எழுத்தாளர் இரா.முருகனின் பார்வையில் மிட்டாய்பசி

மிட்டாய் பசி – ஆத்மார்த்தி


மதுரையில் தொடங்குகிறேன்.

மதுரைக்கு நாற்பத்தெட்டு கிலோமீட்டர் அருகே சிவகங்கையிலிருந்து வருகிறவன் நான். மதுரைக்காரரான ஜி.நாகராஜன் எழுதி அறுபதுகளில் வெளிவந்த நாவலான நாளை மற்றுமொரு நாளே நூலை சிவகங்கையில் என் ஆசான் அன்னம் பதிப்பகம் கவிஞர் மீரா எனக்கு அறிமுகப்படுத்தினபோது சொன்னது – இது அசல் மதுரை நாவல். எப்படி நீல.பத்மநாபனின் பள்ளிகொண்டபுரம் திருவனந்தபுரம் நாவலோ அப்படித்தான் இதுவும். நாவலில் ஒரு அடர்ந்து நிற்கும் கதாபாத்திரமாக நிகழும் நகரம் ஆவது எத்தனை பேருக்கு வாய்க்கும். மதுரைக்கார ஜி.என்னுக்குக் கிடைத்தது. இன்னொரு மதுரைக்காரர் ஆத்மார்த்திக்கு இப்போது மிட்டாய் பசி மூலம் கிடைக்கிறது.

மிட்டாய் பசி மதுரையில் இருந்து சென்னை, மும்பை, தில்லி என்று நீள்கிறது. இந்தக் கதை நாயகன் பதின்ம வயதுக்காரன். மிட்டாய் பசி 1980களில் தொடங்கி, கிட்டத்தட்ட பத்தாண்டுகள் நடந்தேறுகிறது. ஊமச்சிகுளம், மாவடி, அழகர் நகர், ஆத்திகுளம், கண்ணன் நகர், புதூர் என்று மதுரையின் புறநகர்களிலும் நிகழும் நாவல் இது. மதுரைக்காரர்களுக்கே உரிய துல்லியமான வார்த்தை வெளிப்பாடுகள் அங்கங்கே தெறிக்கின்றன –
அவங்களை ஒருமுறை கல்பனா தேட்டர்லே கிழக்கே போகும் ரயில் பாத்துட்டு வரச்சொல்ல சிம்மக்கல் பழக்கடை கிட்டேயிருந்து பார்த்தேன்.

நாளென் செயும் வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயும்

என்று கந்தரலங்காரத்தில் குமரேசன் தாளை போற்றுவார் அருணகிரியார்.

நாளும் கோளும் கூற்றும் பிறக்க முன்பிருந்தே தந்தையும், பெற்றுப்போட்ட தாயும், சுற்றமும் நட்பும் எதிர்த்து வினையாற்ற சூழ்நிலை மூலம் குற்றவாளி ஆன ஒரு பதின்ம வயது பையன் தண்டிக்கப்பட்டு, தன்னை சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிய பள்ளித்தோழனை நெடுங்காலம் கழித்து சந்திக்கும்போது என்ன ஆகிறது என்பது தான் மிட்டாய் பசி.

மதுரை என்றதும் கோவிலும், திருமலை நாயக்கர் மஹாலும், தண்ணீரில்லாத வைகை நதி மணல் படுகையும் நினைவிலும் எழுத்திலும் வரும். மதுரையின் அடையாளம் இவை மட்டுமில்லை என்கிறார் ஆத்மார்த்தி. எண்பதுகள் வரை திடமாக நின்ற சினிமா தியேட்டர் அடையாளத்தைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறார். நாற்பதுக்களின் இரண்டாம் உலக மகாயுத்தகாலத் தலைமுறை சிந்தாமணி தியேட்டர் பக்கம் என்று தியேட்டர் அடையாளம் காணத் தொடங்கியது நாற்பது வருடம் தொடர்ந்தது. ஆத்மார்த்தி நாவல் தொடங்கும் முன்பே சமர்ப்பணம் பக்கத்தில் சொல்கிறார் – சமர்ப்பணம் நான் படித்த பள்ளிக்கூடங்களுக்கும், சினிமா தியேட்டர்களுக்கும்.

பள்ளிக்குப் போகாமல் தியேட்டரில் மேட்னி ஷோ பார்க்கப் போகிற மாணவன் ஆச்சரியமானவனில்லை. லீவு போட்டுவிட்டு அதே மேட்னிஷோவுக்கு குடும்பத்தோடு வந்திருக்கும் வாத்தியார் வித்தியாசமானவர். அவர் பால்கனியில் இருந்து கீழே பார்க்க மாணவன் மாட்டிக் கொள்கிறான். இனிமேல் தான் ஆத்மார்த்தியின் கைவண்ணம். ஆசிரியர் கீழே வந்து கும்பலுக்கு நடுவே ஊடுறுவி மாணவனுக்கு உடனடி நீதித் தீர்ப்பு அருளுகிறார். இந்த வித்தியாசமான சித்தரிப்போடு காட்சி முடிவதில்லை. எப்படியும் நாளைக்கு ஸ்கூல் போனால் தண்டனை கிடைக்கும், அதற்கு இப்போது கிடந்து கவலைப்படுவானேன் என்று பையன் இண்டர்வெல்லுக்கு அப்புறம் படம் தொடர்ந்து பார்க்கிறான். அவன் மட்டுமில்லை, வாத்தியாரும் தான். இந்தக் காட்சியை ஆத்மார்த்தியிடம் சிலாகித்தேன். “நான் ஸ்கூல் கட் அடிச்சுட்டு மேட்னி போய் மாட்டிக்கிட்டேன்” என்றாரே பார்க்கலாம்.

இப்படி கதை நாயகன் பதின்ம வயது ஆனந்தும் அவனை எழுத்தில் வடித்த ஆத்மார்த்தியும் அவ்வப்போது ஒன்று கலந்து விலகி மீண்டும் தொட்டுப் போக வைக்கும் ரசவாதத்தில் வெகுவாக வெற்றி பெறுகிறார் ஆத்மார்த்தி. சொந்த ஊர் ஊடாடி வரும் புனைவு என்பதால் சொந்தக் கதையும் புனைவு அரிதாரம் பூசி அங்கங்கு வருவது இயற்கை. மிட்டாய் பசியில் ஆத்மார்த்தியைத் தேடுவது சுவாரசியமானதாக இருக்கும்.

இந்திய மொழிகளில் ஊர் வனப்பு சொல்லும் புனைவிலும் அல்புனைவிலும் உணவு வாடையும் சுவையும் இல்லாமல் போகாது. அதுவும் தூங்காநகரமான மதுரை பற்றிக் கதைக்கும் போது நாளங்காடியிலும் அல்லங்காடியிலும் கிடைக்கும் உணவு பற்றி எழுதாமல் முடியாது. அது பெரும்பாலும் சைவ உணவாக இருக்கும். ஒரு மாறுதலுக்காக மிட்டாய் பசி மதுரையின் அசைவ உணவுப் பாரம்பரியத்தைக் கொண்டாடுகிறது.

வான்கோழி, காரமான முட்டைக் குழம்பு, ஆட்டுத் தலைக்கறி. சமையலறை விட்டத்திலிருந்து கயறு கட்டித் தொங்கவிட்டு காயவைத்து, குமுட்டி அடுப்பில் ராப்பூரா வேகவைத்த ஆட்டுக்கால் கொண்டு சமைக்கும் சூப், நெஞ்சுக்கறி, கொத்திய முட்டை புரட்டா, மட்டன் குழம்பு, ஈரல் வதக்கல், நெஞ்சு கூட்டு, வெங்காயமும், மிளகும், சற்று தூக்கலாக மிளகாயும் போட்ட குடல் கூட்டு, சமைத்த ஆட்டு நாக்கு என்று மிட்டாய் பசி ஆகாரப் பசியும் கூட. எழுபதுகளின் மதுரை கோனார்மெஸ் மெனு அத்தனையும்;

பாத்திர சித்தரிப்பில் ஆர்க்கிடைப், ஸ்டீரியோடைப் கதாபாத்திரங்களைத் தூக்கிக் கடாசிவிட்டு ஆத்மார்த்தி சித்தரிக்கிற வித்தியாசமானவர்களில் ஆனந்தின் அம்மா செல்லம்மா முக்கியமானவள். தன் உயிர் சிநேகிதி கூட இருந்தே சூழ்ச்சி செய்து கணவனைக் கவர்ந்து போகிறாள். அவன் மேல் கோபம் வராத செல்லம்மா அவன் மூலம் பெற்ற ஆனந்த் மேல் மறைமுகமாக அந்தக் கோபத்தைத் திசை திருப்புகிறாள். பள்ளியில் சிறு பூசலுக்காக டி.சி கொடுக்கிறதாக மிரட்டும் பாதிரியார் சொன்னதுமே மகனை பள்ளியிலிருந்து நீக்க டி.சி வாங்கிக் கொண்டு வரும் செல்லம்மா அதை ஒரு சாதனையாகக் காண்பது ஆனந்தின் மறைந்த அப்பா மேல் ஒருவழியாக வஞ்சம் தீர்ப்பது. இதன் அதீதம் அப்பப்போது வலிப்பு வரும் ஆனந்தைக் கைகழுவி விட்டு இன்னொரு கல்யாணம் செய்து கொண்டு போகும் தன்முனைப்பு. இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் செல்லம்மா தன் மகன் ஆனந்த் மேல் பாசம் வைக்கவில்லை. அவனுடைய அத்தை திலகாவோ அவன் மேல் அன்பைக்கொட்டி வளர்க்கிறாள். ஆனாலும் ஆனந்துக்கு செல்லம்மா மேல் பிரியம். திலகாவிடம் செலுத்துவது நடைமுறை குறைந்தபட்ச அன்பு என்று வேண்டுமானால் கொள்ளலாம்.

ஆசிரியர் அருள் ஜெபதுரை இன்னொரு வித்தியாசமான கதாபாத்திரம். சம்பளத்தில் ஆறில் ஒரு பங்கை யாசகர்களுக்கு தருவார். ஏழைப் பிள்ளைகளுக்கு இலவசமாக டியூஷன் எடுப்பார். அதோடு பசங்களுக்கு தண்டனை தருகிறேன் என்று டின் கட்டுகிற கார்பரொல் பனிஷ்மெண்ட் விரும்பி. அதுவும் பையன் சொல்வதைக் கேட்காமல் அடித்து துவைத்து துவம்சம் செய்யும் ரகம். Who dares, he kills என்ற சமன்பாட்டின்படி, குற்றம் செய்யக்கூடியவனா, செய்திருப்பான் என்று சூழ்நிலை, சான்று ஆதாரம் எல்லாம் பார்க்காமல் நம்பி நீதி பரிபாலனம் செய்கிறவர் அவர். ஆனந்தின் அத்தை திலகா, சீர்திருத்தப்பள்ளி நண்பன் தயாளன், சற்றே பெண் குரலில் கங்கைக்கரைத் தோட்டம் பாடி அழவைக்கும் ஞானி என்று ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்களே. ஆத்மார்த்தி சித்தரிக்கும் இளங் குற்றவாளிகளின் உலகம் தமிழில் அபூர்வமாகக் கதையாவது.

ஆனந்த் பிறக்கும் முன்னே தொடங்கிய நாவல் அவன் அம்மா செல்லம்மாவோடு கொஞ்சம் பயணம் செய்கிறது. அப்புறம் அவன் தந்தை மார்ஸ், அவன் வைப்பாட்டியும் செல்லம்மாளுக்கு தோழியுமான ஜகதா, ஆனந்தின் விதவை அத்தை திலகா, பள்ளித்தோழன் ராம்பிரபு, சீர்திருத்தப்பள்ளி தோழன் தயாளன், கௌரவமான ஸ்பாவும் அல்லாத மற்றதும் நடத்தும் அனுராதா மற்றும் ஆனந்தின் மும்பை தோழி என்று வெவ்வேறு பாத்திரங்களோடு சஞ்சரித்து, ஆனந்த் ராம்பிரசாத்தை மறுபடி சந்திப்பதில் முடிவாகிறது. ஆனந்தின் வாழ்க்கையை தீர்மானிக்கிறவர்கள் இவர்கள், ஆனந்தைத் தவிர.

ஆனந்தின் துயரகரமான வாழ்க்கைக்கு ஒரு விதத்தில் காரணமாகிய ஆசிரியர் அருள் ஜெபதுரை கிராமத்தில் சொந்த நிலத்தில் நீர் பாய்ச்ச கிணற்றில் மோட்டாரை இயக்கும்போது மின்சாரம் தாக்கி இறக்கிறார். அவனுடைய தகப்பன் நாவல் தொடக்கத்திலேயே தொழிற்சாலை விபத்தில் இறக்கிறான். சீர்திருத்தப் பள்ளித்தோழன் தயாளன் வெறிநாய் கடித்து ரேபீஸ் நோய் கண்டு இறக்கிறான். Outstanding depiction of a rabies patient by Aathmarthi. அவர் collateral existentialist-ஆ? என்று கேட்க மாட்டேன்.

ஆனந்த் – மகேஷ், ஆனந்த் – ராஜு, ஆனந்த் – ராம்பிரபு என்று வாழ்வைப் பாதித்து திசை திருப்பும் conflict-கள் ஆனந்தின் வாழ்க்கையில் வருகின்றன.இவற்றில் ஆனந்த் – ராம்பிரபு மோதல் தீர்வு – conflict resolution சிறப்பானது.கொஞ்சம் போல் ’என்னதான் முடிவு’ அறுபதுக்களின் திரைப்படம் நினைவு வருகிறது.இருக்கட்டுமே,
எண்ணங்கள் பொதுவெளியில் மிதப்பவையன்றோ. சொல்லப்போனால் திருவள்ளுவரின் “நன்னயம்” செய்து விடலன்றோ அதன் அடிப்படை.
வலுவான படிமங்களும், உருவகங்களும் நாவல் முழுக்க தட்டுப்பட்டு வாசக அனுபவத்தை செறிவாக்குகின்றன.உதாரணத்துக்கு ஒன்று, செல்லம்மாவோடு நடக்கும் நாவலில் இருந்து.செல்லம்மாவின் தூரத்து உறவினர் மும்பைக்காரர் தணிகாசலம் அவளை மறுமணம் செய்து கொள்ள கட்டாயப் படுத்தும்போது –

அவளுக்குள் நிரந்தரமாக ஒரு தேள் ஊர்ந்து கொண்டிருந்தது. அதன் விரைதலின்முன் அவளால் ஏதும் செய்ய முடியவில்லை. தப்பிக்கவே முடியவில்லை. ஓட விடவா, அடிக்க வேண்டுமா என்று புரியாமல் குழம்பினாள். அவளைப் படுத்தி எடுத்தது அந்த மாயத்தேள். அதை அடித்தால் செத்துப் போவதுபோல் நடித்தது. மீண்டும் மீண்டும் அதே இடத்தில் அதே போல உருவாகிக் கொண்டிருந்தது.
தேள் கண்டாள் தேளே கொண்டாள் அப்புறம் என்று போகிறது நாவல்.
மனதில் தங்கிய உவமை மற்றும் உருவகம் இவை –

சின்னஞ்சிறு வயதில் ஒளிந்து பிடித்து விளையாடும்போது தொலைந்த ஒருவன் இன்னும் அதே இடத்தில் பல வருஷங்கள் மறைந்து கொண்டிருந்தால் எம்மாதிரி அபத்தமோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் அசடு வழிந்தான் ஆனந்த்.

அனு அவன் உடலெங்கும் கண்ணாடிச் சொற்களால் கதை எழுதிக் காட்டினாள்.

கொஞ்சம் மேஜிக்கல் ரியலிசம் இதோ –

புகைப்படம் என்பது இறந்து போன பின்னரும் அவர்கள் காதில் நாம் பேசுகிற சொற்களைச் சேர்க்கும் என்று தயாளன் நம்பினான்.

அவளுக்கென்று இருந்த குறிப்புகளற்ற கனவுப் பாடல் ஒன்றின் எல்லா சொற்களையும் கண நேரத்தில் கிழித்தெறிந்தாள்.

ஆத்மார்த்தியை எனக்கு ஆத்ம நண்பராக்கும் புனைகதை நுட்பம் கதையில் நிறைய உண்டு. உதாரணம் இது – பக்கம் 150-இல் வரும் மழைச் சித்தரிப்பைத் தொடர்ந்து ஜம்ப் கட்டாக ஆனந்தின் மனதின் உள்ளறைகளில் இருந்து எல்லா கதாபாத்திரங்களும் ஒவ்வொருவராக அவனோடு பேசுகிறார்கள். அவர்கள் உதிர்க்கும் சொற்றொடர்கள் மூலம் கதையை சர்ரியலிஸ தளத்துக்கு தற்காலிகமாக நகர்த்தும் ஆத்மார்த்தியின் எழுத்து நடைக்கு, கரகோஷம் செய்து சத்தமாக ஒரு வாஹ் ஜனாப்.

ஆத்மார்த்திக்குள் existentialist-ஐ தேடினேனே அதை அகற்றி நிறுத்தி விட்டு இதைப் பார்க்கிறேன். ஆனந்தின் எண்ண ஓட்டம் – திலகா அத்தைக்கு ஏன் குழந்தை இல்லை? அத்தையின் கணவர் ஏன் சீக்கிரம் இறந்து போனார்? ஆனந்தின் அப்பா ஏன் இறந்து போனார்? ஏன் பள்ளியில் இன்னொரு பையனோடு சண்டைக்குப் போனான்? ஏன் டிசி வாங்கி வந்து அம்மா செல்லம்மா இன்னொரு ஸ்கூலில் சேர்த்தாள்? அங்கே போகாமல் இருந்தால் அருள் ஜெபதுரை என்ற வாத்தியாரை சந்தித்திருக்கத் தேவையில்லை. அந்த ஸ்கூலுக்கு போகாமல் பழைய பள்ளியிலேயே இருந்திருப்பான். கிளாஸ் கட் அடித்து விட்டு சினிமா போயிருக்க மாட்டான். அதே சினிமா பார்க்க மாட்னிஷோ வந்த அருள் ஜெபதுரை கண்ணில் பட்டு அடி வாங்கி அவரிடம் மோசமான அபிப்பிராயம் பெற்றிருக்க மாட்டான். சக மாணவர்களான ராஜு, ராம்ப்ரபு ஆகியோரை பரிச்சயம் ஆகியிருக்காது. ராம்பிரபு ராஜுவை எதேச்சையாகக் கொல்ல, பள்ளி ஊழியர் சாட்சியத்தில் ஆனந்த் தண்டிக்கப் பட்டிருக்க மாட்டான்.

இது chaos theory அல்லவோ. Paul Thomas Anderson தன் Magnolia திரைப்படத்தில் அற்புதமாகச் இதைச் சித்தரிப்பதை என் அன்பு நண்பர் திரு கமல்ஹாசன் வெகுவாக சிலாகித்து எனக்கு திரைக்கதையாக அளித்த புத்தகத்தை பொக்கிஷமாக வைத்திருக்கிறேன். ஆண்டர்சனின் அடுத்த படம் Licorise Pizza அண்மையில் வெளியாகியிருக்கிறது. திரைக்கதை கிடைக்குமா என்று தெரியவில்லை. கிடைக்காவிட்டால் என்ன? இன்னொரு பொக்கிஷமாக ஆத்மார்த்தியின் மிட்டாய் பசி கிடைத்திருக்கிறதே.

இரா.முருகன்