சாலச்சுகம் 13

லவலேசம்

ம்யூசியத்தில் பார்க்கக் கிடைத்த
எலும்புக் கூட்டின் பாலினம் தெரியாதது ஒரு வசதி.
ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய புழக்கத்தில் இருந்த நாணயம்
எந்தக் கனவில் யாராகி வருமோ
கனவென்பதன் வசதி
புணரக் கிடைக்கையில்
முகத்தைத் திருப்பிக் கொள்ள வேண்டியதில்லை
மேலும்
புணர்ந்தடங்கிய பிற்பாடு
ஒருக்களித்துக் கொள்ளவும் அவஸ்யமில்லை
கனவென்பது நோய்மை என்று கெக்கலித்தவள்
திரும்பிச் செல்வதற்குக்
கொஞ்சம் சில்லறையாகவும் தரவியலுமா
என்றொருதரம் கோரினள்
இதே எண்ணில் தொடர்பு கொள்ளலாமா என்று கேட்டபோது
அரக்கியைப் போல் சிரித்தவளை
கழுத்தை நெறித்துக் கொல்லலாம் போலொரு வேட்கை
நானும் அவளும் ஆளுக்கொரு நம்பர்
எல்லாமே நம்பர் தான் என்று சொல்லித் தந்தவன் ஞானி.
ஞானிகளுக்கும் நம்பர் உண்டென்பான் சைண்டிஸ்ட்
சுயம்பு உணர சுயம் புணர் என்பதொரு சித்தாந்தம்
மனுஷ ஜீவிதம் லவலேசம்
சாலச்சுகம்