தமிழ் விக்கி

 

தமிழ் விக்கி


தமிழ் விக்கி இணையக் களஞ்சியத்தில் எனக்கென்று ஒரு பக்கம் உருவாகியிருக்கிறது. நேற்று இரவு என் பார்வைக்கு வந்ததிலிருந்து நாலைந்து முறை இதனுள் நுழைவதும் வெளிவருவதுமான செல்லப்ரிய ஆட்டமொன்றை நிகழ்த்திப் பார்த்துக் கொண்டே இருக்கிறது மனது.

விஷயம் அது மட்டுமல்ல.

நேற்றிரவு நான் உறங்குவதற்கு வெகு நேரமாயிற்று. பலரது பெரிய கால உழைப்பிற்கு அப்பால் உருவாகி இருக்கும் தமிழ் விக்கி தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு நிசமாகவே ஒரு கொடை. அதன் பக்கங்கள் ஒவ்வொன்றாகப் பிரித்துப் பார்த்துக் கொண்டே இருந்ததில் மனம் நிறைந்த இரவாகியது நேற்று

மகரம் தேவன் சுஜாதா பாலகுமாரன் கமல்ஹாஸன் யுவன் சந்திரசேகர் நாஞ்சில்நாடன் கோணங்கி ஜெயமோகன் எஸ்.ராமகிருஷ்ணன் சாரு நிவேதிதா எனப் பலரது பக்கங்களின் பின்னே உறைந்திருக்கும் முழுமையான தகவல்களும் துல்லியமும் போற்றுதலுக்குரியன. புனைவின் பேருலகத்தின் உள்ளே புதினங்கள் தொகைகள் தாண்டிச் சில பல கதாபாத்திரங்களுக்கும் தனித்த பக்கங்களும் ஆழ்ந்து கோத்தெடுத்த உப நுட்பத் தரவுகளும் மேலும் ஈர்க்கின்றன. உதாரணமாக சுஜாதாவின் கணேஷ் வஸந்த் பாத்திரங்களுக்கென்று இருக்கின்ற தனிப்பக்கத்தைச் சொல்லலாம்.

இன்னும் பலரது பக்கங்களும் இணைக்கப் பட வேண்டியவை. விரைவில் இந்தக் களஞ்சியம் விடுபடுதலற்ற இலக்கியப் பேருலகம் ஒன்றினைக் கட்டமைக்கும் என்பது நிச்சயம்.

இந்த வலைக்களஞ்சியத்தை உருவாக்குவதில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் பேரன்பு வணக்கங்கள். வாழ்தல் இனிது

தமிழ் விக்கியில் எனைப் பற்றிய பக்கத்துக்குச் செல்ல: click here

                ஆத்மார்த்தி