எனக்குள் எண்ணங்கள் 7

எனக்குள் எண்ணங்கள் 7

மாமரப்பூக்கள்


புதூரில் குடியிருந்த போது வீட்டின் பின்னால் ஒரு மாமரம் இருந்தது. அந்த மரத்துக்கும் என் பாட்டிக்கும் இருந்த சொல்லமுடியாத பந்தத்தை உணர்ந்திருக்கிறேன். மாமரம் பூவிடும் தருணம் அழகானது. பாட்டி ஒவ்வொரு நாளும் அந்த மாமரத்தின் கீழ் சென்று நின்றுகொள்வாள். பிஞ்சுகள் ஆங்காங்கே தென்படும் போது புதிய குழந்தைகளை வரவேற்கும் மனத்தோடு குதூகலிப்பாள். திரண்டு நிற்கும் மாங்காய்களை விரல் நீட்டிக் காட்டுவதை ஒருபோதும் விரும்ப மாட்டாள்.அப்படி விரல் நீட்டிச் சுட்டினால் பிஞ்சிலேயே வெம்பிப் போகும் என்பது அவள் கொண்டிருந்த நம்பிக்கை. வீட்டின் அருகமைந்த காலியிடம் அனேகமாக ஒன்றரை செண்டு அளவுக்கானது.அதைத் தோட்டம் என்று தான் அழைப்போம். அந்தச்சிறிய இடத்திற்கு ஒளியாகவும் நிழலாகவும் அந்த மாமரமும் அதற்குப் பக்கவாட்டில் சற்றுத் தள்ளியிருந்த கிணறும் தான் விளங்கின. அந்த வீட்டைக் காலி செய்து சொந்த வீட்டுக்கு வரும் போது புதிய வீட்டின் தோட்டத்தில் அவளுக்காகவே ஒரு மாமரத்தை வைத்து வளர்த்தோம். அங்கே வேம்பு தழைத்த அளவுக்கு மாமரம் ஊன்றிப் பற்றுக் கொள்ளவில்லை. அவளும் தன் வாஞ்சையை வேம்பின் மீது மாற்றிக் கொண்டாள். நிமிர்ந்து பார்க்கும் போது வானுக்கும் மனிதவிழிகளுக்கும் நடுவே மரங்கள் வியாபித்திருப்பதை அவள் எப்போதும் விரும்பி இருக்கிறாள். இன்றைக்கும் ராஜம்மா பாட்டியின் நினைவுகளில் வேம்பின் வாசனை கிளர்த்துகிறது. கால்களை இடறும் வேப்பம்பழங்களைச் சேகரித்துக் கொண்டிருக்கிற கரங்களுக்குச் சொந்தக்காரி அவளாகவும் இருக்கலாம். கனவு என்பதன் வசதி அது தான் இல்லையா.? மரணத்துக்கு முன்னும் பின்னுமாய் வாழ்ந்துகொள்ளலாம்.

மாம்பழம் என்றால் பாட்டிக்கு ரொம்பவே இஷ்டம். அதே இஷ்டம் என் அம்மாவிடமும் கண்டிருக்கிறேன். எனக்கென்னவோ தர்பூஸ் உள்ளிட்ட நீர்க்கனிகள் மேல் தான் விருப்பம். மாம்பழம் மீது கொஞ்சமாவது எனக்கு ப்ரியமிருப்பதாகத் தோன்றவே இல்லை. பாட்டிக்கு மாம்பழ சீஸன் ஆரம்பித்து விட்டால் போதும். மாம்பழத்தை ருசிக்கும் போது அவள் முகம் அத்தனை அழகாக இருக்கும். சுவை கனி ஒன்றை ருசிக்கும் போது மனிதனின் முகம் இயல்பாகவே ஒரு புன்னகையை நோக்கித் திரும்புகிறது. அம்மாவும் மாம்பழத்தை ருசிக்கும் தருணங்களில் புன்னகைப்பதைக் கண்டிருக்கிறேன். அவளது இறுதிக் காலங்களில் ஒரு குழந்தையைப் போல் குதூகலித்து மாம்பழத்தை உண்டாள். சுவை மிகுந்த மாம்பழத்தை நறுக்கி உண்ட பிறகும் நெடு நேரம் வாசனாதி திரவியப் புட்டி ஒன்று தரையில் விழுந்துடைந்தாற் போல் அதன் மணம் அந்த அறை முழுவதும் கமழ்ந்துகொண்டே இருக்கும். ராஜம்மா பாட்டி மாம்பழத்தைத் துண்டுகளாக நறுக்குவதே அழகாக இருக்கும். தச்சுக்கூர்மையோடு துண்டுகளை ஏற்படுத்துவாள்.

அவளுடைய கோபமும் அன்பும் ஏன் மௌனமும் கூட நோக்கமற்றவை. காதுகளின் கேட்புத் திறன் சிறுவயதிலேயே பாதிப்படைந்து விட்டதால் அவளுடைய உலகம் சற்றே அதிகதிகம் நிசப்தத்தின் பிடிக்குள் சென்று விட்டது. முன்னால் நின்று சப்தமாகப் பேசவேண்டும். நம் உதடுகளின் அசைவைத் தவறவிடாமல் பற்றிக் கொள்வாள். பெரும்பாலும் சரியாகப் புரிந்து கொண்டு பதில் சொல்லி அசத்துவாள். அவளுடைய கோபங்கள் நேர்மையானவை. எப்போதாவது யாரிடமாவது மன வருத்தம் என்றால் பேசமாட்டாள். மௌனமாக இருப்பதன் மூலம் எவ்வளவு பெரிய கோபத்தையும் ஆத்திரத்தையும் வென்றுவிட முடியும் என்பதை மெய்ப்பித்தது அவளது மனவுறுதி. தனியாக இருக்கும் சமயங்களில் தனக்கென்று இருக்கும் தலைப்பலகையை வைத்துக் கொண்டு ஒருக்களித்துப் படுத்தபடி எதாவதொரு பாடலை ராகம் செய்து பாடிக்கொள்வாள். அத்தனையும் சுவாமி பாடல்கள். சினிமா மீது பெரிய விருப்பம் கொண்டிருக்கவில்லை. டீவீ வந்தபிறகு அதை ஆர்வமும் விலகாப் புதிர்மையும் ஒருங்கே கொண்டு பார்த்தாள். அவளுக்குப் பெரிய விருப்பம் புத்தகங்கள் தான். கதைகள் அல்ல பத்திரிகைகளை நாளிதழைப் பெரிய தேட்டத்தோடு வாசிப்பதைப் பார்த்திருக்கிறேன். அவள் கற்றது மூன்றாம் வகுப்பு வரை தான். அதற்குப் பொருத்தமற்ற ஞானமும் தேடலும் கொண்டிருந்தாள். என் ஞாபகங்களில் மாமரக் காற்றாக வேப்ப மலர்களாக கிருஷ்ண கானமாக கோலமிட்ட தலைப்பலகையாக பொடிப் பொடியான பென்ஸில் எழுத்துகளாக எப்போதும் வாழ்கிறாள்.

இளையராஜாவின் இரண்டு ஆல்பங்கள் HOW TO NAME IT மற்றும் NOTHING BUT WIND. இரண்டுமே என் வாழ்வில் முக்கிய இடம்பிடிப்பவை. தமிழுலகத்திற்கு மேற்குத் திசையின் இசை அத்தனை நேரடியாகப் பரிச்சயமில்லாத காலமான எண்பதுகளில் உலகத் தரத்தோடு பேருழைப்பின் விளைவாக உண்டானவை அந்த இரண்டு ஆல்பங்களும். நத்திங் பட் விண்ட் தொகுப்பில் ஹரிப்ரஸாத் சவ்ராஸியாவின் புல்லாங்குழலைத் துணைக்கழைத்து ரசிகனின் ஆழ்மனதைக் கழுவிச்சமைத்தார் இளையராஜா. ஹவ் டு நேம் இட் பேழையை ஒலிக்கவிட்டு எத்தனையோ இரவுகள் உறக்கத்தின் ஆழத்தில் புன்னகைத்திருக்கிறேன். அது வெறும் புன்னகை அல்ல. மனத்தூய்மையின் பின்னதான முதல் பூ. நான் நாலைந்து முறை கேஸட்டுத் தேய்ந்து இழுத்து புதிய கேஸட்டுக்கள் வாங்கியது திரைப்பாடல்கள் தொகுப்பேதும் இல்லை. இந்த இரண்டும் தான்.


No description available.

பள்ளிக்காலத்தில் அடிக்கடி வகுப்பைப் புறக்கணித்து விட்டு எங்காவது சென்று விடுவேன். ஒரே ஒரு இடம் என்றில்லாமல் மதுரை எனும் மாபெரிய விரிதலின் அத்தனை கிளைகளிலும் சென்றமர்ந்த பறவையாக இருந்தேன். என்னோடு அவ்வப்போது பங்காளிகளும் வருவர். அம்மாதிரியான சந்தர்ப்பங்களில் அனேகமாக சினிமாக்களுக்குப் போவோம். செல்வதற்கு உரித்தான படவரத்து இல்லாத நாட்களில் வெவ்வேறு இடங்களுக்குப் போய்த் திரும்புவோம். மதுரையைச் சுற்றி இருக்கும் கிராமங்கள் பேருந்து வசதி இருப்பவையாகத் தேர்ந்தெடுத்து அங்கே செல்வோம். பெரியார் நிலையத்திலிருந்து சிந்தாமணி-மாங்குளம்-கடச்சநேந்தல்-அழகர்கோயில்-ஊர்மெச்சிகுளம்-தென்பழஞ்சி-சோழவந்தான்-சமயநல்லூர்-வாடிப்பட்டி எனப் பல ஊர்களுக்குப் போயிருக்கிறோம். அந்த ஊரில் தெரிந்தவர்கள் என யாரும் இருக்க மாட்டார்கள். அங்கே செல்வதற்கான நோக்கம் என்று எதுவும் இராது. சென்று திரும்புவதற்கான கால வரம்பும் கிடையவே கிடையாது. அந்த ஊரின் காற்றை சுவாசித்து விட்டுத் திரும்புவதொன்று தான் உத்தேசம். நாலைந்து பசங்களாகத் திரிவதால் எங்களுக்கு நாங்களே பேசிக் கொண்டு சிரித்து ஒருவரை ஒருவர் கேலி செய்து எப்படியாவது பொழுது போய்விடும். பள்ளியிலிருந்து வீடு திரும்புகிற நேரத்தை உத்தேசித்து மீண்டும் பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொள்வோம். பேசிச்சிரித்தபடி பெரியார் நிலையம் வந்தடைந்து அவரவர் வீடு நோக்கித் தனிப்போம். குறைந்த பட்சம் ஒரு உடனாளியாவது இல்லாவிட்டால் நான் அப்படி அலைந்து திரிவதைத் தேர்ந்தெடுத்ததில்லை. தனித்த இரண்டொரு சந்தர்ப்பங்களில் தனியாக அலைந்திருக்கிறேன். அப்படியான ஒரு தடவை நாகமலையைச் சுற்றிய ஏதோவொரு கிராமத்திற்கு பஸ்ஸில் சென்று அடைந்தவன் அங்கேயிருந்து கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தேன். நல்ல வெய்யில் நேரத்தில் எதை நோக்கி அப்படித் திரிந்தேன் என்று இப்போது வியப்பாக இருக்கிறது. மூன்று மணியை நெருங்கும் போது தான் அடடா இன்னும் மதிய உணவை சாப்பிடவில்லையே என்பதே நினைவுக்கு வந்தது. பசி என்பது கண்ணைக் கட்டினாலும் மனிதனின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். அதை நோக்கிய நினைவு பசியை அதிகப்படுத்தி அதன் வாசல்களை ஒரே பொழுதில் திறந்து விடுகிறது. அதற்கப்பால் ஒரு நிமிடம் கூட பொறுத்துக் கொள்ள முடியாத பெருஞ்சுமையாக மாற்றம் கொள்கிறது பசி.

அன்றைக்கு நான் ஒரு கிணற்றடியில் ஒற்றை மர நிழலில் அமர்ந்து சாப்பிட்டேன். எதையோ நினைத்து எனக்குக் கண்கள் கசிந்தன. காரணமின்றிக் கண்ணீர் வரும் என்பார் இளையராஜா. அவருடைய ரமணமாலை கேஸட்டை சினிமாப் பாடல்களை விடவும் அதிகம் கேட்டுக் கரைந்திருக்கிறேன். அந்த நாள் அப்படியானது தான். ஏன் என்றே தெரியாமல் கலங்கிய கண்களோடு அந்தக் கிணற்றடியில் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்டேன். இறுகிப் போன தயிர்சாதமும் எதோ தொடுகாயுமாக சுவைக்குக் குறைவில்லை என்றாலும் தாமதமும் சூழலும் பெரிதாய்  உணவு உட்செல்லவில்லை. அப்படியே பாதிக்கு மேல் டிபன் பாக்ஸில் இருந்த உணவைக் கொட்டுவதற்கு இடம்பார்த்தேன். அதுவரை அந்தச் சித்திரத்தில் தென்படாமலிருந்த உபதோற்றமாக எங்கிருந்தோ ஒரு பெரியவர் வந்தார். சாப்பாடு இருக்கா எனக் கேட்டார். அந்த இடம் அதிகம் மனிதப் புழக்கம் கொண்டதில்லை. அதுவோ மதிய உணவு நேரத்தைத் தாண்டிய முன்மாலை நேரம். அப்போது எப்படி அந்த மனிதர் அத்தனை கச்சிதமாக என் முன் வந்து அப்படிக் கேட்டார் என எனக்குப் புரியவே இல்லை. ஏற்படுத்தப் பட்ட நாடகக் காட்சி ஒன்றை சேர்ந்து நடிக்கும் இருவரைப் போல் நாங்கள் திகழ்ந்தோம். நான் ஏதும் பேசாமல் என் டிபன் பாக்சை அவரிடம் தந்தேன். ஸ்பூன் கொண்டு தான் நான் சாப்பிட்டிருந்தேன் என்பதால் கொஞ்சம் கூட அசூயை கொள்ளுமளவுக்கு இல்லை என்பது ஆறுதலளித்தது. அவர் அந்த உணவை முற்றிலும் சுவைத்து உண்டுவிட்டு நான் தந்த வாட்டர் பாட்டில் தண்ணீரை மிச்சமின்றி அருந்தி விட்டு என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். அந்தப் புன்னகை பேசவேண்டிய சொற்களின் அர்த்தமாய் என்னுள் படர்ந்தது. ஒரு வார்த்தை கூடப் பேசாமல் கிளம்பி நாலு எட்டு வைத்தவர் என் பக்கம் திரும்பினார்.” தம்பி, அந்தக் கிணற்றை எட்டிப் பார்க்காதே.” என்று சொல்லி விட்டுத் திரும்பிப் பார்க்காமல் நடந்து சென்று மறைந்தார்.

நான் அப்படியே அமர்ந்திருந்தேன். நீ யார் இதைச் சொல்வதற்கு என்றெல்லாம் யோசிக்கவில்லை. அவருக்கும் எனக்குமான மொத்தப் பரிவர்த்தனையும் அந்த உணவுண்ணும் தருணமும் இந்தச் சொற்களும் மாத்திரம் தான். அன்றைக்கு ஒருவேளை அந்த உணவைப் பெற்றுக் கொள்ள அவரங்கே வராமற் போயிருந்தால் என்று எப்போதும் எண்ணியதே இல்லை. அவர் அங்கே வந்தது அந்த வாக்கியத்தைச் சொல்வதற்காகத் தான் எனத் தோன்றியது. நான் சாவகாசமாக எழுந்தேன். கிணற்றைத் தாண்டிக் கொண்டு நடந்து அவ்வூரின் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடக்கலானேன்.

இதனை அப்படியே பரணியிடம் சொன்னேன். அவன் சிரித்துக் கொண்டே இதெல்லாம் தொடர்பற்ற சங்கதிகள். எல்லாவற்றையும் இணைத்துப் பார்த்துக் கொண்டே இருக்கத் தேவையில்லை என்றான். அதே பரணி கல்லூரி காலங்களில் ஒரு நெடிய,புகை சூழ் ராத் தனிமையினூடே கண்கள் கலங்க ஆத்மநாமின் கவித்துவம் குறித்து சிலாகித்துக் கொண்டே அவன் கிணற்றில் ஆழ்ந்ததைச் சொல்லும் போது உடைந்து போனான். பின் நாட்களில் சினிமாக்களில் நகைச்சுவைக் காட்சிகள் உட்பட எங்கே கிணறு எனும் பிம்பத்தைக் காணவாய்க்கையிலும் அந்தப் பெரியவர் மட்டுமல்லாது பரணியும் ஆத்மநாமும் கூடவே நினைவுக்கு வந்தார்கள். அந்தப் பெரியவர் நத்திங் பட் விண்ட் தொகையின் நடுவாந்திரத்தில் மூடிய கண்களின் இருள் ஆழத்தில் இசையின் மடியில் லயித்திருக்கையில் தன் வெண்தாடியை நீவிக் கொண்டே புன்னகைப்பதை ஒருசில முறைகள் கண்டிருக்கிறேன். முன் சொன்ன பூவின் முழுமலர்வடிவமாக அந்தப் புன்னகை எப்போதுமிருக்கும். நினைவென்பதே அவரவர் மட்டிலுமான சுயபித்து. வேறென்ன..?

ஆளாத பாண்டமாக சேந்தியில் மழுங்குகிறேன் என்று ஒரு கவிதை வரியைப் படிக்கையில் ஏற்பட்ட அதிர்வு சொல்லித் தீராதது. கவிதைகள் மீதான ஆர்வமென்பது ஒருவிதமான மேதமைச்சான்றாகத் தனக்குத் தானே அணிந்துகொள்ளும் மாலை போன்ற விசித்திரம். நான் கவிதையெல்லாம் படிப்பேனே என்பது தன்னிடமே தான் சொல்லிக் கொள்ள விரும்புகிற சுய பூரிப்பு. சின்னதோர் சிலிர்ப்புக்காக முன்னெடுக்கும் கடுந்தவம். இந்தக் கவிதைவரி சிசு செல்லப்பா எழுதிய மாற்று இதயம் எனும் கவிதைத் தொகுதியில் என்று வருவானோ எனும் கவிதையின் ஈற்று வரி. அந்தக் கவிதையை அப்படியே கீழே தருகிறேன். தமிழ்க் கவிதையின் ஆரம்ப சஞ்சாரி செல்லப்பா. இதன் இசைத் தன்மை,வழங்குமுறை ,சொல் எளிமை இவற்றைத் தாண்டி என்னை வசீகரிப்பது இவற்றின் பின்னே உறைந்திருக்கக் கூடிய இருண்மை. விரிந்துகொண்டே செல்லக் கூடிய தீராக் கண்ணாடிச் சிதறல் போலாகிறது மொழி.

மாற்று இதயம் - PaperCrest

என்று வருவானோ

பாடாத பாட்டாக
மவுனத்துள் கம்முகிறேன்

பேசாத சொல்லாகி
சுவடிக்குள் நொறுங்குகிறேன்

உணராத பொருளாகி
சொல்லுக்குள் புழுங்குகிறேன்

ஆளாத பாண்டமாக
சேந்தியிலே மழுங்குகிறேன்