ஏதோ ஒன்று

ஏதோ ஒன்று


நாலாவது வரிசையில் ஏழாவது நபராக நான் அமர்ந்திருக்கிறேன். அந்தத் திருமணத்தில் மணப்பெண்ணின் தகப்பனார் எனக்குத் தெரிந்தவர். பத்திரிக்கையைப் பிரித்துப் பார்த்ததுமே அந்தப் பெயர் தான் பொன் எழுத்துக்களில் கண்ணைப் பறித்தது. திருமண நிகழ்வுக்குத் தலைமை தாங்குபவர் ராஜாராமன். தொழிலதிபர் ராஜாராமனை இதற்கு முன்பு நான் பார்த்து எப்படியும் இருபது ஆண்டுகள் இருக்கலாம். அப்போதெல்லாம் அவர் இப்படிக் கூன் போட மாட்டார். நேராகப் பார்ப்பார் நிமிர்ந்து நடப்பார். ஆஜானுபாகுவான தோற்றம் எல்லோருக்கும் எடுபடுவதில்லை. ராஜாராமனைப் பார்க்கும் யார்க்கும் அவரை சட்டென்று பிடித்துவிடும். உமக்கு நல்ல முகராசி என்று காதோரமாய்ச் சொல்வேன். அதெல்லாம் இல்லீங்க என்று கூச்சத்தோடு நழுவுவார். அதிர்ந்து ஒரு வார்த்தை பேசமாட்டார். அப்போதெல்லாம் அவர் ஒரு மெட்ரிகுலேசன் பள்ளியில் மேனேஜராக இருந்தார். இத்தனை தொழில்களோடு கொடிகட்டிப் பறக்கும் செல்வந்தராக மாறுவோம் என்று நினைத்துக் கூடப் பார்த்ததில்லை.

வாரக் கடைசிகளில் என்னைத் தேடி வருவார். நாளெல்லாம் நாங்கள் இருவரும் தான் பொழுதைக் கழிப்போம். மூன்றாவது நபர் பார்க்க மது அருந்துவது அவருக்கு ஒவ்வாது. அந்த விஷயத்தில் நானும் அவரும் மட்டுமே கூட்டு. மேலும் அவருக்குத் தனியாக வெளியூர் பயணிப்பதென்றால் பயம். யாராவது கூடப் பேச்சுத் துணையிருந்தாலொழிய ஊர் தாண்ட மாட்டார். இப்போது ஒரே தினத்தில் வெவ்வேறு ஊர்களில் உறங்கி எழுந்து மதிய உணவுண்டு இரவு உறங்குகிற அளவுக்குப் பெரிய மனிதர் அவர். அன்றைக்கு அப்படி இல்லை. ஓரிரு சந்தர்ப்பங்களில் என்னால் அவரோடு வரமுடியாத சூழல்களில் நமச்சிவாயம் அல்லது பஷீர் இருவரும் அவருக்குத் துணையாய்ச் சென்றதுண்டு. அந்த இருவரும் இன்றைக்கு நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். இருவருக்கும் பல தொழில்கள். எல்லாம் ராஜாராமனின் ஆசீர்வாதம் தான் என்று கேள்வி. அதெல்லாம் பழகியவர்களை மறக்கக் கூடிய மனிதரில்லை. உதவும் மனப்பாங்கும் உள்ளவர் தான்.

ராஜாராமனின் முதல் மனைவி சத்யவதி. பாவம் சிறுவயதிலேயே காலமாகி விட்டார். மனிதர் அப்பொதெல்லாம் இடிந்து போய் விட்டார். நித்தமும் இரவுகளில் குடிக்க ஆரம்பித்தார். வீட்டுக்கே செல்லாமல் அவருடைய அண்ணன் நடத்தி வந்த டைப்ரைட்டிங் இன்ஸ்ட்யூட்டிலேயே இருப்பார். அங்கேயே இரவுகளில் தங்கிவிடுவார். கேட்பாரற்ற தனிமை கொடியது தானே..? ராஜாராமன் குடிப்பார் என்று அதற்கு முன்னும் பின்னும் யாருமே பார்த்ததில்லை. அப்போது பார்த்தது தான். எத்தனையோ ஆறுதல் சொல்லியும் எவ்வளவோ மாறுதல் கூறியும் சாயந்திரம் ஏழு மணியானால் குடிக்காமல் இருக்கமுடியவில்லை. கர நடுக்கம் மட்டுமல்ல மன நடுக்கமும் தான். ராஜாராமனைக் குடிக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டிய பொறுப்பு என்னிடம் வந்தது. அவருடைய அம்மா என்னை அழைத்து இதோ பார் பரமேஸ்வரா இனி அவன் குடித்தால் அந்தப் பாவம் உன்னைத் தான் சேரும் என்று சொல்லி விட்டார். நானும் கடுமையாகவே அவரை எச்சரித்தேன். கண்ணாடியில் தோன்றும் தன் பிம்பத்தின் மீது அடித்து சத்தியம் செய்தார் ராஜாராமன். இனி நானறிய அவர் குடிப்பதில்லை என்று சொன்னதைக் கடுமையாகக் கடைப்பிடிக்கத் தொடங்கினார். சில காலம் கழிந்தபிறகு எனக்குத் தெரியாமல் மாதம் ஓரிருமுறை மட்டும் குடிக்கிறார் என்று கேள்விப்படுவேன். அதைப் பெரிது படுத்தாதே என்று அவருடைய அம்மாவும் என்னிடம் சொல்லி விட்டார். எல்லோருக்குமே நித்யப் பழக்கம் மெல்ல நிதானத்துக்கு வந்திருப்பது குறித்து மகிழ்ச்சி. எனக்கும் ஆறுதலாய்த் தான் இருந்தது.

அதற்குப் பிறகு ராஜாராமனுக்கு இரண்டாம் திருமணத்துக்குப் பெண் பார்த்தனர். முதலில் அவர் மிகவும் மறுத்தார். ஒரு நாள் அன்றொரு சனிக்கிழமை தனக்குத் திருமணம் செய்கிற ஆவலே இல்லை என்று என்னிடம் சொல்லிச் சென்றார். அவரை அனுப்பி விட்டு நான் என் உறவினர் ஒருவருடன் குடிக்கச் சென்றேன். அதற்கடுத்த சில தினங்கள் நாங்கள் சந்தித்துக் கொள்ளவில்லை. பத்து நாட்கள் கழித்து நமச்சிவாயம் வந்து என்னிடம் ராஜாராமனுக்குப் பெண் திகைந்துவிட்டதாகவும் சிம்பிளாக நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதென்றும் சொன்னான். மகிழ்ச்சி என்று சொல்லி விட்டு என் வேலைகளில் ஆழ்ந்தேன். ராஜாராமன் வந்து திருமணத்துக்கு நாலு நாட்கள் இருக்கும் போது திருமணத்தைப் பற்றி என்னிடம் பேச முனைந்த போது நான் அதில் ஆர்வம் காட்டாதது போல் முகத்தைக் கடுமையாக வைத்திருந்தேன். அசுவாரசியமாகக் கேட்டுக் கொண்டேன். சிம்பிளாக நடக்க இருக்கும் அந்தத் திருமணத்தில் நெருக்கமான உறவினர்களும் தவிர்க்க இயலாதவர்களும் மட்டும் கலந்து கொண்டால் போதும் எனத் தான் நினைப்பதாக ராஜாராமன் சொன்னதை நான் ரசிக்கவில்லை. பத்திரிகை அடிக்காமல் வாய்மொழி வரவேற்பாகத் தான் அந்த நிகழ்வு நடந்தது. நான் ரொம்ப யோசிக்கவில்லை. அந்தத் திருமணத்துக்குப் போகாமல் தவிர்த்தேன். அதன் பிறகு புதுமணத் தம்பதியினர் ஊருக்குச் சற்றுத் தள்ளி வேறொரு வீட்டுக்குக் குடிபோனார்கள்.

அவ்வப்போது நமச்சிவாயமும் பஷீரும் வந்து ராஜாராமனின் தொழில் வெற்றிகளைப் பற்றியெல்லாம் என்னிடம் பேச முனைந்தாலும் நான் அவற்றை ஊக்குவித்ததில்லை. ஒரு கட்டத்தில் அவர்களும் என்னிடம் அப்படிப் பேசுவதில்லை. காலம் செல்லச்செல்ல ராஜாராமன் மாபெரும் மரமொன்றாய்க் கிளை பரப்பியிருக்கிறார். அவராக என்னைத் தேடி வரவேண்டும் என்று நான் நினைக்கவில்லை. நானாக அவர் முன்னால் சென்று நிற்பதற்கு எதோ ஒன்று என்னைத் தடுக்கிறது. இதோ இந்தத் திருமண விழாவிற்கு அவர் தான் தலைமை தாங்க வந்துகொண்டிருக்கிறார். தாலியை எடுத்து கண்களில் ஒற்றி மணமகனிடம் தருகிறார்.திருமண நிகழ்வு இனிதே நடந்தேறுகிறது. இப்போது எதோ ராஜாராமன் உதிர்த்த நகைச்சுவைக்கு மாப்பிள்ளையின் அப்பா குபீரென்று சிரிக்கிறார். அவருடைய விலாவில் ராஜாராமன் பொய்யாய்க் குத்துவது போல் பாவனை செய்கிறார்.லேசாய் சரியப் பார்க்கும் ராஜாராமனைப் பஷீர் பிடித்துத் தாங்கிக் கொள்கிறார். எல்லோரும் ஒன்றாக உணவருந்தும் இடத்துக்குச் செல்கிறார்கள். வழியில் சிலர் ராஜாராமனோடு புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். நான் அமர்ந்திருந்த வரிசையைத் தாண்டி நடந்து செல்கிறார் ராஜாராமன்.