அதிசய நூலகம்


                                அதிசய நூலகம்

                                     குறுங்கதை


எங்கே ஷாவ் மூ? அவனைக் காணவேயில்லையே?” என்று கேட்டான் ஷியோ. அவன் கேட்டதைப் பொருட்படுத்தாமல் அடுப்படியில் தேனீர் தயாரிப்பதில் மும்முரமாய் இருந்தாள் ஷெல்ஷி. ஷாவ் மூவுடன் சிறுவயதிலிருந்தே ஒன்றாகப் படித்தவன் தான் ஷியோ. அந்த நாட்டின் ராணுவத்தில் சேர்ந்து இப்போது எட்டு வருடங்களாகின்றன. சென்ற முறை விடுமுறைக்கு வந்தபோது அவனுக்குத் திருமணம் ஆகிற்று.

ஹூம் இப்படி எல்லோரையும் போல என் மகன் ஷாவ் மூவும் இருந்திருந்தால் எத்தனை நன்றாக இருக்கும்” என்று அங்கலாய்ப்போடு அமைதி காத்தாள் ஷெல்ஷி. எதையாவது உருப்படியாகச் செய்தானா..? படம் வரைகிறேன் என்று திரிந்தான்.காட்டுப் பூச்சிகளைப் பாடம் பண்ணுகிறேன் என்று ஒரு காலம் அலைந்தான். பாரம்பரிய இசை கற்றுக் கொண்டான். மரத்தைச் சிலையாக்குவான் கல்லைச் சிற்பமாக்குவான்.

18 of the World's Greatest Libraries

கையில் கிடைக்கிற சிறு குப்பையிலும் கலையாய்க் காண்பதற்கான கண்கள் வாய்த்தவன் ஷாவ் மூ“பாராட்டிக் கொண்டே சென்றான் ஷியோ.

தாளவொண்ணாமல் “இந்தா தேநீரைக் குடித்து விட்டு இடத்தைக் காலி செய்.அதிகம் பேசுவதை இன்னமும் நிறுத்தவில்லை நீ” என்று செல்லமாய்க் கடிந்துகொண்டாள். அவளும் ஷியோவுக்கொரு அம்மா தான். சிறுவயதில் இருவரும் கட்டிப்புரண்டு சண்டையிடும் போது தன் மகன் என்று ஷாவ் மூவுக்கு சாதகமாகப் பேசாதவள் ஷெல்ஷி. ஆளுக்கொரு அறை. அப்புறமாய் சமாதானம். அவள் கண்டிப்பான ஆசிரியை. மகன் கண்டதைப் படித்தும் பண்டிதனாகவில்லை.

அப்போது தன் குடையை மடக்கிக் கொண்டே வந்து சேர்ந்தார் ஹா-வின்.
வணக்கம் அப்பா” என்றான் ஷியோ.
என்னப்பா உன் தலை தெரிகிறது அதிசயமாக..அந்தப் பயலும் திரும்பி விட்டானா” எனக் கேட்டார்.

அவர் குரல் ஏமாறத் தயாராகவே அதைக் கேட்டது.

இல்லை அப்பா நான் விடுமுறையில் வந்தேன் அதனால் பார்த்துவிட்டுச் செல்லலாம் என்று தான்

என இழுத்தவனிடம் ஹா-வின் தன் முக ஏமாற்றங்களைக் காண்பித்துக் கொள்ளாமல் “சாப்பிட்டாயா?” எனக் கேட்டார்

இல்லை தேநீர் போதும் என்று சொல்லிவிட்டான்” என்றாள் ஷெல்ஷி.

அவன் அப்படித் தான் சொல்வான். சாப்பாடு தயார் செய்யத் தொடங்கிவிட்டாய் அல்லவா” என அவளிடம் கட்டளைத் தொனியில் கேட்டு விட்டு மீண்டும் ஷியோவின் புறம் திரும்பியவர் “உன் நண்பனும் உன்னைப் போல் இருந்திருக்கலாம்” என்றார் பெருமூச்சொன்றை உதிர்த்தவாறு.

தன் சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்ட அவர் மூக்குக் கண்ணாடியைக் கழற்றி அதற்குண்டான பஞ்சுத் துகளால் துடைத்தபடி அவனைப் பார்த்துச் சிரித்தார்.

அவனுக்கு இன்னேரம் திருமண ஏற்பாடாவது ஆகியிருக்கும் என்றல்லவா எண்ணினேன் “என்று பொதுவாய்ச் சொன்னான் ஷியோ.
அட நீ வேறப்பா…அவன் எங்கே போயிருக்கான்னு தெரிஞ்சா நீ திகைச்சுப் போவே. இந்த உலகத்தின் ரகசிய நூலகம் ஒன்று ஏழு கடல் ஏழு மலைகளைத் தாண்டிய தீவொன்றில் இருக்கிறதாம். இப்படியான இடங்களுக்குப் புதையல் தேடிப் புறப்பட்டவர்களே வீடு மீண்டதில்லை. உலகின் வேறு எங்கேயும் கிடைக்காத நூல்கள் எல்லாம் அங்கே மட்டும் தான் கிடைக்கும் என்று யாரோ எப்போதோ எழுதி வைத்திருப்பதைப் படித்து விட்டு மடிந்தாலும் அங்கே தான் மடிவேன் என்று கிளம்பிச் சென்றிருக்கிறான். மாதங்கள் ஆகிவிட்டன. ஒரு தகவலும் இல்லை. அப்படி ஓரிடம் எங்கே இருக்கிறது என்பதே யாருக்கும் தெரியவில்லை. எப்போது வருவான் எப்படி இருக்கிறான் என எதுவுமே தெரியாமல் ஒரே இருளை அர்த்தமற்று வெறித்துக் கொண்டிருக்கிறோம்” என்றார். அவர் குரல் தழுதழுத்தது.

அதன் பின் அவர்கள் வேறேதெல்லாமோ பேசிக் கொண்டார்களே தவிர மறந்தும் ஷாவ் மூ பற்றிப் பேசவே இல்லை. வயதான பெற்றோரை இப்படி நீங்கிச் செல்வானா ஒருவன் என்று ஷியோவுக்கு முதல் முறையாக நண்பனை நினைத்ததும் கோபம் பெருகிற்று.

சாப்பிட்டு விட்டுக் கிளம்பும் போது “எதற்கும் கவலைப்படாதீங்க. அவன் பத்திரமா வந்திடுவான். எனக்குத் தெரிஞ்ச வட்டாரங்களில் சொல்லி அவனைத் தேடச் சொல்கிறேன்” என்று சமாதானம் சொல்லி விட்டுக் கிளம்பினான்.

அடுத்த சில தினங்களில் மீண்டும் ராணுவ முகாமுக்குத் திரும்புவதற்காகப் புறப்பட்டான். சில தினங்களில் ஊரையும் தன் மொத்தக் கதையையும் கூடவே ஷாவ் மூவையும் சேர்த்து மறந்தான்.

அடுத்த இரண்டு வருடங்கள் கழித்து தான் மறுபடி விடுமுறை வாய்த்தது ஷியோவுக்கு. தயங்கியபடியே ஷாவ் மூவின் வீட்டு முன் நின்று கதவுகளை அரைசப்தத்தோடு தட்டினான்.

சற்றைக்கெல்லாம் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தவன் ஷாவ் மூ.

குப்பென்று சந்தோஷத்தில் முகமெல்லாம் ரத்தம் பாய “அடேய் நண்பனே வந்துவிட்டாயா” என்றான் ஷியோ.

இருவரும் அளவளாவிக் கொண்டார்கள். உணவருந்திவிட்டுக் காலாற நடந்தார்கள். தோட்டத்தைத் தாண்டி மரப்பாலத்தில் நடக்கும் போது

நண்பா சென்ற முறை வந்தபோது உன் தந்தை மிகவும் கலங்கிப் பேசினாரடா..நீ எங்கே திரும்பி வராமல் போய்விடுவாயோ என்று நான் கூடப்பயந்தேன்” என்றான்.

ம்ம் என்று பதிலேதும் சொல்லாமல் எங்கோ பார்த்தான் ஷாவ் மூ

ஆமாம் உலகத்தின் அதிசயமான நூலகம் ஒன்றைத் தேடிப் புறப்பட்டாயாமே..? கண்டடைந்தாயா?“என்று கேட்டான். ஒரு அதிசயத்தைத் திறந்து பார்க்கும் ஆவல் அவன் குரலில் தொனித்தது.

நண்பா. அப்படி ஒரு நூலகம் உலகில் எங்கேயும் கிடையாது. அவரவர் மனம் தான் அது. பல தூரம் சென்ற பிறகு தான் அதனை உணர்ந்து கொண்டேன். என் மனத்தைச் சுமந்துகொண்டு திரும்பிவிட்டேன்” என்றான் ஷாவ் மூ