந்தார்.
அடுத்தடுத்த வாய்ப்புக்களில் ஜெயமோகனிடம் பேசுவது ஒரே நதியின் முடிவற்ற கரையோரமாய்த் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கக் கூடிய நேர்த்தியான நடைபயணம் ஒன்றாகவே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நண்பர் இளங்கோவன் முத்தையாவும் நானும் மதுரையில் நடந்த சுரேஷ்குமார் இந்தர்ஜித்துக்கு வழங்கப்பட்ட விஷ்ணுபுரம் விருதளிப்பு விழாவில் கலந்து கொண்டபோதும் ஜெயமோகனது உரையையும் அதைத் தாண்டிப் பல தளங்களிலும் விரிந்து சென்ற அவரது நேர்பேச்சையும் வாழ்வின் முக்கியமான தருணங்களில் ஒன்றாகவே கருதுகிறேன்.
அவருடைய தளத்தின் தொடர் வாசகன் நான். தமிழில் தற்காலத்தில் வாசிக்க வருகிற புதியவர்கள் மீது எனக்குப் பொறாமையே உண்டு. ஜெயமோகன்,சாரு நிவேதிதா மற்றும் எஸ்.ராமகிருஷ்ணன் மூவருமே தத்தமது இணையதளங்களில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள். வருடக்கணக்கில் அவர்கள் எழுதியவற்றின் பெருந்தொகையாகவும் அந்தத் தளங்கள் விளங்குகின்றன. இம்மூவரைத் தாண்டி,மற்ற எழுத்தாளர்களின் வலைமனைகள் வலைப்பூக்கள் இணைய பத்திரிகைகள் என எல்லாமும் கூட தடையற்ற வாசிப்பை முன்வைக்கின்றன.இவற்றை விடாமல் படிப்பதன் மூலமாகவே ஒரு புதிய வாசகனால் தற்காலத் தமிழ் இலக்கியம் குறித்த தெளிவான பார்வையைக் கண்டடைந்திட முடியும். அந்த வகையில் முன்னொரு காலத்தில் நாடளாவிய வாசகமேதமைக்கு எங்ஙனம் நூல் நிலையங்கள் காரணமாக விளங்கினவோ அந்த வேலையை இன்றைக்கு இத்தகைய இணைய தளங்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன.
புனைவுக் களியாட்டுக் கதைகள் என்று பெருந்தொற்றுக் காலத்தில் ஜெயமோகன் எழுதிய கதைகளை ஒன்று விடாமல் வாசித்தேன். சிறுகதை எழுத்தின் சமகால உச்சமாக அந்தக் கதைகளை எழுதிய வேகம் கதைகளின் பன்முகம் ஆகியவை கணிக்கவியலாத வியப்பை நல்குபவை. வாசகனுக்குள் கலைந்தும் சேர்ந்தும் அக்கதைகள் உருவாக்கித் தரக் கூடிய மனச்சித்திரங்கள் நுண்மையானவை. எழுத்தாளர்களின் எழுத்தாளர் என்று எல்லாரையும் சொல்லி விட முடியாது. எழுத்தைக் கைக்கொள்பவன் புனைவின் வடிவங்களினூடாகவும் அபுனைவின் சாத்தியங்களின் வழியாகவும் கருத்துருவாக்கங்களின் கட்டமைத்தல் காரணமாகவும் தான் நிகழ்த்துகிற உரைகளின் வாயிலாகவும் என முற்றிலுமாகத் தன் அனைத்து செயல்பாடுகளின் சாரத்தாலும் உருவாக்க விழைகிற காலகால ஒளிர்தலின் காரணமாகவே அப்படி அழைக்கப் பட முடியும்.
எழுத்தைப் பற்றிக் கொண்டு மேலெழ விரும்புகிற யாவர்க்குமான எழுத்துக்கலையின் நுட்பங்களைக் கற்றளிக்கக் கூடிய எழுத்தாசிரியராகவும் ஜெயமோகன் திகழ்கிறார். எழுதுதலும் எழுத்தறிவித்தலும் ஜெயமோகன் தான் வாழ்கிற காலத்திற்கு நல்கக் கூடிய ஞானதானம்.
இன்று அவருக்கு 60 ஆம் பிறந்த தினம்.
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் ஆசானே.
வாழ்தல் இனிது