கல் மண்டபம். 

கல் மண்டபம்.

1.

கணேஷ் அப்பிடிக் கேட்பான்னு எனக்கு சத்தியமாத் தெரியாது.சொல்லப்போனா இத்தனை வருசம் கழிச்சி கணேஷ்னு ஒருத்தன் திரும்பி வந்து என் கையைப் பிடிச்சி நான் வெகுதூரம் வெளியேறிட்ட என் பழைய கதைக்குள்ள அழைச்சிட்டுப் போவான்னு நான் எதிர்பார்த்திருப்பேனா..?நானும் கணேஷும் ஒண்ணாவதுலேருந்து ஒண்ணாத் திரிஞ்சவனுங்க.எங்களுக்குள்ள ஆயிரம் வேத்துமைகள் இருந்தாலும் ஒரு அபூர்வமான ஒத்துமை எங்களை எப்பவுமே இணைச்சி வைக்கும்.அதென்னன்னா இழுவை.கஞ்சா புகைக்கிறது.இருங்க எழுந்துடாதீங்க.ஒரு கதையில எல்லா வரிகளும் வார்த்தைகளும் முகத்தை சுளிக்கிறாப்ல இருக்க முடியாதுல்ல..?நானும் கஞ்சா புகைக்கிறதுக்கு எதிரானவன் தான்.அதை நியாயப் படுத்தறவன் இல்லை.வேணும்னா இந்தக் கதையோட கீழ்ப்புறத்துல புகைபிடித்தல் புற்று நோயை வரவழைக்கும்.உயிரைக் கொல்லும்னு எச்சரிக்கை போட்டுர்றேன்.இந்தக் கதைக்குத் தேவைப்படுதுன்றதால தான் அந்த விஷயத்தை இவ்ளோ ஆரம்பத்துலயே ஓபன் செய்ய வேண்டியதாய்டுச்சி.உங்களுக்கும் அதுல இருக்கிற தேவையோட நியாயம் பின்னாடி புரியும்.

             கணேஷ் எப்பவாச்சும் ஊருக்கு வருவான்.அவன் சில சமயம் வருஷக்கணக்கில வரமாட்டான்.அவன் எப்பல்லாம் வர்றானோ நானும் அவனும் சேர்ந்து இழுவையை போடுவம்.அதுவும் மொத்தம் மூணு நாலு முறை மட்டும்.மற்ற படிக்கு வெறும் சிகரட் கூட நான் பிடிக்கிறதில்லை.எனக்கு அது தேவையில்லாத தேவை.சரி போகட்டும்.நாம கதைக்குள்ள போகலாம்.இந்த முறை கணெஷ் வந்த உடனே அப்பிடிக் கேட்பான்னு நான் சத்தியமா நினைக்கலை.போன வருசம் கூட வந்தான் ஸார்.ஆனா கேட்கலை.அப்பிடி என்ன கேட்டான்னா
   கல்மண்டபத்துக்குப் போவமா ரவீ..?
   எனக்கு உண்மையாவே சுத்திச்சி.கிர்ருன்னு உள்ளே பல சக்கரங்கள் சுத்தி காலம் முன்பின்னா என்னைக் கீறி எனக்குள்ள பழைய சத்தங்கள் மறந்து போன புன்னகை வெறுப்பு வேதனை சந்தோஷம் சிரிப்பு செண்ட் வாசம் வியர்வை நாற்றம்னு கலந்துகட்டியா என்னென்னவோ வந்துபோச்சி.ஒரே ஒரு பேரை மறக்குறதுக்கான முயற்சி தான் என்னோட வாழ்க்கைன்னு தோணிச்சி.பாருங்க எவ்ளோ பொயட்டிக்கா வருதுன்னு…சரண்யா இப்ப என்ன பண்ணிட்டு இருப்பா..?எப்டி இருப்பா..?எனக்கு அவளைப் பார்க்கணும்னு ஆசையா இருந்திச்சி.
            கணேஷ் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லலை.நானா எழுந்திரிச்சி என் வண்டியை எடுத்துகிட்டு கெளம்பிட்டேன்.வீட்டுக்கு வந்தவன் நேரா என் ரூமுக்குள்ள போயி கதவைப் பூட்டிக்கிட்டேன்.சத்தமா டீவீயை வச்சிட்டு படுக்கையில விழுந்தேன்.”சரண்யா…..!”

2

ஒரு ஏரியான்றது என்னங்க? நாலஞ்சு லேண்ட் மார்க். அதிகமா மக்கள் வந்து போய்ப் புழங்கறதுக்கான காரணம். இதைத் தவிர்த்துட்டு யோசிச்சா எல்லாமே ஒரே ஏரியா தான். இதான் இந்தக் கதையோட கருத்தான்னு எனக்குத் தெரியாது. இது தவிர ஒரு முழுக் கருத்து இருக்குது. எது என்னன்னா, அவன் அவன் விதிப்படி அவன் அவன் வாழ்க்கைல தற்செயலா நடக்குறதுல எதுனா ஒண்ணு திட்டமிட்ட சதிய விட பயங்கர சூதா நடக்கும். யாருமே அதைத் தற்செயல்ன்னு நம்பமாட்டாங்க. இழக்கறதுக்கோ, அடையறதுக்கோ எதுவுமே இல்லாம புரிஞ்சுக்குறதுக்கானதா அதுங்க நடக்கும்.
எனக்கு என்ன வியப்புன்னா இந்த உள்ளுணர்வுன்னு சொல்வாங்கல்ல. அதவிடப் பெரிய சனியன் தனியாத் தேவையில்லங்க. கணேஷ் சொல்லுவான், “நான் குடிக்கறதும் இழுவையப் போடுறதும் எனக்குன்னா நெனைக்குற? இந்த கணேஷ் பாவம்டா. தான் சரீரத்த தானே தாங்கிட்டுத் திரியறவன். உள்ளுக்குள்ள இருக்கானே மனசாட்சிங்கற மாங்கா இருக்கானே…அவன் எப்பவுமே தூங்க மாட்டான். நாம சாப்படறதுல தனக்குன்னு ஒரு துளிகூட எடுத்துக்க மாட்டான். எல்லா நேரமும் முழிச்சினே இருந்து உயிர வாங்குவான். உண்மையில அடிமையா இருந்து அவனவன ஆள்றது இந்த மனசாட்சிங்கற மாங்காதான். அதுக்குத்தான் இந்தக் குடி, இழுவை எல்லாம். தெருமுக்குல அலப்பர பண்ற சண்டியர அட்டாக் பண்ணிக் கொண்டுபோய் ரெண்டு நாள் மூணு நாள் அடியப் போடுற போலீஸ் மாதிரி,” என்று சொல்லிவிட்டு இன்னும் சோகமாக மூஞ்சியை வைப்பான்.
அந்த மாதிரி நன்மைக்கும் இல்லாம, தீமைக்கும் இல்லாம் நடக்குற தற்செயல்கள் அதுவரைக்குமான எதாவது ஒரு கதைய ஆரம்பிச்சு அல்லது முடிச்சு வெச்சுரும். ஒரே ஜன்னலை உள்ளேருந்தும் வெளியேருந்தும் தொறக்கறதில்லையா பாஸ்…?

3

1996 – ஒலகம் எவ்ளோ வளர்ந்திருந்ததோ கிட்டத்தட்ட அந்தளவுக்கு திருநகரும் வளர்ந்திருந்தது. மொத்தம் எட்டு ஸ்டாப்ல அஞ்சாவது ஸ்டாப்புங்கறது ஒரு பெண்டு. அந்த எடத்த சொன்னாலே முக்குல இருந்த முனியசாமி டீக்கடையும், ஒட்டுனாப்புல இருந்த பாயோட கரிக்கடையும்,ஆட்டுக்கரி இல்லை அடுப்புக்கரி பாஸ். அங்கருந்து பாத்தா ஒரு 63 டிகிரி தென்கெழக்குல கோணலா ஒரு வீதி ஸ்டார்ட் ஆகும். ஒரு காம்பவுண்டும் உள்ளுக்குள்ள மாடியும் கீழுமா ஒரு வீடும் இருந்தது.
தவமணின்னு கோயில் ஸ்டாஃப். அவரோட வீடு. மாடி ஒரு அரை போர்ஷன். அந்த வீட்ல யாரோ புதுசா ரெண்டு பொண்ணுங்க குடிவந்திருக்காங்கங்கற செய்தி ஏரியாமுழுக்க தீயாப் பரவுச்சு.
இளையராஜா இசைல கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஓடின சின்னத்தம்பி படத்துல ஒரு பாட்டு ரொம்ப பிரபலம். “போவோமா ஊர்கோலம்…” அதோட ஆரம்ப இசை கண்டிப்பா உங்களுக்கு ஞாபகம் இருக்கும்னு நெனைக்கறேன். அந்த ம்யூசிக்கோட ஆரம்பத்துலேருந்து அப்டியே மெல்ல நடந்து, புகையிலேருந்து எழுந்து வந்த புராண கால தேவதை மாதிரி வந்தா அவ. அதுக்கு முன்னாடி வரைக்கும் அழகுங்கற வார்த்தைக்கு ஈடா என்னென்ன வெச்சிருந்தேனோ எல்லாத்தையும் அழிச்ச மாதிரி வந்தா.
இருங்க இருங்க..ஒரு லட்சம் காதல் கதைய பாத்திருக்கோம் நாங்கங்கற மாதிரி அசால்டாதான பாக்குறிங்க? இது காதல்லாம் இல்ல சார். வேற ஒரு உணர்ச்சி. எப்படி சொல்றது…
என் குடும்பம், பாரம்பர்யம், அத்தனை நாள் எனக்கிருந்த ஞாபகம்… நான் ஒண்ணும் பெருசா படிச்சிடலன்னாலும் எனக்குள்ள இருந்த படிப்பு.. எல்லாத்தையும் மறந்துட்டு அவ பின்னாடியே போயிடணும்ங்கற மாதிரியான ஒரு உணர்வு. ஒரு ராணிக்கு ரெண்டு பக்கமும் விசிறிக்கிட்டிருப்பாங்கல்ல… அந்த மாதிரி ஒரு மெண்டாலிட்டிதான் எனக்கு இருந்துச்சுன்னு வெச்சிக்குங்களேன். அவ கண் பாக்கற தூரத்துல கைய கட்டிக்கிட்டு அந்த அபாரமான அழகு அவகிட்டேருந்து விடைபெற்றுப் போகிற வரைக்கும், ஏன் போனப்றமும் கூட அவ கூப்ட குரலுக்கு ஓடி ஓடி எல்லாத்தையும் செய்யணும்ங்கற ஆச வந்துச்சு.
எனக்கு சொல்லத் தெர்ல சார். “இந்த ஒவ்வொரு வாழ்க்கைலயும் ஒவ்வொருத்தருக்கும்” அப்டின்னு வழக்கத்துக்குள்ள இந்தக் கதையப் புகுத்திப் பாக்குற எல்லாரும் டிலீட் பண்ணிட்டுக் கெளம்புங்க சார். விண்லேருந்து எரிகல் வந்துச்சுன்னு சொன்னா.. எங்க ஆயா ஊட்லயும் இன்னொண்ணு பாத்தேன்னு சொல்லக் கூடாது. இதான் சார்… இந்தக் கோவம்தான் சார் என்னோட நேச்சர். ஆனா அவளுக்கு மட்டும் நான் அவளோட நாய்க்குட்டி. சூழ்நிலைங்கறது என்னென்ன பண்ணும் தெரியுமா? நம் வீட்டுப் பின்னாடி தெருவிலயோ அடுத்த தெருவிலயோ இயேசுநாதர், புத்தர், அப்துல் கலாம், காந்தி இவங்களோ.. ஹிட்லர், இடி அமீன், ராஜபக்ஷே இவங்களோ பல வருடம் குடியிருந்தா கூட கண்டுக்க மாட்டோம். என்ன சொல்றிங்க? அட்ராக்சன்ங்கறது எதுத்தாப்ல இருக்கறதுதான்.
மிலிட்டரிக்கு  ஆள் எடுக்குறாப்லதான் பாத்து பாத்து மாடி போர்ஷன்ல குடிவெப்பாரு தவமணி. போன கல்வியாண்டு வரைக்கும் பசங்களே புழங்கிட்டிருந்த எடம் அது.
முனியசாமி டீக்கடைதான் எங்களுக்கெல்லாம் ஆஃபீஸ். அவரு லீவே போட்டாலும் நாங்க அங்கதான் ஒக்காந்திருப்போம். இருங்க.. என் செல்லக் குட்டிக்கு ஒரு பேரு வெப்போம். என்னமோ அவள பாத்த உடனே “சரண்யா”ன்னு தோணுச்சு. என்னதான் அவள பெத்தவங்க ஒரு பேரு வெச்சிருப்பாங்கன்னாலும் ‘நான்’ அப்டிங்கற கான்செப்டுக்குள்ள அவளுக்கு இந்தப் பேரு இருந்துட்டுப் போகட்டும். என்ன ஒண்ணு.. தனக்கு இப்டி ஒரு புதுப் பேரு கெடச்சிருக்குங்கறது தெரியாம என் கண்ணு முன்னாடியே இங்கியும் அங்கயும் போய்ட்டு வந்தா சரண்யா.
எங்கூடவே இருக்கற மூர்.. பேரு மூர்த்தி.. ஆனா அவன் பேரு மூரு. ஒங்களுக்குத் தெரிஞ்ச பழமொழியோட தெரியாத அப்ளிகேஷன் அவன். எள்ளுன்னா எண்ணையா நிக்குறவன் இவன்தாங்க. “எனக்காக இத செஞ்சிர்றியா மூர்?”அப்டிங்கறதுக்குள்ள செஞ்சிருப்பான் மூர்த்தி.
தகுந்த ஆளும் சிக்கி, சூழ்நிலையும் ஒத்து வந்தா சென்னைல இந்த மூர் மார்க்கெட் தன் தாத்தாவோடதுங்கற அளவுக்கு மூர்த்தி கெட்டிக்காரன். சொல்லாததெல்லாம் செய்றவன்தான் இந்த மூரு.
“அந்தப் புள்ள பேரு என்ன தெரியுமாய்யா “…………..” சொந்த ஊரு ராயப்பன்பட்டி. அவங்க அப்பா அங்க மாவு மில்லு வெச்சிருக்காரு. மூணு பொண்ல மூத்தது இது. ஏற்கனவே பி.ஈ. வேற காலேஜ்ல முடிச்சிட்டு இப்ப எம்.ஈ ரெண்டு வருஷம் நம்மூர்ல படிக்க வந்திருக்குது. கூடவே சுத்துதே அது நம்ம தவமணிக்கு சொந்தம். ஹாஸ்டல் ஒத்துக்கல. நெறைய படிக்கணுமாம்.. அதான் தனியா வீடெடுத்து தங்கியிருக்காளுக… இன்னியும் ஒண்ணே முக்கா வருஷம் இங்கதான்…” என்றவாறே சிரித்துக் கொண்டு தன் கழுத்தைச் சுற்றி இரண்டிரண்டு விரல்களை ஆட்டினான். “அதுக்குள்ள அவளுக்கு முழுசா வாக்கப்பட்ற மாட்டே நீயி…?” என்றான்.
“உனக்கு வேற வேல இல்லடா…” என்று அதட்டினேன். இந்த இடத்தில் மூன்று முக்கிய விஷயங்களை உங்கள் அனைவருக்கும் அழுத்தம் திருத்தமாய்த் தெரியப்படுத்த விரும்புகிறேன் நண்பர்களே :
1. இது காதல் அல்ல. எனக்குக் காதலிக்க வராது. அதன் மேலெல்லாம் பெரிய நம்பிக்கை இல்லை. யாராவது என்னைக் காதலித்தால் பதிலுக்குக் காதலிப்பேனா என்பது கூடச் சந்தேகம்.
2. எனக்கு சரண்யா மீது ஏற்பட்டுள்ளது கிளர்ச்சி, கவர்ச்சி. பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்றம்… அவ்ளோதான். இதைத் தாண்டி நானே அனுபவிக்க வேண்டும். அது எனக்கே சொந்தமாக வேண்டும் இந்த மாதிரி எந்தக் கண்றாவியும் இல்லை. சமகாலத்துல எதிர்ப்பட்டுட்டோம்ங்கறதுக்காக யார் வேணா யாரோட வாழ்க்கைல வேணா என்ன வேணா பண்லாமா? நான் ஜஸ்ட் ஒரு பொது ஜனம், அவ ஒரு இஞ்ஜினியர். சோ நோ காதல், நோ காமம்.
3. “ஆரம்பத்துல இதை விடப் பாத்திருக்கோம். பின்னாடி காதலாய் கசிஞ்சே தீரும்” என்கிற பெஸிமிஸ்டுகளுக்கு.. இது என் கதை. நீங்கள் பார்க்க ஏதுமில்லை. “மனசு ஒத்துப் போயிட்டா படிப்பெல்லாம் ஒரு பிரச்சினையா?” என ஆரம்பிக்கும் நல்லவர்களுக்கு… இந்த மனசு, காதல்ங்கற ப்ராஜெக்ய்ல எதெதெல்லாம் ஒத்துப் போனதா நெனைக்கிறோமோ.. அதெல்லாம்தான் பிச்சுக்கும். நம்பிக்கை இல்லாதவங்க ஒரு ரூவாய்க்கு கல்லக்கா வாங்கிகிட்டு ஆழ்ந்து சிந்தித்து உள்நாக்கை சொறிந்து கொள்ளவும்.

4

இந்த மூரு பயலுக்கு அடுத்தவன் வீட்ல ஊருக்குப் போனாலும் அடுப்பெரியணும்னு ஆசப்படுவான். இதுக்கென்ன அர்த்தம்னு கேக்காதீங்க. சுமாரா எவ்ளோ அர்த்தம் வருதோ வெச்சுக்கோங்க. ஜனகராஜ், தியாகு, ரவீந்தர், சந்திரசேகர்.. ராஜீவ் காதலுக்கு இவங்க ஹெல்ப் பண்ண மாதிரி இவன், “உனக்கு அவ மேல லவ்வு லவ்வு லவ்வு லவ்வு”ன்னு விடாம குரைச்சிக்கிட்டே இருந்தான். பக்கத்துல தூங்கிட்டிருக்கறவன் தூக்கக் கலக்கத்துல நமக்கு சொறிஞ்சு விடறான்னு வைங்க.. எழுப்பி அட்வைஸ் பண்றது புத்திசாலித்தனம் இல்ல. வேணான்னா தள்ளிப் படுத்துக்கறது சாத்வீகம். இல்லன்னா எங்கல்லாம் தேவைப் படுதோ அங்கங்க நகத்திக் காட்டிக்கறது புத்திசாலித்தனம். இந்த பாயிண்ட் ஆஃப் வியூல யோசிச்சுப் பாருங்களேன்…
“ஒரு விஷயம் நமக்கு நடக்குதுன்னா அத நம்மளோட யூட்டிலிட்டில ஒண்ணா மாத்திக்கறோம். இப்ப சொல்லுங்க மறுநாள் காத்தால அத சொல்லி என்ன பிரயோஜனம்? மூரு ஒரு தியாகி. அவன் மனசுக்குள்ள நானும் சரண்யாவும் லவ்வர்ஸ்ன்னு பதிஞ்சிருச்சி. அது செடி இல்ல.. அதனால நா தண்ணி ஊத்தி வளர்க்கல. எங்கிட்ட ரப்பர் இல்ல. அதனால நா தேடிப் போய் அழிக்கல..
அழகான பொண்ணோட அசிங்கமான மொமெண்ட்ஸ் கேள்விப்பட்டிருக்கிங்களா ஸார்..? தல சீவாம.. மேலுக்கு எதும் அப்பிக்காம ஸாரி மேக்கப் எதுவும் பண்ணிக்காம.. மூரோட தலமுடி செம்பட்டையாகி பழுப்பேறி ஒரு மாதிரி குன்ஸா இருக்கும். கிட்டத்தட்ட அந்தக் கலர்ல ஒரு நைட்டில முனியசாமி டீக்கடை சைட்ல அமர்ந்திருக்கற எங்களை நோக்கி வரா. அஃப்கோர்ஸ் நா அன்னிக்கு வெள்ளிக்கெழமைங்கறதால சினிமா சேஞ்ச் ஓவர்கள உத்து நோக்கிக்கிட்டிருந்தேன். சின்னா என் தோளத் தட்டி, “அண்ணி”ங்கறான். மூரு தொடைல கிள்ளி, “அங்க பார்யா.. உன் ஆளு”ன்றான். வந்திட்டிருக்கறது சரண்யான்னே எனக்கு மொதல்ல தெரியலங்க. அப்படி ஒரு வித்தியாசமா, அவளோட வேற ஒரு தோற்றமா.. தெரிஞ்ச ஒருத்தரோட தெரியாத பிம்பமா நெருங்கிட்டா.
டீக்கடை பட்றைல முனியசாமி பையன்தான் இருந்தான். அவ வந்தத அவன் கவனிக்கல. ஆளில்லாத கடைக்கு நாமளும் நாட்டாமைதானே? சட்டுன்னு நா எந்திரிச்சுப் போனேன். டிவி விக்ஸ் விளம்பரத்துல வர்ற மாதிரி மூக்கு செவந்திருந்துச்சு.
“தண்ணியில இருந்திருந்தா நீந்தியிருப்போம் தெரியுமா?”ங்கற மாதிரி படபடக்குற கண்ணு ரெண்டும் தனியா பேசுது. நடுவுல அவ உதட்ட அசச்சு “ஸாரிடான் இருக்கா?”ன்னு கேக்கறா. ரொம்ப இயல்பா வெளில வந்த நான் “ஸ்கூட்டி ஓட்டுவிங்களா?” அப்டின்னு கேட்டேன்.
மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் அறிமுகக் கூட்டங்கள்ல பிரமாதமா ஜெயிச்சவர்ன்னு ஒரு சாரை காமிப்பாய்ங்கள்ல… அவரு கூட “நா ஏழாங்கிளாஸ்தான் படிச்சேன்.. ஆனா இப்ப ஏரோப்ளேன்ல போறேன்…” அப்டிம்பாரே.. வந்திருக்குற ஒவ்வொருத்தருமே அவரே ஆகும்போது நம்ம ஆக மாட்டோமான்னு தோணுமே.. நெற போதைல இருக்கறவன்ட்ட கையெழுத்து வாங்கறா மாதிரி தன்னம்பிக்கையே வாழ்க்கைன்னு நாலு நாளைக்குத் திரிவோமே.. அத வேணா நம்பாம இருந்துக்கோங்க.. இப்போ நான் சொல்லப் போறத நம்புங்க. ஒரே ஒரு ஸ்கூட்டி.. ஓஹோன்னு வாழ்க்க.
அவ தெரியாதுன்னு சொன்னா நா கூட்டிட்டுப் போலாம்னு நின்னேன் அப்டினுலாம் நெனைக்காதிங்க. ஒடனே “ரொம்ப தேங்க்ஸ்”ன்னு வாங்கிக்கிட்டு, ‘விர்ரூம்’ன்னு என் வண்டிய தூக்கிட்டுப் போய்ட்டா…
“என்னய்யா.. நீ கூட்டுப் போயிருக்கலாம்ல” என அங்கலாய்ப்பாய்ச் சொன்னான் மூர். அப்போதுதான் வந்தவனென்றாலும் சடன் பிக்கப் ஆன கோபி, “நாம எப்ப வேணா போய்க்கலாம். மொதல்ல வண்டிய குடுத்துருக்கான்ல.. அது போயிட்டு வரட்டும். மாப்ளையோட வண்டியே ஆறறிவு படைச்சது. தெரியுமா?” என்றான்.  நான் உடனே பட்றையிலிருந்த சதீஷை நோக்கி, “மாப்ள வந்த உடனே டீ குடுன்னு எத்தன தடவை சொல்லியிருக்கேன்?” என்றேன்.
“நீ என்ன பிச்ச போட்றியா? எங்களுக்கென்ன வக்கில்லையா? நாங்கென்ன டீ சாப்டுக்கமாட்டமா?” என்று முகத்தில் கடுமை காட்டி மறுபடி பைக் ஏறப்போனவனை மதியாமல், தொடர்ச்சியாக சதீஷிடம், “அவன் கேட்டான்னா ஒரு சிகரெட்டும் குடு” என்றேன். “அப்டின்னா சரி..உன் மரியாதையை அவமரியாதை பண்றவன் நானில்லை” என்று மறுபடியும் பெஞ்சில் வந்து உட்கார்ந்து கொண்டான் அல்பன் கோபி.
முறைக்கத் தொடங்கிய மூரிடம், “பல சென்ம உறவுய்யா” என்றான்.
அவன் “கர்மம் கர்மம்” என்று நெற்றியில் அடித்துக் கொள்ள, முதல் முறைக்கும் இரண்டாவது முறைக்கும் நடுவில் தான் அடித்த சிகரெட்டைக் குறுக்கே நீட்டிய சின்னா சற்று நேரத்தில் ஒருங்கே தன் கையையும் நெற்றியையும் பொசுக்கியது எது எனப் புரியாமல் தன் கையைப் பார்த்து மூர் அலற, “யோவ்.. இங்கிருக்கு.. எங்க தேடற?” என்று நெற்றியிலிருந்து அதை எடுத்து கோபி தன் சிகரெட்டைப் பற்றவைக்க முடியுமா என்று பார்த்துவிட்டுக் கீழே தூக்கி எறிந்தான்.
“அடிச்சுட்டுக் குடுன்னு நீதானய்யா கேட்ட?” என்று விளக்கம் தந்து மன்னிப்புக் கோர முயன்ற சின்னாவிடம், “தலையில அடிச்சுக்குறப்பயா குடுப்ப?” என முறைக்க, “நீ அடிச்சிக்கப் போறேன்னு எனக்கெப்படிய்யா தெரியும்?” என்றான் பரிதாபமாக. “எல்லாரும்தான் அடிச்சுக்கறாங்க. இது ஒரு தப்பா?” “அப்டி இல்ல மாப்ள.. யாராவது கோவத்துல வெட்னா அது கொல.. நீயா உன் கைய அறுத்துக்கிட்டுச் செத்தா அது தற்கொல.. பட்.. ஷேவிங் பண்ணும்போது நீ தெரியாம கழுட்த அறுத்துக்கிட்டன்னு வெய்யி… தட் ஈஸ் விதி.” என்ற கோபியின் முகத்தையே உற்று நோக்கிவிட்டு, “ஆமா மாப்ள.. டைமே சரியில்ல” என்று நெற்றியைத் தேய்த்துக் கொண்டான் மூர்.
வாசலிலேயே நின்றிருந்த என்னிடம், “தேங்க்ஸ்ங்க” என்று சொல்லிவிட்டு சாவியைக் கொடுத்தாள் சரண்யா. “மெடிக்கல் ஷாப்புக்குப் போயி வேற ஸ்ட்ராங்கான மாத்திரையே வாங்கிட்டேன்” என்று சிரித்தாள்.
உளே வந்து, “என்னடா நெத்தியில…?” எனக் கேட்டேன்.
“இந்தாள் தெரியாம சுட்டுட்டாப்லய்யா…” என்றான் மூர் சின்னாவைக் காட்டி.
நான் எழுந்து என் வாகனத்தில் ஏறி ஸ்டார்ட் செய்துவிட்டு, ஒரு யு அடித்துத் திரும்பி வந்து நெருங்கி நின்றேன். “சின்னா…”
“அண்ணே…” என்றான் அப்பாவி.
“சொன்னாப்லயே பொட்டு வெச்சிட்டே…” என்றேன். அசோகமனோகரநம்பியார் போல ‘டாண்’ எனத் திரும்பினான் மூர். நாக்கை மடித்து என்னிடம், “அங்..” என்று சைகை காட்டினான் கோபி. “பட் நீ ஃபர்ஸ்டு கோபின்னுதானே சொல்லியிருந்த?” என்று கிளம்பிப் போனேன்.
சரத்தின் நுனியில் தீ வைத்தால் வெகு நேரம் வெடிக்கும்.வெடிக்கட்டும்.

5

பால் கறந்து, பால் ஊற்றி, பால் பண்ணை வைத்து, பால் பேடா விற்றுப் பல ஓட்டல்களுக்கு சங்க பிரெசிடெண்டு ஆக இருபது நிமிடத்துக்குள் ஆகிக் காட்டிய அண்ணாமலையின் அந்தப் பாடலைக் கேட்டவுடன் உடம்பெல்லாம் சிலிர்த்தவாறு எழுந்தான் கோபி. “மாப்ள இன்னிக்கு பாட்ஷா பார்த்தே ஆகணும், போயே தீர்றோம்” என்றான்.
“முடியாது” என்றேன்.
“கட்சி மாறிட்டியா?” என ஹஸ்கி வாய்ஸில் கவலைப் பட்டான் கோபி.
“நேத்துத்தானடா பாத்தோம்?”
ரஜினி வாய்ஸில், “அது பாட்ஷாவுக்கு” என்றவன், ரகுவரன் குரலில், “இன்னிக்கு ஆண்டனிக்காகப் பாக்கணும்… ஐ நோ..” என்றான்.
டக்கென்று என் முகத்தைப் பார்த்த சின்னா, “ஆங்… ஐ நோ சும்மா சேர்த்திருக்காப்ல.. ஒரு சப்போர்ட்டுக்கு” என்றான்.
        வேறு வழியே கிடையாதென்பதால் கலைவாணி தேட்டருக்கு போய் டிக்கட் எடுத்துவிட்டுக் காத்திருந்தோம்.
“சனிக்கிழமை சாயங்கால ஷோவுக்கு, ரிலீசான வாரம், அதுவும் ரஜினி படத்துக்கு அதுவும் ‘பாட்ஷா’ மாதிரியான படத்துக்கு நாலு டிக்கெட் வேணும்னா ஒரு வெளியூரு புள்ள ஒங்கிட்டதானே வருவா? அதான் வந்திருக்கா” என்று தனிநபர் ஒலிம்பிக்ஸில் தங்கம் வாங்கிய ப்ளேயரை கோச் பாராட்டுவதைப் போல என் தலையைத் தடவிப் பாராட்டினான் கோபி.
“இதெல்லாம் ஒரு விஷயமாடா?”என்று அலுத்துக் கொண்டேன்.
“காதலோட மகத்துவமே அதானே… லவ்வுன்னே தெரியாம லவ்வுல இருக்க” என்றான் சின்னா.
“இங்க பாரு.. பாத்த படத்தையே திரும்பப் பாக்குறதுக்கு டிக்கெட்டும் எடுத்துட்டேன்.. இண்டர்வல்ல ஒரு முட்ட போண்டாவும் ஐஸ் க்ரீமும் சாப்பிடணுங்கறதுக்காக ஐஸ் வெச்சுக் கொல்லாத… என்ன?”
“அவன் உண்மையத்தான்யா சொல்றான்” என்று மறுபடியும் ரகுவரன் வாய்ஸ் ட்ரை பண்ணான் கோபி.
“உன் வாய்ஸ் அப்டியே ரகுவரன் மாதிரியே இருக்குன்னு சொல்லி ஏத்தி விட்ருப்பானே.. அதெல்லாம் நம்புறியா கோபி?” என்றேன்.
“ப்ராக்டீஸ் பண்ணா வந்துரும்ன்னு ரொம்ப அடிச்சு சொன்னான்யா” என்றவனிடம், அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்,
“ரொம்ப பண்ணாத… அந்துரும்” என்றேன்.
“ஏண்டா.. அவங்க போற அதே படத்துக்கு நாமளும் போனா வேணும்னே பண்றோம்னு நெனைக்க மாட்டாங்களா?” என்றேன்.
“ஏய்யா… ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாதவங்கதான் ஒவ்வொரு ஷோவையும் பாக்கணும்னு எதுவும் சட்டம் இருக்காய்யா…?” நான் விழித்தேன்.
“இவங்க டிக்கெட் எடுத்து வெச்சிருக்க ஷோவுக்குத்தான் நாம டிக்கெட் கேட்டோம் போலருக்குன்னு சரியாப் புரிஞ்சுக்க மாட்டாங்களாய்யா?” என்றான்.
“அதானே?” என இன்னும் காத்திரமானேன். இதற்கு முந்தைய பழுத்த மூக்கு நைட்டி சித்திரம் நினைவில் ஆடும்தானே?
மேனியெங்கும் மணிகளும் முத்துக்களுமாய்ச் சகலமும் வெண்மையில் இருக்குமாறு தன் துணை துந்துபியுடன் வந்து சேர்ந்தாள் சரண்யா. துந்துபி எப்போதும் இங்கிலீஷிலேயே பேசும் என்பதால் எங்கள் சரகமே அவளை வெறுக்கும். மற்ற இடமென்றால் நிற்காமல் நகர்ந்துவிடும் கோபி, வேறு வழியில்லாமல் நெர்வஸு ஆகிக் கொண்டிருந்தான்.
துந்துபிக்கும் கோபிக்குமான சின்னஞ்சிறு ஃப்ளாஷ்பேக்…
போன மாதத்தில் ஒருமுறை சரண்யாவுக்குக் கடுமையான காய்ச்சல். அவள் அனுப்பியதில் எங்கள் யதாஸ்தானத்தில் என்னைத் தேடிக் கொண்டு முனியசாமி கடைக்குமுன் வந்து நின்றுகொண்டிருந்தாள் துந்துபி. சரண்யா என் ஆள் என்று தேசிய அளவில் இவர்களாக அறிவித்துக் கொண்டிருந்ததால், காலி இடத்துக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த பட்டதாரி இளைஞனான மேதகு கோபி அவர்கள் இரண்டு உதடுகளையும் எச்சியெல்லாம் பண்ணிக் கொண்டு, ஸ்டைலான குரலில்
“Yes…”
“Where is Mr. Ravi?”
இவன் நியாயத்துக்குத் தெள்ளு தமிழில், “எனக்குத் தெர்லங்க.. இப்ப வர்ற நேரம்தான்.. வந்துருவாப்ல” என்றெல்லாம் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். இவன் இன்னும் ஸ்டைலாக “I don’t know” என்று சொல்லுவதற்குப் பதிலாக, “I know” என்று (மூன்றாம் வகுப்பு.. அவ்வையார் ஆரம்பப் பாடசாலை என்று கவுண்டமணி சொல்லுவாரே.. அவருடைய க்ளாஸ்மேட் கோபி என்பதை நினைவில் கொள்க) ஸ்டைலாகச் சொல்ல, அவள், “Then tell it to me” என்றாள். இவன் அங்கேயே முன் சொன்ன I knowவையே நியாயம் கேட்கும் தொனியில், “I know?” என்றான். கையை விரித்திருப்பதைப் பார்த்துவிட்டு ‘நரகம்.. எதிர்ப்பதத்தைத்தான் சொல்லாமல் சொல்லுகிறது” என்று புரிந்து கொண்டவள், “நான்சென்ஸ்” என்று முறைத்துவிட்டுத் திரும்ப, என்னைப் பார்த்ததும் சட்டென மலர்ந்து சரண்யாவுக்கு உடம்பு சரியில்லை என்பதைச் சொல்லி வண்டியை வாங்கிக் கொண்டு போனாள்.
பூரிக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருந்த கோபி என்னிடம் வந்து “I knowன்னா என்னாய்யா?” என்று கேட்டான். “எனக்குத் தெரியும்” என்றேன். “எனக்குத் தெரியாதுய்யா” என்றான். “நீ இங்கிலீஷ விட்டுரு” என்றவாறே கடைக்குள் புகுந்தேன்.
அதிலிருந்து துந்துபி ராங்கியும் ரப்பும் பிடித்தவளானாள்.

6

அவளக் காதலிக்கலன்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டிருக்கேன்னுதான் தோணுச்சு. ஆனாலும் சொல்றேங்க.. அந்த அழக நா அனுபவிக்கணும்னு நெனைக்கல.. காதலிக்கவும் செய்யல.. நா முன்னாடி சொன்னதுல உறுதியா இருக்கேன் இன்னமும்.
உங்களுக்கு ஒரு விஷயம் சொல்றேன். பிடிச்சவங்க யாருக்காவது டிக்கெட் எடுத்துக் குடுத்து அதே படத்தை நீங்களும் பார்க்க நேர்ந்தா பாக்காதீங்க. இல்லாட்டி, ஒங்களுக்குப் பின் வரிசைல அவங்க உக்காந்துக்கற மாதிரி விட்ருங்க.
“நாலு பேர், நாலு பேர், நாலு பேர், நாலு பேர்ன்னு சொல்லி வாங்குன டிக்கெட்ல துந்துபிக்கு அந்தப் பக்கம் ஒருத்தனும், சரண்யாவுக்கு இந்தப் பக்கம் ஒருத்தனும் வந்து ஒக்காந்தானுங்க. சரண்யா பக்கத்துல உக்காந்தவன மொகத்தக் கூட சரியா பாக்கல. எனக்குள் காதல் இல்லை என்கிறேன். ஆனாலும் எதோ ஒரு வெறுப்பு.  போதாக்குறைக்கு என் காதோடு, “ஏய்.. நீ இருக்க வேண்டிய எடத்தப் பாருய்யா…” என்ற கோபியை இருட்டில் முறைத்தேன்.
“நா சொல்லல? தேவைக்குப் பயன்படுத்திக்குவாளுகய்யா…” என்றான் சின்னா. ஒருபடி மேலே போன மூர், “நீ என்ன ****வா?” என்றான். என்னவோ என்னை தியேட்டர் வாசலில் ஏமாற்றிவிட்டு இன்னொருவன் கூடப் போனாற் போலவே பேசிக்கொண்டிருந்தார்கள்.
ரஜினி ஆனந்த்ராஜைக் கட்டிவைத்துத் தன் விஸ்வரூபத்தை விளக்கிக் கொண்டிருந்தார். “நா கெளம்பறேன்.. ப்ளீஸ்.. என்னைய விடு..” என்று எழுந்தேன். “வாடா” என்றேன் கோபியிடம். “ஏய்… பாதியில எந்திரிச்சி வர்றதப் பாத்தா என்னய்யா ஆகும்? எம்பேரே ரஜினி கோபிய்யா… அதெல்லாம் வரவே மாட்டேன்.. நீ கெளம்பு.. நாளைக்குப் பாத்துகிடுவோம் நம்ம” என்றான்.
அதற்கு இரண்டு நாட்கள் கழித்து லேசான தூறல் தினத்தில் அஞ்சாவது ஸ்டாப் திரும்புமுன்னரே கையை ஆட்டி என்னை நிறுத்தினாள் சரண்யா. அவள் வழக்கம் போலத்தான் சிரித்தாள். எப்படி ரியாக்ட் செய்வதெனத் தெரியாமல் தடுமாறினேன்.
“எதும் வேல இருக்கா ரவீ?” என்றாள். ஒரு சிமெண்ட் கலர் சட்டையும், வெளிர் நீல ஜீன்ஸும், லேசாய் வியர்த்த மூக்கும், எந்த வரையரைக்குள்ளும் அடக்க முடியாத இருபக்கக் கன்னங்களும்.. நான்சென்ஸ்.. என்ன இது உங்களை எல்லாம் நிற்க வைத்துவிட்டுக் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்…?
“இல்ல வண்டி வேணும்.. உங்களுக்கு வேலை இருந்தா வேணாம்” என்றாள்.
அவள் போன கொஞ்ச நேரத்துக்கெல்லாம் துந்துபி தன் நாய்க்குட்டி @ பாய்ஃப்ரெண்டுடன் சத்தம் போட்டுச் சிரித்துக் கொண்டே கடையைத் தாண்டிப் போனாள். அவள் காதுபடவே “எல்லாம் ஏமாத்துறவளுக…” என்று எழுந்து சொல்லிவிட்டு உட்கார்ந்தான் கோபி. ‘அவ ஒன்ன என்னடா ஏமாத்துனா…?’ என்று நான் கேட்க நினைத்துக் கேட்கவில்லை. கோபியின் உலகத்துக்குள் ஏமாற்றியபடியே வந்து திரும்புபவர்கள்தான் பெண்கள்.
மெக்கானிக் செந்தில் கொஞ்ச நேரம் கழித்து சின்னாவை வந்து இறக்கிவிட்டுப் போக, உள்ளே வந்த சின்னா என்னைப் பார்த்ததும் முகம் மாறினான். கோபியிடம் ஏதோ கிசுகிசுக்க, அவன் வேண்டாமெனத் தலையசைக்க, நான் இயல்பாக, “என்னடா?” என்றேன்.
“மூலக்கர பக்கத்ல பாத்தேன்யா” என்றான். என்ன நினைத்தானோ தெரியவில்லை.. சிரித்துக் கொண்டே “பாத்தேண்ணா…” என்றான். அவனை முந்திக் கொண்டு “நேத்து வந்தானே அந்த நோயாளி.. அவன் ஒன் வண்டியையும் ஓட்டிட்டுப் போறானாம்யா.. சின்னா பாத்தானாம்” என்றான். யாரந்த நோயாளி? நெற்று தியேட்டரில் சரண்யா பக்கத்தில் அமர்ந்தவன். தன் கடைவாய்ப் பல்லைச் சரி செய்து கொண்டே “வில்லனுக்கு வில்லனா வர்றவந்தான்யா ஹீரோ” என்று சொன்ன கோபி தானெதோ ரொம்பத் தப்பாய்ச் சொல்லி விட்டதை உணர்ந்து, “நாக்குல சனி போல.. என்ன மன்னிச்சிரு” என்றான்.
சற்று நேரத்தில் கடை வாசலில் ஸ்டாண்ட் போட்டுவிட்டு ஸ்கூட்டி சாவியை என் முகத்தின் முன்னே ஆட்டியவாறு தன் மீசையற்றப் புன்னகையோடு வந்து நின்ற அவன் “தேங்க்யூ ஜி” என்று சாவியைக் கொடுத்துவிட்டுத் திரும்பி நடந்தான். இரண்டு நிமிடங்கள் முழுதாய்க் கடந்த பிறகு, “ஒனக்கென்னய்யா கொறச்சல்?” என்று நிசமாகவே கண்கலங்கினான் கோபி. “ஏய்… ஒன்னய அடிக்கப் போறோம்னு சொன்னாலே அழுது முடிச்சிட்டுத்தான்யா அடி வாங்குவான்..பாண்டியன் ஸ்வீட்ஸ் காராச்சேவு மாதிரி இருக்கான். என்னய்யா இவனப் போயி…” என்று ஆரம்பித்து அந்த வாக்கியத்தை எப்படி முடிப்பது என்று தெரியாமல் அப்படியே விட்டுவிட்டுப் போனான்.

7

பரீட்சைக்குப் படிப்பதற்காக, ஐ மீன், சரண்யாவுக்கும் துந்துபிக்கும் சொல்லிக் கொடுப்பதற்காக நாய்க்குட்டிப் பையனும், மீசையற்ற புன்னகையனும் அடிக்கடி ஏரியாவுக்குள் வந்து போவதைக் கண், காது, மூக்கெல்லாம் வைத்து எல்லோரும் பேசிக் கொள்வதாக முனியசாமி மூலமாக அவரது உறவுக்காரரான தவமணியிடம் பற்றவைத்து அது நன்றாக்வே ஒர்க் அவுட் ஆனது. பசங்கள் வரத்து நின்று போனது.
துந்துபியின் பாய்ஃப்ரெண்ட் அவளை வந்து அழைத்துப் போவதும், விடுவதுமாக இருந்தான். நாலைந்து நாட்களாக சரண்யாவைக் காணோம். ஒரு கட்டத்தில் சின்னாவே பொறுமை இழந்து, “அண்ணிக்கு எதுவும் ஒடம்பு சரியில்லையா.. இல்ல எதுனா விசேஷமா?” என்றான். நான் வேறொரு இடத்தை எய்ம் செய்ய விலகிப் போய் நாசுக்கற்ற இன்னொரு இடத்தில் அடிவாங்கிக் கொண்டான். “வீட்ல.. ஊர்ல.. விசேஷம் எதுவும் நடக்கக் கூடாதா?” முனங்கியவாறே போய்ச் சேர்ந்தான் சின்னா. துந்துபி வந்து, சரண்யாவுக்கு ரொம்ப உடம்பு முடியவில்லை என்றும், ஆட்டோ ஒன்று தேவைப்படுவதாகவும் கேட்க, ஆனந்த் ஆட்டோவில் முன்புறம் நான் ஏறிக் கொண்டேன்.
வீடு மாற்றத்தின்போது துவண்டு மண்ணில் புரள நேர்ந்த மணி ப்ளாண்ட் செடியைப் போலக் கசங்கி இருந்தாள் சரண்யா. ஆட்டோவின் பின்னாலேயே கோபி ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு வந்து சேர, டாக்டர் எழுதித் தந்த மருந்துச் சீட்டை “குடுங்க.. நான் வாங்கியாரேன்…” என வாங்கிக் கொண்டு அதே ஆட்டோவில் அனுப்பி வைத்தேன்.
    எதோ ஒரு நரம்பு அறுந்து போன இசைக்கேட்டைப் போல.வேணாம் இந்தக் கதைக்கு இத்தனை ஹெவி உதாரணம் வேண்டாமென நினைக்கிறேன்.ஏதோ ஒரு கண்ணாடி உடைஞ்சிட்டாப் போல எங்க ரெண்டு பேருக்குள்ள பழைய சகஜம் பழைய அன்னியோன்னியம் ஏதோ ஒண்ணு கட் ஆனாப்ல ஃபீலாச்சு.நான் ஏன்னு கேட்கலை.எனக்கு நடக்கிறதை நானே வேடிக்கை பார்க்கிற மனோநிலைக்குப் போயிட்டேன்.வேறென்ன பண்றது..?
         ஒரு மாசம் எதுவுமே இல்லாத நாட்கள்.அதுக்குப் பிறகு ஒரு நாள் அவளாக வந்தாள்.வண்டி வேணும் என்றாள்.சாவியைத் தந்தேன்.மூன்றாவது நிமிடமே திரும்பி வந்து சாவியைத் தந்தாள். என்னிடம் கட்டை விரலைத் திருப்பி ‘அந்தப் பக்கம் பாரு…’ என்கிறாற்போல் காண்பித்தாள்.
காராசேவ் தன் புதிய கைனட்டிக் ஹோண்டாவில் நின்றுகொண்டிருந்தான். அவளை அனுப்பி வைத்துவிட்டுக் கடைக்குள் நுழைந்ததுதான் தாமதம்.. “இதெல்லாம் ந்ம்ம குடும்பத்துக்குத் தேவையான்னு யோசி..” என்ற கோபியிடம், “நா எதுனா சொன்னனா?” என்று ஓங்கி அறைந்தேன்.
“ஒனக்கு செட்டாகலன்னா எங்கியாச்சும் எதாச்சும் ஆறு, கொளம் பாத்துச் சா… கையக் காட்ற வேலையெல்லாம் வெச்சுக்காத” என்று என்னை மறு அறை அறைய, எதிர்பாராதவனாய் அதிர்ந்தேன். சும்மா அதோடு விட்டிருந்தால் எல்லாம் சௌக்கியமாய்ப் போயிருக்கும்.
“நீ தப்பா ஜூஸ் பண்ணிட்டு…”சொல்லி முடிப்பதற்குள், “இர்றா… ஒன்னய நா ஜூஸ் பண்ணிர்றேன்” என்று அவன் மேல் உட்கார்ந்து கொண்டிருந்தேன். “இந்த ஏரியாவே நம்மள நம்பித்தான் இருக்கு” என்று எங்களை விலக்கி விட்டான் மூர்.
அதற்குள் தவமணி வீட்டு மாடிபோர்ஷனில் குடியிருக்கும் ராயப்பம்பட்டி பொண்ணுக்காக அஞ்சாவது ஸ்டாப் முத்துப்பாண்டி மகன் கோபியும், டீச்சர்ஸ் காலனி நீலகண்டன் மகன் ரவிக்குமாரும் அடித்துக் கொண்டார்கள் என ஆங்காங்கே செய்தி பரவியது.
இந்த நிலையில், இயல்பான காரணங்களுக்காகவே அடுத்து வந்த சில நாட்கள் எங்கள் யாராலுமே டீக்கடையில் அமர்ந்து பந்தோபஸ்து பார்க்கும் பணியைச் சரிவர மேற்கொள்ள முடியவில்லை. சின்னா ஒரு முறையும், மூர் ஒரு முறையும் மட்டும் வந்து சொற்ப நிமிடங்களில் கிளம்பிப் போனதாகவும், இனிமேல் அவ்வளவுதான் வரமாடார்களென்று தான் நினைத்ததாகவும் முனியசாமி மகன் சதீஷ் சொன்னபோது நான் வந்திருப்பது தெரிந்து மூர், சின்னா, மற்றும் தி ரிபெல் கோபி ஆகியோர் வந்து சேர்ந்தார்கள்.
“என்னண்ணே இளைச்ச மாதிரி இருக்கே” என்றான் சின்னா. “இல்லய்யா.. கொஞ்சம் கறுத்த மாதிரி இருக்கான்” என்றான் மூர்த்தி.
கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் இருந்தோம் நானும் கோபியும்.
“பேசுய்யா…” என்று மூர்த்தி கண்ணைக் காட்ட, ஏதோ பேசப் போகிறான் என்று பார்த்தால், “ரஜினிய விட்டுட்டு அவரு நெழல் எப்டிய்யா வாழும்?” என்றான் கோபி. வேறு வழி? பேசித் தொலைத்தோம்.
பெரிய மழைப் பருவத்தின் துவக்கம் இனிமையானது. இருக்கிற உலகத்துக்குள்ளேயே இன்னொன்றைத் தொடங்கினாற்போல் வசிப்பிடத்தின் வண்ணங்களையும், வாசனையையும் தன் வருகையின் பிடிக்குள் கொண்டுவந்திருக்கும் மழை. மழையின் ஞாபகங்கள் மழையில் மட்டும் கிளைப்பது விந்தை. உண்மையில் வாள் நுனியைச் சந்திக்க அஞ்சாதவனும் கூட மழையின் ஆக்ருதி கண்டு குழைகிறான். மிக லேசான திணறல் அது. மழையின் பொழுதுகள் இனிப்பதற்குக் காரணம் மழையின் கதைகள் தனித்தவை.
சின்னா கடைசி இழுப்பை முடித்துக் கொண்டிருந்த என்னைப் பார்த்து, “க்ஸ்…” எனச் சத்தம் செய்தான். சிகப்பு டிஷர்ட், கருப்பு ஜீன்ஸில், கையில் தாங்கிய குடையில் மழையில் ஒரு சிற்பம் போல் நின்று கொண்டிருந்தாள் சரண்யா.
“ரவி.. உங்க கூடக் கொஞ்சம் பேசணும்… வாங்க” என்றாள்.

8

மறுபடி அதும்பின்னாடி போகாதய்யா..மை வச்சி வாழ்க்கையப் பாளாக்கிருவாளுகய்யா என்று முனகினான் கோபி.என் மீதுள்ள அக்கறை என்ற பேரில் படுத்துகிற கொடுமை.பொருட்படுத்தாது வெளியில் வந்தேன்.
எதிர்த்தாற்போலிருந்த “பேம்பூ ரெஸ்டாரண்ட்”டுக்குள் சென்று ஆளுக்கு ஒரு நாற்காலியில் அமர்ந்தோம். மெனு கார்டில் கண்கள் ஓடித் தடுக்கிய ஒரு சூப்பை ஆர்டர் செய்தாள். “நீங்க?” என்றாள். நான் ஒரு கூல் ட்ரிங்க் சொன்னேன். “கூல் ட்ரிங்க்லாம் இல்ல…” எனச் சொல்ல ஆரம்பித்த பேரரிடம், “தம்பி.. இருக்குப்பா” என்று கல்லாவிலிருந்து குரல் கொடுத்தார் ஓனர். நான் லேசாகத் திரும்ப, நட்புடன் ஒரு கையைத் தூக்கிக் காண்பித்தார்.
“என்ன பிரச்சன உங்களுக்கு?” என்றாள்.
“ஒண்ணுமில்லையே…” என்றதும்,
“என்னால ஒங்க ஃப்ரெண்ட்ஸுக்குள்ள என்ன சண்ட?” என்றாள்.
“ஒங்களால சண்டையா? யார் சொன்னது?”
“ஏன்… எல்லாரும்தான் சொன்னாங்க”
“அது ஒண்ணுமில்லிங்க… இதுக்காகத்தான் கூப்டிங்களா?” என்றேன்.
“ரவி… இங்க பாருங்க.. என் கண்ண பாருங்க.. என்ன பிரச்சன ஒங்களுக்கு?”
“எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல”
“எதோ காதல்…தோல்வி… அது இதுன்னு…” என ஆரம்பித்தாள்.
“இங்க பாருங்க.. இது ஒரு விதமான ஒலகம். இங்க நீங்க வேறெங்கிருந்தோ வந்திருக்கிங்க. உங்க வேல முடிஞ்சதும் போயிடப் போறிங்க. வேற ஒண்ணும் இல்ல. இதென்ன அதென்னன்னு நோண்டி நோண்டிக் கேக்காதிங்க”
“என்ன எதுவும் கேக்கக் கூடாதுங்கறிங்க? நா அங்கிட்டு இங்கிட்டுப் போனா ரவியோட ஆளுங்கற மாதிரிலாம் பேசறாங்க தெரியுமா?”
“அப்டிதாங்க சொல்லுவாங்க”
“நீங்க அப்டி சொல்ல சொன்னிங்களா? இல்ல அப்டி சொல்லி வெச்சிருக்கிங்களா?”
“இவ்ளதான் சந்தேகமா? இல்ல இன்னும் வேற எதும் இருக்கா? ஏங்க.. இது என் ஏரியா. நா பொறந்து வளந்த மண்ணு. உறுத்தா என் வண்டில இங்கிட்டும் அங்கிட்டும் போய்ட்டு வரிங்கல்ல? அத வெச்சுக் கேட்ருக்கலாம்ல?” என்றேன்.
“வண்டில போய்ட்டு வந்தா லவ்வா? என்ன கேனத்தனமா இருக்கு?”
“இது நா பொறந்து வளந்த ஊரு. அம்மணக் குண்டிலேருந்து என்ன இன்னிக்கு வரைக்கும் பாத்துக்கிட்டிருக்காங்க. திடீர்னு எங்கிருந்தோ வந்த நீங்க என் வண்டில நா இல்லாம நீங்க மட்டும் போய்ட்டு வரிங்க.. என் ஆளுன்னு தானே சொன்னாங்க? அது எனக்கு வேண்டியவங்கங்கற ஒரு அர்த்தமும் வருதுல்ல? எம் பொண்டாட்டின்னா சொன்னாங்க? லவ்வுன்ற அர்த்தத்த எப்டி எடுக்கறிங்க நீங்க? ஒங்களுக்கென்ன்னங்க பிரச்சன?” என்றேன்.
“இங்க பாருங்க.. ஒங்கள எனக்குப் புடிக்கும். பட் அது லவ்வெல்லாம் இல்ல.. அது என்னன்னு கேட்டா எனக்கு சொல்லத் தெரியாது. ஒங்க கூட சுத்தற ஃப்ரெண்ட ஒங்களுக்காக மதிக்கறேன். இவ்ளோ தெளிவா உங்கள எதுக்காக மதிக்கறேன்னு சொல்லத் தெர்ல. ஒங்களையும் ஒங்களுக்காக மதிக்கிறேன்னுதான் சொல்லணும்.”
“இனிமே எனக்கு உங்க வண்டி வேணாம் ரவி” என்றாள்.
“ஆங்.. தெரியுமே.. ஒங்க காராச் சேவுதான் புது வண்டி வாங்கிட்டாப்லயே…”
“காராச்சேவா? யூ நோ அவரு எவ்ளோ பெரிய ஜீனியஸ்ன்னு?”
“இருந்துட்டுப் போகட்டும்.. எனக்கெதுக்கு?”
ரவீ நான் சொல்றது கேளுங்க.நீங்க உங்க மனசுலேருந்து பேசலை.உங்க மனசுல வெறுப்பு மட்டும் இருக்கு.நீங்க என்னை பொஸஸ் பண்றீங்க.பட் அதை ஒத்துக்க மாட்றீங்க.நான் இதை சரின்னும் சொல்லலை.தப்புன்னும் குத்திக் காமிக்கலை.இதை இயல்பா கடக்கத் தான் விரும்புறேன்.
   நான் உங்களை பொஸஸ் பண்றேனா..?ஹஹாஹா என்று செயற்கையாக சிரித்தேன்.
  ஹல்லோ மேடம்…நீங்க வீடு காலி பண்ணி போயிட்டா அடுத்து யார் வந்தாலும் அதுல யாரும் எங்கிட்ட வண்டி கேட்டாலும் தரத் தான் செய்வேன்.இது ஒரு உதவி.இதைத் தாண்டி எனக்கு எந்த நோக்கமும் இல்லை.உங்களை பொஸஸ் பண்ண வேண்டிய தேவை என்னங்க எனக்கு..?நீங்க யாரு நான் யாரு..?”என்றேன்.
   இத்தனை கடுமையாகப் பேசியதற்கு அவளால் தொடர முடியவில்லை.லேசாய்க் கண்கள் கலங்கி ஐயோ அழாதே கண்ணே மண்டியிடட்டுமா என்று எனக்குள் இன்னொருவன் என்னைக் கீறிக் கொலைசெய்தபடி வெளியேறிவிடுவேன் என எச்சரித்தான்.
இதற்கு மேல் பேச எதுவும் இல்லை என்று தோன்றியது. எழுந்து கொண்டவன், ஓனரைப் பார்த்து சைகை காட்டிவிட்டுக் கிளம்பினேன். அடிபட்டவளாய்க் கைகழுவச் சென்றவள், கவுண்ட்டரின் முன் நின்று, “பில்லு?” என்றாள்.
“ரவி சாரு குடுத்துட்டாரு” என்றதும் தன்னாலான அளவு ஓனரை முறைத்துவிட்டு வெளியேறினாள்.
            நான் மறுபடி முனியசாமி டீக்கடைக்குள் நுழைந்து சரிந்து அமர்ந்துகொண்டேன்.
கதை கேட்கிற ஸார்….முன்னாடி சொன்னதை இப்ப மாத்தி சொல்றேன்னுலாம் தயவு செஞ்சு நெனைக்காதிங்க. இப்பவும் எங்கிட்ட இருக்கறது காதல் இல்ல. காதலோட பெய்ன் மட்டும்தான். அதெப்டி காதல் இல்லாம காதலோட பெய்ன் வரும்னு கேக்கறிங்களா? மழையில்லாம காத்து மட்டும் அடிக்கறதில்ல? மழை வரும்னு நம்பி ஏமாறுறதில்ல? ஃப்ராங்கா சொல்லட்டுங்களா? இந்தக் கதைல நா ஹீரோ கெடையாது. காராச் சேவுன்னு மட்டமா சொன்னேனே அவன் வில்லன் கெடையாது. இந்தக் கதையோட பிரச்சனை காதல் கெடையாது.
இன்னும் சொல்லப் போனா இன்னும் ஒரே ஒரு சம்பவம்.இன்னிக்கு கணேஷ் போகணும்னு சொன்னானே அந்தக் கல்மண்டபம்.அங்கன ஒரு சம்பவம்.அதை நான் பார்க்க நேர்ந்த தற்செயல்ங்குற கடவுள்ங்குற இயற்கைங்குற சாத்தான்குற எதோ ஒருத்தன் அல்லது ஏதோ ஒண்ணு.அது மட்டும் நடந்திருக்காட்டி…வாழ்க்கைன்றதே நடந்த சம்பவங்கள் மட்டும் தான்.நடந்திருந்தா..அல்லது நடக்காம இருந்திருந்தான்னு அதுக்கு ரெண்டு திசைகள்.
         எனக்கு ரோஷம் அதிகம்.மேலும் என் கூடவே சுத்திட்டிருந்த சின்னா வேலைக்காக வெளி நாடு போயிட்டான்.மூர் தங்கச்சிக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆச்சி.ரெண்டு நியாயமான காரணங்களால அவனுங்க வர முடியலை.நானும் கோபியும் மட்டும் எத்தனை முறை சந்திக்கிறது..?இயல்பாவே அதுவும் குறைஞ்சிது.ஸோ…நாங்க வேற இடங்கள்ல வாழ ஆரம்பிச்சோம்.முனியசாமி கடை அஞ்சாவது ஸ்டாப் தவமணி வீடு சரண்யா ஆகிய எல்லாத்து மேலயும் எங்களோட சர்வைலன்ஸ் சுத்தமா கட் ஆச்சி.
                    படிப்பை முடிக்கப் போறா.இனிமே வரவே மாட்டா.இது தான் கடைசி மாசம் என்றெல்லாம் எனக்குத் தெரிஞ்சுது.எனக்குள்ளே நோக்கம் எதும் இல்லை.ஸோ நான் சுத்தமா விலகிட்டேன்.நானும் சரண்யாவும் சந்திச்சிக்கவே இல்லை.அந்த ஒரு வாக்குவாதத்துக்கு அப்புறம் நாங்க சந்திச்சிக்கிற இயல்பான தருணங்கள் கட் ஆச்சு.காராசேவ் வண்டி வாங்கிட்டதால என் ஸ்கூட்டியும் அவளுக்குத் தேவையே படலை.இதெல்லாம் இயல்பாகவே நடந்த ட்விஸ்டுகள்.எதிர்பாராத ட்விஸ்ட் கல்மண்டபத்ல இருந்திச்சி.
         திருப்பரங்குன்றத்தோட விலக்கத்துல வரிசையா விவசாய நிலங்கள் இருக்கும்.ஒரு கைவிடப்பட்ட கல்மண்டபம் அதுக்கு நடுவாந்திரம் உண்டு.கவனிச்சுப் பார்க்காமலே கடந்து போற எத்தனையோ ஸ்தலங்கள்ல அதும் ஒண்ணு.,பொதுவா ஊரறியாமத் தண்ணி அடிக்கிறவங்க தான் அங்கே எப்பமாச்சும் போவாங்க.அதுவுமே ரெகுலரா போகமாட்டாங்க.ஏன்னா அங்கே போறதுக்கான சரியான பாதை கிடையாது.வரப்பு மேல டான்ஸ் ஆடிக்கினே போகணும்.போற போது சரி.குடிச்சிட்டு திரும்புறப்ப விவசாயம் பார்த்தபடி தான் திரும்ப முடியும்.
    ஆனா நானும் கணேஷூம் அங்கே போவம்.கஞ்சா வாசனை ஓரியண்டட்.அடிக்கிறப்ப கமழ்ற வாசனை நம்மளைக் காட்டிக் குடுத்துறும்.ஸோ நாங்க எடம் தேடி அலைவம்.ஜீ.நாகராஜன் சொல்வாப்லயே காதலிப்பதற்கு இடவசதி முக்கியம்னு..கஞ்சாவுக்கு இடவசதி தான் பிராணனே.ஆளே வராத கல்மண்டபம் எங்களோட இழுவை ஸ்பாட்டு.தியானத்துக்கு வசதி.
                அன்னிக்கு சனிக்கிழமை.சாயந்திரம் அஞ்சரை மணி இருக்கும்.மூலக்கரைல நின்னு டீ சாப்டுறம் நானும் கணேஷூம்.
   இப்ப மழை வருமா மாப்ள..என்றவனிடம் தெரியாது என்றேன்.நம்ம மேல மரியாதை இருந்தா வரும்.வரணும் என்றவன் வானத்தைப் பார்த்து ஏதோ முணுமுணுத்தான்.என்னடா பண்றே எனக் கேட்டதற்கு சிரித்தவாறே நீ வந்தா நல்லாருக்கும்.வா இழுக்கலாம்னு கூப்டேன்.சரி பாக்குறேன்னு சொல்லிருக்கு என்றவன் தோளைத் தட்டி இப்ப இழுக்குறது கஸ்டம் நண்பா இடம்..?என்றேன்.
  எதுக்குடா இருக்கு கல்மண்டபம்..?வா போலாம் எனக் கூப்பிட்டான்.
            வண்டியை வேறோரு இடத்தில் பத்திரம் செய்துவிட்டுக் கல்மண்டபத்தை நெருங்கி இருப்போம்.அழைத்த குரலுக்கு இப்படி வருமென்று எதிரே பார்க்காத பெரும் மழை.சடசடசடவென்று எடுத்த எடுப்பிலேயே வகையாட்டம் போட்டது.
   சரசரவென ஓடிச்சென்று கல்மண்டபத்தின் வெளியில் சின்ன பிரகாரத்தில் நின்றுகொண்டோம்.கடமையாகத் தன் ஷூவுக்குள் ஒளித்திருக்கும் பொட்டலத்தை எடுத்து கைகளைத் துடைத்துக் கொண்டு பயபக்தியாக இழுவை சிகரட் தயாரிப்பதற்கான முஸ்தீபுகளை தொடங்கினான் கணேஷ்.
      நான் சற்றுத் தள்ளி சென்றவன் வெகு இயல்பாக கண்களை மண்டபத்தின் உட்புறம் செலுத்த அங்கே யாரோ இரண்டு பேர்.
             சர்ப்பங்களின் உடல்கள் தனியாகவே அழகானவை.ஆண் சர்ப்பத்தின் மேனியில் பெண்சர்ப்பம் எதிர்பாராமல் தீண்டும்போதே அதன் உடலெங்கும் காதலின் எச்சரிக்கை மணி ஒலிக்கத் தொடங்கிவிடுகின்றது.சர்ப்பங்களின் காதல் காமத்தால் மாத்திரமே நிரம்பியது.திட்டமிட்ட அறிந்த பகிர்தலும் மூர்க்கமும் சப்தங்களும் தன் சுயத்தைப் பகிர்ந்து வேறொன்றின் பாதியாகத் தன் உடம்பைப் பொருத்திக் கொள்கிற சர்ப்பங்களின் காதல் இந்த உலகின் வேறெந்த உயிர்களுக்கும் வாய்க்காத உயர்ந்த பட்ச நளினம்.
     எத்தனையோ விதங்களில் பார்த்திருக்கிற ஒருத்தியின் முகத்தை அவளது ஆடைகளேதுமில்லாத உடலோடு பார்க்கக் கிடைக்கிற சந்தர்ப்பம் என்ன மாதிரியானது..?ஒரு நிர்வாணத்தின் மீது இருக்க வேண்டிய அல்லது இருக்கக் கூடாத முகங்கள் என்று இருவேறு பட்டியல்களைக் கொண்டவர்கள் தான் எல்லாருமே.யாராக இருக்கக் கூடாது என்பதில் தான் காணக் கூடாத அல்லது காண விரும்பாத காட்சிகளின் சாத்தியப்பாடுகளும் ஒவ்வாமைகளும் பெருகுகின்றன.
   எனக்கு முன்னால் இரண்டு உடல்கள் இயங்கிக் கொண்டிருந்தன.அந்த இரண்டு பேரையும் எனக்குத் தெரியும்.சரண்யா மற்றும் காராச்சேவ்,.பாருங்களேன்…அந்த இருவரின் நிசப்பெயர்களும் எனக்கு அறிவிக்கப் பட்டவை தான்.சரண்யாவின் பேர் நன்றாக நினைவில் இருக்கிறது.அந்த ஆடவனின் பெயர் சுத்தமாய் மறந்துவிட்டது.
           அவன் அவள் மீது மூர்க்கமாக இயங்கிக் கொண்டிருந்தான்.நான் சத்தியத்துக்கு அந்த இடத்திலிருந்து விலகி உடனே வெளியேறி இருக்க வேண்டும்.அப்படித் தான் ஆசைப்பட்டேன்.எனது கால்கள் மரத்துப் போயின என்றெல்லாம் ஜல்லி அடிக்க போவதில்லை.எனக்குள் இருந்த இன்னொருவன்.நீ என்னை பொஸஸ் பண்றே என்று சொன்ன ஒருத்தியின் மூடிய கண்கள் சட்டென்று திறக்கும் முன் இந்த இடத்தை விட்டுப் போய்விடு…
   இல்லை.நான் அங்கேயே நின்றுகொண்டிருந்தேன்.தன் தலைகீழ்க்கண்களைத் திறந்தவள் ஒரே ஒரு கணம் என்னைப் பார்த்தாள்.அவளது இருப்பிலிருந்து அங்கே நின்று அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பது நான் என்பவன் தான் என சந்தேகமே இல்லாமல் புரிந்திருக்கும்.அவளிடம் எந்தச் சலனமும் இல்லை.முன்னை விட இன்னும் வெறியாக அவனது உடலைக் கட்டித் தழுவினாள்.மறுபடி கண்களை மூடிக் கொண்டாள்.
          நான் அப்படியே நின்று கொண்டிருந்தேன்.கூடல் என்பதில் மூன்றாவதாக ஒருவனுக்கு எந்த இடமும் இல்லை.எனக்கு உடனே அந்த இடத்தை விட்டுக் கிளம்பி விட வேண்டும் போல இருந்தது.நெஞ்சு படபடபட என அடித்துக் கொண்டது.அந்த இடத்தில் என்னைத் தவிர அவர்கள் இருவரைத் தவிரப் பலரும் நெருக்கியடித்துக் கொண்டிருப்பதைப் போலப் பயம் பெருகிற்று.சட்டென்று விலகினேன்.வெளியே என் காலடிக்கு சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த கணேஷின் தலையைத் தடவி உஷ் என்றபடியே உடனே வா என சைகை காட்டினேன்.அவன் என்ன என ஒரு வார்த்தை கூடக் கேட்கவில்லை.உடனே ஷூக்களை அணிந்து கொண்டவன் வாய்யா என்றவாறே தொடர்ந்தான்.
                பைக்கை எடுத்து கிளம்பும் போது கேட்டான்.
   ஏன்யா எதுனா அவசரமா என்றான்.இல்ல கணேஷ் அங்க மண்டபத்துக்குள்ற ரெண்டு பாம்பு சேந்திட்டிருந்திச்சி என்றேன்.ஓ அப்டியா என்றவன்.அதுபாட்டுக்கு அது என்றான்.நான் எதுவும் பேசவில்லை.இனி வேற எடம் பார்ப்பமா என்றேன் அவன் வேணாம்யா ஆர்வம் குறைஞ்சிட்டிது என்றான்.
           அதற்குப் பின்னால் சரண்யாவை நான் ஒரு முறை கூடப் பார்க்கவில்லை.ஏற்கனவே சொன்னாற் போல் அவளுக்கும் எனக்கும் இடையிலான பொது அம்சங்கள் சந்திக்கிற வாய்ப்புகள் குறைந்துகொண்டே வந்தது ஒரு காரணம்.எனக்குள் அவளை அவளது கண்களை சந்திக்கிற திராணி இல்லவே இல்லை.படிப்பை முடித்து தவமணி வீட்டைக் காலி செய்து அங்கே வேறு இரண்டு பேர் குடிவந்து அடுத்தடுத்து வாழ்வின் சாலைகள் தீராமல் இழுத்துச் சென்ற இத்தனை நாட்கள்.
              அந்தக் கண்கள்.தலைகீழ்க்கண்கள்.எப்போதெல்லாம் என் ஞாபகத்துக்குள் அவை வரும் என்றே தெரியாமல் முழுவதுமாய் அந்தக் கண்கள் பற்றிய ஞாபகங்களுக்கு முழுவதுமாய் என்னை ஒப்புக் கொடுத்துவிட்டேன்.சரண்யா என் வருகையை தற்செயல் என்று எடுத்துக் கொண்டிருப்பாளா எனத் தெரியவில்லை.ஒருவேளை நான் அவர்களைத் தொடர்ந்து வந்ததாக நினைத்திருப்பாளா..?நிசமாகவே என்னை அவள் பார்த்தாளா என்று கூட அவ்வப்போது சந்தேகம் வரும்.ஆனால் அது மட்டும் சத்தியம்.அவள் என்னைப் பார்த்தாள்.அவளது அந்தக் கண்களால் என்னைப் பார்த்தாள்.தலைகீழ்க் கண்கள் அவை.அவற்றால் என்னைப் பார்த்தாள்.வந்திருப்பது அன்னியமற்ற ஒருவன் என்பதை மட்டும் உணர்ந்துகொண்டு மறுபடி மூடிக் கொண்ட அந்தக் கண்கள்.என்னை வெறுத்தனவா விரும்பிற்றா புரிந்து கொண்டதா உண்மையில் என்னை அலட்சியமாய் ஆள்கிறதா என் கடவுளா அல்லது சாத்தானா என்றெல்லாம் அந்தக் கண்களை மாத்திரம் மறக்க முடியாமல் பல நூறு முறை செத்திருக்கிறேன்.
         அதற்குப் பின்னால் உறைந்த மௌனம்.அங்கே பேசமுடியாத வார்த்தைகள்.மௌனம் எத்தனை வலிமையான மொழி என்பதும் தன் நீண்ட மேனியில் எத்தனை வார்த்தைகளைக் கொண்டு கோடிட்ட வெற்றிடங்களைப் பூர்த்தி செய்துகொள்கிறது என்றெல்லாம் வியந்திருக்கிறேன்.
                                       உண்மையைச் சொல்லப் போனால் உடல் என்பது ஒரு கருவி. அதன் இயக்கம் ஆச்சரியமானது. தன்னைத் தானே திறந்தும் மூடியும் கொள்ளுகிற இந்த உடல்தான் இந்த உலகம் தோன்றியதிலிருந்து தோன்றிய எல்லாவற்றிலும் சிறப்பானது. இதன் சிறப்பு என்பது என்னவென்றே தெரியாத ரன்வேயில் உருளத் தொடங்குகிற விமானத்தின் சக்கரங்கள் போல் தொடங்கி வான தூர உயரத்தில் எங்கோ க்ஷண நேரத்தில் காணாமல் போகிற ஆச்சரியம்தான் வாழ்க்கை. இதில் சிலரை மட்டும் நமக்குச் சொந்தமென்றும், நாம் இழந்தோமென்றும், நாம் பத்திரமாக வைத்துக் கொண்டிருக்கிறோம் என்பது எல்லாமும் ‘தி நேம் ஒன்லி சர்வைவ்ஸ்…’ என்பார்கள்.. பெயராய் மட்டும் மிஞ்சுகிற அபத்தத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை.
                       இதோ இந்த கணேஷை “வராதே” என்று எத்தனையோ முறை விரட்டியிருக்கிறேன். “கடவுளுக்கும் சைத்தானுக்கும் ஸ்பெல்லிங் தான் வேற”ன்னு கஞ்சா ஏற்றிய சிகரெட்டுகளைப் பிடித்துவிட்டு, “யாரோ எழுத முயற்சிக்கிற கதைதான் நம்மளோட வாழ்க்க ரவி” என்பான். “நமக்குத்தான் நடக்குதுன்னாலும் நம்மோட விருப்பத்தோடயா நடக்குது? படத்துல முகம் காட்டாத டைரக்டர் மாதிரி அவன் மட்டும் கைல கெடைக்கட்டும்…” என்று பகபகவெனச் சிரிப்பான்.
‘நானொரு சிந்து’ பாடலை, “நானொரு ஜிப்ஸி.. காவடி ஜிப்ஸி…” என்று முழுவதும் பாடுவான். “ஏண்டா?” என்றால் “நானென்ன சுஹாசினியா?” என்பான்.
அவன் சொல்லுகிற ஒரு பதிலுக்கும் கேள்வி இருக்காது. அவனுடைய எந்தக் கேள்விக்கும் பதிலும் இருக்காது.
“திமிர், பிடிவாதம், கோபம், அகங்காரம், பொய், துரோகம் இதெல்லாமே கடவுள் மனுஷனுக்கு செஞ்சதுதானே மச்சி?” என்றான் கண்ணில் நீர் மல்க.
“பறவை சத்தம் கேக்கணும் மச்சி.. பப்புவா கினிக்கு டிக்கெட் போடணும்.. காசு சேத்திட்டிருக்கேன்” என்றான் ஒரு முறை. ரோட்ல உக்காந்துட்டிருந்தான். “போதும்டா.. எந்திரி” என்றேன்.
“இருவது வருஷத்துக்கு மேல ஆச்சு” சிரித்தான் கணேஷ்.
பொய்க் கோபத்துடன், “அதை ஞாபகப் படுத்தாதே” என்றேன்.
“இவ்ளோ தூரம் வந்துட்டு அங்க போகாமயா? போறோம்..”
“இல்ல நா வர்ல”
“இன்னிக்கு வந்து சேந்திருக்கற இந்த நிலா பாக்கறாப்ல ஆளுக்கு ஒரு டோப்பு இழுத்துட்டு.. ‘என் இனிய பொன் நிலாவே…’ பாதி பாடிட்டிருக்கும்போதே வந்துருவோம்” என்றான்.
   தன்னுடைய புல்லட்டில் ஏறி அமர்ந்தான் கணேஷ். பின்னால் ஏறி அமர்ந்தேன்.
“போவோமா?”  .
“”எங்க?”
“கல் மண்டபத்துக்கு?” வண்டியை ஸ்டார்ட் செய்தவாறே என்னிடம் கேட்டான்.
“”கண்கள் தான் மனுஷனோட உடம்புலயே ரொம்ப அபாயகரமான பாகம்.of course,காமத்தை கையாளமுடியாத பாகமும் கூட”
எப்போதோ கணேஷ் என்னிடம் சொன்னது நினைவில் இடறியது.மழை வருமா எனத் தனக்கே தெரியாது என்றாற் போல் வானம் வெளிறிக் கிடந்தது.