ஏந்திழை-1

ஏந்திழை 27

நாய்கள் குதிரைகள் பன்றிகள்

ஷெனாயின் குதிரைக்கும் நாய்க்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அவனுடைய நாயின் பெயர் Terror, அவனுடைய குதிரையின் பெயர் Agony இந்தியாவுக்குப் புறப்பட்டு வரும்போதே டெரரையும் அகனியையும் தன்னுடனே அழைத்து வரும் அளவுக்கு அவை இரண்டின் மீதுமான அவனது ப்ரியம் இருந்தது. சொல்வதெனில் சார்பு ப்ரியமாகத் தோற்றம் கொள்ள நேர்ந்தது. வேண்டும் என்பது நிமித்தமாகவும், விருப்பமாகவும் புரிந்து கொள்ளக் கூடியதே.
வேட்டை நாய்கள் அற்புதமானவை. மனிதனுடைய உடலுக்கு வெளியே இயங்க வாய்த்திருக்கிற கூடுதல் உடலியாகவே இயங்கவல்லவை. இன்னொரு ஜோடிக் கண்கள், பற்கள், அதிகதிகம் குரோதம். ஷெனாயின் அதிகாரம் பிரயோகிப்பதிலிருந்து தொடங்குவதாக அவன் புரிந்து கொள்ளுகிறான்.
வல்ல காரியங்களைச் செய்து தருகிற நேர்த்தியும், பூர்த்தியும் எப்போதும் அவற்றின் பொறுப்பாகின்றது. எஜமான விசுவாசத்துடனான முனகல், எதிர்வரும் யாரையும் ரௌத்திரத்துடன் ஓங்கரிக்கிற ஒரு குரல் என இரண்டு குரல்கள், இருவேறு பார்வைகள், சதை கவ்வும் லாவகம், துரத்திப் பிடிக்க வாய்க்கிற வேட்டையின் பாத்திர இந்த இடத்தில் டெரர் என்கிற நாய் ஷெனாய் என்பவனின் உயிரின் இன்னொரு பிரதி. ஷெனாய் என்பவன் ஒரு அதிகாரி என்பதோ, ஒரு செல்வந்தன் என்பதோ தாண்டி, அவனுடைய கண் ஏவல் அபாரங்களையும் அற்பங்களையும் விவரித்து வைப்பதற்கான சாத்தியங்களாய்ப் பெருகியது.
டெரருக்குத் தான் ஏன் பிறந்திருக்கிறோம் என்பதே தெரியாது. ஷெனாயின் உடலிலிருந்து உடைகளுக்குப் பின்னதான, வாசனாதி திரவியங்களுக்கு அப்புறமான ஷூ சாக்ஸ் அணிகலன்களை அணிகையிலும் அகற்றுகையிலுமாகப் பல்வேறு வியர் கணங்களின் உப கோர்வைகள் மனனமாகியிருந்தன. எப்போது எஜமானனின் அருகில் செல்ல வேண்டும், எப்போது விலகி நிற்க வேண்டும், எப்போது கண்மறைவில் ஒளியவேண்டும் என்பதெல்லாம் எல்லா நேரங்களிலும் ஒரு நாய் கடைபிடிக்க வேண்டிய ஆகம விதிமுறை.
எஜமானனின் உத்தரவுகளை நிறைவேற்றுவது என்பது அவனை வேண மட்டும் வழிபடுவதற்கான அதி பிரகாச உபாயம். எல்லாவற்றுக்கும் மேலாக, டெரர் போன்ற ஒரு நாயாக இருப்பதென்பது வேறு எந்தப் பலமிலியாகவும் இல்லாமற் போவதற்குமான வாழ்முறைத் தந்திரம். யாருக்கும் அடங்காமல் இருப்பது போன்ற ஒரு தோற்ற உரு ஷெனாயின் பூட்ஸ் ஒலி கேட்டதுமே அடங்கிப் பம்முவதையும் உட்கொண்டது.
மேலும், ஷெனாய்தான் தன்னை வளார்க்கிறவன், தன் அதிபன் என்பது புரிந்த கணத்திலிருந்து அந்தத் தகவல், நம்பகம், ப்ரியம், விசுவாசம், உபாசகம், வெறி, இன்ன பிற யாவும் மீவுருக் கொள்வதற்கோ மாற்றியமைப்பதற்கோ வகைமையில்லாமல் ஒரு ஒற்றையாய் வலுப்பெற்றது நாய் என்கிற பொது வடிவம்.
ஷெனாய், டெரரைத் தன் மிருகப் பிரதியாகவே கண்டான். அதனை ஒரு பொழுதும் மட்டமாக எண்ணியதில்லை. தன் பணியாட்களும், அடிமைகளும் அதற்கும் பணியாட்கள், அடிமைகள் என்றே ஷெனாய் நிறுவினான். அந்த அளவுக்கு ஷெனாய்க்கு டெரர் மீது ப்ரியம். கன்னி வகை நாயைப் பழக்குவது கடினம், பழக்கிவிட்டால் அது சொர்க்கம். வழங்கப்படுகிற உணவின் அளவு அதிகரித்தால் கூடத் தட்டைப் புறந்தள்ளிவிடுகிற அளவுக்குச் சில நாய்கள் தனித்துவமானவை. அளவும், ருசியும், ஏன் வழங்குகிற கைகளும், படைக்கிற விதமும் கூட முக்கியம் என்று எண்ணுபவை.
அதிலும் டெரர் இன்னும் வித்தியாசமானவன். மூன்றேகால் வயதாகிற அவனுக்குக் கௌரவம் ரொம்ப முக்கியம். எலும்பில் தோல் போர்த்தியது தவிர்த்துச் சதையெனும் ஒன்று இருக்கிறாற்போலவே தெரியாத அளவு நெடிதுயர்ந்த, மெலிந்த, உறுதியான உடல்வாகு டெரருடையது. அவனுடைய ப்ரௌன் நிற மேனிக்கு அணிகலனிட்டாற்போலவும், அவனுடைய பெயருக்கு அர்த்தங்களைச் சூட்டினாற்போலவும், அப்படியான கண்களை இந்த அகிலத்தில் பார்ப்பது அரிது.
இரவையும் பகலையும் போர் முனையில் கலந்து நோக்குகிற சந்தியாகாலத்தின் சற்றே கலங்கிய செஞ்சாத்துக் கண்கள் அவனுடையவை. எப்போதும் அடுத்த வினாடி எங்கே குருதி கொப்பளித்து விடுமோ என்கிற அச்சத்தைக் காண்பவர்க்கு வழங்குபவை. தன் பார்வையால் வருடியே பல பேரைப் பின் தள்ளியிருக்கிறான் டெரர். உண்மையில் ஷெனாயின் மீதான அச்சம் என்பது டெரரின் மீதான அச்சம் மற்றும் டெரர் ஷெனாயிடம் காட்டுகிற விசுவாசம்.
டெரருக்குத் தன் கழுத்தில் எப்போதும் அணிவிக்கப்பட்டிருக்கும் தோலினாலான லாக்கெட் ஒரு சிறகைப் போலவே அதனுள் விரியும். அதன் கொக்கியில் சங்கிலி பிணைக்கப்பட்டு அதன் மறுமுனை ஷெனாயின் இடதுகரத்தில் அலட்சியமாகச் சுற்றப்பட்டு அவனோடு தான் உலாவுகிற எல்லாப் பொழுதுகளையும் டெரர் மிகவும் விரும்பும். பற்களை லேசாகத் திறந்து மூடுவது தன் வருகையைத் திசைகளெங்கும் உணர்த்துவதற்கான சமிக்ஞை.
சர்வகாலமும் நா வியர்த்துக் கொட்டியபடியே தன் கண்களால் தான் தோன்றுகிற எல்லா இடங்களிலும் பயவினோதங்களை ஏற்படுத்தியவாறு தன்னை ஆளுகிற சீமான் தனைவிடவும் பயங்கரமானவன் என்பதையும் கூடுதலாய்ச் செப்பியபடியே திரிவது டெரரின் தோரணை.
    எந்த மனிதனின் அருகாமைகளில் எவ்விதம் நடந்து கொள்ள வேண்டும் என்பதை நன்கு உணர்ந்து கொள்ளும் வரைக்கும் தான் நாய்களை வளர்ப்பதில் சப்தம் அதிகம்.அதற்குப் பிற்பாடு நாயின் குரைப்பொலியே ஒரு சங்கீதவாத்தியத்தின் வெளிப்பாட்டை போல இன்பமாய்ப் பெருகும்.
யாரெல்லாம் ஷெனாய்க்கு முக்கியமானவர்கள் யாரை எந்த இடம் வரை அனுமதிக்க வேண்டும் யாரை கிட்டே விடவே கூடாது என்பதெல்லாம் டெரருக்கு அத்துப்படி.துணி வெளுப்பவனை ஏன் வீட்டின் பின் பக்கம் அனுமதிக்க வேண்டும்..?அவன் அங்கே அமர்ந்து ஒவ்வொரு உருப்படியாக எண்ணி சலவைக்குறி சரிபார்த்து அதற்குண்டான சிட்டையில் குறித்துக் கொண்டு தலையில் சும்மாட்டுச் சுமையாகவும் தன் வீட்டுப்பெண் உடனாளி வகையறாக்களின் தோள்பாரமாகவும் மாளிகையின் சலவைக்கான துணிகளை எடுத்துச் செல்லும் ஆண்டி என்ற சலவைக்காரன் நுழையும் போதே வாலை லேசாய் ஆட்டி அவனை அருகே சென்று முகர்ந்து மாத்திரம் பார்த்துவிட்டு உடனே விலகி ஓடிப்போய் விடும்.
சில சமயங்களில் ஆண்டியின் மகன் பழனியும் அவனோடு வருவான்.கூடவே ஒரு உடல் மெலிந்த நாய் வரும்.ஆனால் அது மாளிகைக்கு அந்தப்பக்கம் கீழேயே நின்றுகொள்ளும்.ஆனாலும் அதன் வருகை டெரருக்குத் தெரிந்து போய்க் கட்டியிருக்கும் கழுத்துப்பிணை அறுந்துவிடும் அளவுக்குக் கத்தும்.ஷெனாய் ஆண்டியைப் பார்த்து ஏண்டா  உன்னைப் பார்த்தா அவன் கத்த மாட்டானே..?என்பார் இல்லீங் துரை நம்ம சின்னவண்டு அவனோட நாக்குட்டியை கூட்டியாந்திருக்கான் என்று தலையைச் சொறிவான்.உடனே அவனது நாயின் எலும்புத் துருத்தலைக் கண்ணுற்றபடியே இதென்னடா இப்பிடிச் சோம்பிச் சாகக்கெடக்கு என்பான் செல்வம்.துரை சிரிப்பதோடு முடியும்.
வெள்ளையர்களுக்குப் பன்றிகளைப் பிடிக்காது.இந்த உலகத்தின் நெடிய சரித்திரத்தில் பன்றிகளின் வருகை தொடங்கிய பொழுது தொட்டே விருப்பத்தை விடவும் வெறுப்பையே பன்றிகள் அதிகதிகம் சந்தித்துக் கொண்டிருக்கின்றன.பன்றிகளின் உடல் அமைப்பிலேயே அவற்றின் கொழுத்த உடம்பைச் சட்டென்று தூக்கிக் கொண்டு விரைந்தோடுவது பாடமாகி இருக்கிறது.அதன் ஆழ்கவனத்திலிருந்தே சூழலை நம்பாதே என்ற தத்துவம் உள்ளீடு செய்யப் பட்டாற் போல நித்ய அவஸ்தை ஒன்றைத் தேக்கியபடியே பன்றிகளின் காலம் கழிகிறது.எப்பொழுது எந்தத் திசையிலிருந்து தமக்கான எதிரியின் வருகை நிகழும் என்று உத்தேசிக்க முடியாமற் போனதிலிருந்தே சகல திசைகளையும் வெறுப்புக்கானவையாக தம்முள் எண்ணிக் கொள்ளத் தொடங்கின.
எதிரே எது அல்லது எவர் வந்தாலும் அவர்கள் எதிரிகள் தான் என்று பன்றிகள் நம்பின.ஒரு மனிதனோ அல்லது விலங்கோ தங்களைத் தாண்டிச் சென்ற பிறகு தான் குறைந்தபட்சம் அந்த ஒரு வருகையின் போது தமக்கு எந்த ஆபத்தையும் விளைவிக்கவில்லை என்ற ஆறுதற்பெருமூச்சை விட்டபடி அடுத்த மனிதனின் அல்லது விலங்கின் எதிர்ப்படுதலுக்காக மனம் தேக்கிக் காத்திருக்க விழைகின்றன.
    பன்றி கனத்த உருவம் கொண்டது என்பதைக் குழந்தை கூட அறியும் என்றபோதும் எடுத்த எடுப்பிலேயே கனத்த பறவை ஒன்று தன் முழுவுடலையும் இறகுவசமாக்கி விண்கிழித்தபடி மேகம் ஏகிப் போகிற அசாத்தியத்தைத் தாமும் கைவரப் பெற்றவை பன்றிகள்.சொல்லப் போயின் அவற்றின் கனசரீரத்திற்குக் கொத்துக் கொத்தாய் மடிந்துவிட வேண்டியவை தான் என்றாலும் அவற்றின் உள்ளாழத்தில் எப்போதும் அவற்றை கவனத்தின் நுனியில் இருத்தித் தருகிற எதிர்ப்பின் மீதான வெறுப்பு அவற்றின் சரீர கனத்தை ஒன்றுமற்றதாக்கிச் சூன்யத்தின் மொட்டாகத் தம்முடலை மாற்றிக் கொள்கின்றன.சட்டென்று நொடியிற்பாதியில் கவனம் கலைந்ததும் வேகவிரைதலாய் ஓடத் தொடங்குவதன் மூலமாய் அவை தப்புவதை முன்வைக்கின்றன.
            வெண் பன்றிக்கு ஒரு இடமும் கருப்புப் பன்றிக்கு வேறொரு மதிப்பும் ஆரம்பத்திலிருந்தே இருந்து வந்திருக்கிறது.உணவுக்காக வளர்க்கப் படுகிற விலங்கினத்தில் சில  தேசங்களில் பன்றிகள் உட்படுத்தப் படாமலும் பல தேசங்களில் கறிக்கும் மாம்சத்துக்கும் என்றே பன்றிகள் வளர்க்கப்படுவதும் அவற்றின் நவ கதை.
  வெள்ளையர்கள் வேட்டைப் ப்ரியர்கள்.செல்வந்தம் தன் உடல்வளத்தின் பெருமை செப்புவதற்காக எப்போதும் ஈடுபட விரும்பிய செயலாகவே வேட்டை என்பது இருந்து வந்திருக்கிறது.மிருகங்களைக் கொல்வது மனிதர்களைக் கொல்வதற்கான உளபலத்தை அதிகரித்துத் தருகிற செய்கையாகவும் பார்க்கப்பட்டது.எல்லாவற்றுக்கும் மேலாக மிருகங்கள் உரை நிகழ்த்துவதில்லை,.தங்கள் தரப்பைப் பல்வேறு ஒலிகளை எழுப்புவதன் மூலமாக மிருகங்கள் முன் வைக்கிற போதும் அவை எதையும் புரிந்து கொள்வதற்கான தேவை மனிதர்களுக்கு இருந்ததே இல்லை.
அறியாமையே மனித ஆணவமாகவும் ஆகிப் போனது.ஆயுதங்களைப் பிரயோகிப்பதில் தொடங்கி எதிரிகளைத் தாக்குவதும் வீழ்த்துவதும் கொன்று அழிப்பதும் வரைக்குமான போர்க்கலையின் ஒத்திகையாகவே வேட்டை இருந்துவந்திருக்கிறது.தானொரு வேட்டைக்காரன் என்று சொல்லப் படுவதிலிருந்து தன் ஆளுமையும் அதன் வீர்யமும் சரிவரப் போற்றப் படுவதாகவே அரசவம்சத்தினர் எண்ணினார்கள்.அதிலும் அதிகாரத்தின் இன்னொரு பகுதியாகவே வேட்டையாடுகிற உரிமையும் நம்பப் பட்டது.
                       வெள்ளையர்கள் வன அலைதல் விரும்பிகள்.பரந்த தேசத்தின் பல்வேறு பட்ட கானகங்களை வளமாக மாத்திரம் கருதிக் கொள்ளை செய்வதற்கு மட்டும் என்றெல்லாம் தனித்து விடாமல் இந்திய வனங்களை முழுவதுமாக அருந்திப் பருகி உய்த்துறங்கி எடுத்துச் சுருட்டி எனத் தம்மால் ஆன மட்டும் அவற்றை அனுபவித்து விட விரும்பினார்கள்.வன அனுபவங்களை சுற்றுலா அனுபவத்தின் இன்னொரு நீட்சியாகவே கருதுகிற வெள்ளையர்களின் விட்டேற்றி மனோபாவம் பலவித ஆயுதங்களைப் பழகுவதற்கும் பிரயோகிப்பதற்குமான பயிற்சிகளுக்கென்று வேட்டைக்குச் செல்வதை எப்போதும் ரசித்தார்கள்.வெள்ளைப் பெண்களும் உடன் வர எந்தவித ஆட்சேபமும் கொண்டிருக்கவில்லை.
              பல்லக்கு சாரட்டு போன்றவற்றை விடவும் தனித்துக் குதிரைகளில் பயணிப்பது பல வெள்ளையர்களுக்குப் பிரியமானதாயிருந்தது.தங்கள் செல்வங்களில் ஒன்றெனவே குதிரைகளைக் கருதினார்கள்.குதிரைகளுக்கும் செல்வந்தர்களுக்குமான உறவாடல் என்பது அடக்கி ஆள்கிற அதிகாரம் குறித்து சாமான்யர்களின் மனங்களைத் தயாரித்துத் தருவதில் உதவியாயிருந்தது.சவுக்கும் சாட்டையும் அதிகாரத்தை உடல்களில் மேலெழுதிய வண்ணம் புதுப்பித்தன.மிருகங்களில் குதிரை தனித்த ஒன்றெனவே ஆளும் வர்க்கத்தினரின் அன்புப்புறத்தில் அளவளாவியது.
ஷெனாய்க்கு மட்டும் இல்லை, வெள்ளையர்கள் பன்றி எனும் மிருகத்தை ஆனமட்டும் வெறுத்தார்கள். வேட்டை என்பது ஓடுவதும், பின் தொடர்வதும், அடைவதும், பின்னே ஒரு பலப்பரீட்சையும், அவற்றுக்கப்பால் ஒரு வெற்றியும். வேட்டை உடலுக்கும் மனத்துக்கும் மூளைக்கும் ஒருங்கே வேலை தர வல்லது.
ஷெனாயின் வகுப்புத் தோழன் ஹாரிசன் என்பவனை யானைகள் மிதித்தே கொன்றதை மறப்பதற்குப் பல வருடம் பிரயத்தனப்பட்டான். விலங்குகளைக் காட்டிலும், மனிதர்கள் தாக்குவதிலும் தற்காத்துக் கொள்ளுவதிலும் வேறுபட்ட பிற்பாடு போர்கள் குறையத் தொடங்கின. வெடிமருந்தை நம்பி மேற்கொள்ளப்பட்ட போர்கள், முக்கியமாகத் துப்பாக்கியின் வருகை, இவற்றுக்கெல்லாம் அப்பால் கட்டுப்பாடுடன் கூடிய திட்டங்களின் அரங்கேற்றமாகவே போர்கள் மாறின.
பாம்பு கடித்து இறந்தவர்களின் மீது ஏற்படுகிற பரிதாபம், வனமந்தி தாக்கியதில் தன் ஒரு கண் உள்பட முகத்தின் ஒரு பகுதியைப் பறிகொடுத்த ஸ்தீவான் போன்றவர்களைக் காணும்போதெல்லாம் எதற்கிந்தப் பித்து எனத் தோன்றாமலில்லை, என்றபோதும் வேட்டை அவர்களுடைய அத்தியாபியாசத்திலிருந்தே உள்ளீடு செய்யப்பட்டு வந்தது. வேட்டையர்கள் போற்றுதலுக்குரியவர்கள் என்று அவனது ஆசிரியர் நான்கைந்து தடவைகள் சொல்லியிருக்கிறார். வேட்டை பார்வையாளர்களுக்கானதல்ல என்பது ஷெனாயின் நம்பிக்கை.
ஜோனா என்கிற இந்த உலகின் அன்றலர்ந்த அத்தனை ரோஜாக்களை விடவும் சற்றதிகம் மின்னினாற் போன்ற நிறத்தை உடைய பேரழகி அவளொரு ஐசிஎஃப் அதிகாரியின் மனைவியின் தங்கை. ஏழெட்டுப் பேர் கூட்டமாகக் கர்நாடகத்தின் காட்டுப் பகுதியில் வேட்டைக்குச் செல்வதாக ஏற்பாடானது. அந்த ஒரு தினம் மட்டும் வராமற் போயிருந்தால் ஷெனாய் கன்னடப் பிராந்தியத்தை விட்டுவிட்டு வேறிடம் நோக்கியிருக்கவே மாட்டான். முக்கியமாக, மேகமலையின் சுற்றுவட்டார அத்தனை பன்றிகளின் ஜாதகத்தையும் மாற்றி எழுதக் கர்நாடகத்தில் ஒரே ஒரு காட்டுப்பன்றி காத்துக் கொண்டிருக்குமென்று கனவிலும் அவன் நினைக்கவில்லை.
போதும் திரும்பிவிடலாம் என அந்தக் குழுவுக்குத் தலைமையேற்ற ஐவன் துரை சொன்னபோது ஜோனாதான் தன் கண்களால் கிசுகிசுத்தாள். அந்தத் தினத்தின் ஆரம்பத்திலிருந்தே ஷெனாய் துரை ஜோனா மீது தன் ஜென்ம ஜென்மாந்திரக் காதல் அத்தனையையும் கொள்ளத் தொடங்கியிருந்தான். என்ன செய்தாவது அவளை வசீகரித்துத் தன்வசமாக்கிக் கொள்ள விரும்பினான். வாய்திறந்து வெளிப்படுத்தியிருந்தாலே எளிதில் கைகூடியிருக்க வேண்டிய காதல்தான் அது.
என்ன என ஐவன் துரையிடம் கேட்ட ஷெனாய், சொல்லப் பட்டதைக் கேட்டு, ஃபூ, இவ்வளவுதானா என்றான். அவன் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது. காலையிலிருந்து இரண்டு கட மான்கள், ஏழெட்டு வயல் எலிகள், ஒரு ஜோடி பனிநிகர் வெண்முயல்கள் எனக் கொன்றும் பிடித்தும் ஓரளவுக்கு அர்த்தமுள்ள எத்தனமாகவே அந்தத் தினம் ஆகிப் போயிருந்தது. ஐவன் சொன்னது, ஜோனா பார்க்க விரும்பியது ஒரு காட்டுப் பன்றியை வேட்டையாடுகிற வைபவத்தை. அது பன்றிகள் அதிகதிகம் அலைந்து திரிகிற பருவம். மேலும் அடுத்து வரவிருக்கிற கூடலுக்கு உகந்த காலத்தை எதிர்நோக்குபவை என்பதால் இயல்பாகவே உடலதிர்வும், அல்லாட்டமும் அதிகரிக்கிற காலம்.
கானகப் பன்றிகள் வினோதமானவை. பெரும்பாலும் இரண்டுக்கு மேல் கூட்டமாகவே திரிபவை. ஒன்றோ இரண்டெனவோ குறுகித் தனிக்கையில் பதற்றம் மிகுபவை. போகிற போக்கில் ஒரு ஆளை முட்டித் தள்ளுகிற வகையில் என்பொடித்துச் சாகடிப்பவை. அதிலும், அன்று தென்பட்ட அந்தப் பன்றி வரலாற்றில் அதன் வருகை ஏற்படுத்தப் போகிற விளைதல்களை அறிந்திருக்குமேயானால் பிறவியே வேண்டிலேன் என்று கதறி அழுதிருக்கும்.
அப்போதுதான் அவரவர் குதிரைகளில் அமர்ந்து சரி புறப்படலாம் எனும்போது, சற்றுத் தள்ளினாற்போல் சரிவில் வந்து மறைந்தது அந்தப் பழுப்பு நிறப் பன்றி. உடனே தன் வீரத்தை வேட்டைத் திறனைப் பிரஸ்தாபித்து விடுகிற வெறியில் ஒரு நெடிதுயர்ந்த குத்தீட்டியுடனும் குறுவாளுடனும் சரசரவெனக் குதிரையைச் செலுத்தி அதை விரட்டலானான் ஷெனாய். நல்ல நேரம் திசையாய்ப் பெருகும், தீயது கண்ணை இருளாக்கும். அகனியின் மீது ஜோனாவின் தம்பியை அமரவைத்துவிட்டு வழங்கப்பட்ட புதிய குதிரையில் அன்றெல்லாம் அலைந்து கொண்டிருந்தான் ஷெனாய். இது அவன் தலையெழுத்தின் முதற்கெடுமதி. அகனியின் முதுகில் போர்த்தப்பட்டிருந்த தோல்சராயின் ஒரு பக்கத்தில் தன் அலட்சிய வழக்கப்படி தனது செல்லமான ரிவால்வரை எடுத்துச் செருக மறந்தது தலையெழுத்தின் இரண்டாவது கெடுமதி.
தன்னைத் துரத்துவது ஷெனாய் துரை என்றா அந்தக் கானகப் பன்றிக்குத் தெரியும்? இரண்டாய்த் தனிக்கையில் காட்டுப் பன்றிகள் இருவேறு திசைகளில் ஓடித் தப்ப விழைபவை. ஒரு தேர்ந்த வேட்டைக்காரன் தன் சகாக்களை இந்த லாவகத்தைச் சொல்லிக் கொடுத்துச் சூழச் செய்வானாயின் இரண்டு பன்றிகளுமே எளிதில் வீழ்த்தப்படும். மாறாக, ஒற்றையாய்த் தனிக்கையில் பன்றி வேட்டை மிக அபாயமானது. கரணம் தப்பினால் மரணம்தான். பன்றிகள் தம் பயத்தை யுக்தியாக மாற்றிக் கொள்பவை. உண்மையில் தன் எடையை மறந்து ஓடுவதால், ஓட்டம் அவற்றுக்கு எளிதாகக் கைவரும்.
உருண்டு திரண்ட தன் உடலை ஓடிக் கொண்டிருக்கையில் ஒரு செயல்பாடாகவே தன் எதிரியின் உடல் மீது மோதுவதைப் புரண்டெழுந்து மீண்டும் ஓடுவதை அனாயாசமாகச் செய்ய வல்லவை. ஒரே திசையில் நெடுந்தூரம் ஓடுவதை விடவும், திசையின் ஊடுபாவுகளில் நுழைந்து தப்பித்துக் கொள்ளுவதைத் தானும் முயன்று பார்த்தது அந்தக் கானகப் பன்றி. இரண்டு சுற்று ஓடியதில் கிட்டத்தட்ட மாட்டிவிட்டது என்கிற கணத்தில் ஷெனாயின் கையிலிருந்து குத்தீட்டி பறிபோனது.
ஜோனாவுக்கு அதனை ஒரு பிணமாக்கிப் பரிசளிக்க வேண்டும் என்பது ஷெனாயின் கண்களை மறைத்தது. ஆசை வேட்டையும் அறியாது. ஒரு சமரைத் துவக்குகிற ஆவேசத்தோடுத் தன் குறுங்கத்தியைக் காற்றில் ஓங்கியபடி குதிரை மீதிருந்து கீழே பாய்ந்தான் ஷெனாய். இருவரின் வெவ்வேறு விதிப்பலன்களின் பிரகாரம் மிகச் சரியாக அந்தப் பன்றியின் கழுத்தில் இறங்கியிருக்க வேண்டிய குறுங்கத்தி ஒரு இம்மி பிசகியதால் தன் புதிய வாழ்வை நோக்கி அந்தப் பன்றி தப்பி ஓடக் கீழே விழுந்த மாத்திரத்தில் ஒரு குத்துக்கல் கிழித்ததில் ஆடை கிழிந்தது மாத்திரமல்ல, தொடை எலும்பு இரண்டாகிச் சதை வழியே வெளிவந்து முறிந்த மூங்கிலாய்த் துருத்தி நிற்க, அதுவரை தனது ரத்தத்தைத் துளிக்கு மேல் பார்த்தேயிராத ஷெனாய், கொப்பளிக்கிற குருதியுடன் வலி தாள மாட்டாமல் பெருஞ்சப்தத்துடன் அலறினான்.
பின் தொடர்ந்து வந்த ஐவன் மற்றும் குழுவினரில், ஷெனாயின் தொடை கிழிந்ததை அரியாத அந்தப் பதின்ம வயது அழகிய முட்டாள் பெண் ஜோனா கெக்கலித்துச் சிரித்தாள். தூரத்தில் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்ட மரப் பீப்பாய் காற்றைத் தள்ளி நீர் குடிக்கையில் எழுப்புகிறாற்போல் தன் வெற்றி வாகையைப் பறைசாற்றியபடி எங்கோ ஓடிச் சென்று கொண்டிருந்தது அந்தக் கானகப் பன்றி.
இந்த உலகிலிருக்கும் எல்லாப் பன்றிகளையும் கொன்று போட வேண்டும் என்கிற வெறிமிகு முடிவுக்கு சர்.ஷெனாய் வில்லியம்ஸ் ஆக்டேவியன் என்கிற ஜொனாதன் வில்லியம்ஸ் ஆக்டேவியனின் இரண்டாவது மகனும், மேகமலையில் ஒவ்வொரு புலரிக்கும் ஒரு பன்றியச் சித்ரவதைச் செய்யத் தொடங்கி ஒவ்வொரு அந்தியிலும் அதைக் கொன்று போட முடிவு செய்தான். அவனுக்கு அன்று மட்டும் நாள் சரியில்லை. பன்றிகளுக்கு அதற்குப் பின் எந்த நாளும் சரியில்லை.
எதுவுமே நடந்துவிடவில்லை தான். இன்னும் சொல்லப் போனால் பார்வையாளர்கள் இல்லாத இடத்தில் ஏற்படுகிற ஒரு அவமானம் என்பது நிம்மதி என்று கடப்பதற்குப் பதிலாகத் தன்னையே அதன் சாட்சியமாக்கிக் காரணமற்ற ஒரு வெறுப்பின் பெருமரத்தை உருவாக்கித் தானே அதற்கு இரையுமாகிறது எல்லாம் இந்த மனசு என்கிற ஒரு பண்டம் படுத்துகிற பாடு.
ஷெனாய் தாயில்லாப் பிள்ளை. தன் போலவே சற்று வேறுபாடாகவும் இருந்த தன் சகோதரனை விரும்பியும் பொறாமைப்பட்டுமாய்க் கழிந்தது அவன் பால்யம். பொருந்தியும், விலகியும் வளர்க்கப்படுகிற ஐரோப்பிய செல்வந்தம் எதுவெனத் தெரியாமல் அவன் மனத்தைச் சிதைத்திருந்தது. அதிகம் பேசாத அவனது சுபாவம் ஒன்று பிடிக்காமல் போகிறபோது அந்தத் தினம், அந்த நிகழ்வு, அதில் சம்மந்தப்பட்ட அத்தனை மனிதர்களிடமிருந்தும் தன்னைத் துண்டித்துக் கொள்ளுவது அவன் குணாம்சம். ஒன்று பிடிக்காவிட்டால் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவது ஒரு எளிய சமரசம்.
ஆடை கிழிந்ததோ, தன்னையறியாமல் ஜோனா சிரித்ததோ எதோ ஒன்று அவள் மீதான சமீபத்து அவனது ஈர்ப்பு மொத்தத்தையும் முடித்து வைத்திருந்தது. மேலும், ஒரு விளையாட்டுக்கும் வேட்டைக்குமான வித்தியாசம் விளையாட்டென்பது நிஜமற்ற பாவனை, அல்லது பாவனையே அதில் நிஜம், வேட்டையில் எல்லாமே நிஜம் அல்லவா? மேலும், இன்று போய் நாளை வா என்றெல்லாமும் பேச்சு வார்த்தைகள் சாத்தியமில்லை. தோற்றால் தோற்றதுதான், ஓடிப்போன அதே பன்றி திரும்பவந்து நான் தான் என ஒப்புக் கொண்டால் ஒழிய. ஹ… அது நடக்குமா என்ன?
ஜோனா எனும் ஒருத்தியை மாத்திரம் அல்ல ஒரு வெள்ளை இனத்தவள் தன் மனையாளாக வர வேண்டியதில்லை என்பதையும் அவன் தீர்மானித்துக் கொண்டான். யார் சிரித்தாலும் அது ஜோனாவின் குரலாக இருக்கும் என்பது அவன் கண்டறிந்த ஞானம். ஜோனாவிடமிருந்து வெகு தூரம் தன் மனத்தை அகற்றிக் கொள்ள அவனுக்குச் சில வினாடிகள்தான் பிடித்தது. அதுதான் சர்.ஷெனாய் துரையின் இயல்பே.
இந்த உலகில் உள்ள அத்தனை காட்டுப் பன்றிகளையும் கொன்றுவிட்டால், எப்படியும் தன்னை இகழ்ந்துவிட்டுத் தப்பியோடிய பன்றியும் கொல்லப்படும் அல்லவா. எல்லாம் என்கிற இரு அடைப்புக்குறிகளுக்குள் எல்லாமே அடங்கிவிடும் என்பது அதன் நியதி. அதைத் தன் நம்பகமாகவும் ஆக்கிக் கொண்ட ஷெனாய், தன் வாழ்வின் அத்தனை ஒவ்வாமைகளுக்கும் பன்றி உருவம் கொடுத்துப் பராமரிக்க ஆரம்பித்தான்.
தினமும் ஒரு பன்றியைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுமைப் படுத்திக் கொல்லுவதை அவன் இயல்பாக ஆக்கிக் கொண்டான். எங்கே அடித்தால் ஒரு பன்றி எப்படிக் கத்தும் என்பது அவனுக்கு அத்துப்படி. மெல்ல அந்தப் பன்றியை மரணம் வரை சித்திரவதை செய்துவிட்டு அதற்கு ஒரு விடுதலையாகவே அந்த மரணத்தை அவன் பரிசளித்தான். மழித்தெறிகிற ரோமங்களைப் போல, மரம் உதிர்க்கிற இறகுகளைப் போலப் பன்றிகள் கொல்லப்பட வேண்டியவை என்பதைத் தன் இயல்பிலிருந்து நிகழ்த்திக் கொண்டிருந்தான். நோய்மை கொண்டு நாயோ குதிரையோ கத்துகிற பட்சத்தில் அதனை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாத அதே ஷெனாய் துரை, பன்றிகளின் ஓலத்தை ஒரு இசை நுகர்வதைப் போல நுகர்ந்து பழகினான். நினைத்த மாத்திரத்தில் அவனால் தன் எண்ணத்தினுள் சிறு சத்தம் முதற்கொண்டு பெரும் ஓசை வரைக்கும் விதவிதமான பன்றிக் கதறல்களைத் தன்னுள் உற்பத்தி பண்ணிக் கொள்ள முடிந்தது.
ஒரு புதிய குழந்தையைக் கையிலேந்துகையில், தன் குரலற்றக் குரலில் அது அழத் தொடங்குகையில் உயிர் விடுகிற பன்றியின் இறுதிக் கேவல் அவனுக்குள் தழைத்தது. ஆணும் பெண்ணுமாய் அடிமைகளை சவுக்கினாலும், பிரம்பினாலும் விளாசுகையில், குத்தூசி கொண்டும், கனன்று எரியும் விறகு கொண்டும் துன்புறுத்தப் படுகிற பன்றியின் கதறல்களாய் அவர்கள் கத்தினார்கள். புணர்ச்சியின் உச்ச காலத்தில் எழுகிற ஒரு கூட்டுப் பெருமூச்சு பன்றி அடங்குகிற ஒலி போலத் தோன்றியது. விற்பன்னன் ஒருவன் மேசையில் தன் இரு கைகளிலும் கட்டுச் சீட்டுகளைப் பிரித்து விர்ர்ர்ருட் என்று இழுத்து மாயம் செய்து அவற்றை அடுக்குகிற லாவகம் கூடப் பிடிமானத்துக்கு அடங்காத பன்றியின் வழுக்குதலை ஒத்திருந்தது.
பன்றிகளைக் கொல்வதன் மூலமாகவே தான் பன்றியிலிருந்து மனிதனுக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாக ஷெனாய் நினைத்துக் கொண்டான். அவனுக்குத் தெரிந்தவரை பன்றிகள் கடவுளுக்குத் தெரியாமல் தாமாய்த் தம்மைப் படைத்துக் கொண்டவை. அவற்றைக் கொல்வது கடவுளுக்கு மிகவும் பிடித்தமான செயல்.
ஐரோப்பிய பெண்களின் தோலும், உதடுகளும் வெண் பன்றிகளின் நிறத்தைப் பிரதிபலித்ததால் அவன் ஒவ்வாமையெனும் பெருங்காட்டில் அச்சத்தின் காலடிகளால் வெகுதூரம் ஓடினான்.
ஏந்திழையின் முன்னால் மண்டியிட்டு அவளுக்கு ஒரு ரோஜாவைத் தரும்போது பெண்களை நாடுகையிலெல்லாம் அங்கே எழக்கூடிய ஒரு பன்றி நாற்றம் அவனுக்கு எழவில்லை. மேலும், ரோஜா இதழ்களை அரைத்தரைத்து உருவாக்கப்பட்ட உயர் ரக வாசனாதித் தைலம் ஒன்றை முன்னரெப்போதோ அவன் நுகர்ந்துணர்ந்திருக்கிறான். அதே வாசனை அவனுக்கு ஏந்திழையின் அருகாமையில் அவனுக்குக் கிட்டியது. ஏந்திழை என்று நினைத்தாலே தான் குழைந்து தன் வக்கிரங்களெல்லாமும் நொடி நேரத்தில் தன்னிடமிருந்து விடை பெறுவதை ஆச்சரியம் கொண்டு நோக்காமலில்லை. பற்றிக் கொள்ள அவனுக்கு ஒரு கொழுகோல் அவசியமானது. பன்றிகளற்றப் பெருவாழ்வை ஏந்திழை என்கிற ஒருத்தியோடுதான் தன்னால் வாழ முடியுமென்று கடவுளின் பெயரால் அவன் நம்பினான்.
ஏந்திழை என்கிற ஒரு இந்தியப் பெண்ணைத் தான் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகத் தன் தந்தை ஜொனாதனுக்கு நெடிய கவிதையொன்றை அவன் எழுதி அனுப்பியிருந்தான். தக்கா புக்கா என்று முதலில் குதிப்பார் என்றபோதும் தன் தந்தையைச் சமாளித்து விடலாம் என்று அவன் நம்பினான். ராஜரீக நிர்ப்பந்தங்கள் ஏதும் இல்லாத பட்சத்தில் திருமணங்களைச் சுற்றி எந்தப் பிரச்சனையும் பொதுவாய் எழாது. செல்வந்த அரசியலில் ஒரு குழந்தை பிறப்பதிலிருந்து பெரும் கிழவனார் ஒருவர் இறப்பது வரை எல்லாம் கண்ணுக்குத் தெரியாத பல பின்னல்களைக் கொண்டே இருப்பவை. ஒரு திருமணம் என்பது பல ஒப்பந்தங்களுக்கான ஓர் ஒப்பந்தம். அது நிகழ்ந்த பிறகு பெரும் லாபம், நிகழாமற்போனால் ஒரு நட்டமும் இல்லை. உண்மையில் முறிந்த ஒப்பந்தங்கள் வெவ்வேறு ஒப்பந்தங்களாய் மறுபடி மலரத் தக்கவை.
வில்சன் க்ரெகரி குடும்பத்தினருடன் சம்மந்தம் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது ஜொனாதனின் விருப்பம். தன் மகன், ஐவனின் மகளை விரும்பியதே ஜொனாதனுக்குத் தெரியாது. எடுத்த எடுப்பிலேயே ஏந்திழை என்கிற மதறாஸ் மாகாணத்துப் பெண் ஒருத்தியைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக ஷெனாயிடமிருந்து கடிதம் கண்டதும் அதற்கானத் தன் பதிலில் முதற்பக்கம் முழுவதும் தன் ஏமாற்றத்தை விலாவாரியாகப் பகிர்ந்திருந்தார் ஜொனாதன்.
என்றபோதும், அடுத்த பக்கங்களில் விஷயத்தின் வெம்மை முற்றிலும் தணிந்து, தானும் குடும்பத்தில் பிறரும் ஏந்திழையைப் பார்க்க மிகவும் ஆவலோடு இருப்பதாகவும், தனக்கு வகுப்புத் தோழனாக இருந்து கர்நாடகத்தில் தன் தொழிலுக்குப் பலவகை உபகாரங்களைச் செய்து தன் நிலை உயர முக்கியக் காரணமாயிருந்த சந்திரகாந்த் ஷெனாய் என்கிற கோவாவைப் பூர்வீகமாகக் கொண்டத் தன் இந்தியப் பிராமண நண்பன் நினைவாகவே ஷெனாய் என்கிற பெயரைத் தன் இரண்டாவது மகனுக்குச் சூட்டியதாகவும், ஷெனாய் இளம் வயதில் சர் பட்டம் பெற்ற சேதியைக் கேட்டப் பூரிப்புக்குப் பின்னாலும் சிலகாலம் உயிர்த்திருந்து, பிறகு இயற்கை எய்திய நண்பன் சந்திரகாந்த் இந்தத் திருமணத்தின் சேதி அறிந்தால் தன் ஆன்மாவிலிருந்து மகிழ்வான் எனத் தான் நம்புவதாகவும், ஜொனாதனின் கடிதம் உண்மையில் எதிர்பாராத ஒன்றாகவே இருந்தது.
அதைப் படித்து முடித்துவிட்டு ஷெனாய் சொல்லிக் கொண்டான், ஏந்திழை இஸ் லக்கி, நோ நோ, ஏந்திழை, யூ ஆர் மை லக்..