கவிதையின் முகங்கள் 3


கவிதையின் முகங்கள் 3


இடையோடும் நதி


ஜன்னல்களைத் திறந்து விடுங்கள். அப்போது தான் வெளியே மழை பெய்கிறதா, வெயில் காய்கிறதா என்று தெரியும். வெளியிலுள்ள நறுமணங்களும் பறவைகளின் பாடல்களும் அவதிப்படுவோரின் அழுகுரலும் நம்மை யாரோ வெளியிலிருந்து அழைக்கிறார்கள் என்ற உண்மையும் மற்றவையும் புலப்படும். வெளி உலகத்தைப் பற்றித் தெரிந்து கொண்டோமானால் இந்த மொத்த பிரபஞ்சத்தில் நமது இடம் எது என்பது தெளிவாகி விடும். கலையில் இலக்கியத்தில் தொழில் நுட்பத்தில் விவசாயத்தில்– மொத்த சிந்தனையில் பிற நாடுகளில் என்னென்ன நிகழ்கின்றன என்ற செய்திகள் தமிழில் வெளிவரவேண்டியது அவசியமாகிப் போகிறது. இந்த அவசியத்தை உணர்ந்ததின் ஒரு வெளிப்பாடு தான் இந்த நூல்.

1982 ஆமாண்டு அன்னம் பதிப்பகம் வெளியிட்ட இந்திரன் எழுதிய அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் தொகுதியின் பின் அட்டைக் குறிப்பு.

கவிதையை ஏன் வழிபடுகிறார்கள். கவிதை மீதான மனிதனின் பிடிமானம் எத்தகையது என்பதைப் பின்னொற்றிப் போனால் ஆகக்கூடி ஆச்சர்யங்கள் பலவற்றைச் சென்று சேர முடியும். கவிதை எனும் சொல்லே கிளர்த்தத் தான் செய்கிறது. கவிதை எழுதுவது என்பது ஆறாவது விரல் மாதிரி கம்பி மீது நடப்பது மாதிரி மூடிய கைக்குள்ளிருந்து ரோஜாப்பூ வரவழைக்கிறாற் போல பலித்த மட்டுக்கும் சித்து விளையாட்டு போலவா..? சினிமாப் பாடல்களின் இசைக்குள் அடங்கி நிற்கிற சிறந்த வரிகள் மீதான தாக்கம் அல்லது உந்துதலைப் பின்பற்றி மரபுக்கவிதைகளை எழுதத் தொடங்குவது கவிதையின் சன்னிதானத்துக்குச் சென்று சேரும் வழிகளில் ஒன்று. மற்றது வாரக்கடைசியில் இலவச இணைப்பிதழில் ஒரு பக்கத்துக்கு மடக்கி மடக்கி எழுதுவதற்குப் பெயர் மட்டும் கவிதை என்று சூட்டிவிடுவது. இதெல்லாம் கவிதை என்று நிறுவுவது ஒரு பக்கம். இலக்கியம் தீயிற் குளித்துத் தப்புகிற ஏடெடுத்துக் கவிதை எதுவென்று அறிவிக்கும் கடும் நீதிமான் தீர்ப்பு

இலக்கியத் தரம் என்பதன் அளவீடு என்ன எந்தக் காலத்திலும் மக்களுக்கு அருகே நிற்பது ஒரு மாற்றுக் குறைவான பொன் என்றே கருதப்படுகிறதா எளிதில் புரிவதெதுவும் கவிதை ஆகாதா கவிதை என்பதன் அளவீடு என்ன எது கவிதையின் தரம் எதைக் கொண்டு புதுக்கவிதை அளக்கப்படுகிறது என்ன இருந்தால் அல்லது என்ன இல்லாமற் போனால் கவிதை கவிதையின் இலக்கணம் என்ன..?கவிதையை அரிச்சுவடி முதற்தொட்டுக் கற்றறிய முடியுமா பிற கலைவடிவங்களினின்றும் கவிதையை தூக்கிப் பிடிப்பதன் காரணம் என்ன கவிதை அப்படி என்ன உசத்தி?

கவிஞனின் பெறுமதி இங்கே முக்கியமானதாகிறது. கவிதை பண்பாட்டு ரீதியாகப் பல வழிகளில் பயனாகிறது.தனித்த மற்றும் உணர்வுப்பூர்வமான வெளிப்பாடுகளைக் கவிதை நிகழ்த்துகிறது.மாற்றம் என்பதன் உள்ளும் புறமுமாகக் கவிதையின் பங்கு குறிப்பிடத் தகுந்தது.கவிதை மாறுதல்களை சாத்தியப்படுத்துகிறது.வாழ்வெலாம் நிரம்பித் ததும்புகிற யாவற்றையும் கவிதையினூடாக விசாரிக்க இயலுகிறது.என்ன நிகழ்ந்தாலும் அவற்றைக் கவிதையினூடாகப் பார்ப்பதற்கு ஒரு பார்வைத் தொடர்ச்சியை இயங்குமுறையை   செயல்நகர்தலை இவற்றையெல்லாம் கவிதை உறுதி செய்கிறது.கவிதை எழுதுகிறவனுக்கும் வாசிப்பவனுக்கும் இடையிலான தொடர்பை ஏற்படுத்துவதோடு இருவருக்குமிடையேயான மாய ஸ்பரிசமாகவே தன்னூடான அனுபவத்தை வாய்க்கச் செய்கிறது.

லூயி போகன்    ((11,8.1897 –4,2.1970  )) 20 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அமெரிக்க கவிஞர் மற்றும் விமர்சகர்.அவரது நுட்பமான செறிவான பாணி ஒருவிதத்தில் ரில்கே மற்றும் ஹென்றி ஜேம்ஸ் போன்றவர்களின் பாதிப்புகளுடனானது.மேலும் ஆங்கில மெடாஃபிஸிகல் கவிஞர்களான ஜார்ஜ் ஹெர்பர்ட் ஜான் டோன் மற்றும் ஹென்றி வாகன் ஆகியோரது செல்வாக்கும் அவரது கவிதைகளுள் உண்டு.பாரம்பரிய கவிதாநுட்பங்களைக் கடைப்பிடித்தவராகவும் போகன் அறியப்படுகிறார்,வெறும் ஒப்புதல் வாக்குமூலங்களினின்றும் பலவிதங்களில் வேறுபட்ட தனித்துவமான கவிதைகள் அவருடையவை.அதிகம் புகழப்பட்டவர் மட்டுமல்ல அதிகதிகம் விமர்சிக்கப் பட்டவராகவும் போகன் விளங்கினார். சிக்கனமான நுட்பமான சற்றே சிதைவுற்ற கவிதாவிவரணைகளுக்காகவும் பாடுபொருட்களுக்காகவும் போகனை அமெரிக்கா கண்டறிந்த தலைசிறந்த கவிகளில் ஒருவர் என்று ப்ரெட் சி மில்லியர் புகழ்ந்தார்.நாற்பதாண்டுகாலம் போகன் நியூயார்க்கர் பத்திரிக்கைக்காக  கவிதைகளை தரம்நோக்கி விமர்சனம் செய்தவராக விளங்கினார்.

மெடூஸா
லூயி போகன்

தமிழில் ஜெனிஃபர்

அடர்ந்த மரங்களின் குகைக்குள்ளிருக்கும்
நிர்மலமான வானை நோக்கிய அந்த வீட்டுக்கு நான் வந்திருந்தேன்.
எல்லாமும் சலனித்தன
ஒலிக்கத் தயாராய் ஒரு மணியும் கட்டப்பட்டிருந்தது.
சூரியன் தன் பிம்பத்தைத் தொடர்ந்து சென்றது.
கதவின் வழித் தொடரும் சன்னலொன்றில்
திறந்த விழிகளும் பாம்பின் இரைச்சல்போல் ஒலிக்கும் அக்கூந்தலும்
என் முன் தோன்றுகையில்
இமைகளற்று இறுகிய விழிகளும் நெற்றிச்சர்ப்பங்களும்
காற்றில் உருப்பெற்றன.
இப்போதும் இனி எப்போதுமிது
உயிரற்று உறையுமொரு காட்சி
இனியேதும் அசையாது
ஊழிகூட இதனை இன்னுமதிகம் ஒளிரச்செய்யாது
மழை குன்றாது மணியும் ஒலி எழுப்பாது
சருகென்றாகவே புற்கள் வளரும்
நிலத்தின் அடிவாரத்தில்

மைனே நகரில் ஒரு மில் தொழிலாளியின் மகளாகப் பிறந்த லூயி போகனின் பெற்றோர் வாழ்ந்த மகிழ்ச்சியற்ற வாழ்வு அவரது மனவளத்தை சிதைவுக்குட்படுத்தியது.போகன் தன் வாழ்வில் அடைந்த பலவிதமான குழப்பங்களும் அவரது வாழ்க்கையை மாற்றியமைத்தன.
போகன் தன் கணவரை 1919ஆமாண்டு பிரிந்தார்.அவரது கணவன் 1920 ஆமாண்டு நிமோனியாவால் இறந்தார்.மீண்டும் நியூயார்க் திரும்பி 1923ஆமாண்டில் ஒரு புத்தகநிலையத்தில் வேலைபார்த்த போகன் அங்கேயிருந்து தன் எழுத்துலக முன்னெடுப்பைத் தொடங்கினார்.

Body of This Death (1923) அவருடைய கவிதைகளின் முதல் தொகுதி. அது போகனின் பெரிதுவக்கப்பட்ட பல கவிதைகளைத் தனதே கொண்டிருக்கிறது. விமர்சகர்களின் கூற்றுப்படி போகனின் முதல்காலக் கவிதைகள் துல்லியமாக வடிகட்டிய நேரடி அனுபவங்களால் நிரம்பியது எனினும் புறநிலையான அதன் மொழியால் மூலத்திலிருந்து விலகிக் காணப்படுகிறதுத்தால் ஆனது,பெண்ணியவாதத்தை முன்வைக்கும் கவிதைகளை அதிகம் எழுதாத போகன் வாழ்க்கை தனக்குத் தோற்றுவித்த அவநம்பிக்கைகளைத் தன் கவிதைகளின் வழி பெயர்த்தெடுத்தார்.  தனது 72 ஆம் வயதில் 1970ஆமாண்டு மன் ஹாட்டனில் மறைந்த போகன் தன் உலர்மொழிக் கவிதைகளுக்காக நினைவு கூரப்படுகிற கவி ஆளுமையாவார்.
பார்வையை மாற்றிய பாலகுமாரன் | writer balakumaran birthday - hindutamil.in
“கவிதை மனதே”
_______________

நீல வானத்தைச்
சிலுவைக் குறியிட்டுப்
பிரித்து வைத்த ஜன்னல்
கோல விழியுருட்டி
கோடிட்ட ஜன்னலதைக்
கொத்திக் கீறும் குருவி
வேலை உயர்வுக்கு
வெற்றுத் தாள் கேள்வித்தாள்
பரிமாறி நடக்கும் தேர்வு
மூளையை உருக்குகின்றப்
பாடத்தை மறந்துவிட்டு
குருவியைக் கவிதையாக்கு

பாலகுமாரன்

கணையாழி
செப்டெம்பெர் 1971

பாலகுமாரன் ஆரம்பத்தில் கவிதைப் பக்கம் நிறையவே சாய்ந்து தன்னை மறந்த பல உணர்ச்சிப் பெருக்கக் கவிதைகளை எழுதினார். கணையாழி அவரது ஆரம்பக் கவிதைகளில் பலவற்றை வெளியிட்டது. பிறகு முழுமையான கதைசொல்லியாக மாறினார்.அவரது கவிதைகள் நேரடியானவை.கதைகளை உடைத்துத் துகள்களாக்கித் தன் மேனியெங்கும் படர்த்திக் கொண்டவை.சத்தியங்களைக் காப்பாற்றுவதில் பிடிவாதம் செய்தபடி வலுக்கிற மத்யம வர்க்கத்துக் குரல்களாக ஒலித்தவை.ஆளற்று உரையாடுவதை முன்னெடுக்கும் கட்டளைத் தனமாய் ஒலிக்கும் அரூபக் குரல்கள் இவரது அனேகக் கவிதைகளின் பொது இயல்புகளாகின.


அந்த
நிலவைப் பிடித்துக்
குதறிச் செரிக்க
நினைத்துக் குரைத்தது
தெரு நாய்–
அவள்
நினைவைத் தழுவி
நிமிண்டித் துய்க்க
நெகிழ்ந்து கிளர்ந்தது
மன நாய்

நா விஸ்வநாதன்
மே 1971 கணையாழியில்

மேற்படிக் கவிதையில் மனநாய் என்பதில் மன எனும் அரைப்பதத்தை நீக்கினால் மொத்தக் கவிதையும் ஜீவனிழந்து சாவதைப் பார்க்கலாம்.அப்படி வலுக்கட்டாயமாக மன என்பதை மாற்ற விழைந்தால் என் தேர்வு ஒரு நாய் என்று அதன் பட்டவர்த்தனத்தை ரகசியம் செய்வதன் மூலமாக முன்னர் நா.விஸ்வநாதன் நிகழ்த்தப் பார்த்த அனுபவத்துக்கு மாறான வேறொரு அனுபவத்தின் புதிய சாலை ஒன்றில் வாசிப்பவனைத் தன் அடியொற்றித் தொடர்ந்தழைத்துச் செல்வதை உணரலாம்.கவிதை என்பது மேலே கை வைத்தால் கொத்தும் சர்ப்பம் என்று சும்மா சொல்லிவிட முடியாதல்லவா.

இக்கரைக்கும் அக்கரைக்கும்
பரிசல் ஓட்டிப் பரிசல் ஓட்டி
“எக்கரை என்கரை?”
என்று மறக்கும்
இடையோடும் நதிமெல்லச்
சிரிக்கும்

கல்யாண்ஜி
கணையாழி 1974

மேலே காணும் கல்யாண்ஜியின் கவிதை ஒரு சித்திரத்தை முன்வைக்கிறது. அதுவொரு முப்பரிமாணச் சித்திரம் என்பது கவிதை தன்னுள் வரவழைத்துத் தருகிற மந்திரப்பொருள். இப்போது பரிசல் அலையாட்டத்தினூடாக மெல்ல ஆடுகிறது.அலைகிறது.உற்றுப் பார்க்கையில் மெல்ல உறைகிறது கவிதையின் கடைசி வரியில் சிரித்தபடி ஒரு நதி. இந்தப் பொய்நிகர் நிஜம் கவிதையின் ஊடாக சாத்தியமாவது கடுமையான பயிற்சிக்கப்பால் வசப்படுகிற வித்தகம் போலவே மொழியை வளைத்துச் செய்து பார்க்கிற கணிதம். இடையோடும் நதி என்பது வாசகனின் மனதாழத்தில் தான் மட்டுமாய்த் தனிப்பது கவிஞனை மீறித் தான் மட்டுமாய்த் தப்பிப் பிழைக்கிற ரசவாதம். எழுபதுகளின் கவிதை சின்னச்சின்னக் கதைகளைத் தனதே கொண்டிருந்தது. பின்பு வந்தவர்களால் கடுமையாகக் கைவிடப் பட்டும் கலைத்தெறியப்பட்டும் இல்லாமற் போனது.கதையும் கவிதையும் தனி என நம்பத் தலைப்படுவது ஒரு மதம் தன்னுள் உடைவதைப் போலக் கணக்கின் படி கூடவோ குறையவோ இல்லாமற் போனாலும் சிதைவு என்பதன் அடிப்படையில் மாபெரிய விளைவாக நிகழ்ந்தேறுவது.

இழத்தலின் குரலாக ஒலிப்பதற்குக் கவிதையை விடவும் கதைவடிவம் தான் உகந்ததாக ஒரு கருத்து எப்போதும் நிலவுகிறது. உண்மையில் கவிதை மீதான ஒவ்வாமை கதை சொல்லிகளில் ஒரு சாராருடைய மனதின் ஆழத்தில் கரிய நிழலாக எப்போதும் படிந்திருக்கிறது. எழுதிப் பார்ப்பதற்கு ஏதுவான அல்லது எளிதான வடிவமாகக் கவிதை இல்லாமல் போவது அதற்கொரு காரணமாக அமைந்திடக் கூடும். உலக அளவில் எழுத்துக்குள்ளேயே கவிதை எனும் ஒற்றை மீதான புறக்கணிப்பு கவனிக்கத் தகுந்ததாகிறது இந்த ஒவ்வாமை அல்லது பாராமுகம் எழுதுகிறவர்களால் திட்டமிட்டு நிகழ்த்தப்படுகிறதாகவும் இருக்கலாம் அல்லது வழியற்ற கத்தியெறிதலாகவும் கைக்கொள்ளப் படலாம்.

ஒரு நெடிய நாவலை அல்லது உணர்வு ததும்பும் சிறுகதையைச் செறிவான சிறிய கவிதை ஒன்றினுள் அப்படியே கொணர்ந்து விடலாம் என்பது என் நம்பகம். மேலும் கவிதை கதைகளைப் புறக்கணித்துத் தனிச்சாலையில் பீடு நடை போடுகிற வினோதத் தனியாவர்த்தன ஜந்து அல்ல.மாறாகக் கவிதையின் சூட்சுமம் புரிந்தவர்களுக்கு அது தன்னுள் பல கதைகளை ஒளித்தும் திறந்தும் அனுபவம் செய்துதருகிற சாத்தியங்களின் தொகுப்பு ஏன் கவிதை மற்ற எழுத்துவடிவங்களிலிருந்து தனிக்கிறது அல்லது தனிப்பது போலத் தோற்றமளிக்கிறது? அப்படி ஒன்று கட்டாயமே அல்ல என்பதே மெய் கவிதை சற்றே தன்னை மேம்படுத்திக் கொள்கிற கலைவடிவம் என்பதைத் தாண்டி கவிதை தன்னை விரித்துக் கொள்வதாலும் இடைமௌனம் என்கிற மற்ற கலைவடிவங்களில் கட்டுப்படுத்தப் பட்ட பூடகத் தன்மையானது கவிதை என வருகையில் எந்த விதக் கட்டுப்பாடும் அற்று முழுவதுமாக விரிவதற்கான வாய்த்தல்களும் சேர்ந்தே கவிதையை வித்யாசப் படுத்துகின்றன.

ஆம் ஐயா. கவிதை தான் கலையின் உன்னத வடிவம் தான் என்று சப்தமாகக் கூவிச்சொல்லத் தோன்றுகிறது.