காலர் ட்யூன்

காலர் ட்யூன்
குறுங்கதை


ரொம்ப நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறார்கள். எதிர்பாராத சந்திப்பு. பேச்சு எங்கெங்கோ சென்று அந்த புள்ளியில் நின்று விட்டது.

“ஜெயன்அப்பல்லாம் நீ ஒரு பாட்டு ரொம்ப அழகா பாடுவே..எனக்காகவே பாடுவியே அதைப் பாடேன்”.
“எனக்கு எதுவும் ஞாபகத்தில் இல்லையே”
“என்ன நீ அந்தப் பாட்டை மறந்திருந்தன்னா நம்ம ரெண்டு பேரோட சரித்திரத்தில ஒரு அத்தியாயமே செல்லரிச்சுப் போனதாத் தான் அர்த்தம் அதை எப்டி மேன் மறந்தே?”

“ஏய் என்ன இது இவ்ளோ பெரிய வார்த்தை எல்லாம் பேசறே? இட் இஸ் ஜஸ்ட் சாங்.. இரு யோசிக்கிறேன்.”

அந்த நட்சத்திர விடுதியில் மதிய உணவுக்கான பஃபே பெரும்பாலும் யாருமே இல்லாமல் அவ்வளவு பெரிய கூடத்தில் அந்த நேரம் நாலைந்து பேர் அதிகபட்சம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். யாரும் யாரையும் பார்க்கவில்லை. தட்டோடு வேறு ஒரு திசையில் சென்று அமர்ந்து கொண்டான் ஜெயன். அவனுக்கு அந்த பாட்டு சுத்தமாக மறந்து விட்டது. அது எப்படி மறக்கலாம் எனக் கேட்கிறாள் ரூபா. இரண்டு பேருமே இனி அப்படி எதுவுமில்லை என முறைத்துக் கொண்டு விலகிப் போனது. எந்தத் தெய்வத்தின் அனுக்கிரஹமோ தெரியாது. மீண்டும் ஒரு ஒன்றுகூடல். பள்ளி கல்லூரி மாணவர்களைப் போல் ஒன்றாக வேலை பார்த்தவர்களின் அலுமினி மீட் ஏற்பாடானது. ராஜூ தான் ஏற்பாடு செய்தான். அவன் எப்போதும் பரோபகாரி.
ஜெயனை அழைக்கும் போதே கண்ணடித்தான்.

“டே ஜெயன் ரூபாவும் வந்துட்டா மறுபடியும் மஸ்தானா தானா?” .
“சீ போடா இவனே, கொஞ்சமாவது இங்கிதமிருக்கா, எனக்கு என்ன வயசு?”
“இதுக்கு தேவை மனசு நீ என்னைக்கும் நம்ம டீம்ல லாலி-பாப் ஸ்டார் தான்”

என்று சிரித்தான்.
சொன்னதை செய்து காண்பித்தான் ராஜூ. எல்லோரும் வந்தார்கள். அவளும்.
ஜெயன் மீண்டும் தன் வாழ்க்கையில் அதே உச்சிக்குப் போய் கீழே விழுந்தான். மீண்டும் ஒரு முறை கடல் நடுவில் இருந்து எழுந்து நடந்து வந்தான். இதெல்லாம் செய்யாவிட்டால் தான் சாகசம். வரவே போவதில்லை என்று எண்ணியிருந்த ஒருத்தி மறுபடியும் அதே நிலாவை பெயர்த்துக் கொண்டு வந்து சேர்ந்து விட்டாள்.
ஹய்யோ இந்த காதல் முந்தைய காதலை விட தித்திக்கிறதே?”
எங்கோ தூரத்தில் யாரோ மறைந்திருந்து பார்ப்பது போல் அவ்வப்போது ஒரு எண்ணம் வந்து வலுத்து மறைந்தது. அதை நினைக்காதே ஜெயன்! இன்று நீ பழைய ஜெயன் அல்ல உன்னிடமிருந்து பிரிந்து போன உன் மனைவிக்கு இனி உன் மீது எந்த அதிகாரமும் இல்லை. இப்போது நீ நின்று கொண்டிருப்பது உயரங்களின் உயரத்தின் மீது. மறுபடியும் தெய்வாதீனமாக உன் வாழ்க்கைக்குள் ரூபா வந்திருக்கிறாள்

எல்லாம் சரி. ஒரே ஒரு பாட்டு அதை ஞாபகம் கொண்டு வந்து மறுபடி பாடு. தனக்குள் சலித்தான் ஜெயன். எதையோ மறந்து தொலைத்து இருக்கிறேன் எத்தனையோ மறந்தாயிற்று வேண்டாம் என்று மறந்தது பிறகு மீண்டும் வேண்டுமென்று யாருமே இல்லாத திசையின் முன் எப்படி மண்டியிடுவது? என்ன கோரிக்கை என்பது தெரியாமல் எந்த தெய்வத்தை தேடுவது? எழுந்து சென்று அவள் முன் அமர்ந்தான்

” இங்க பார் ரூபா நமக்கு பக்குவம் இருக்கு நாம இப்போ ஒண்ணும் சிறார்களில்லை.நம்ம ரெண்டு பேருமே ஒரு அமைதியில் வந்து நிக்கிறம்ல..? அஃப்கோர்ஸ் உனக்கும் எனக்கும் நமக்கு சமமா எதுமே இல்லைன்றது பெரிய ஆறுதல். இப்ப போயி பாட்டத் தேடிட்டு வான்னு அனுப்பினா நா எங்க போவேன்..? நான் பொறுமையா நிதானமா அந்த பாட்டை யோசிச்சு உனக்கு சொல்லட்டுமா கொஞ்சம் டைம் தரியா?”

அவள் கண்களில் நீர் முத்துக்கள் கட்டி உதிர்ந்தன. நீ ரொம்ப மாறிட்ட ஜெயன். என்கிட்டே மார்க்கெட்டிங் பண்றல்ல? என்ன கன்வின்ஸ் பண்ணி உனக்கு எந்த லாபமும் இல்லை. நான் மத்தவங்களோட போய் சாப்பிடுறேன் நீ ஆற யோசி. கண்டுபிடி. கிடைச்சா வா. அந்த பாட்டும் நானும் ஒண்ணுதான். நீ அந்த பாட்டு கிடைச்சா என் பக்கத்துல வந்தா போதும்”. கோபத்தை மறைத்துக் கொண்டு ஒரு புன்னகையை எடுத்து அணிந்தபடி கூட்டத்தை நோக்கி சென்றாள். அவர்கள் வெளியே வாதாம் மரத்தடியில் கூட்டமாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் இவள் வந்ததும் இயல்பாக பின்னால் ஜெயன் வருகிறானா என்று தேடிய ராஜூ, ஜெயன் தனியாக அமர்ந்து சாப்பிடுவதைப் பார்த்துத் துணுக்குற்றான்.

சாப்பிட்டு கைகழுவிவிட்டு என்னென்னவோ “ஆஸ் யூ லைக் இட்” என ஜல்லி விளையாட்டுக்கள் ஆடிவிட்டுக் கிளம்பும் அந்த நேரம் வந்தது. இனிமே அடிக்கடி பார்க்கிறோம் என்று பொய் சொல்லிக்கொண்டு பரஸ்பர ஏமாற்றங்களை மறைத்தபடி மீண்டும் அவரவர் எல்லைகளை நாடத் தொடங்கும் நேரம் வால்வோ ஏஸி பஸ் உறுமலாகக் காத்திருக்க “வெல் ராஜூ எங்கடா ஜெயன்?” என்றாள்.”அவன் உங்கூட இல்லையா” என்றவன் இயல்பாக “எங்காச்சும் போயிருப்பான். அவன் நம்பரை கால் பண்ணு” என்றான். “இல்ல இன்னும் நா அவன் நம்பர சேவ் பண்ணிக்கலை” என்றவளை மறுபடியுமா என்று பார்த்து விட்டுத் தன் செல்லை நீட்டினான். அவள் ஓர சீட்டில் அமர பக்கத்து சீட்டில் அமர்ந்து கொண்டான் ராஜூ. ஜெய் என்றிருந்த நம்பரை கால் செய்தவள் என்ன நினைத்தாளோ ஸ்பீக்கரில் போட்டாள். அந்தப் பாடல் ஒலிக்கத் தொடங்கியது. அந்த அதே ஒரே பாடல் அதன் பல்லவி முழுவதும் ஒலித்து முடிக்கையில் எடுத்தான். ‘ஹலோ’ என்றதும் ராஜூ “டே எங்க இருக்க ஜெயா பஸ் கெளம்பிட்டிருக்கு” என்றதும் “இதோ வரேன் வெண்ட் டு ரெஸ்ட் ரூம்” என்று வைத்தான்.

லேசாக முகம் மாறிய ரூபா
“இந்த பாட்டுதான் ஜெயனோட காலர் ட்யூனா?” என கேட்டாள்

“நல்லா கேட்டியே முனிவர் உயிர் கிளில இருக்கும்ல..அப்படி ஜெயனோட உயிரே இந்தப் பாட்டுத் தான். இதை கட் பண்ணா போயி நம்பரை மாத்தி வேற கம்பெனிக்குப் போயிடுவான். 23 வருஷமா இந்த ஒரே பாட்டுத் தான் அய்யாவோடகாலர் ட்யூன். நாங்கள்லாம் இந்தப் பாட்டை ஜேசுதாஸ் பாட்டுன்னு சொல்றதில்லை ஜெயனோட பாட்டுன்னு தான் சொல்றதே”
 சிரித்தான்.


எங்கிருந்தோ ஓடி வந்து பஸ்ஸில் ஏறி பகா பகா என பெருமூச்சு விட்டபடி வந்து சேர்ந்தான் ஜெயன். ராஜூ உடனே எச்சூஸ்மி என்று எழுந்து எங்கோ சென்று மறைந்தான். நின்று கொண்டே இவளைக் குனிந்து பார்த்துவிட்டு “இல்ல இன்னும் எனக்கு அந்த பாட்டு ஞாபகம் வரல ஐ நீட் ஒன் வீக் டைம் அட்லீஸ்ட்” என்றான் ஜெயன். அவள் லேசாக புன்னகைத்துவிட்டு “பரவாயில்லை டேக் யுவர் டைம். ஆனா நிச்சயம் கண்டுபிடிச்சிடணும்” என்றாள்.அவளருகே அமர்ந்தான். அவன் கையை பற்றிக்கொண்டு தோளில் சாய்ந்து கொண்டாள்.

“உன்ன புரிஞ்சிக்கவே முடியல நீ மாறவே இல்லை”
“எதுவும் பேசாத. அந்தப் பாட்ட யோசி. விடமாட்டேன் உன்னை”

 மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள்.