எனக்குள் எண்ணங்கள் 6

எனக்குள் எண்ணங்கள் 6

           தேடலே தவம்


மனிதன் தான் எத்தனை விசித்திரமானவன்.? உண்மையில் மனிதன் என்பவன் யார்? மற்ற உயிர்களினின்றும் அவனை வேறுபடுத்துகிற முக்கிய அம்சமாக அவனது சிந்தித்தறியும் திறனைச் சொல்லலாம். தன்னைப் பற்றிச் சிந்திப்பதும் கனவு காண்பதும் லட்சியங்களைக் கொண்டிருப்பதும் பகை பாராட்டுவதும் காதலிப்பதும் எதிர்பார்ப்பதும் காத்திருப்பதும் ஏமாற்றத்தைக் கையாள்வதும் வன்மம் கொள்வதும் துரோகம் செய்வதும் பழியெடுப்பதும் என மனிதனின் பல குணவிரிவுகளுக்கெல்லாம் அடிப்படையாக இருப்பது அவனுடைய சிந்தனை. சிந்திப்பது அவரவர் உரிமை மற்றும் அவரவர் தேர்வு. யாரும் யாரையும் சிந்தித்தே ஆக வேண்டும் என்று நிர்பந்திக்க முடியாது. இந்த சிந்தனை கூடத் தன்னியல்பாக எழுந்து வருவது தானே?

எனக்கு மிகவும் பிடித்த பண்டமாகப் புத்தகம் மாறிப் போனது. புதூர் வீட்டிலிருந்து கிளம்பும் போது என் வயது 12. அப்போது எனக்கென்று அலமாரியில் ஒரு தட்டு மட்டும் வழங்கப்பட்டிருந்தது. அதுவே திருநகர் வீட்டில் எனக்கென்று அலமாரி முழுவதும் வழங்கப்பட்டது. வழங்கப்பட்டது என்று சொல்வது அராஜகம். நானாக எடுத்துக் கொண்டேன் என்பது தான் சத்தியம். பச்சை வண்ண ட்ரங்குப் பெட்டிக்குப் பூட்டுப் போட்டு வைத்திருப்பேன். அது கஜானா. அலமாரி என்பது என் அலுவலகம் அப்படித் தான் கருதிக் கொள்வேன்.பிற்பாடு என் வீட்டில் எனக்கான அதிகார வரம்பை அதிகரித்துக் கொண்டே சென்றேன். ஒரே மகன் என்பதாலும் அக்கா என்னைப் போல் தேடலும் சேகரிப்பும் கொண்டவளாக இல்லை என்பதாலும் எனக்குரிய இடம் அதிகரித்துக் கொள்வதில் சிக்கல் ஏதுமில்லை. பின் நாட்களில் பக்கத்தில் இருந்து காலி மனையில் வீட்டை விரிவு செய்து கட்டிய போது பெரியதொரு ஹாலை என் நூல்களுக்கான அறையாக எனக்கான அறையாக மாற்றிக் கொண்டேன். நவராத்திரி கொலுப்படிகளை இரும்பில் செய்து வாங்கி இருந்தனர். அதை அந்த ஒன்பது தினங்கள் முடிவடைந்ததும் பிரித்து நட்டும் போல்டும் தனித்தனியாக்கிப் பரணில் வைத்து விடுவது தான் பொதுப்பழக்கம். நான் அதை என் நூல்களுக்கான அலமாரியாக்கிக் கொண்டேன். அந்த நெடிய திறந்த அலமாரி தான் என் நூல்களுக்கான முதல் இருப்பிடமானது.

பார்த்துப் பார்த்து வாங்கிய புத்தகங்களை வரிசை செய்து அடுக்கி வைப்பதில் ஒரு பெரிய ஆனந்தம் இருக்கின்றது. நான் அதிகம் புழங்கும் இடங்களில் பல நூல்கள் சார்ந்த இடங்களே. ந்யூ சினிமா பக்கம் இருக்கும் பழைய புத்தகக் கடைகள், ரீகல் தியேட்டர் வாசல் கடைகள்,அப்போது டவுன் ஹால் ரோடில் சனிக்கிழமை மாலைக்கு மேல் வார விடுமுறை விடும் கடைகள் சில இருந்தன. அங்கே வாரத்தின் இறுதி தின மாலைகளுக்கென்று சில பழைய புத்தகக் கடைகள் உருவாகும். அவை மற்ற தினங்களில் இருக்காது. அங்கே எனக்குப் பல புத்தகங்கள் புதையல்கள் கிடைத்தன. ரெண்டே நாட்கள் வியாபாரத்துக்காக மிகுதி ஐந்து நாட்களும் அலைந்து திரிந்து நூல்களைத் தேடி வருவார் ஒரு முதியவர். அவரிடம் இது வேண்டும் அது வேண்டும் எனக் கேட்டால் அவற்றைக் கிடைக்கச் செய்வதில் பெரிதும் மெனக்கெடுவார். புத்தகம் என்பது மேதமை சம்மந்தப் பட்ட விஷயம். அது வெறும் பண்டமல்ல. அதைப் பிற பொருட்களைப் போல் வெறுமனே கையாண்டு வியாபாரம் செய்துகொண்டே காலங்கழிப்போரும் இருக்கின்றனர். ஆனாலும் புத்தகம் தன் உடலை வருடுபவர்களின் மனங்களை வருடி விடும் வல்லமை கொண்ட மாயவாதி தான்.

அந்த முதியவரின் பெயர் மறந்து விட்டது. தரையில் விரிப்பாக சாக்கு மற்றும் உரப்பைகளை வரிசைப்படுத்துவார். மாலை மூன்று மணிக்கெல்லாம் அந்தக் கடையைக் கட்டமைக்கத் தொடங்குவார். வார இறுதி நாட்கள் என்பதால் வழக்கமான கூட்டத்திற்குப் பதிலாக வந்து செல்பவர்களால் பெரும்பாலும் அந்தத் தினங்களின் நகரம் நிரம்பியிருக்கும். வெளி ஊர்களிலிருந்தெல்லாம் தவறாமல் வருபவர்கள் உண்டு. காலேஜ் ஹவுஸ் வாசலிலேயே கிருஷ்ணா காபிக்கு அப்பால் இருக்கும் நடைபாதைக் கடை தெரிகிறதா எனப் பார்க்கத் தொடங்குவேன். கண்ணறியமுடியாத தூரமெனினும் ஒரு கானலைப் போல் அந்தக் காட்சியை உண்டுபண்ணிக் கொள்வதில் மனம் மகிழும். அந்தப் பெரியவர் கடைக்கு அனேகமாக முதல் வாடிக்கையாளனாகப் பல வாரங்கள் நான் தான் இருந்திருக்கிறேன். புத்தகங்களை வரிசைப்படுத்துவதிலும் அடுக்குவதிலும் பல நுணுக்கங்களைப் பல்வகை நுட்பங்களை நான் அறிந்துகொண்டது அங்கே தான். அவர் ஒரு மிகச்சிறந்த புத்தகக் காதலர். முழுமையாகத் தன் கடையை அடுக்கி முடிக்க அவருக்கு முக்கால் மணி நேரம் ஆகும். முடித்ததும் என்னைப் பார்த்து அவஸ்தையாகச் சிரிப்பார். எதிரே இருக்கும் என்.எஸ் காபி பாருக்கு நானும் அவரும் நடந்து செல்வோம். அங்கே காபி அருந்தும் போது என் ரசனாதி சங்கதிகளைப் பற்றி விசாரிப்பார். என்ன கேட்டுருந்தீங்க என்பார். அவருடைய குரல் மிகவும் நடுக்கத்தோடு இருக்கும். பேசுகிறார் என்பதே அருகில் சென்று பார்த்தால் தான் புரியும். சன்னம் என்றால் அப்படி ஒரு சன்னம்.

நான் சொல்லச்சொல்ல எனது ப்ரியங்களை தேடலை நான் காத்திருக்கும் புத்தகங்களைப் பற்றியெல்லாம் முழுவதுமாக அறிந்துகொண்டு தன் கடை நோக்கி நடந்து செல்வார். நான் சற்று நேரம் கழித்துப் போவேன். அதற்குள் நான் கேட்டவற்றில் தன் இருப்பிலிருப்பவற்றைத் தனியே எடுத்து வைத்துவிடுவார். நான் அடுத்த கடையின் படிகளில் அமர்ந்து கொள்வேன். அவர் எனக்குத் தந்தவற்றை ஒவ்வொன்றாகப் புரட்டிப் பார்ப்பேன். மனம் வினோதமான விந்தைக்குள் சஞ்சரித்துத் திரும்பும். சில சமயம் அது கடை என்பதை மறந்துபோய் அங்கேயே புத்தகத்தைப் புரட்டி நாலைந்து பக்கங்களைத் தாண்டிப் போயிருப்பேன். நானே நிஜமுணர்ந்து திரும்பினாலொழிய அவராக எதுவுமே சொல்ல மாட்டார். ஒரே ஒரு முறை அந்தக் கடையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு எங்கோ போய்விட்டு வந்தார். அவர் வருவதற்குள் பாதி விலைக்கும் சற்று மேலதிகமாய் விலை வைத்து நாற்பது ரூபாய்க்கு வியாபாரம் பார்த்திருந்தேன். கூச்சத்தோடு அந்தக் காசைப் பெற்றுக் கொண்டார்.

தமிழின் பல நூல்களைப் பற்றி அவருக்கென்று தனித்த அனுமானங்களும் தீர்மானங்களும் இருந்ததைப் பற்றிச் சொல்லி இருக்கிறார். வெகு சில நாட்கள் அவருடைய கடைக்கு மாலை சற்றே தாமதமாகப் போயிருக்கிறேன். அன்றைக்கு நானறிந்த சித்திரத்தின் வேறொரு காட்சியாக அந்தக் கடை தோற்றமளிக்கும். எப்போதாவது அந்தக் கடை கூட்டத்தால் நிரம்பி வழிவதும் உண்டு. என் இள வயதுக் கற்பனைகளில் ஒன்று அது ஒரு விதமான எதிர்பார்ப்பு என்றும் சொல்லலாம் என்னவென்றால் அந்தக் கடைக்கு வாடிக்கையாக வந்து செல்லக் கூடிய ஒரு வாசகி. அவளும் நானும் நட்பாகிறோம். அந்தக் கடையைத் தாண்டியும் சந்தித்துக் கொள்கிறோம். நாங்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டு எங்கள் குழந்தைகளோடு அந்தக் கடைக்கு வந்து புத்தகங்கள் வாங்குவது போல நினைத்துப் பார்த்திருக்கிறேன். சுஜாதா வாசகி-காதலி-மனைவி அருமையான தொடர்ச்சி என்று ஒரு நாவலில் எழுதியிருப்பார். அதனாலோ என்னவோ அப்படி ஒரு எதிர்பார்ப்பு எனக்குள் அடிக்கடி வந்து போயிருக்கிறது. நிஜம் வேறு சுவாரசியங்களோடு நிகழ்ந்த வேறொரு கதையானது.

அந்தக் கடைக்கு வந்து செல்பவர்களில் என்னைப் போல் வாடிக்கையாளர்கள் பலர் இருந்தோம். இரண்டொருவர் அங்கே சந்தித்துக் கொள்ளும் போது பாதிப் புன்னகையோடு பார்த்து விலகுவோம். என்ன இருந்தாலும் புத்தக வாசிப்பு மிகுந்தவர்கள் என்கிற அடிப்படை ஓர்மை இருப்பினும் கூடவே அங்கே வந்து செல்கிற யாருமே ஒரு ஏலத்தில் கலந்து கொள்கிற பலராகத் தான் எப்போதும் உணர முடிந்தது. என்னைப் போலவே புத்தகத்தைத் தேடி நேசித்து அலைந்து திரிபவனை நான் நியாயமாகப் பெரிதாக விரும்பியிருக்கவே வேண்டும். ஆனால் வெறுக்கவே முற்பட்டேன். எல்லாப் புத்தகங்களுமே எனதானவை என்கிற முரட்டுத் தனமான ஈர்த்தல் காரணமாக இருந்திருக்கலாம். அப்படி சம கால சகாக்கள் யாருமே என்னையும் வெறுக்கத் தான் செய்தார்கள் என்பதும் கூடுதல் உண்மை. புத்தகம் என்ன செய்யும்…எல்லாம் செய்யும் என்கிற வசுமித்ரவின் கூற்று என்னளவில் உண்மை தான்.

புத்தகம் என்பது ஒரு பண்பாட்டின் சாவி எனப் புரியத் தொடங்கியது அப்போது தான். எதிர்பார்ப்பு எல்லையற்றது. சனிக்கிழமை காலையிலிருந்தே அங்கே செல்ல வேண்டும் என்கிறதான திட்டம் தொடங்கிவிடும். மனம் முழுக்க அந்த இடத்துக்குச் சென்று திரும்பும் போது கைக்கொள்ள வாய்க்கிற புத்தகங்களைப் பற்றித் தான் நிறைந்து கிடக்கும். இன்றைக்கும் இந்த எண்ணம் அப்படியே தான் இருக்கிறது. பழைய புத்தகங்களுக்கு முன்னால் புதியவை ஒரு பொருட்டே அல்ல. என் காலத்துக்கே வேறொரு காலத்திலிருந்து வருகை புரிந்து என்னையே மீண்டும் ஒருமுறை முற்றிலும் புதியவனாக அறிந்துகொள்ள முடிந்தால் எத்தனை இன்பமாக இருக்கும்? என் கனவுகளும் கற்பனைகளும் ஏன் என் பேராசைகள் கூடப் புத்தகங்கள் சார்ந்தவையே. நான் புத்தகங்களின் மனிதன் என்பது தான் பொருத்தமான விளித்தலாக இருக்க முடியும்.

தினமணி தியேட்டர் பக்கத்தில் ஒரு பழைய புஸ்தகக் கடை இருந்தது. அங்கேயும் வாடிக்கையாகச் செல்வேன். தல்லாகுளத்தில் ஒரு கடை மெயின் ரோட்டிலேயே இருக்கும். அங்கே பழைய பேப்பர் கடையில் ஒரு அலமாரி ரேக்கிலும் பெரிய அட்டைப் பெட்டியிலும் புத்தகங்களைக் கொட்டிக் குவித்து விற்பனை செய்வார்கள். இவை தவிரவும் புதூர் நெல்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் இருந்த பெரிய பழைய பேப்பர் கடைகளில் ஒரு ஓரத்தில் அங்கே வந்து சேர்கிறவற்றிலிருந்து விற்பதற்கு ஆகும் எனக் கருதுபவற்றை எல்லாம் தனியே வைத்து விற்பார்கள். அங்கே மாதம் இரண்டு முறையாவது சென்று என்ன வந்திருக்கிறது என்று பார்ப்பேன். நிறைய அபூர்வமான புத்தகங்கள் எனக்கு அப்படிப் பட்ட வலைவீச்சில் அகப்பட்டவை தான். வெறுமனே புதிய புத்தகக் கடைகளில் மட்டும் நூல்களைத் தேடுவதென்பது மேலோட்டமான வலையெறிதல் போலத் தான். ஆழம் செல்லச் செல்லத் தான் அபூர்வம்.

சுஜாதா பதிப்பாளர்களுக்கு ஆதரவாக ஒரு ஸ்டேட்மெண்டைத் தன் வாழ் நாளெல்லாம் நம்பிக் கொண்டிருந்தார். அதை அடிக்கடித் தன் எழுத்தினூடாகக் குறிப்பிடவும் செய்திருக்கிறார். அதென்ன என்றால் வார மாத இதழ்களைக் கட் செய்து பைண்டு பண்ணுவது ஒரு விரய காரியம். என்பது தான். என்னளவில் நான் கடுமையாக இதிலிருந்து முரண்படுபவன். எல்லாவற்றையும் பைண்டு செய்து அதையே சுற்றில் விட்டுக் கொண்டிருந்தால் பதிப்பிக்கப் படும் புத்தகங்கள் விற்பனையாகாது என்கிற காகிதக் கரிசனத்தில் அவர் அப்படிச் சொல்லியிருக்கலாம். ஆனால் நம் இந்திய சமூகத்தின் முக்கியமான மனோநிலை பத்திரம் செய்வதில் அடங்கி இருக்கிறது. சேகரித்தல் என்பது மன ஒழுங்கு, அது நிச்சயமாக ரசனை சார்ந்த பயிற்சி என்றே சொல்ல முடியும். சேகரித்தலினூடாக சின்னச்சின்னக் காலடிகளால் பெரிய தூரத்தை அளந்து விட முடியும். காசு செலவழித்து வாங்கிப் பயில முடியாதவற்றை நூலகம் சென்று படிப்பது ஒரு முறைமை என்றால் சேகரிப்பின் ஊடாகப் பல விஷயங்களையும் கட்டமைத்துப் பெறமுடியும் என்பது இன்னுமோர் முறைமை. ஆய்வு மனோபாவத்தின் அடிப்படையிலும் சேகரங்களை முற்றிலுமாகத் தவிர்த்து விட முடியாது. கல்கியின் பொன்னியின் செல்வன் தொடங்கி சாண்டில்யனின் பழைய தொடர்கள் பலவற்றையும் சேர்த்து இன்றும் பழைய புத்தகக் கடைகளில் அந்தந்தக் காலகட்டத்தின் ஓவியங்களோடு முன் பழைய காலத்தின் நெடிபூசிய காகிதவாஞ்சையை மனம் முழுக்க நிரப்பிக் கொண்டபடி ஏந்தி மகிழ்வோரைக் காணமுடிகிறது. மனிதன் எப்போதும் காலத்தின் விலங்கைத் தன் சொந்த விருப்பத்தின் பேரில் ஒரு அணிகலனைப் போல் அணிந்து கொள்பவன். அதன் சாவியை ஒரு நேர்த்திக் கடனைப் போல் தொலைத்து மகிழ்பவன். இதை அத்தனை எளிதில் மாற்றி விட முடியாது.

வேறு யாரிடமும் இல்லாத பல புத்தகங்களை இம்மாதிரியான வார இதழ் பைண்டிங் கொத்துக்களிலிருந்து நம்மால் கண்டடைய முடியும் என்பது ஒரு பொக்கிஷத்தைத் திறப்பது போன்றது. என்னிடம் அப்படியான முக்கியமான தொகைகள் இருக்கின்றன. 40களின் ஆனந்தவிகடன் தொடங்கி சுப மங்களா கணையாழி போன்ற இதழ்களைப் பிரித்துக் கலைத்து யாரோ புண்ணியாளர்கள் எனக்காகவே செய்து வைத்த பைண்டிங்கு வைரங்கள் அவை.
யாரும் என்னிடம் கேட்காதீர்கள். என்னிடம் அப்படி எதுவும் இல்லவே இல்லை.

சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் வெளிவந்த பழைய நூல்கள் பலவற்றின் மீது மாறாத தேடல் எனக்கு உண்டு.
“சிறந்த துப்பறிவாளன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்” என்னும் புத்தகம் 90களின் மத்தியில் எனக்கு அப்படி ஒரு அதிர்ஷ்டமான தினத்தில் டவுன் ஹால் ரோடு சாலையோரக் கடையில் கிடைத்தது. அதன் தலைப்புக்காகவே அதை வாங்கினேன். அப்புறம் நாலைந்து மாதங்கள் அப்படி ஒரு புத்தகம் வாங்கியதையே மறந்து விட்டேன். வேறேதோ தேடும் போது அகப்பட்டதை அசுவாரசியமாகப் புரட்ட ஆரம்பித்தேன். அன்றைய சாயங்காலம் அத்தனை அபாயின்மெண்டுகளையும் ரத்து செய்துவிட்டு அப்படியே அவ்விடமே அதைப் படித்து முடித்து விட்டுத் தான் அடுத்த திசை நோக்கினேன்.
வாழ்வின் முக்கியமான புத்தகங்களில் ஒன்று என்பதைத் தவிர அதைப் பற்றிச் சொல்வதற்கு இன்னொரு கூடுதல் ரசமான விஷயம் உண்டு. அந்தப் புத்தகம் துப்பறிவதைப் பற்றியது அல்ல.

மனவளக்கலை பற்றியது.