திருவுளம்

திருவுளம்
குறுங்கதை


நீலகண்டனின் வீட்டின் முன் பரந்து விரிந்திருந்த தோட்டத்தில் வாகை மரத்தடியில் தான் அவருடைய யதாஸ்தானம். அவர் அமர்ந்து கொள்ள வாகாக கூடைச்சேர். பக்கத்திலேயே பிரம்பு மேசை வட்டமாக அதில் அவருக்குத் தேவையானவை அனைத்தும் இருத்தப்பெறும். தினத்தந்தி பேப்பர் மேல் கண்ணாடிக்கூடு. சிறிய ப்ளாஸ்டிக் டப்பாவில் கடலை மிட்டாய்கள் வைத்திருப்பார். ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை நா உலரும் போது அவற்றில் ஒன்றை எடுத்து வாயில் போடுவார். அதுவாக ஊறிக் கரையும் வரைக்கும் காத்திருந்து விழுங்குவது ஒருவகை தியானம் போல் செய்வார். விக்ஸ் இன் ஹேலர் ஒன்று கைவாட்டத்தில் எப்போதும் இருக்க வேண்டும். அப்புறம் ஒரூ கர்ச்சீஃப், இவ்வளவு தான் அவருடைய தேட்டத் தேடல்களின் லிஸ்ட். அழகான வேலைப்பாடுகளோடு கூடிய தண்ணீர் ஜக் ஒன்று தலைக்கு மேல் தம்ளர் சார்த்தியிருக்கும்.

காலையில் சீக்கிரமே தேடி வந்து விட்டார்கள் பொன்னுச்சாமி தம்பதியர். வடிவாம்பாள் நீலகண்டனுக்கு தூரத்து உறவில் தங்கை முறை . அந்த ஊர்க்காரர்கள் அவர்களாகத் தீர்க்க முடியாத பிரச்சினை என்று தோன்றி விட்டால் நேரே கிளம்பி வந்து விடுவார்கள். நீலகண்டன் சொல்வது தான் தீர்ப்பு. அரசாங்கத்தில் பெரிய ஆபீசராக இருந்து ஓய்வுபெற்றவர். நாலும் தெரிந்த நல்லமனுஷன் என்று பேர் பெற்றவர்.

இந்த முறை பிரச்சினை சற்று விசித்திரமானதாய்த் தோன்றியது. அதாவது பொன்னுச்சாமியின் அக்கா மகளைத் தான் அவர் மணம் முடித்திருக்கிறார். அக்காவுக்கு சொந்தமான தோப்பையும் அவரே தான் பராமரித்து வருகிறார். இப்போது அக்காவுக்கு வயதாகி விட்டதாலும் வேறு சில தேவைகளாலும் அந்தத் தோப்பை விற்க முடிவெடுத்திருக்கிறார்கள். இதுவரை எந்தப் பிரச்சினையும் இல்லை. அதை வெளியாளுக்குத் தான் விற்க வேண்டும் என்று பொன்னுச்சாமி பிடிவாதம் பிடிக்கிறார். “அக்கா காரி அசந்த நேரம் தம்பி எழுதி வாங்கிட்டான் என்று யாராவது நாக்கு மேல் பல்லுப் படப் பேசி விட்டால்?” அவருக்குத் தாங்காது.
அவர் மனைவி வடிவுக்கோ
“அம்மா அரசாண்ட சொத்து அடுத்தாள் கைகளுக்குப் போவக் கூடாது. நம்ம கிட்ட இல்லாத காசா பணமா?” என்று தொடங்கி அதை நாமே வாங்கிக்கலாம் என்பதில் உறுதியாக நிற்கிறாள். இந்த வழக்கில் நீலகண்டன் பொன்னுச்சாமிக்கு ஆதரவாகப் பேசிப் பார்த்தார். வடிவு சொல்லுக்கு அது வாட்டப்படவில்லை. அவள் ஒரே பிடியாகப் பிடித்துக் கொண்டு நிற்கிறாள்.

உள்ளே உலை கொதிக்கத் தொடங்கி விட்டது.சுத்தம் செய்த நாட்டுக்கோழியை மசாலா தடவிக் குழம்பு கொதிக்கையில் மணம் நாசியைத் துளைத்தது. இவர்கள் பேசுவதைக் கவனித்துக் கொண்டே அவ்வப்போது சமையற்கட்டுக்குச் சென்று குழம்பைக் கிளறிவிட்டுவிட்டு மீண்டும் பேச்சு நடக்கிற இடத்துக்குத் திரும்பி வந்து விட்டாள் நீலகண்டனின் மனைவி மரகதம். பொன்னுச்சாமிக்கு சப்போர்ட் செய்து பேசினாள். ஒருவழியாகப் பேச்சு இறுதிப்படும் போது சாப்பாடு தயாராகி விட்டது. “வந்தது வந்தீங்க சாப்டுத் தான் போகணும்” என்று உபசரித்தாள் மரகதம். வழக்கமாக யாராவது நீலகண்டனின் ஊர்ப்பக்கத்திலிருந்து வந்தால் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டாள். இன்றென்னடா என்றால் வந்து சரிக்கு சரி பேசியது மட்டும் இல்லாமல் கோழிக்கஞ்சியெல்லாம் தந்து உபசரிக்கிறாள். நீலகண்டனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

தீர்க்க முடியாத வழக்குகளைத் திருப்புவதற்கு ஆன்மீகம் ஒரு நல்ல உபாயத்தைத் தரும் என்பார் நீலகண்டன். இரண்டு பேருமே பிடித்த பிடியில் உறுதியாக நிற்க “ஊர்ல நம்ம குலதெய்வம் கோயில்ல ரெண்டு சீட்டு எழுதி 1.நாமே வாங்குறது.2 வெளியாளுக்கு விக்கிறது என்று குறி கேட்கலாம். சாமி எந்தச்சீட்டைத் தருதோ அதன் படி நடந்துக்கிடணும். புருஷன் பொஞ்சாதி ரெண்டு பேரும் எந்த முடிவா இருந்தாலும் மனசொத்து செயல்படணும் சரியா?” என்று தீர்ப்புச்சொன்னார். எப்போதாவது தன் கையில் பலமற்றுப் போனால் மட்டும் இப்படி ஒரு முடிவைச் சொல்வார் நீலகண்டன். இதைக் கேட்டதும் வடிவும் மனம் அமைதியானாள். “சாப்பாடெல்லாம் வேணாம்” என்றவளை அதட்டி சாப்பிடச் செய்தாள் மரகதம்.

கைகழுவுகிற இடத்தில் பொன்னுச்சாமியிடம் எதோ ஆறுதலாய்ச் சொல்லி அனுப்பினாள்.அவர்கள் ரெண்டு பேரும் ரொம்ப சந்தோசமாய்க் கிளம்பினார்கள். புறப்படும் போது

“பொன்னுச்சாமி…நா பூசாரி சின்னையாட்ட பேசிர்றேன்.
வர்ற வெள்ளிக்கெளம நிறைஞ்ச பவுர்ணமி.
அன்னைக்கு காலையில சீக்கிரமே குளிச்சி கெளம்பி கோயிலுக்குப் போயிருங்க.
51 ரூவா தட்சணையை பூசாரிட்ட தந்து குறி கேளுங்க.
அவரு ரெண்டு சீட்டை ரெடியா வச்சிருப்பார்.எல்லாம் நல்லபடியா நடக்கும்”
என்று அனுப்பி வைத்தார்.

அன்றைக்கு இரவு நெடுநேரம் டீவீ பார்த்து விட்டுத் தூங்க வந்த நீலகண்டனிடம் மாத்திரைகளைத் தந்து தண்ணீர் டம்ளரையும் நீட்டின மரகதம்

“என்னாங்க காலையில நம்மூர்லேருந்து வந்தாங்களே பொன்னுச்சாமி அவங்க தோப்பை வெளியாளுக்கு விக்கலாம்னு சீட்டு வந்தாக்க என் தம்பி மனோகரு ரொம்ப நாளா எதுனா நல்ல இடமா திகைஞ்சு வந்தா மாமாட்ட சொல்லி வாங்கிக் குடுக்கான்னு கேட்டுக்கிட்டிருக்கான். அவனுக்கு வாங்கித் தரலாம்ல்லங்க?”
என்றாள்.

கோழி மணத்தின் காரணம் விளங்கியவராய்ப் புன்னகையோடு ” சீட்டு வரட்டும் முதல்ல அப்பறம் பேசிக்கலாம்” என்றார்

“நா வேணா எந்தம்பிட்ட சொல்லி அடுத்த ஞாயித்துக் கெழமை புறப்பட்டு வரச்சொல்லவா” என்றவளின் குரலில் ஆசை தொனித்தது.

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்த நீலகண்டன் “இந்தாரு மரகதம். இதெல்லாம் வெளிப்பேச்சு. உனக்குப் பாதி புரியாது. விட்டுரு” என்றார்

நீண்ட மௌனத்திற்கப்பால் “சீட்டு வந்தாத் தானே பேசப் போறம்..அதுல என்னவாம் புரியுறதுக்கு” என்றாள் அங்கலாய்த்த குரலில்

“சீட்டு வராது” என்றவர் புரண்டு முதுகைக் காண்பித்தபடி உறங்கத் தொடங்கினார்.