குரல்       
குறுங்கதை


உன்னிடம் பகிர்வதற்கு என்னிடம் ஒரு ரத்தக் கதை உண்டு என்று ஆழமாகப் புகையை விட்டார் அந்த மனிதர். பழைய காலப் புதினங்களில் கனவான் என்ற சொல்லைப் பயன்படுத்தும் போது வாசிக்கும் கண்களின் ஆழத்தில் ஒரு உருவம் தோன்றுமல்லவா? அப்படியான உருவப் பொருத்தத்தோடு இருந்தார். நாங்கள் இருவரும் அமெரிக்கா என்ற பொதுப்பெயரில் அழைக்கப்படுகிற ஏராளத்தின் ஏதோ ஒரு துளியின் துளியின் துத்துளி இருளில் பார் ஒன்றில் சயனத்துக்கு ஒப்பான சாய்தலோடு வீற்றிருந்தோம். இருவரில் யார் நன்றாகக் குடித்திருந்தோம் என்றொரு சோதனை மேற்கொண்டால் இருவருக்கும் இடையே பந்தயம் ட்ரா ஆவதற்கான வாய்ப்புத் தான் அதிகம். நான் கொஞ்சம் நார்மலாக இருப்பதாக எண்ணிக்கொண்டேன். அவரைப் பரிகாசத்தோடு பார்க்க முயன்றேன். அவரும் அப்படியே எண்ணியிருக்கக் கூடும். என்ன பிழை?

எங்கோ ஒரு சதியின் சொற்களைப் போல் பாடலொன்றின் பாதி வார்த்தைகள் கசிந்து கொண்டிருந்தது. அது ஒருவேளை சப்தமான பிரமை என்று சொன்னால் கூட நாங்கள் நம்புவோம். அந்த மதுக்கூடத்தில் வேலை பார்ப்பவர்கள் மட்டும் தான் நிதானித்து நடந்தார்கள். அமர்ந்து குடித்துக் கொண்டிருந்த யாருமே எழ முயற்சிக்கும் போதே மொழியறியாதவன் புதிதாய்க் கட்டமைக்க முயலும் பிழை மிகுந்த வாக்கியம் போல் பிசகினார்கள். தங்களைத் தாங்களே தேற்றிக் கொள்ளவும் விழாமல் பிடித்துக் கொள்ளவும் முயன்றார்கள். உலகமே அந்தக் கோளவடிவக் கூடத்துக்குள் எங்கோ சாய்ந்து சரிந்துகொண்டிருப்பதாகத் தோன்றியது.

Chasing "Dusties" With America's Top Rare Spirits Hunter | PUNCH

யாரைப் பற்றிய கதை என்று கேட்டேன். என் குரல் ஒரு மாதிரி கனத்து ஒலித்தது.அத்தனை நேரம் அந்தக் கேள்வியைத் தான் எனக்குள் கட்டமைத்துக் கொண்டிருந்தேன். அந்த மனிதர் மூக்கை உறிஞ்சிக் கொண்டார். தன் முகம் என்கிற உரிமையில் இங்குமங்கும் கோணிக் கொண்டார். நெற்றியை அதீதமாய்ச் சுருக்கிக் கொண்டவர் சட்டென்று வேறோர் நிம்மதியை முகத்தில் படரவிட்டவராய் அப்போது நீ பிறந்திருக்கவே மாட்டாய் என்று பெரிதாய்ச் சிரித்துக் கொண்டார். அவன் பெயர் ஜோன்ஸ். அவன் மதராஸின் சினிமா வட்டாரத்தில் புகழ் மிகுந்த ஒப்பனைக் கலைஞன். அனேகமாக எழுபத்தி ஆறாம் ஆண்டாக இருக்கலாம். நாடு எமர்ஜென்ஸியின் பிடியிலிருந்து மீண்டும் சாதாரணத்தை நோக்கித் தன் வண்டியைத் திருப்பிய நேரம். அவனும் என் சிற்றன்னையின் மகன் பெரியசாமி என்று பெயர் அவனொரு புகைப்படக்காரன் இருவரும் நெருங்கிய நண்பர்கள். நான் அப்போது காலேஜ் முதல் வருடம் படித்துக் கொண்டிருந்தேன். இன்னமும் கிராமத்திலிருந்து முற்றிலும் விடுபடாத மனமொன்றின் கண்கள் என்னுடையவை. எனக்கு அந்தப் பெரிய நகரத்தில் அந்த இருவரை விட்டால் வேறு நண்பர்களே இல்லை என்று நிறுத்தினார்.மேலும் ஒரு முறை பாட்டிலை எடுத்தார்

“போதும்” என்றேன். “நோ ஜெண்டில்மன். இன்னமும் என் பீப்பாயில் இடமிருக்கிறது” எனத் தன் தொப்பையைக் காட்டினார். சிரிக்க முயன்றார். “என் பீப்பாய் நிறைந்து விட்டது” என்றேன் சர்காஸ்டிக்காக. அவர் அதை ரசிக்காமல் வெறுக்காமல் புகையைப் பெரிய வளையமாக்கி ஊதினார். அந்த மதுவிடுதியில் அவரைப் புகைப்பதற்கு எப்படி அனுமதிக்கிறார்கள் என்று வியப்பாக இருந்தது. சொல்பேச்சுக் கேளாதவராக இருக்க வேண்டும் அல்லது பணத்தை வாரி இறைக்கும் ஊதாரியாக இருக்கலாம். இல்லாவிட்டால் உடம்பைக் கிண்ணென்று பேணுகிற நாலைந்து பேர் வந்து குழந்தையைப் போல் ஏந்திக் கொண்டு போய் வெளியில் குப்பையைப் போல் எறிந்திருப்பார்கள் இந்நேரத்துக்கு. அப்படி எதுவும் நடக்காமல் இருந்தது என் வியப்புக்குக் காரணம்.

அவர் மட்டும் அடுத்த ரவுண்டுக்குள் செல்ல முனைந்தார். நான் லேசாகச் செறுமிக் கொண்டேன். தொண்டை கவ்வுகிறாற் போல் உணர்ந்தேன்.

நாங்கள் மூவரும் ஒரு நாள் இரவு உயரமான கட்டிடம் ஒன்றில் பார்ட்டி பண்ணினோம். ஜோன்ஸ் அன்றைக்குத் தான் பிரபல நடிகை அஸ்மினியின் பிரத்யேக ஒப்பனையாளனாக ஒப்பந்தமாகி இருந்தான். பாதுகாப்பற்ற பெருங்கடல் நீச்சலில் முதல் மேட்டைச் சென்றடைந்தவனாக ஆசுவாசத்தில் இருந்தான். அஸ்மினியின் கையில் ஆறு படங்கள் இருந்தன. அவள் திரும்பிப் பார்த்த திசையெல்லாம் தங்கமாகிக் கொண்டிருந்தது என்று எதோவொரு பத்திரிகையில் எழுதினார்கள்.

அஸ்மினி நடிக்கத் தொடங்கும் முன் பெரியசாமிதான் அவளை முதன்முதலில் படங்கள் எடுத்திருக்கிறான். என்னவோ பெரியசாமிக்கும் அஸ்மினியின் கார்டியனுக்கும் முரண்பாடாகி விட்டதாம். அதன் பின் அவள் எங்கோ சென்று விட, இவன் கிளம்பாத பேருந்தில் வியர்த்துக் கொட்ட அமர்ந்திருப்பவனைப் போல் உணர்ந்து அதுவே சலிப்பாகி வாழ்க்கை அலுத்து விட்டிருக்கிறது. அப்போது தான் கட்டிட வேலை நடந்து கொண்டிருக்கும் பல மாடிக் கட்டிடத்தின் மொட்டை மாடியில் நிலவொளியின் பிடியில் அத்தனை நேரம் அன்பும் இன்பமுமாகச் சென்று கொண்டிருந்த விருந்து ஷண நேரத்தில் மாறிப் போனது விதியின் கொடுமை தான் என்று மூச்சை ஆழமாய் இழுத்து விட்டுக் கொண்டார்.

“நீ எப்படியாவது என்னை அவளுக்கு நல்ல முறையில் ஞாபகப்படுத்து என்று இவன் சொல்ல என்னால் அது முடியாது என அவன் மறுக்க எனக்காக இதைக் கூட செய்ய மாட்டாயா என்று இவன் ஏச நீ என்ன அந்தக் கடவுளே வந்து கேட்டாலும் மறுப்பேன்” என்று அவன் குரல் உயர்த்த ஒரு கட்டத்தில் இருவரும் கட்டிப்புரண்டதில் பெரியசாமியை தாக்குவதற்காகப் பாய்ந்தான் ஜோன்ஸ். சட்டென்று பெரியசாமி விலகிக் கொள்ளவே அத்தனை மாடியிலிருந்து கீழே விழுந்து தலை தெறித்து மாண்டான் ஜோன்ஸ். அங்கே நானும் பெரியசாமியும் அவனோடு குடித்தது வேறு யார்க்கும் தெரியாது என்கிற தைரியத்தில் பெரியசாமி அந்த இடத்திலிருந்து உடனே கிளம்பலாம் என என்னை எச்சரித்தான். நான் என்னென்னவோ பேச முயற்சித்தேன். அவன் என்னைப் பேசவே விடவில்லை. நடந்தது நிச்சயமாக விபத்துத் தான். கொலைக்கு உண்டான அத்தனை அச்சங்களையும் அவன் கொண்டிருந்தது எனக்குப் புதிராக இருந்தது. என்னால் அவனை மீறமுடியவில்லை. என் சித்தப்பா முகம் என் முன் வந்து வந்து போனது. நானும் அவனுக்கு ஒத்துழைத்தேன். அதை விபத்து என்று தான் உலகமே கருதியது. அது விபத்தா இல்லையா என்பதில் எனக்குக் குழப்பம் இருந்தது. என்னால் அந்த நகரத்தில் இருக்கவே முடியவில்லை. அதனால் தான் அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பித்து இங்கே வந்து சேர்ந்தேன். ஆழமாய் என் கால்கள் இந்த நாட்டில் வேரூன்றி விட்டன. அதன் பிறகு எப்போதாவது பழசெல்லாம் நினைவுக்கு வரும். இங்கே வந்து இந்த பாரில் வருடக்கணக்காகக் குடிக்கிறேன். அனேகமாக என் பூர்வ கதை இங்கே இருக்கும் சுவரொட்டிகளுக்குக் கூடப் பரிச்சயமாகத் தான் இருக்கும்” என சொல்லி முடித்த களிப்போடு சப்தமாக சிரித்தார் அவர்.

“அதன் பிறகு நீங்கள் பெரியசாமியைப் பார்க்கவே இல்லையா?” எனக் கேட்டேன்.
“இல்லை. நான் இந்தியாவுக்கே வரவில்லையே. அவன் எங்கே இருக்கிறானோ…இருக்கிறானா என்பதே ஐயம் தான்,. இன்னேரம் செத்துக் கூடப் போயிருப்பான்” என்றார்.

“இல்லை நலமாக இருக்கிறார்”. என்றேன்

“உனக்கெப்படித் தெரியும்” எனக் கேட்டவர் என் கண்களில் எதெதையோ தேடினார். சமர் ஒரு கண்ணாகவும் சமரசம் மற்றொன்றாகவும் கண்டதில் குழப்பமுற்றார்

“எனக்கு நன்றாகத் தெரியும். நீங்கள் தான் அந்தப் பெரியசாமி. ஒரு கொலையைத் தற்செயல் விபத்து என நம்ப வைப்பதற்கான நெடிய நாடகத்தை அற்புதமாக இயக்கிப் பெரும் வெற்றியடைந்த பெரியசாமி” என்றேன்.

“நீ நீ…”என்று குழறினார். அவருடைய நாக்கு ஒத்துழைக்க மறுத்தது. கண்களிலிருந்து விரும்பாத நீர்வரத்து மூக்கொழுக்கை கர்ச்சீஃபால் துடைக்க முயன்றார். சிரிக்க முயன்றார்.

நான் எழுந்து கொண்டேன்.

“பெரியசாமி…நல்லாருக்கியா” என்றேன். ஜோன்ஸ் குரலில்