4 உருகினேன் உருகினேன்

தானாய்ச் சுழலும் இசைத்தட்டு
4 உருகினேன் உருகினேன்


அண்ணே அண்ணே என்ற படம் 1983 ஆம் ஆண்டில் வந்தது.

மௌலியின் அறிமுகமான மற்றவை நேரில் பாஸ்கர் மற்றும் வனிதா ஒரு ஜோடி
நீரல்லி ராமகிருஷ்ணா விஜி இன்னோர் ஜோடி. இந்த இரண்டு ஜோடிகளுக்கும் ஆளுக்குப் பாதி பகிர்பாகமாக ஒரு டூயட் பாடல். பாடியது ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களைச் சேர்ந்து பாடிய பின்னரும் தென்னிந்திய ரசிகமகா ஜனங்களுக்கு அலுத்துப் போகாத குரல் இணையான எஸ்பி.பாலசுப்ரமணியம் எஸ்.ஜானகி இருவரின் குரல்கள். இசையமைத்தது இளையராஜா. மௌலி இயக்கி இளையராஜா இசையமைத்தது அனேகமாக இந்த ஒரு படம் தான் என்று எண்ணுகிறேன்.
No description available.
இந்தப் பாடலை எழுதியவர் வாலி. படம் வெளியான வருடம் 1983. இந்தப் பாடல் பெருவலம் வந்ததா என்று தெரியவில்லை. படமும் சுமாராக ஓடியது என்றே நம்புகிறேன். இன்றைக்குக் கேட்டாலும் சட்டென்று வெளியேறி வேறொரு பாடலுக்குள் பயணிக்க விடாமல் பிடிவாதமாய்க் மனத்தைப் பற்றி வைத்துக் கொள்கிற ராட்சஸம் இந்தப் பாடல்.

தீர்மானிக்க முடியாத சிதறலாக திசைகளை அழித்தெறியும் வெள்ளம் போல இந்தப் பாடலின் இசை நகர்தல் அமைந்திருக்கிறது. யூகத்துக்கு அப்பாற் பட்ட நகர்தல்கள். குற்றம் ஏதும் காண முடியாத படி இந்தப் பாடலின் காட்சியாக்கத்தை மேற்கொண்டிருப்பார் மௌலி. பொதுவாகவே பாடல்களைப் படமாக்குவதில் ரசனை மிக்கவர் மௌலி. அடிப்படையில் சினிமாவை எழுதுவதில் பெரும் பற்றுக் கொண்டவரான மௌலி இந்திய அளவில் வெகு இயல்பான நடிப்புப் பாணியை மேற்கொள்வதில் குறிப்பிடத் தகுந்த நடிகர். எத்தனை சின்னஞ்சிறிய பாத்திரத்தைக் கூடத் தன் முகமொழி மற்றும் குரல் ஆகியவற்றின் துணை கொண்டு தனதாக்கிக் கொள்வதில் வல்லவர். சட்டென்று நிலம் தாண்டித் தெலுங்கு சினிமாவில் படபடவென்று பல படங்களை இயக்கி அங்கே மிகவும் புகழ் பெற்ற இயக்குனராக வலம் வந்தார். எண்பதுகளின் பாதியிலிருந்து 90களின் இறுதி வரைக்கும் தெலுங்கில் பரபரப்பாக இயங்கிய மௌலியை மறுபடி எழுத்தாளர் சுஜாதா தயாரிப்புப் பொறுப்பேற்ற மீடியா ட்ரீம்ஸ் நிறுவனத்தின் மெகா திரை முயல்வான பம்மல் கே சம்மந்தம் படத்தின் மூலம் தமிழுக்கு இயக்க அழைத்தனர். அந்தப் படம் குறையில்லா வணிக வெற்றியைப் பெற்றது. சீரான திரையோட்டத்துக்குப் பேர் போனவை மௌலியின் படங்கள். அவர் இயக்கிய மற்றவை நேரில் சரியாகக் கவனம் பெறாத திரைப்படம் எனினும் அது பேச முனைந்த மீறல்கள் அன்றைய காலத்துக்குப் பெரியதும் புதியதுமானவை.

பாடல் வரிகள் இங்கே

பெண் : உருகினேன் உருகினேன் கண்ணனே மன்னனே
உன்னையே எண்ணியே ஏங்கினேன் தினமே

ஆண் : உருகினேன் உருகினேன் கண்மணி பொன்மணி
உன்னையே எண்ணியே ஏங்கினேன் தினமே

உருகினேன்
ஆண் : உருகினேன்
(உருகினேன்)

எந்த ஒரு சொல்லின் மீதும் உள்ளார்ந்த ஈரம் பட்டுவிடக் கூடாது என்று தொட்டும் தொடாமலும் உதடுகளை உலர்த்தியே ஒரு குரலைக் கண்டறிந்து பல்லவியைத் தொடங்கியிருப்பார் பாலு. ஆரம்ப இசையின் அதே ஒரே வெம்மையை முழுவதுமாகத் தன் குரலுக்குள் ஈர்த்துக் கொண்டு அதே இசையின் கூடுதல் வாத்தியம் போலத் தன் குரலை மாற்றிக் கொண்டிருப்பார். இளையராஜாவின் மனமொழியைப் பேசாமலே புரிந்து கொண்டு பாடலினூடே தன் குரலின் வழி அதற்கான பதிலைப் பகிர்ந்த ஒரே பாடகர் பாலு என்பது என் எண்ணம். அதனை மெய்ப்பிக்க பல நூறு பாடல்களை வரிசைப் படுத்த முடியும். இந்தப் பாடல் அதற்கான சான்று. அப்படியான ஒன்று. பல்லவியை ஜானகி எடையற்ற மென்மலர் அசைதல் ஒன்றைக் குரலாக்கினாற் போல் பாடினார். இந்தப் பாடலின் ஆன்மா அதன் முதல் வரியிலேயே முழுமை பெற்று விடுகிறது. மற்ற வார்த்தைகள் வரிகள் யாவும் அந்த முழுமையின் கூடுதல் பிரதியுயிரிகள் மாத்திரமே. குழாயடியில் காத்திருக்கும் குடங்கள் நிறைந்த இற்பாடும் பெய்யத் தானே செய்யும் பெருமழை?

ஆண் : காதல் மோகம் கை கூடுமோ
கண்கள் எழுதும் கனவாகுமோ
பெண் : ஏட்டில் எழுத்தில் இது போல் ஏது
உயிரில் உயிராய் இருப்பாள் மாது

ஆண் : உனையே கோடி கோடி ஜென்மம் சேருவேன்

பெண் : உருகினேன்
ஆண் : உருகினேன்

பல்லவி முடிந்து மீண்டும் சரணத்துக்குள் சென்று சேர்கிற இடத்தைக் குரலால் ஜானகி பாலு இருவருமே மிகுந்த காதல் காய்ச்சலைத் தோன்றச் செய்து பாடியிருப்பர். இந்தப் பாடலைத் தனித்துத் தோன்றச் செய்ய இன்னுமோர் கூடுதல் வசீகரம் உண்டென நம்புகிறேன். பாலு இந்தப் பாடலைப் பாடிய விதம் மலேசியா வாசுதேவனின் தொனிதிசைப் பரவலை ஒத்திருக்கும். வெகு சில பாடல்களில் மாத்திரமே பாலு பிற பாடகர்களின் பாடற்பாணியை சுவீகரித்துப் பாடி இருக்கிறார். இது அப்படியான ஒன்று.

(உருகினேன்)

பெண் : பாவை வடிவில் ஓர் பட்டுப் பூச்சி
பறந்தே நெஞ்சில் விழுந்ததோ
பாவை வடிவில் ஓர் பட்டுப் பூச்சி
பறந்தே நெஞ்சில் விழுந்ததோ

ஆண் : மானோ மீனோ கண் விழி
இந்தப் பெண் விழி

ஏதோ எதுவோ சொல்லுதே
என்னைக் கொல்லுதே

உனக்காக பிறந்தேன்
எனை நானே மறந்தேன்
உனக்காக பிறந்தேன்
எனை நானே மறந்தேன்

ஆண் : மடிமேல் நிறுத்தி
உன்னை தாலாட்டவா
பெண் : உருகினேன்
ஆண் : உருகினேன்

(உருகினேன் )

ஃப்யூஷன் வகைமையில் எதிர்பாராத புதிர்மையைப் பிரித்து இசைத்தாற் போலவே இந்தப் பாடலின் ஊடுபாவு இசைக்கோவைகளை அமைத்திருந்தார் ராஜா. டிஸ்கோ இசை தன் செல்வாக்கின் உச்சத்தில் இருந்த எண்பதுகளின் முற்பாதியில் இந்தப் பாடல் குறிப்பிடத் தகுந்த வேகவாத்தியப் பரவலோடு இன்றும் ஈர்க்கிறது. வாலி தன்னால் ஆன மட்டிலும் இந்தப் பாடலில் மொழியாடி இருப்பார். பாவை வடிவில் ஒரு பட்டுப்பூச்சி என்பதாகட்டும் உயிரில் உயிராய் என்பதாகட்டும் ஸ்ட்ரா நுனியில் பூக்கும் பனிக்கூழ்ப் பரவசத்தைப் படர்த்தியது யதார்த்தம்.

No description available.நீரநல்லி ராமகிருஷ்ணா கன்னட நடிக முத்து. இளையராஜாவின் கண்டுபிடிப்பு. பண்ணைப்புரத்துப் பாண்டவர்களில் அறிமுகம். பாலச்சந்தரின் பொய்க்கால் குதிரை படத்தின் நாயகன். அண்ணே அண்ணே படத்துக்கப்பால் பெரிதாகத் தமிழில் நடிக்கவில்லை. சில வருடங்களுக்கு முன் காதலே என் காதலே மற்றும் நிசப்தம் என இரண்டு படங்களில் பாத்திரங்களை ஏற்று நடித்ததன் மூலம் மீண்டும் வந்தார். ஒச்சமற்ற முக அழகும் நடிப்பார்வமும் கொண்ட ராமகிருஷ்ணா பெரிய அளவில் புகழ் பெற்றிருக்க வேண்டியவர் என்பதில் ஐயமில்லை.

No description available.விஜி தானே தன் முடிவைத் தேடிய அவசரக் கவிதை. துக்கத்தையும் சந்தோஷத்தையும் அதிகரித்துத் தரக் கூடிய முகவார்ப்பு விஜியின் பலம். மூக்குத்தி அணிந்த விஜியின் முகம் எண்பதுகளின் வெள்ளந்திப் பேரழகுக்கான அழகிய சாட்சியம். கோழி கூவுது தொடங்கி சூரியன் வரைக்கும் எத்தனையோ படங்களின் வெற்றியில் நனைகிற வாய்ப்பு விஜிக்குக் கிடைத்தது. தன் பேரைப் போலவே சுருக்கமான வாழ்வை வாழ்ந்து சென்ற விஜி மறக்க முடியாத நடிகை. அவரால் கிராமத்து வேடத்திலும் கச்சிதம் காட்ட முடியும், நகரத்துத் தாரகையாகவும் வலம் வர இயலும். இரண்டு எக்ஸ்ட்ரீம்களுக்கும் பொருத்தமாவது எளிய விடயமல்ல. புன்னகைப் பேரழகு என்றும் விஜியைச் சொல்ல முடியும். கே.ஆர்.விஜயா மற்றும் சினேகா இருவரும் தத்தம் புன்னகைக்காக கொண்டாடப் பட்ட அளவுக்கு விஜியின் புன்னகையைத் தனித்தெடுத்துப் போற்றவில்லை என்று எனக்கெல்லாம் வருத்தமே உண்டு. ஸ்ரீவித்யா மற்றும் விஜி ஆகிய இருவருக்கும் புன்னகைப் பேரரசுப் பட்டங்களில் சமபாகம் அளித்தாக வேண்டும்.

இந்தப் பாடலின் இடையிசை மயக்கும் தன்மையிலான வேக இசைக்கோவைகளால் நிரம்பியிருப்பது. முரண் இசை யூகத்துக்கு அப்பாற் பட்ட நகர்வுகளை முன்வைக்கிறது. இவற்றை எல்லாம் காட்சிகளினூடாக சமன் செய்தது மௌலியின் சாகசம். பாடலின் முற்பாகச் சரணம் நிறையுங்கணத்தை நோக்குகையில் ராமகிருஷ்ணா விஜியைத் தொடர்ந்து நடந்து செல்வார். சொல்வதற்கு ஏதுமற்ற சாதாரணம் போலத் தானே தோன்றுகிறது..? இந்தப் பாடலைப் பார்க்கும் யார்க்கும் மனத்தினடியில் விஜி மற்றும் ராமகிருஷ்ணா இருவருக்கும் இடையிலான காதல் வெறும் பிம்ப நிர்ப்பந்தம் எனும் உண்மையைத் தாண்டி அது நிசமாகவே நிசம் என்று தோன்றும். இசையும் குரலும் முகங்களும் தாண்டிய மனங்களின் கூட்டுப் ப்ரார்த்தனை போலவே நிகழ்ந்தது இந்தப் பாடல்.