சமீபத்து ப்ரியக்காரி
 16 தாமதி


1
கூந்தல் பிரிகளுடனே
வீதியிலெறியப்பட்ட
பற்கள் நொதித்த சீப்பின் மீது
துளிர்த்து எஞ்சியிருக்கும்
சென்ற மழையின் ஈரத்தை
மணி நெல்லோவென்றெண்ணி
ஒரு முறைக்கு இருமுறை
கொத்திப் பார்த்து விட்டுத்
தத்தியபடி பறக்க முற்படுகிற
பசித்த குருவியின் ஏமாற்றத்தைப்
போலச்செய்தபடி
கால் மாற்றுகிற/காத்திருக்கிற
எனை நோக்கி
வந்துகொண்டிருக்கிறாய் தானே

2
அந்தச் சிரிப்பை
உதட்டுச்சுழிப்பை
கெக்கலிக்கும்
ஷண நேரத்துக் கண் செருகலை
தொலைவிற்கடக்கையில்
தோன்றத் தரும் நடைபாவத்தை
விரல் சொடுக்கலை
நகக்கண் நுனி கொண்டு
கீறிப் பார்க்கும்
அனிச்சைத் திருமொழியை
எட்டிப்பார்த்து
மறுபடியும் மீண்டும்
கூடடைந்து இருளும்
நாநுனி நகர்தலை
ஏதொன்றையும்
நினைவுறுத்த
இன்னொருத்தி
எவளுமில்லாத
ஊரொன்று காணத்தருவீர்
உலகத்தோரே
கடவுள்மாரே
காற்றே நெருப்பே
ஞாபகப் பகையே

3
மறத்தலாவது
நினைவொச்சம்
சுடும் காட்டுப் புறத்தே
அலைந்தலைந்து மீளுகிற
நிசிக்காற்றின் பேரன்பு
அல்லது
பெருமழை நடுவாந்திரப்
புகையழுகை
இரண்டிலொன்று
போதவே போதம்