எதிர்நாயகன்2
டி.எஸ்.பாலையா-நிழலாலும் நடித்தவர்
ஒரு நடிகர் பல்வேறு வேடங்களைத் தாங்குகிறார். நடிகருக்குண்டான மாபெரும் சவால்கள் இரண்டு. ஒன்று ஒரு வேடத்திலிருந்து முற்றிலுமாக நீங்கி வெளிப்பட்டு அடுத்த வேடத்தை நோக்கிச் செல்வது. இதைவிடவும் கடினம் இப்படியான வேடகாலங்களினூடாகத் தன் சொந்தச் சுயத்தைப் பத்திரம் செய்து கொள்வது. உலகளவில் இந்த இரண்டு அம்சங்களிலும் வெற்றிகரமாகத் திகழ்வது இரண்டொரு சதவீதங்களுக்குக் குறைவானவர்களுக்கே சாத்தியம். நடிகன் தன் வேடவாழ்வுக்கு நிகர்செய்யத் தரக் கூடிய மாபெரும் விலை என்ன என நினைக்கிறீர்கள்..? அவனுடைய சுயம். அவன் என்கிற ஒருவனாகவே அவனால் இருக்க இயலாமற் போவது எண்ணவொண்ணாக் கொடுமை. பிரபலமாதலின் நிழல் அத்தகையது.
நடிகர்களை நமக்கு ஏன் பிடிக்கிறது. நடிப்பென்பது நிகழ்த்துக்கலை. அதைப் படப்பதிவாக்கினாலும் நம் முன் ஒரு படம் ஓடுகையில் அந்தக் கதை இன்னொரு முறை நமக்கு முன்பாக நிகழ்த்தப்படுகிறது. அந்தப் பரவசத்தை எப்படி நுகர்வது என்பதில் இருக்கிறது சூட்சுமம். நடிப்பென்பது மிகைவார்த்தல் அல்லவே அல்ல. உலக அளவில் அடக்கி ஆண்ட பலரும் தான் பேசுபொருளாகியிருக்கின்றனர். தமிழில் மிகை நடிப்பை விதந்தோதிய நெடியதோர் காலம் இருந்தது. அதைத் தாண்டிப் பலரும் யதார்த்த நடிப்பாக சலனமற்ற நீர்ப்பரப்பின் தோன்றல்களைப் போல் ஈர்த்தார்கள். எம்ஜி.ஆர் சிவாஜி ஜெமினி உட்படப் பல புகழ்வாய்ந்தவர்களுக்கும் அதிகம் கவனிக்காத இப்படியான யதார்த்த மிளிர்தல்கள் உண்டு. அவற்றைத் தேடிச் செல்பவர்களுக்குப் பழைய சினிமா சொர்க்கம்.
குணச்சித்திர நடிகர்கள் நாயகர்களை விடவும் பெருந்தோன்றல்கள் என்பது சினிமாவை அதன் பிம்பம் தாங்கிகளுக்காக விரும்பாமல் கலையை நாடுகிற யார்க்கும் உவப்பான வாக்கியமே, தமிழில் தோன்றிய பெரு நடிகர்கள் வரிசையில் டி.எஸ். பாலையா தவிர்க்கமுடியாத ஓரிடம் கொள்பவர். எத்தனை வலிய கதையையும் எவ்வளவு நடிக கம்பீரங்களையும் தாண்டித் தனதாக்கிக் கொள்ளும் வித்தகராக பாலையா விளங்கினார். அவர் நடிப்பில் பன்முகம் கொண்டவர்.
திருநெல்வேலி சுப்ரமணியன் பாலையா தூத்துக்குடி அருகிலுள்ள சுந்தன் கோட்டையில் பிறந்தார். நடிப்பின் சகல நுட்பங்களையும் தன் வேடமேற்றல்களின் மூலம் பரிமளித்துக் காட்டிய நல் நடிகர் பாலையா. தில்லானா மோகனாம்பாள் ஊட்டி வரை உறவு காதலிக்க நேரமில்லை பாமா விஜயம் சாதுமிரண்டால் ஹலோ மிஸ்டர் ஜமீன் தார் பாலும் பழமும் பாவ மன்னிப்பு களத்தூர் கண்ணம்மா கவலை இல்லாத மனிதன் பார்த்திபன் கனவு புதையல் வாழவைத்த தெய்வம் காலம் மாறிப் போச்சு ரத்தபாசம் மதுரை வீரன் வேலைக்காரி உட்படப் பல படங்களில் பாலையாவைத் தாண்டி வேறொருவரை நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்குத் தன் பாத்திரத்தோடு ஒன்று கலந்தவர் பாலையா. இன்றளவும் அந்த வேடங்களினூடாக அவற்றின் கதையும் காலமும் கூடவே நினைவு கூரப்படுவதற்கான சாத்தியங்களாகவும் அவர் நடிப்புத் திறன் பெருக்கெடுக்கிறது. பாலையா மறக்க முடியாத நடிகர்.
ஒரு சிறந்த வில்லன் என்பவர் அதற்கான எந்தத் தனித்துவத் தோன்றலும் வேண்டியிராதவராக இருக்க வேண்டும். கதையின் சுழிதலும் சிக்கலுமே ஒரு பாத்திரத்தை வில்லனாக முன்மொழியவேண்டும். கொண்டாட்ட சினிமா பெரிதும் இந்த இடத்தை அலட்சியம் செய்வது அவற்றின் வணிக முகாந்திரத்தால் எனக் கொள்ளலாம். கெட்டவர் ஒருவராகக் கதையில் நுழைக்கப்படுபவர் ஒரு சிறந்த ட்விஸ்டின் மூலம் தன் மீது குவிந்த அத்தனை ஐயங்களையும் அறுத்தபடி நல்லவராக ஆபத்தற்றவராக மாறுவது சிறு உறுத்தலுமின்றி நிகழ்த்தப்பட வேண்டியது. அவ்வண்ணம் அந்தப் பாத்திரம் மாற்றம் பெறுகையில் அதுவரை ஐயத்தின் சிறு நிழல் கூடத் தம்மீது படாமல் இருக்கும் வேறொருவர் மீது மொத்த வெளிச்சமும் உமிழப்படுவதும் அவர் பிடிபடுவதுமான தொடர்விளைதல் கதைக்குக் காத்திரம் தரும். அப்படிப் பல படங்கள் வந்தன.
வில்லன் என்கிற எதிர்பாத்திரத்தை ரசிக்கும் படி செய்தவர்கள் காலத்தில் நிலைக்கிறார்கள். பாலையா அத்தகையவர். வில்லன் என்று அவரை ஒரு சட்டத்துக்குள் அடக்கி விட முடியாது. நகைச்சுவைப் பாத்திரங்களாகட்டும் குணச்சித்திர வேடங்களாகட்டும் எறும்புகள் சர்க்கரைக்கும் வெல்லத்துக்கும் பேதம் காண்பதில்லை என்கிற பதத்துக்கேற்ப பாலையா தனக்கு வழங்கப்பட்ட வேடங்களினூடாகத் தன் தனித்துவத்தின் சித்திரங்களைக் கட்டமைத்தார். காலம் மனிதனை இயல்பாகத் தள்ளி நகர்த்தி நிறுத்திப் பார்க்கும் அத்தனை ஒழுங்கின்மை பலவீனம் குற்றத் தேட்டம் இயலாமை நசிவு குணக்கேடு பொறாமை சீற்றம் பேராசை நயவஞ்சகம் துரோகம் எனப் பலவற்றையும் நுண்மையாகத் தோன்றச்செய்தபடி தான் ஏற்ற வேடத்துக்கு நியாயம் செய்தவராகவே பாலையா மின்னினார். அவர் சுமாராக நடித்த ஒரு படத்தைக் கூட உங்களால் நினைவுபடுத்தவே முடியாது. அந்த அளவுக்குச் சிறந்தவர் பாலையா.
பாலையாவின் திரைத் தோன்றல் அபாரமானது. ஒரு காட்சிக்குள் அவர் வரும்போதே தன் மீதான கவனக்குவிப்பைச் செய்து விடுகிற வல்லமை கொண்டவர். அவரது குரல் வேறுயார்க்கும் வாய்க்காதது. இந்தியாவின் எந்த நடிகராலும் பிறப்பிக்கமுடியாத எந்திரவருடலாகவே அவர் தன் குரலை எழுப்பினார். அந்தக் குரல் அவருக்கு மட்டும் சொல்பேச்சுக் கேட்கும் வேட்டை நாயைப் போல் விளங்கிற்று. அவரைப் போல் மிமிக்ரி செய்பவர்கள் கூட அந்த வேட்டை மனோபாவத்தைக் கண்டுணர்ந்தால் மட்டுமே அந்தக் குரலுக்கு அருகே செல்ல முடியும். தன் குரலைப் பண்பட்ட மந்திரக்காரனைப் போல் பயன்படுத்தினார் பாலையா. அப்பப்பா என்னய்யா உன் கூட ஒரே தொந்தரவாப் போச்சு என்கிறது போல சாதாரணமான வாக்கியங்களைக் கூட பாலையா பேசுகிறேன் என்கிற தனித்த நகர்த்துதலாய்த் தனக்கானதாய் மாற்றிக் கொள்ள அவரால் முடிந்தது. அவரை ரசித்தவர்கள் அவர் குரலின் வழியாகத் தான் ஆன்மாவைச் சென்றடைந்தார்கள். இது ஒரு நடிகனுக்குக் கிடைக்கிற நல்லதோர் வரம்.
வேடத்துக்கு ஏற்றாற் போல் புன்னகைப்பதில் மன்னர் என பாலையாவைச் சொல்வேன். நயவஞ்சகத்தை அவர் போல் இன்னொருவர் புன்னகையினூடாகப் பிறப்பித்ததே இல்லை அதே போலத் தன் பாத்திரத்தின் அளவறிந்து நடிப்பதிலும் அவர் வல்லவர்.கொஞ்சம் கூடக் கோடு தாண்டாத கச்சிதம் அவரிடம் இருந்தது. உடன் நடிக்கும் எத்தகைய நடிகர்களின் நடுவேயும் தனக்கான ஓட்டங்களைத் தன் வசம் செய்து கொள்ளத் தவறாத கிரிக்கெட் ஆட்டக்காரனைப் போல் நடிப்பில் திகழ்ந்தார் பாலையா. தில்லானா மோகனாம்பாள் படத்தைப் பார்த்தால் இது விளங்கும். சிவாஜி பத்மினி நாகேஷ் மனோரமா என நால்வருக்கும் மகாபெரிய சித்திரம் அது என்றாலும் அந்தப் படத்தில் அந்த நால்வரைத் தாண்டிய ஞாபகமாக உங்களால் பாலையாவின் தோற்றத்தைச் சென்றடைய முடியும். சிவாஜியுடனேயே வலம் வந்த ஏவி.எம் ராஜன் எம்.என்.நம்பியார் இன்னபிறரை அப்படி அந்தப் படத்தில் நம்மால் உணரமுடியாது. அது தான் பாலையா.
காதலிக்க நேரமில்லை படத்தில் அவர் வெள்ளந்திச் செல்வந்தம் ஒன்றைப் படத்தில் காட்டினார். தன்னிறைவான மனிதனைத் தேடி வந்து ஏமாற்றும் போது அவன் மதிமயங்கி விடுவது இயல்பு. அதே படத்தில் பாலையாவைக் கடுமையான அறிவாளியாக எண்ணிப் பார்த்தால் வேறொரு திரைக்கதை உருவாகும். நாகேஷ் கதை சொல்லும் காட்சி நிரந்தரித்ததற்கு நிச்சயமாக நாகேஷ் மட்டுமல்ல காரணம்.
பாமாவிஜயம் கதை பாலையாவுக்காகவே புனையப்பட்டது. தன் நிழலாலும் நடித்தவர் பாலையா. கே.பாலச்சந்தர் இயக்கிய நடிகர்களிலேயே முதன்மையான நடிகராக பாமா விஜயம் பாலையாவைத் தான் சொல்ல விரும்புகிறேன். அந்தப் படத்தின் அத்தனை பேரையும் துலாபாரத்தில் ஒரு தட்டில் இட்டாலும் இன்னொரு தட்டில் தனியனாய் பாலையா வீற்றிருப்பார். அப்படி ஒரு நடிப்பு அந்தப் படத்தில் அவர் தந்தது
சிறந்த நடிகன் தன்னால் மட்டுமே பரிமளிக்கக் கூடியதான ஒரு வேடத்துக்காகக் காலம் முழுக்கக் காத்திருக்கிறான். அவனது நடிகவாழ்வின் எதாவதொரு படமாக அப்படியான வேடத்தை அவன் கடந்து செல்வதும் நிகழலாம். அப்படி ஒரு வேடம் அமையாமலேயே கானல்தாகத்தோடு கண்மூடியவர்களும் பலர். வெகு சிலருக்கு முதல் படமாகவே அப்படியான வேடம் அமைந்துவிடும். அமைப்பின் விசித்திரம் தான் சினிமா என்னும் கலையை லாகிரிக்கொப்பான கிறக்கத்துக்கு உரியதாக்குகிறது. அப்படியான வேடத்தை பாலையா ஏற்ற படம் என என்னளவில் நான் ஏழை படும் பாடு படத்தைச் சொல்வேன்.
விக்டர் ஹ்யூகோ 1862 ஆமாண்டு எழுதிய புதினம் லெஸ் மிஸரபிள்ஸ் உலகளாவிய புகழைப் பெற்றது. பல மொழிகளிலும் இதை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. அன்பின் புனிதத்தைப் பேருருவாக்கித் தந்த காவியம் லெஸ் மிஸரபிள்ஸ். இதன் மிகச்சிறந்த வெளிப்பாடாகவே ஏழை படும் பாடு திரைப்படம் அமைந்தது.பின் நாட்களில் சிவாஜி நடிப்பில் “ஞான ஒளி” என வந்ததும் லெஸ் மிஸரபிள்ஸ் வரிசையில் வருவது தான்.
1936 ஆம் ஆண்டிலேயே நடிக்கத் தொடங்கி விட்ட பாலையாவின் அசத்தலான ஆரம்பம் என்று இந்தப் படத்தில் அவர் ஏற்ற ராம்கோபால் எனும் பாத்திரத்தைச் சொல்லலாம்.இதன் நாயகனாக நடித்தவர் சித்தூர் நாகையா. லலிதா பத்மினி ராகினி மூவருமே இந்தப் படத்தில் இடம்பெற்றனர். வீ கோபால கிருஷ்ணன் இதில் முக்கியப் பாத்திரம் ஏற்றார்.கண்டிப்பான காவல்துறை அதிகாரி ஜாவர் எனும் பாத்திரத்தில் நடித்ததன் மூலம் ஜாவர் சீத்தாராமனாக உருவெடுத்ததும் இந்தப் படத்தின் வழியாகத் தான். கே.ராம்நாத் இதை இயக்கினார். சுத்தானந்த பாரதியார் இதற்குக் கதையளித்தார். தன் பக்ஷிராஜா ஸ்டூடியோஸ் சார்பாக எஸ்.ஸ்ரீராமுலு நாயுடு இதனைத் தயாரித்தார். நாகையாவின் மேற்பார்வையில் இதற்கு இசையமைத்தவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு. எல்லாப் பாடல்களையும் எழுதியவர் வீ.ஏ.கோபாலகிருஷ்ணன்.
இந்தப் படத்தின் எதிர்பாராத இரண்டு அற்புதங்கள் இதன் பின்னணி இசையும் டி.எஸ்.பாலையாவும் தான்.
நல்லவன் கெட்டவன் என்று இரண்டாகப் பகுத்தவண்ணம் திரைப்படம் பார்ப்பதென்பது நூறாண்டுகளாகப் பார்வையாளன் பின்பற்றி வருகிற முறைமை. பாலையா வெறுக்கத் தக்கவராக அல்லாமல் ரசிக்கத் தகுந்த ராஸ்கலாக இந்தப் படத்தில் தோன்றினார். ஐம்பதாம் வருடம் இந்தியத் திரையுலகில் வேறு யாரும் நிகழ்த்தியிராத அற்புதம் அந்த ராம்கோபால் பாத்திரம்.
அதிர்ந்து பேசாமல் ஒரு கனவானாகவே காண்பவர் கண்களின் முன்னால் உலா வந்தார் பாலையா. அந்தப் படம் நாகையா ஏற்ற கந்தன் பாத்திரத்துக்கும் ஜாவர் எனும் பாத்திரத்துக்கும் இடையிலான மன ஊடாட்டங்களின் மீது கட்டமைக்கப் பட்ட கதை நகர்தல் தான். இந்த இரண்டு திசைவெளிக்கு நடுவே நயவஞ்சகத்தின் மொத்த உருவமாகவே வலம் வந்தார் பாலையா. கதையின் திருப்பமும் வளர்தலும் ராம்கோபால் பாத்திரத்தை மையப்படுத்தியே அமைந்திருந்தன.
இந்த ராம் கோபாலை நம்பி இது வரை யாரும் மோசம் போனதில்லே என்னும் டயலாக்கை படமெங்கும் பேசுவார் மோசடி மன்னனான பாலையா. தான் கர்ப்பம் தரித்திருப்பதை ஆசையோடு மனைவி வந்து சொல்லும் போது அவரது முகபாவம் அனாயாசமாக இருக்கும். ச்சே…குவாகுவான்னு கத்தி உயிரை வாங்குறதுக்கு ஒரு குழந்தை வேறயா…என்று வசனம் சொல்வார். அவரைத் தவிர வேறு யாரால் அப்படி அதகளம் செய்ய முடியும்..? வாய்ப்பே இல்லை.
தன்னை நம்பி வந்தவள் உறங்கும் போது அவளது நகை பணம் அவளோடு தான் எடுத்துக் கொண்ட படம் எல்லாவற்றையும் சுருட்டிக் கொண்டு கிளம்பி விடுவார்.
“ஏதோ ஒரு எச்சக்கலையை இழுத்து வந்து அது கழுத்தில் ஒரு கயித்தையும் கட்டி பெண் ஜாதியின்னு பேரு வச்சா அதுக்குக் குழந்தை வேறயாம் குழந்தை. என் தலைக்கு கொள்ளி வேற வேண்டியதில்ல கொள்ளி “
என்று சொல்லிக் கொண்டே தன் ஓவர் கோட்டை எடுத்துத் தோளில் சாத்தியபடி
“மலர் வாடி விட்டது. வண்டு பறந்து விட்டது குட்பை”
என்று பாவனையாக ‘ஸல்யூட்’ செய்துவிட்டுக் கம்பியை நீட்டி விடுவார்.
இன்னொரு காட்சியில் ஒரு டயலாக் வரும் பாலையா அதைக் கடக்கும் தொனி அபாரம்.
“லட்சுமியாவது சரஸ்வதியாவது…முன்னுக்கு வர்றதும் பின்னுக்குப் போறதும் நம்ம கையில தான இருக்கு” என்று தான் இறங்கும் இடம் வந்ததும் அடடா…நகை வாங்க 500 ரூ பணம் கொடுத்தாங்க. நீங்க வர்ற அவசரத்துல அதை வச்சிட்டு வந்துட்டேன்”
என்று புளுகுவார். அதனால என்ன தம்பி என அந்தப் பெரிய மனிதர் பணம் எடுத்துக் கொடுப்பதை பார்ப்பார் பாருங்கள் உலக அயோக்கிய சிகாமணிப் பார்வை அது.அப்படி ஒரு பார்வையை இன்னொருவரால் பார்க்க முடியுமா என்ன..?
தம்பி இங்கிலீஷுல எதோ ஒரு வார்த்தை சின்னதா சொன்னியே என்று அந்தப் பெரியவர் கேட்க
“அதானே இங்கிலீஷோட மகிமை. எதையும் ரத்தினச்சுருக்கமா சொல்லிடலாம். ராமாயணத்தையே எட்டே வார்த்தையில சொல்லிடமுடியும். அதையே தமிழ்ல நீட்டி முழக்கினா அது மகாபாரதமாயிடும்”
என்பார்.
கடைசியில் அவரது குட்டு வெளிப்பட்டு விடும். ராம்கோபால் அயோக்கியன் எனப் பிடிபடும் தருணத்தில் அந்த இடத்திலிருந்து நைஸாக கழன்று வீதியில் நடப்பார் பாருங்கள். தோல்வியின் நடை அதுதான். படம் முழுவதும் அடுத்தடுத்த சுயநல வெற்றிகளின் போதெல்லாம் அவர் நடை உடை பாவனைகளில் கலந்து கிடந்த வெற்றிக்களிப்பு அப்போது இருக்காது. எங்கே செல்வது என்று தெரியாமல் துவண்டு தோள்கள் தொய்வுற மெல்ல நடப்பார். அப்போது அவரது நெடு நாள் சினேகிதக்காரன் அவரைப் போலீஸில் காட்டிக் கொடுத்து அவர் கையில் முதன்முறையாகக் காப்பு மாட்டப்படுவதோடு அவரது கதை நிறையும்.
படம் முழுக்க தன்னை நம்பும் ஒவ்வொருவரையும் ஏமாற்றி சுயலாபம் காண்பதே குறி என்று செயல்படும் ராம்கோபால் கதாபாத்திரம் தமிழ் சினிமா ஆரம்ப காலத்தில் காண வாய்த்த முதல் ஒயிட் காலர் கிரிமினல் பாத்திரம். தமிழ் சினிமாவின் ஒப்பிட முடியாத வில்லத்தனம் பாலையாவின் பரிமாணம். ஏழை படும் பாடு அதற்கொரு உதாரணம்.