எனக்குள் எண்ணங்கள் 8

எனக்குள் எண்ணங்கள்
8 யுவராணி


முதன் முதலாக யுவராணி நடித்த படம் என்று பார்த்தது ஜாதிமல்லி படத்தைத் தான். கம்பன் எங்கு போனான் பாடல் அதிரி புதிரி ஹிட். அதில் யுவராணியைப் பார்த்ததுமே மனசு ஹார்ட்டு இன்னபிறவெல்லாம் பறிகொடுத்தாயிற்று.

நானொரு ரஜினி ரசிகன். எங்கள் திருநகரில் நாங்கள் மொத்தம் பதினேழு வகையான ரசிகர்களாகப் பகுபட்டுக் கிடந்தோம். ரஜினி கமல் விஜய்காந்த் சத்யராஜ் ராமராஜன் என்று பலருக்கும் ரசிகர்களாக இருந்தோம். ஆதி கார்த்திக் ரசிகன். குணா ஜெயா இருவருமே கமல் ரசிகர்கள். எனக்கு நினைவறிந்து பிரபுதேவா ரசிகன் என்று தன்னை தாம்சன் என்பவன் சொல்லிக் கொண்டான். அனேகமாகத் தென் திசையின் முதல் பிரபுதேவா ரசிகன் அவனாகத் தான் இருக்கக் கூடும். சினிமாவின் செல்வாக்கு யாருக்கெல்லாம் ரசிகர்கள் அனேகம் என்பதில் இருப்பதாக ஒரு மாயத்தோற்றம் காலங்காலமாய்த் தொடர்வது தானே?

பயங்கரமான வார்த்தை யுத்தங்கள் வரும். அவரவர் தலைமையின் வழக்குரைஞர்களாகவே செயல்படுவோம். தேவையில்லாம எங்காள் பத்தி நீ பேசாத. உங்காள் பத்தி நா பேசலை என்பதான மௌன ஒப்பந்தம் சாலச்சுகம். அப்படி மௌனம் எட்டப்படாத நாட்களில் நிசமாகவே கீறலும் திறப்புமாய் ரத்தம் பார்க்கும் வரை ரசனைகள் ஓய்வதில்லை. அடித்து சண்டையிட்டுக் கொள்வதற்கான மிக முக்கியக் காரணம் தன் அபிமான நடிகரைப் பற்றி யாராவது தன் காதுபடக் குறைத்து இழித்துப் பேசுவது தான். அதெப்படி ஸார் விட முடியும்..?

அஜீஸூம் கரடி பாலுவும் கிட்டத் தட்ட இரண்டு வருடங்கள் பேசிக் கொள்ளவே மாட்டார்கள். பேசாமலே ஒரு நட்பைப் பெரிய மனுஷத் தோரணையோடு பரஸ்பரம் பராமரித்துக் கொண்டனர். காரணம் ஒரு படம் வெற்றிவிழா. அஜீஸ் கமல் ரசிகன். கரடி பிரபு ரசிகன். அவனுக்குக் கரடி எனப் பெயர் வந்ததன் பின்னால் ஒரு சின்னக் காரணம் தான். கபடி விளையாடும் போது தான் பாடிச் செல்கையில் வேண்டுமேன்றே கபடிக் கபடி என்பதற்குப் பதிலாகக் கரடிக் கரடி என்று பாடிச் செல்வான். எத்தனை சொன்னாலும் மாற்றிக் கொள்ளவில்லை. அதுவே அவன் பெயரின் முதற்சொல்லானது. எங்களூரைப் பொருத்தமட்டில் அவன் கரடிபாலு தான். வீட்டு வாசலில் நின்று கொண்டு கரடி என்று கத்தினால் தான் கதவைத் திறப்பான் பாலு என்றால் கூட எஸ்பிபாலசுப்ரமணியத்தில் தொடகிப் பாலு ஜ்வெல்லர்ஸ் அதிபர் வரைக்கும் வேறு யாரையோ அழைப்பதாகக் கடப்பான். இந்தப் பிறவியில் அவனுக்கும் கரடிக்குமான மாயாதி பந்தம் அது.

எப்போதாவது உலகம் பண்படும். அமைதியுறும். கூடிப் பேசும் போது முக்கியமாக ஒருவருக்குப் பிடித்த நடிகர் பற்றிப் பிறர் குறைவாகப் பேசக் கூடாது என்பதை ஒரு உத்தரவு மாதிரி நடைமுறைப் படுத்த வேண்டி வந்தது. ஒருவழியாக அமைதி கூடியிருந்த காலகட்டத்தில் தான் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் விநீத் உடன் யுவராணி நடித்த ஜாதிமல்லி படம் வெளியானது. படம் ஒன்றும் பெரிதான வெற்றிப் படம் அல்ல. அதில் முகேஷூம் குஷ்பூவும் ஒரு ஜோடி. இன்னொரு இளைய ஜோடி தான் யுவராணி மற்றும் விநீத் இருவரும். விநீத் அப்போது அவரது நடனத்திறனுக்காகக் குறிப்பிட்டுப் போற்றப் பட்டுக் கொண்டிருந்த புதுமுகம்.1992 ஆமாண்டு விநீத் நடித்து தமிழில் அறிமுகமான படம் ஆவாரம்பூ. தேசிய விருது பெற்ற இயக்குனர் பரதனின் இயக்கத்தில் இளையராஜா இசையில் பாடல்கள் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. படமும் பெரிதாகத் தப்புப் பண்ணவில்லை. அவர் நடிப்பு அந்தப் படத்தில் அபாரம்.

ஸோ…விநீத் மற்றும் யுவராணி இருவரும் நடித்து வெளியான ஜாதிமல்லி படத்தின் வருகைக்கு அப்பால் ஒரு நாள் முனீஸ் தான் முதலில் ஆரம்பித்தான். ஜாதிமல்லி படத்துல அந்த ஈரொயின் செமை அழகுய்யா என்றான். அப்போது இளங்கோ டீக்கடையில் எங்கள் குழுவினர் கிட்டத் தட்ட பதினோரு பேர் இருந்தோம். அந்தப் பதினோரு பேருமே யுவராணியின் ரசிகர்களாகத் தங்களைச் சொல்லிக் கொண்டோம். இது மேலோட்டமாய்ப் பார்த்தால் சாதாரண தகவலாய்த் தோன்றலாம். ஆனாலும் போர்க்குணமும் ரத்த வெறியும் மிகுந்த பதினோரு பேர் ஒரு கொற்றத்தின் கீழ் குடையின் கீழ் வருவதெதுவும் சாதாரணமா..? முதலில் முனீஸ் இந்தக் கேள்வியைக் கேட்கும் போதே யாராவது எதாவது யுவராணி பற்றியும் நெகடிவ் ஆகப் பேசப் போகிறோம் என்று தான் நினைத்து ஆரம்பித்திருந்தான். ஆனால் ஏமாற்றம். எல்லோருக்குமே யுவராணி என்றால் பிடித்திருப்பதாகச் சொல்லப்பட்டதும் நொந்து போனான்.

மொத்தம் இருபத்தி ஒன்பது பேர் ஸ்வாமி. நம்ப எனக்கே கஷ்டமாக இருக்கிறது ரஜினி தொடங்கி ராஜ்கிரண் வரை பிரபு தொடங்கிப் பிரபுதேவா வரை திசைகளாய்ப் பிரிந்து கிடந்த நாங்கள் யாவரும் ஓரழகால் ஒன்று திரண்டோம். பேரழகால் பொதுவானோம்.
Tamil Hot Actress Hot Vidoes: Yuvarani Hot Sexy Photos Vidoes Biography 2011

சிரஞ்சீவி நடித்த முட்டா மேஸ்திரி தமிழில் டப்பிங்கு ஆகி மாண்புமிகு மேஸ்திரி ஆக வெளியானது. மதுரையின் மாபெரிய தேட்டர்களில் ஒன்றான செண்டிரலில் வந்தது. அந்தப் படத்தில் யுவராணி தான் சிரஞ்சீவியின் தங்கையாகத் தோன்றியுள்ளார் என்ற சேதி கிடைத்ததுமே நாங்கள் மொத்தம் பதினாறு பேர் ஒரே குழுவாய்க் கும்பலானோம். சேர்ந்து போய் அந்தப் படத்தைப் பார்த்தோம். திரையில் யுவராணி வரும் காட்சிகளிலெல்லாம் ஆர்ப்பரித்தோம். ச்சே….மீனா ரோஜாவுக்கெல்லாம் பாட்டு இருக்குது. நம்ம தலைவிக்கொரு பாட்டுக் கூட இல்லை என்று முனீஸ் கவலைப்பட்டதை ஆமோதித்தோம். சிரஞ்சீவி ரசிகர்கள் ஆந்திரா அளவுக்கு மதுரையில் இல்லாமற் போனபடியால் எங்களது யுவராணி ரசிக ஆரவாரங்களை எதிர்க்க ஆளே இல்லை. (போதாக் குறைக்கு அந்தப் படத்தில் சிரஞ்சீவிக்குத் தமிழில் குரல் தந்திருந்தவர் டெல்லிகணேஷ்.) இது எங்கள் ஸ்டேட்.

கமலின் தீவிர ரசிகனான தாமரைப்பாண்டி எங்களோடு பாட்ஷா படத்துக்குக் கிளம்பி வந்த போது நாங்கள் அலெர்ட் ஆனோம். நீ எதுக்குய்யா என்று எதிர்ப்பைப் பதிவு செய்தோம். அட நான் யுவராணிக்காகப் பார்க்க வர்றேன்யா என்று புதிய காரணத்தைத் தொட்டெடுத்தான் தாமரை. அவனை எங்களால் ஒதுக்க முடியாது. நாங்கள் எல்லோருமே யுவராணி ரசிகர்கள் தானே..? அப்படியே நிகழ்ந்தது பாட்ஷா படம் பார்க்கும் வைபவம். தாமரைப் பாண்டியைப் பொருத்த மட்டிலும் யுவராணி தான் பாட்ஷா படத்தின் மையக் கதாபாத்திரமே என்பான். ஆனந்தராஜ் கிட்டே அடிவாங்கிட்டு அமைதியா போவுற ரஜினி மறுபடி ஆனந்த்ராஜைத் துவைக்கிறதுக்கு யார் காரணம்..? யுவராணி தான். அதேமாதிரி தமிழ் நாட்ல யார்ட்டயுமே தான் வெறும் மாணிக்கம் மட்டும் தான் அப்டின்னு பொய்ய மெயிண்டெய்ன் செய்திட்டிருக்கிற ரஜினி தமிழ் நாட்லயே ஒரே ஒரு ஆள் கிட்டே தான் தன்னைப் பத்தி தான் ரியலா பாட்ஷா அப்டின்ற உண்மையை சொல்வார். அந்த ஒரு ஆளு காலேஜ் கரஸ்பாண்டெண்டு சேது விநாயகம். அதுக்கு பின்னாடி இருக்கிற காரணம் யாரு…எங்க தலைவி யுவராணிய்யா…என்று ஒரே கதையின் வேறு பரிணாமத்தை எடுத்து வைப்பான். கேட்டுக் கொண்டிருக்கும் எங்களுக்கே கூட ஆமாம்…இவன் சொல்றது தான் கரெக்டு என்று தோன்றும் வரை விட மாட்டான்.

சின்னச்சின்ன சேதி சொல்லி வந்ததொரு ஜாதி மல்லி என்ற பாடல் செந்தூரப் பாண்டி படத்தில் இடம்பெற்றது. அந்தப் படத்தின் நாயகர் இளையதளபதி விஜய். கேப்டன் அதில் கவுரவத் தோற்றம். ஆனால் நாங்கள் பார்த்ததன் பின்புலக் காரணம் யுவராணி ஒன்லி. அந்தப் பாடல் ஓடி முடித்ததும் எழுந்து வந்து விடுவான் முர்ளி. இப்படி அவன் தொடர்ந்து பத்து முறை அந்தப் படத்தைப் பார்த்தான். யுவராணி ரசிகர்களிலேயே எமரால்ட் டைமண்ட் கிளப் உறுப்பினராக முன் வந்து முதல்வனானான். சின்ன சின்ன இடங்களைத் தொட்டு வைக்கிறாய் சேலை மட்டும் பாவம் என்று விட்டு வைக்கிறாய் என்று சின்ன மேடம் படத்தில் ஒரு பாட்டு வரும். அந்தப் பாடலைக் கண்களால் விழுங்கினோம். மனத்தால் செரித்தோம். வாழ்வின் அனேக திசைகளாய்ப் பூத்த பாடல் அது.

அதென்னவோ ஒரு பளீச் புன்னகை முகமெல்லாம் சேர்ந்து சிரிக்குதுப்பா என்பான் முனீஸ். அத்தனை இன்னொஸெண்டா வேற யாராலும் சிரிக்க முடியாது என்பான். யுவராணி நெடுங்காலம் பெரிய படங்களில் கதா நாயகியாக நடித்தாரா என்றால் இல்லை என்பதே பதில். ஆனாலும் எங்கள் வாழ்வின் காய்ச்சல் மிகுந்ததொரு காதல் காலத்தின் சர்வ சக்தி வாய்ந்த தேவதை யுவராணி. அதற்கு முன்னும் பின்னும் எங்களைப் பிளவு படுத்த ஆயிரமாயிரம் காரணங்கள் வந்து கொண்டே இருந்தாலும் எங்களை ஆற்றுப்படுத்திய ஒரே ஒரு பொதுக் காரணி யுவராணி. எங்கள் யாவர்க்குமான யுவகால தேவதை. எங்களூரில் தேர்தலில் நின்றிருந்தால் நிச்சயமாக அன் அபோஸ்ட் ஆக வென்றிருப்பார் யுவராணி. அத்தனை அபிமானிகள் அவருக்கு இருந்தோம்.

பசும்பொன் படத்தில் தாமரப் பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்லை பாடலாகட்டும் செல்லக்கண்ணு படத்தில் வண்டியில மாமம்பொண்ணு பாடலாகட்டும் யுவராணி தோன்றும் பாடல்களை எல்லாம் தனியே கத்தரித்து மனதுக்குள் மந்தரித்துக் கொண்டோம். கேட்கும் வாய்ப்புகளில் கூடக் கண்களை மூடி யுவராணியைப் பார்க்கும் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொண்டதெல்லாம் மேஜிக் மொமெண்ட்ஸ்

டாட்டூஸ் எல்லாம் பிரபலமாகாத வேறொரு காலத்தில் தினமும் கலர் கலராய்ப் பேனா கொண்டு தன் மணிக்கட்டில் யுவராணி என்று அழுத்தமும் திருத்தமுமாய் எழுதிக் காட்டுவான் முனீஸ். என்னடா இன்னிக்கு எழுதலியா என்று கேட்டால் வேறொரு இடத்தில் எழுதியிருக்கும் பெயரைக் காட்டுவான். எழுதாமல் ஒரு நாளும் இருந்ததே இல்லை. பல வருடங்கள் முனீஸ் அந்தப் பேரை ஒரு உற்சவம் போலத் தாங்கித் திரிந்தான். என்ன செய்தாவது தன் நிழலைத் தாண்ட முடியாதா என்பது போன்ற குழந்தை ஏக்கம் அது. சொல்லத் தெரியாத மற்றும் சொல்லத் தேவையற்ற அபிமானம் அது.

முனீஸூக்கு 2000 ஆம் ஆண்டில் திருமணம். நாங்கள் வெவ்வேறு திசைகளில் பிரிந்து காரணங்களின் பின்னே ஒளிந்து கொண்டிருந்த காலம். இப்படிக் கலியாணம் காதுகுத்து என எப்போதாவது கிடைக்கும் காரணங்களைப் பற்றிக் கொண்டு திரும்பிச் செல்ல முடியாத தெய்வாம்ச இருளை வியந்து கொண்டும் ஏங்கிக் கொண்டும் பழங்கதைகளைப் பேசிக் கொண்டும் கூடிக் கலைவதைப் பெரிதும் விரும்பினோம். ஒருவகையில் அது எங்கள் ஜமாவின் அலும்னி சந்திப்புத் தான்.

முனீஸ் கலியாணம் மூலக்கரை தனமணி ஹாலில் நடந்தது. எங்களை விட மூன்று வயது மூத்தவன் என்பதால் அது அவனுக்குக் கலியாணக் காலம் தான். முதல் நாள் ரிசப்சனுக்கே எல்லோரும் ஆஜராகி விட்டோம். குடிப்ரியர்களுக்கு தனியாக பார்ஸல் செய்து பாட்டில்களை வழங்கிவிடுவதாக முனீஸ் சத்தியம் செய்தபடியால் யாருமே குடிக்காமல் ஒழுங்கு காத்தது விசேஷம். எல்லோரும் ஒரே வரிசையாக அமர்ந்து பேசிச் சிரித்துக் கொண்டிருந்தோம்.

கர்டஸிக்காக எங்களைத் தேடி வந்து உபசரிப்புச் சொற்களை உதிர்த்தான் முனீஸ்..,பெண்ணை அலங்காரம் செய்து அப்போது தான் மேடைக்கு அழைத்து வந்திருந்தார்கள். எல்லோரின் கவனமும் இயல்பாக மேடையை நோக்கிற்று. ராகவனுக்கும் எனக்கும் மட்டும் கேட்கும் படியான வெட்கம் கலந்த குரலில் முனீஸ் சொன்னான். அவ பேரு ரங்க நாயகி. வீட்ல கூப்டுற பேர் என்ன தெரியுமா..? யுவராணி என்றான். மேடையை நோக்கிச் சென்று விட்டான். ராகவன் பொறுப்பாக எங்கள் எல்லோரிடமும் இந்த ராணி ரகசியத்தை சொல்லிக் கொண்டிருந்ததை மேடையில் இருந்தபடியே பார்த்து அவஸ்தையாக சிரித்துக் கொண்டான் முனீஸ்.

இன்றைக்கும் செந்தூரப்பாண்டி அல்லது ஜாதிமல்லி படத்தின் காட்சிகளை எங்காவது கடக்க நேர்ந்தால் எங்கள் மானசீக யுவராணி ரசிகர் மன்றத்தின் அத்தனை அங்கத்தினர்களின் ஞாபகமும் ஒருங்கே வந்து வந்து போகிறது. ஆயிரம் சொல்லுங்க ஸார். முனீஸ் சொல்வதைப் போல் அத்தனை இன்னொஸெண்ட் ஆன சிரிப்பு வேறாராலும் சிரிக்க முடியாதுல்ல..?