சாலச்சுகம் 11


அன்பே
ஒரு போதும் உன்னால்
என் நினைவுகளற்று இருக்க முடியாது
ப்ரியம் முடிந்து போவதென்பது
ஆர்பரிக்கும் கடல் நடுவே
இரு தேசங்கள்
தங்கள் எல்லைகளைப் பிரித்துக் கொள்வது போலத் தான்
எனக்கும் திகைப்பாகத் தான் இருந்தது.
எப்படியும் உனை மறந்தே தீர்வது என்று
ஒரு நாள் முனைந்தனன்.,
அன்றைய நாளின் தீருங்கணத்தில்
எனக்குத் தோன்றிய வெளிச்சம் இது.
“எதுவும் மறப்பதற்கில்லை”
இல்லாமல் போகும் வரை
இல்லாமல் போவதில்லை எதுவும்
ஒரு போதும் உன்னால்
என் நினைவுகளற்று இருக்க முடியாது
ஆகவே
ப்ரியம் முடிந்துபோவதை இயல்பாக
ஒரு மரு உதிர்வதைப் போலவோ
ஒரு மச்சம் மறைந்துவிடுவதைப் போலவோ
ஒரு வெட்டுண்ட புண் ஆறிவிடுவதைப் போலவோ
ஒரு இழந்த சதை மீவுருக் கொள்வது போலவோ
ஒரு உடைந்த எலும்பு மறுபடி கூடுதற் போலவோ
ஒரு உடற்குழி மீண்டும் மேவிவிடுவது போலவோ
கையாள வேண்டியதில்லை
மாறாக
அடித்து நொறுக்கப் பட்டபிற்பாடு பிழைத்து வரும்
குத்துயிர் போலவாவது
அவமானத்தின் ஞாபகங்களை மட்டும் எடுத்துச் செல்லும்
வேற்றுத்தேசம் போலவாவது
உயிரை மாத்திரம் விட்டுவைத்ததற்காய்க்
கால்களைக் கண்நீரால் கழுவிச் சொல்லும்
நன்றி எனும் சொல் போலவாவது
கையாண்டு கொள்தல் நலம்

சாலச்சுகம்