ஏந்திழை


ஏந்திழை -ஆத்மார்த்தி.


ஏந்திழை என்பவள் தனியொருத்தியான அழகியல்ல. இந்த மொத்த பிரபஞ்சத்தின் ஒரு பங்கு மட்டுமே நிறைந்த அழகிகளில் அவர்களின் யவ்வனத்தில் இருந்து சொட்டு சொட்டாய் எடுத்து நிறைந்தவள்.
இது ஒரு நாவலுமல்ல.. இது ஒரு கவிதை. மொத்த நாவலும் ஒரு கவிதை. எந்த இடத்திலும் நீர்த்துப் போகாத வெற்றிடமேற்படுத்தாத சுருளக் கிண்டியதொரு கவிதைப் பண்டம்.
முன்னமும் பின்னதுமான நான்லீனியர் என்று எடுத்துக் கொள்வதா? இல்லை நீரொட்டத்தில் அலைவுறும் சருகென நிலை கொள்வதா என புரிபடாததொரு இனிய அனுபவம்.
அங்கு அஃறிணைகள் உயர்திணைக்கு மாறுகின்றன. தொடர்பு படுத்தினால் ஒரு அர்த்தம் மலைக்க வைக்கிறது. இல்லை சரிவராது என சோழிகளை கலைத்தால் வேறொரு பிம்பம் வந்து நேர் நிற்கிறது.
கடலைப் பற்றி ஆயிரம் புரிதல்களில் வரிகள் உண்டு. மலையைப் பற்றிய வரிகள் இது.
‘மலைக்கு மேலே சீக்கிரம் புளிக்கும்,எளிதில் கசக்கும்,உப்பு நஞ்சாகும், குளிரில் உடல் வீங்கும், வெயிலில் கொப்புளிக்கும், கொட்டுகிற மழையில் கண்களிரண்டும் மந்திபோலாகும் மலை என்பது திறந்த சிறை’
இதை வரிகள் மடக்கிப் போட்டால் ஒரு கவிதை நெஞ்சேறும். இப்படி இரு பக்கங்களில் இருபது கவிதை தொடும்.
” நெவர் மனமே” அதை நினைக்காதே’ என்பது ஏந்திழையின் ஒரு சொல். நான் அதை இந்த புத்தகத்தை மூடி வைக்க முடியாமல் அன்றாட வாழ்வில் சிக்கிப் போகும்போதெல்லாம் சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.
‘எதையும் சரியென மெல்ல நிறுவுகிற வழக்காடும் திறமையும் மெளனமும் நெஞ்சமெல்லாம் ஒருமிக்கிறதோ மனிதர்களில் ஆகப் பயங்கரமானவர்கள் அவர்களாய்த்தான் இருப்பார்கள்’
‘ பரமபதம் ஆடும்போது தொண்ணூற்று ஏழில் கொணர்ந்து விடும் ஏணி. 98, 100 என நகர்ந்தால் சுபஜெயம். அதுவே 99 என்றால் பாம்பு கொத்துகிற கொத்தில் ஆறில் வந்து விழ வேண்டியிருக்கும். தோல்வியை விடத் துயரமானது ஆட்டத்தை மறுபடி ஆட நிர்ப்பந்திப்பது’
அப்படியே சரிபாதியாய் பிசிரற்று ரத்தக்கோடிழுத்த மருத்துவ கத்தியைப் போன்ற வரிகள்.
‘குற்ற உணர்வு குற்றத்தோடு சேர்ந்தே நிகழ்கிறது.செய்யும்போது குற்றத்தின் கண்கள் மூடிக்கொள்கின்றன. ‘
‘நெடுங்காலம் பிடிபடாத களவுக்காரனைக் காவலாளி தன் மனதோரத் தில் உபாசிப்பது இயல்பு. காமத்தில்தான் அறியாமையும் தேர்ச்சியும் இருவேற அழகுகளாய் மலர்கின்றன. ஒவ்வொரு முறையுமே முதல் முறையாகத்தான் நிகழ்கிறது. ஒரே மழைதானே அவ்வப்போது பெய்கிறது. ‘
அகானியும் டெர்ரரும் மிருகங்கள்தானா? ரஞ்சனிக்கும் சுந்தரேச ஐயருக்கும் ஏன் அந்த முடிவு? ப்ரதி குணநாயகம் .. எதற்கிந்த பெயரை அவளுக்கு இட்டீர்கள்? இவனது பெயரை கடைசிவரை ஏன் சொல்லாமல் தவிர்த்தீர்கள்? தனீஷை ஏன் முத்தத்தில் நனைய விட்டீர்கள்? துரை ஏன் அந்த முத்தத்திற்கு பின் வேறேதும் வாய்க்காமல் தன் நாட்டுக்கு ஓடிப் போனான்?
இது கதையா? சொக்கரர்நம்பி பாதம் பற்றி சரணடைந்ததை போல் இதை தொழுது தொழுது இதன் சூட்சுமங்கள் வியக்க வேண்டுமா? திருட்டுப்பூனையாய் ஆத்மார்த்தியா, ரவியா இத்தனையில் யார் அந்த ப்ரம்ம ராட்சஷன் என வியக்க வேண்டுமா?
இன்னும் உள்வாங்க வேண்டும் . தாவிக் குதித்து கடந்தாயிற்று. இன்னும் ஒருமுறை அடிப் பிரதட்சணம் செய்ய வேண்டும். நிறைய நானே தெரிந்து கொள்ள வேண்டும். இதற்குதானே இது என புரிந்து கொள்ள வேண்டும். வள்ளியாய் வாழும் வலியை புரிந்து கொண்டதற்கு தனியே இரு மலர்ச்செண்டுகள் தர வேண்டும். கடைசிப் பக்கத்திலிருந்து முதல் பக்கத்திற்கு என்னை மறுபடி இழுக்கத் தெரிந்த சாகசத்திற்கு .. இதையெல்லாம் ஏன் அப்படி கொண்டாடவில்லை என்ற ஆற்றாமைக்கு..
‘ வலது பாதத்தை மண்ணிற்குழியிலிருந்து வெட்டி எடுத்த பெருங்கிழங்கை ஏந்தினாற் போல் முதலில் ஏந்தினான். இப்போது கலயத்தில் இட்ட புதியமீன் தன் உயிரத்தனையும் தேக்கித் துள்ளத் தொடங்குமே அப்படி துள்ளலாயிற்று அவளது வலது பாதம். இளநீர் அருந்தி முடித்த பிற்பாடு இரண்டாய் வகுந்து ஒரு புறக் கலயத்தை கையிலேந்தி தென்னஞ்சுளையை நீர்மமும் காத்திரமுமாய் கலந்து உண்டு பருகுகிறாற் போல அவள் பாதத்தை வலது புறத்திலிருந்து அணுகியவன் அப்படியே அதனைப் பருகிவிட முடியாதா என்றேங்கினான். ‘
மீதத்தை வெள்ளைப் பக்கங்களில் காணுங்கள்.’ இதை கண்டிப்பாக நீ படிக்க வேண்டும் என கட்டளையிட்ட
அண்ணனுக்கு நன்றி
ஓவியம். சம்ஷ்ரிகா. (மகள்)
(நான் கதை சொல்லி உள்வாங்கி வரைந்தாள்)
சவிதா


Open photo 

 

சவீதா சேலம் நகரத்தைச் சேர்ந்தவர்.கவிஞர். பிரிவின் நிமித்தம் எனும் இணையக் கவிநூல் அமேஸான்.இன் தளத்தில் உள்ளது. கைநிறை செந்தழல், யாமத்தில் அடர்ந்த மழை , உபாசகி மூன்றும் பரிதி பதிப்பக வெளியீடுகளாக வந்த கவிதைத் தொகுதிகள்.கட்டுரைகள் மற்றும் சிறுகதைகள் எழுதுவதிலும் ஆர்வம் மிகுந்தவரான சவீதா நூல் விமர்சனங்களிலும் தன் வாசக அனுபவங்களைத் தொடர்ந்து பதிவு செய்து வருபவர். இந்தக் கட்டுரையின் முகப்போவியத்தை வரைந்தவர் சம்ஷ்ரிகா சவீதாவின் மகள். கட்டிட வரைகலையாளராகப் பணியாற்றுகிறார்.